ஜார்கண்ட் மாநிலம் லடேகர் மாவட்டத்தில் உள்ள மஹுவதன் பகுதியில், இறந்து போன தனது தாய் குடியிருந்த வாடகை வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் பாக்யா பிர்ஜெய்ன். தனது கணவனை இழந்த பாக்யா திருமணத்திற்குப் பின்னர் அருகிலுள்ள பகுதியில் வாழ்ந்து வந்தார். ஜனவரி 1 அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயதுத் தாய் புத்தினி பிர்ஜெய்ன் மரணமடைந்த செய்தியைக்  கேட்டு உடனடியாக வந்து சேர்ந்தார் பாக்யா.

கடந்த 2017-ம் ஆண்டு பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி

“எனது தாய் மரணமடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு உண்ண எதுவுமில்லை. இந்த கடுமையான பனியில் உண்ண உணவு ஏதும் இல்லாமல் அவர் பட்டினியால் இறந்துள்ளார்” என்று கூறுகிறார் பாக்யா. புத்தினியின் மரணம் ஜார்க்கண்டில் தொடரும் பட்டினிச் சாவுகள் பட்டியலின் சமீபத்திய சேர்க்கை. கடந்த ஆண்டு ஜார்கண்டின் சிம்டெகா பகுதிய்ல் வசித்து வந்த சந்தோஷி குமாரி என்ற பதினோரு வயது சிறுமியின் மரணத்திலிருந்து ஜார்கண்டின் பட்டினிச்சாவுகள் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன

புத்தினியின் நீண்ட நாள் பட்டினிக்கான காரணம், விசாரிக்க முடியாதது அல்ல. அவருக்கு ரேஷன் கார்டும் கிடையாது. ஆதார் அட்டையும் கிடையாது. உணவுப் பாதுகாப்பின்மை அவரை அச்சுறுத்தியது. புத்தினி பிரிஜியா பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த பழங்குடி இனப் பிரிவு, ”குறிப்பாக அழியும் நிலையில் உள்ள பழங்குடியினப் பிரிவாக” மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ இலவச அரிசியைப் பெறுவதற்கு தகுதியானவர் புத்தினி பிரிஜியா. அந்தியோதயா அன்ன யோஜனா எனும் திட்டத்தின் கீழ் ஏழைகளிலேயே மிகவும் ஏழையாக இருப்பவர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் இது.

அவர்களது தொடர்ச்சியான வேண்டுகோளுக்குப் பின்னரும் கூட அவர்களால் ரேஷன் அட்டையை பெற முடியவில்லை என்று கூறுகிறார் பாக்யா. ”நாங்கள் ஆறுமுறை ரேஷன் கார்டு பெறுவதற்கு முயற்சித்து விட்டோம். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்து வந்தனர். இறுதிவரையில் எங்களால் இலவச ரேஷன் பொருட்களைப் பெற முடியவில்லை. ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.

புத்தினியின் வீட்டின் முகப்பு (படம் – நன்றி : த வயர்)

உணவு தானியங்களை அருகில் உள்ள உள்ளூர் சந்தையில் இருந்து வாங்குவது என்பது அவரது குடும்பத்திற்கு இயலாத ஒன்று. ஒரு வாடகை வீட்டில் தனது பேரனின் குடும்பத்தோடு இணைந்து வசிக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் தனது கால்கள் ஒடிந்த நிலையில் அவர் தனது பேரனின் வீட்டில் தங்கியிருந்தார்.

ஒரு நாளைக்கு வெறுமனே ரூ. 200 சம்பளம் பெறும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு குறைவான வருமானத்தில் பல நாட்கள் அவர்கள் பட்டினியுடன் தான் இருந்திருக்கிறார்கள். புத்தினிக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 600 பெறுவதற்குத் தகுதி இருந்தும் அவரால் அதனைப் பெற முடியவில்லை. அவர் பலமுறை அதற்கான அலுவலகத்திற்கு சென்று முயற்சித்தும் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ”எப்போதுமே இதுதான் நடந்திருக்கிறது. எதுவும் என்றும் நடந்ததே இல்லை” என்கிறார் பாக்யா

படிக்க:
♦ ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

வறுமையான நிலையில் புத்தினிக்கு உணவு பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவரது குடும்பத்தினர் வேலைக்குச் சென்று விட்ட பின், அவரால் சொந்தமாக சமைக்கக் கூட முடியாது. அவரது அண்டைவீட்டார் அவருக்கு தாம் தொடர்ச்சியாக உணவளித்து வந்ததாகக் கூறுகின்றனர். அவரது அண்டை வீட்டுக்காரரான மதினா பீபி, புத்தினி மரணமடைந்த அன்று அவரைத் தாம் காணமுடியவில்லை என்று கூறினார். மானிய விலையில் உணவு தானியங்கள் பெறும் திட்டத்தின் கீழ்தான் மதினா பீபியும் ரேசன் பொருட்களைப் பெற்று வருகிறார்.

