பிரான்ஸ் அரசு அறிவித்த பெட்ரோல் டீசல் விலையுயர்வை எதிர்த்து  இலட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மஞ்சள் ஆடை போராட்டம் என்று அழைக்கப்படும் இப்போராட்டங்களின் போது காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கில் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் சாலைவிபத்து ஒன்றில் பலியானார்.

நாடு முழுவதும் 2,000 இடங்களுக்கு மேல் சாலைகளையும் சாலை சந்திப்புகளையும் மறித்து நடந்த இப்போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் 2,40,000 மக்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஒளிரும் மஞ்சள் ஆடைகளை அணிந்து கொண்டு சாலைகளையும் நெடுஞ்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட வருமாறு கடந்த மாதம் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடந்த ஆண்டு அறிவித்த “பசுமை வரிகள்”தான் டீசல் விலை 20 விழுக்காடு அதிகரித்ததற்கு காரணம் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்தப் போராட்டத்தின் போது அவ்வழியே சென்ற மகிழுந்தை போராட்டக்காரர்கள் மறித்ததில், பீதியடைந்த  ஓட்டுனர், மகிழுந்தை தாருமாறாக ஓட்டியதில் போரட்டத்தில் ஈடுபட்டிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார் என ஃப்ரான்சின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

“மேக்ரோனே, பதவி விலகு” என்ற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியும் தேசிய கீதத்தை பாடியும் தலைநகர் பாரீசின் இதயப்பகுதியான சாம்ப்ஸ் எலைசீஸ் (Champs Elysees) தெருவில் பெரும் போராட்டம் நடந்தது.

பாரிசிலிருந்து அல்-ஜசீரா நிருபர் நிவ் பார்கர்,  பாரிஸில் போலீசுக்கும்  போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததாகவும், போலீசு கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாகவும் கூறினார். இதில் 227 பேர் காயமடைந்தனர் மேலும் அவர்களில் 7 நபர்கள் படுகாயம் அடைந்தனர். 117 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 73 பேர் போலீசு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தெற்கு நகரமான கிரஸ்ஸேவை (Grasse) சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியும் அதில் காயமடைந்தார்.

“இரண்டு விசயங்களில் போராட்டக்காரர்கள் ஒன்றுபட்டிருந்தனர். முதலாவது அவர்களது போராட்டச் சின்னம். அதாவது மஞ்சள் ஆடை உடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைவரும் அதிபர் மீது கொண்டிருக்கும் கோபமும் வெறுப்பும். ” என்கிறார் பார்கர்.

பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீது அல்ல என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

சரியும் செல்வாக்கு

இம்மானுவேல் மேக்ரோன்.

எரிபொருள் விலையேற்றத்தால் அதிபர் மேக்ரோனின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39  விழுக்காடாக இருந்த அவரது செல்வாக்கு அக்டோபரில் 21 விழுக்காடாக சரிந்துவிட்டது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 73 விழுக்காடு மக்கள் இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளனர். பொருளாதார சீர்திருத்தம் செய்வார் என்ற நம்பிக்கையில் மேக்ரோன் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஓராண்டில் நடைபெற்ற போராட்டங்களில் இந்த போராட்டத்திற்கு தான் மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.

ஏழை மக்களையும் நடுத்தர வர்க்க மக்களையும் அதிபர் கைவிட்டு விட்டார் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பெரும் பணக்காரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிபர் அளித்த வரி விலக்குகளையும் சுட்டிக்காட்டினர்.

படிக்க:
மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?

பெட்ரோல் விலை உயர்வு குறித்த மக்களின் கோபத்தை குறைப்பதற்காக எரிபொருள் மானியங்களையும் மாசற்ற வண்டிகளுக்கு அதிக ஊக்கப்பணமும் கொடுப்பதாக சமீபத்தில் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ”நான் ஃப்ரான்சு மக்களுடனான அவர்களின் தலைவர்களின் நட்புறவை மீட்டெடுக்கத் தவறிவிட்டேன்” என ஒப்புக் கொண்டிருக்கிறார் அதிபர். மேலும் ”நாங்கள் அவர்களுக்குப் போதுமான கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வு என்பது பிரான்சு முதல் இந்தியா வரை எப்படி ஒரு பூதாகரமான பிரச்சினையாக திகழ்கிறது என்பதற்கு இப்போராட்டம் ஒரு சான்று!

இத்தகைய போராட்டங்கள் இன்றி இந்தியாவில் மோடி அரசை எப்படி பணிய வைக்க முடியும்?

செய்தி ஆதாரம்: aljazeera
தமிழாக்கம்:
வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க