ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் மேத்தா (56). விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை உழுவதற்காக டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக மகேந்திரா நிதி நிறுவனத்திடம் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். கொரோனா பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும், தான் வாங்கிய கடனுக்கு மித்திலேஷ் மேத்தா முறையாக தவணை செலுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கோதுமை உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இவர்களின் விவசாயி மித்திலேஷ் மேத்தாவும் ஒருவர். இந்த நஷ்டத்தின் காரணமாக மித்திலேஷ் மேத்தாவால் கடந்த 5 மாதங்களாக கடன் தவணை கட்ட முடியவில்லை.

இதில் அந்த தவணைகளுக்கு வட்டி மேல் வட்டியும் சேர்ந்து போனது. இதனால் மகேந்திரா நிறுவன அதிகாரிகள் சமீபகாலமாக அவரை தொலைபேசியிலும், நேரிலும் வந்து திட்டுவதும் செல்வதுமாக இருந்துள்ளனர். மேலும், இன்னும் சில தினங்களில் மொத்த தவணையையும் வட்டியையும் செலுத்தாவிட்டால் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மித்திலேஷ் மேத்தா தனது மனைவியின் நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் கேட்டும் வந்துள்ளார். இருந்தபோதிலும், மூன்று மாத தவணைகளுக்கும், வட்டிக்குமான பணம் சேரவில்லை எனத் தெரிகிறது.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!

இந்நிலையில், நேற்று (19.09.2022) மதியம் அந்த மகேந்திரா நிறுவன அதிகாரிகள், சில குண்டர்களை விவசாயி மித்திலேஷ் மேத்தாவின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த குண்டர்கள் விவசாயி மித்திலேஷ் மேத்தாவை ஆபாசமாக பேசியுள்ளனர். அந்த சமயத்தில், அங்கிருந்த 6 மாத கர்ப்பிணியான அவரது மகள் பூஜா ராணி (27), ‘எனது தந்தையை ஆபாசமாக பேசாதீர்கள், உங்களிடம் வாங்கிய கடனை இன்னும் இரு தினங்களில் கட்டிவிடுவோம்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது பூஜா ராணி, டிராக்டர் முன்னால் வந்து நின்று, ‘இன்று மாலைக்குள் பணம் தருகிறோம். டிராக்டரை எடுத்துச் செல்லாதீர்கள்’ எனத் தெரிவித்தார். ஆனால் அதற்கு சம்மதிக்காக நிதி நிறுவனத்தினர், ‘இப்போதே பணம் தர வேண்டும்; இல்லையென்றால் டிராக்டரை எடுத்து செல்வோம்’ எனக் கூறியிருக்கின்றனர்.

மேலும், பூஜா ராணியை டிராக்டர் முன்னால் இருந்து நகர்ந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். ஆனால் பூஜா ராணி அவர்களுக்கு வழிவிடாமல் அங்கேயே நின்று விடாப்பிடியாக போராடி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் மீது டிராக்டரை ஏற்றினர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பூஜா ராணி உயிரிழந்தார். இதை பார்த்து பயந்துபோன நிதி நிறுவனத்தினர் அங்கிருந்து தப்பியோடினர். விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த கிராம மக்கள், பூஜா ராணியை உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா, “ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம். ஒரு சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்போதுள்ள (கடன் கொடுக்கும் நிறுவனம் மற்றும் வாங்கியவருடன் தொடர்பில்லாத) மூன்றாம் நபர் வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் மீளாய்வு செய்வோம்” என பேசியுள்ளார். அதாவது நாங்கள் இனிமேல் கடன் வசூல் செய்ய குண்டர்களை அனுப்புவதை பரிசீலிக்கிறோம் என பேசியுள்ளார்.

மூன்றாம் நபர் வசூல் நிறுவனங்களை பயன்படுத்துவது தான் பிரச்சினை என்று பேசுவது அப்பட்டமான மோசடி இதற்கு முன்பு தமிழகத்தில் இதைப்போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் பல அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் நேரடியாக தலையிட்டுள்ளனர்.

***

2016-ல் தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனுக்கான தவணை செலுத்தத் தவறிய பாலன் என்ற விவசாயியை, போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2018-ல் காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் நிதி நிறுவனத்தினர் டிராக்டர் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், காட்டுமன்னார்கோவில் அடுத்த கருணாகரநல்லுாரைச் சேர்ந்தவர் தமிழரசன்.

படிக்க : ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

2022-ல் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தேவனூரை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் டிராக்டரை பறிமுதல் செய்ததால் மனம் உடைந்த விவசாயி சின்னத்துரை தற்கொலை செய்து கொண்டார்.

***

வங்கி அதிகாரிகளையும் போலீசையும் விட்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் இந்த கார்ப்பரேட் கும்பல் தான் தற்போது “மூன்றாம் நபரை அனுமதிப்பதை பரிசீலிப்போம்”என நாடகம் போடுகிறது.

அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி முடித்து வெளியே வரும் வீரர்களை எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்துவோம் என மகேந்திரா நிறுவனம் பகிரங்கமாக அறிவித்தது எதற்காக? இனிமேல் மகேந்திரா நிறுவனமே நேரடியாக குண்டர் படையை வைத்துக்கொண்டு விவசாயிகளையும் போராடக்கூடிய மக்களையும் ஒடுக்கும் என்பதுதான் எதார்த்தம். ஆகவே இந்த கார்ப்பரேட் கும்பலை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பையும் காவி கும்பலையும் வீழ்த்தாமல் விவசாயிகளுக்கு வாழ்க்கையில்லை!


ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க