பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற பழமையான நோட்ரே டேம் டி பாரிஸ் கோதிக் தேவாலயம் அமைந்துள்ளது. சமீபத்தில் அங்கு ஏற்பட்ட பெருந்தீ விபத்தில் அது கடுமையான பாதிப்பிற்குள்ளானது.

இந்நிலையில் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக பெரும் பணக்காரர்களும் பெருநிறுவனங்களும் ரூ. 8,362 கோடிக்கு (1 பில்லியன் யூரோ) மேல் அன்பளிப்பு வழங்கியிருக்கின்றனர். இவ்வளவு பெரிய தொகையை சும்மா தருவார்களா முதலாளிகள்?. பிரான்ஸ் அரசு இந்தத் தொகைக்கும் 66% முதல் 75% வரை வரித் தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது. இந்த தேவாலயம் தேசியச் சொத்தாக அறிவிக்கப்பட்டால், 90% வரை வரிவிலக்கு வரை வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கெதிராக தலைநகரில் மஞ்சள் சீருடை அணிந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரிசின் தலைநகரில் மஞ்சள் சீருடையுடன் கருப்பு நிற முக்காடு அணிந்து கொண்டு போலீஸ்காரர்களுடன் போராட்டக்காரர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளையும் உணர்ச்சிகளை மழுங்க செய்யும் குண்டுகளை வீசி போலீஸ் தாக்கியுள்ளது. இந்தப் போராட்டங்களில் பொதுமக்கள் சுமார் 9,600 பேர் கலந்து கொண்டதாகவும் தலைநகரில் மட்டும் 6,700 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 110-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சரி, எதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டது? தேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல்வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்-நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித்தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?

படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி

பிரான்சின் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்க அழைப்பு விடுத்து 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மஞ்சள் ஆடைப் போராட்டம் தொடங்கியது. இது தொடக்கத்தில் பிரான்ஸ் அரசு திணிக்க இருந்த பெட்ரோல் வரி சுமைக்கு எதிராகவும் பின்னர் விண்ணுயர வளர்ந்து நிற்கும் விலைவாசியை எதிர்த்தும் இலட்சக்கணக்கான மக்களிடம் தீவிரமாக பரவியது. கடைசியில் மக்களின் கடுமையான போராட்டத்திற்கு அடிபணிந்த பிரான்ஸ் அரசு, வரி உயர்வுக்கான சட்டத் திருத்தத்தை கைவிட்டது.

ஒரு தேவாலயம் சேதமடைந்தது ஒரு தேசிய துயரமாக எடுத்துக் கொள்ளப்படுமானால் பிரான்சின் பெரும்பான்மையான அம்மக்களின் துயரம் ஏன் இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கேட்கின்றனர். வளர்ந்த நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் பிரான்சில்தான் அதிகம்.

ஒரு கிளிக்கில் தேவாலயத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை பெருநிறுவனங்களின் முதலாளிகள் வாரி இறைக்க முடியும் எனில் ஏழை மக்களுக்கு கொடுக்கத் தங்களிடம் ஒன்றுமில்லை என்று எப்படி கூறுகிறார்கள்? என்று ஒரு போராட்டக்காரர் கேட்டார்.

கோப்புப் படம்

கலாச்சார சின்னங்களுக்காக பெருநிறுவனங்கள் தனியாக நன்கொடை எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்தினாலே போதும். அதன் ஒருபகுதி நாட்டின் கலாச்சார சின்னங்களுக்காக செலவு செய்யப்பட முடியும் என்று இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார். நம்மூரில் கூட திப்புவின் மோதிரம், வாள், காந்தி பயன்படுத்திய பொருட்களை சில பல கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்த மல்லையா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிப் பணத்தை சுருட்டியதை இதோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

வெகுமக்களின் அன்றாடத் தேவைகளுக்குக் கடுமையான வரிகளை விதிக்கும் அரசு பெருநிறுவனங்களுக்கு, செல்வ வரியை தள்ளுபடி செய்வதாக அதிபர் இம்மானுவல் மேக்ரோன் மீது பிரான்ஸ் மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஒரு நாட்டின் தேசியப்பெருமிதம் என்பது அந்நாட்டின் தேசியச் சின்னங்கள் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையே முதன்மையானது என்பதை பிரான்ஸ் மக்கள் போராட்டத்தின் மூலம் நிறுவியுள்ளனர். முதலாளித்துவ ஒடுக்குமுறை நீடிக்கும் வரை பிரான்சின் மஞ்சள் ஆடைப் போராட்டம் ஓயாது !


சுகுமார்

செய்தி ஆதாரம் : தி வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க