privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமுதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்

முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்

-

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக் கொண்ட மாபெரும் பேரணி
தொழிலாளர் நலச்சட்டங்களை பெருநிருவனங்களுக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் திருத்துவதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக் கொண்ட மாபெரும் போராட்டம்

தொழிலாளர் நலச்சட்டங்களை பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் திருத்துவதற்கு எதிராக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்களின் போராட்டங்களினால் பிரான்ஸ் போர்கோலம் பூண்டுள்ளது.

இந்த போராட்டம் பிரான்ஸின்  ஆளும் வர்க்கங்களை நிலைகுலைய வைத்து இருக்கிறது. எந்த நிலையிலும் சட்டத்தை நிறைவேற்றியேத் தீருவோம் என்று சவடால் விட்ட பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் தற்போது அதில் சற்று மாற்றம் செய்து கொள்ள தயார் என்று  பம்முகிறார்.

பெருநிறுவனங்கள் ஆசைப்படி தொழிலாளர்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் வேலையை விட்டு தூக்கவும், ஊதியத்தை குறைக்கவும்  நிறுவனங்களுக்கு முழு உரிமையை அளித்திடும் இந்த சட்ட திருத்தத்தால் பிரான்சின் வேலையில்லா திண்டாட்டம் வெகுவாக குறையும் என்று  ஆளும் வர்க்கங்கள் நம்ப சொல்வதை பிரான்சின் மக்கள் நிராகரித்து விட்டனர்.

போராட்டக்காரர்
போராட்டக்காரர்

உலக பொருளாதார மந்தம் காரணமாக இலாபத்தை பாதுகாக்க தொழிலாளர்களை  வேலையை விட்டு தூக்குதல், ஊதியத்தை குறைத்தல், தானியங்கி இயந்திரங்களால் வேலை வாய்ப்பை பறித்தல், ஊதிய உயர்வை நீக்குதல், கூடு விட்டு கூடு பாய்வதை போல குறைந்த கூலியுழைப்பிற்காக  நாடு விட்டு நாடு பாய்தல், தொழிலாளர் நல சட்டங்களை காவு வாங்குதல் போன்றவை மூலமாக ஈடுகட்ட நினைக்கின்றனர் .

இதை எதிர்த்து உலகெங்கிலும் உழைக்கின்ற மக்கள் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர். இப்படி போராடும் மக்களை பார்த்து வன்முறைவாதிகள் என்றும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்றும் எள்ளிநகையாடும் ஒரு கூட்டம் இந்த போராட்டங்களினால் தாங்களும் பயன்பெறுவதை பற்றி ஒரு வார்த்தையும் முணுமுணுப்பதில்லை.

கம்யூனிச கொடியை ஏந்திய படி நடைபெற்ற போராட்டம்
புரட்சி ஒருபோதும் ஓய்வதில்லை என்று கம்யூனிச கொடியை ஏந்திய படி பிரான்சில் நடைபெற்ற போராட்டம்

கடந்த மார்ச் 31 முதல் பிரான்சின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடந்து வரும் இந்த போராட்டம் “புரட்சி ஒருபோதும் ஓய்வதில்லை” என்ற பொருளிலும் பெயரிலும் தொடங்கியது. இந்த போராட்டம் அதற்கு முன்பே உலக நாடுகளில்  நிகழ்ந்தேறிய பல்வேறு போராட்டங்களின் தொடர்ச்சியாக கொழுந்து விட்டு எரிகிறது.

பிரான்சில் அதிகரித்து வரும் வேலையில்லாத் (10 விழுக்காடுகள்) திண்டாட்டத்தை குறைக்க தொழிலாளர் சந்தையை உலகிற்கு அதாவது பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்து தாராளமயமாக்கி விடுவதை நோக்கமாக கொண்ட இந்த சட்டத் திருத்தங்கள் இயல்பிலேயே மக்கள் விரோத போக்குடையவை.