சொல்லப்போனால், பல்வேறு அரசாங்க நலத்திட்டங்கள் புத்தினியின் குடும்பத்திற்கு போய்ச் சேரவில்லை. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவரால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை. ஏனெனில் அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. வறுமையானது அவர்கள் குழந்தைகள் உட்பட அவர்கள் அனைவரையும் கல்வியில் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி வைத்திருந்தது. அவரது பேரனின் ஒரு மாதமேயான குழந்தை அங்கன்வாடி வசதிகளைக்கூட பெற முடியாமல் இருக்கிறார். ஏனெனில் அங்கு கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி செயல்படவில்லை.

கூடுதலாக அவர்களது குடும்பத்திற்கு  வேலை அட்டைகள் இல்லை. அந்த கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. அவர்களது வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய எவ்விதமான வேலைவாய்ப்பு ஆதாரமும் அங்கு அவர்களுக்கு இல்லை. மாநில அரசின் புதிய திட்டமான “கட்யான் கோஷ்”-ன் படி வறுமையின் காரணமாக பட்டினியால் தவிக்கும் குடும்பத்தினருக்கு அவசர உணவு தானியங்கள் வழங்குவதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டமும்கூட புத்தினியை காப்பாற்ற பயன்படுத்தப்படவில்லை.

புந்தினியின் மகள் பாக்யா (படம் – நன்றி : த வயர்)

புத்தினியின் மரணம் குறித்து, உள்ளூர் பத்திரிகையாளர்கள் எழுதிய பிறகு அப்பகுதியை சேர்ந்த அலுவலர்கள் அக்கிராமத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் புத்தினியின் குடும்பத்தினருக்கு ரூ. 2000-ஐ அடக்கம் செய்வதற்காக இழப்பீடாக கொடுத்தனர். கூடுதலாக 50 கிலோ அரிசியும் கொடுத்துள்ளனர். இது குறித்து பாக்யா கூறுகையில், அவர்கள் பணம் தருவதற்கு முன்னர், அடக்கம் செய்வதற்குக் கூட தங்களிடம் பணம் இல்லை என்றும் அதன் காரணமாக அடக்கம் செய்யாமல் 3 நாட்களாக புத்தியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாகக் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் உணவுத் துறை அமைச்சர், சர்-யூ-ராய், பட்டினிச் சாவு என சந்தேகம் ஏற்படும் மரணங்களுக்கு கண்டிப்பாக போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், புத்தினியின் மரணத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் அலுவலர்கள் அவசர அவசரமாக, உடலை புதைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாக பாக்யா தெரிவிக்கிறார்.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் மிகவும் அவசியமானது மற்றும் முதன்மையானது. பொது வினியோக முறையை சீர்செய்து அதன் மூலமாக எண்ணெய், தானிய வகைகள் போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்கும் போதுதான் சத்தான உணவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதுபோன்ற தொடரும் பட்டினிச்சாவுகளும், அன்றாடப் பட்டினிகளும் இந்தியாவின் மக்கள் நல அரசு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

புத்தினியின் குடும்பத்தினர் இரங்கலுக்குக் கூட நேரம் ஒதுக்கும் நிலையில் இல்லை. புத்தினியின் மருமகள் சாஞ்சி, அவரது மரணத்திற்கு மறுநாளே பணிக்குச் சென்று விட்டார். ஏனெனில் ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் இருப்பது என்பது அவருக்கு கட்டுப்படியாகாத ஒன்று. வெறும் ரூ. 2000 இழப்பீட்டைத் தாண்டி பார்க்கையில் அந்த குடும்பத்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை. இந்த அவல நிலையில் அவர்களது வாழ்வு தொடராமல் தடுப்பதற்கான எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது மருமகள் சாஞ்சி கூறுகையில் தங்களுக்குப் போதுமான உணவை உறுதி செய்ய ரேஷன் அட்டை கிடைக்கவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.


கட்டுரையாளர்     : அபினாஷ் தாஷ் சவுத்ரி
தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க