கலையரசன்
17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப்படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் “குட்டி முதலாளித்துவ வர்க்கம்” என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்.

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான்  போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.

போராட்டக்காரர்கள்  மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும்  மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப்பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe  நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்தக்களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக,  பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது.

படிக்க:
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்
ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

 

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.  “நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்…” என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது.

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப்படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள  இனப்பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப்பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் “புரட்சிக்கு முந்திய காலகட்டம்” என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு  பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் “நலன்புரி அரசுகள்”   இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுகளாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள்  மெல்ல மெல்ல அரசியல்மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

“மக்ரோன் பதவி விலகு!” என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அளவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க