இதன் மூலம் இதுவரை தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த சட்டங்கள் மாற்றப்பட்டு அதனிடத்தில் தொழிலாளரை நினைத்த நேரத்தில் பணி நீக்கம் செய்தல், வேலை நேரத்தின் வரம்புகளைத் தளர்த்துதல் இதன் மூலம் வாரம்  அதிகபடியாக வேலை செய்து பெறக் கூடிய ஊதியத்தை வெட்டுதல் (தற்போதைய வார வேலை நேரம் 35 மணி நேரம்), தொழிலாளர்களின் சிறப்பு சலுகைகளான ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு ஊதியம், மருத்துவ காப்பீடு என அனைத்திலும் முதலாளிகள் கை வைக்க அனுமதித்து இருக்கிறது பிரான்சை ஆளும் அரசு.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் மாணவிகள்
போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் மாணவிகள்

இதை எதிர்த்து போராடும் மக்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவது, போராட்டங்களினால் ஏற்படும் விளைவுகளின் வீச்சை குறைத்து மதிப்பிடுதல், போராடும் மக்களை கெடுநோக்குடன் தவறாக பரப்புரை செய்தல் என்று ஆளும் வர்க்கங்களும் அவற்றின் ஏவல் படையான பிரான்ஸ் அரசும் செயல்படுகின்றன.

இந்த போராட்டத்தின் வடிவமானது நகர சாலைகளில் மட்டுமல்லாது இணைய சாலைகளிலும் பற்றியெரிகிறது. இதன் காரணமாக ஆளும் வர்க்கம் இந்த போராட்டங்களைப் பற்றி என்ன தான் இட்டுக் கட்டித் திரித்து உண்மைக்கு புறம்பாக கூறினாலும் இனைய செயல்பாட்டாளர்கள் அதை முறியடித்து உண்மையை உலகிற்கு கூறி வருகின்றனர்.

பிரான்சின் உள்ள 1௦ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 8 நிலையங்கள் முற்றிலும் செயல்படாதவாறு தொழிலாளர்கள் முடக்கியுள்ளனர். ஆனால் பிரான்ஸ் அரசு 2 மட்டுமே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது என்றும் மற்றவை இயங்கி கொண்டு இருப்பதாகவும் இட்டுக் கட்டி கூறி வருகிறது. ஆனால் பிரான்ஸ் மக்கள் அந்த பெட்ரோலிய நிலையங்களின் உண்மையான புள்ளி விவரங்களை  இணையத்தில் பதிவேற்றி பிரான்ஸ் அரசின் கபடத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்..

போக்குவரத்துத் தொழிலாளர்கள், ரயில்வேத் தொழிலாளர்கள், எண்ணெய்  சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், அணு மின் நிலையத் தொழிலாளர்கள், மாணவர்கள் என பெரும்பான்மையான பிரான்சு மக்கள் தத்தமது உழைப்பின் இயக்கத்தை நிறுத்தி விட்டதால் ஒட்டு மொத்த பிரான்சும் தனது இயக்கத்தை நிறுத்தி இருக்கிறது.

இந்த பிரச்சினையை தொடர்ச்சியாக கவனித்து வருகிறோம் என்று கூறிய பிரான்சின் 5 பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நடத்தி வரும் டோட்டல் எஸ்.ஏ (Total S.A) என்ற உலகளாவிய எண்ணெய் மற்றும் ஆற்றல் தயாரிப்பு நிறுவனம், இந்த நிலை தொடர்ந்தால் பிரான்சின் எண்ணெய் நிறுவனங்களில்  முதலீடு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரித்து இருக்கிறது. அதாவது எப்படியாவது அந்த போராட்டங்களை நசுக்கி விடு என்று பிரான்ஸ் அரசை மிரட்டுகிறது.

டாங்கேசில்  6௦௦ மில்லியன் யுரோ மதிப்புள்ள புத்தாக்க வேலைகள் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ள அந்நிறுவனம் அங்குள்ள கள விவரங்களை பார்த்த பிறகே தங்களது வேலையை துவக்க உள்ளதாக கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலபிரபுத்துவத்தை அழித்து  முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய  பிரான்ஸ் மக்கள் இன்று  தங்களுக்கான  ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள். தங்களது உரிமைகளை நசுக்க வரும் முதலாளித்துவத்தின் கோரப்பற்களை உடைத்து மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்கள்.

– சுந்தரம்.

தொடர்புடைய பதிவுகள்

Revolution Never Sleeps: Nuit Debout in France and Beyond
French labour dispute: Strike hits all eight oil refineries
Hollande fears French student revolution in protests against labour reform