privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

-

இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

பாரிஸ் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நேரப்படி நவம்பர் 13ம் தேதி இரவு 9:15 அளவில் (இந்திய நேரம் நவம்பர் 14 அதிகாலை 1:30) பாரிஸ் நகருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் குழு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த சமயத்தில் அமெரிக்க ராக் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பெடக்ளென் என்கிற நாடக அரங்கினுள் நுழைந்த பயங்கரவாதிகள், பார்வையாளர்களின் மேல் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

நவம்பர் 14 அதிகாலை 00:58 வரை பெடாக்ளென் அரங்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பயங்கரவாதிகள். பெடாக்ளென் அரங்கம் தவிர வேறு ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மூன்று குண்டுவெடிப்புகளில் சுமார் 129 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது (நவம்பர் 14 பிற்பகல் நிலவரப்படி).

மேலும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் தாக்குதலில் கடுமையாக காயமடைந்துள்ளனர். நவம்பர் 14 அதிகாலை நிலவரப்படி பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் பெடாகலன் அரங்கின் கட்டுப்பாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளதுடன், சுமார் 8 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளனர்.

பி.பி.சி செய்தியறிக்கை ஒன்றின்படி, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவன் “இது ஹொல்லந்தேவின் தவறு, உங்கள் அதிபரின் தவறு… அவர் சிரியாவில் தலையிட்டிருக்க கூடாது” என்று முழங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டுள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்கு தமது அமைப்பு பொறுப்பேற்பதாக டாயிஷ் அமைப்பு (ஐ.எஸ்.ஐ.எஸ்) அறிவித்துள்ள நிலையில், இது பிரெஞ்சு தேசத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளார் அதிபர் பிரான்கோயிஸ் ஹொல்லாந்தெ.

இந்த மோசமான தாக்குதல் டாயிஷ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சில உள்ளூர் ஆதரவுக் குழுக்களின் உதவியோடு நடத்தியிருக்கிறார்கள் என்று அறிவித்துள்ள ஹொல்லாந்தே, இத்தாக்குதல் தமது தேசத்தின் மீதான போர் என்று வருணித்துள்ளார். தற்போது பிரான்சில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாதிய காட்டுமிராண்டிகளுக்கு எதிராக கருணையற்ற எதிர் நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுக்கும் என்று அதிபர் உத்திரவாதமளித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர். பிரான்சுக்கு ஆதரவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து பிரதமர் கேமரூன், “உங்களது மதிப்பீடுகள் தாம் எமது மதிப்பீடுகள்; உங்களது உங்களது வலி தான் எங்களது வலியும்; இனி உங்களது சண்டை எங்களது சண்டையும் கூட” என்று அறிவித்துள்ள நிலையில் எதிர் வரும் வாரங்களில் பாரிஸ் தாக்குதலுக்கான எதிர் விளைவுகளை நாம் சிரியாவில் காணப் போவது நிச்சயமாகியுள்ளது. தற்போது பிரான்சு நாட்டு விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துவிட்டன.

சுதந்திர நாகரீகத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்று மேற்குலகம் அஞ்சும் ஐ.எஸ்.ஐ.எஸ் (டாயிஷ்) யார்? சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின் கடுமையாக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுருவி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் சக்தி வாய்ந்த அமைப்பா? சுமார் ஓராண்டு காலமாக நேட்டோ தாக்குதலை எதிர்கொண்டிருக்கு நிலையில் தாம் கைப்பற்றிய நிலப்பரப்பை தமது வலுவான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு அந்த அமைப்பு வலுவானதா? இசுலாமிய ஜிஹாதிகள் ’சர்வ வல்லமை’ பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தாக்கும் அளவுக்கு ‘எல்லாம் வல்லவர்கள்’ ஆகிவிட்டனரா?

முதலாவதாக ஆப்கானிய முஜாஹிதீன்கள், அவர்களின் அடுத்த அவதாரமான தாலிபான் மற்றும் ஒசாமா பின்லாடனின் உருவாக்கமான அல்-காய்தா போன்ற ஜிஹாதி அமைப்புகள் சுயம்புவாக தோன்றிய இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் இல்லை. இவையனைத்தும் அமெரிக்க தயாரிப்புகள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்திற்குப் பின் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த சோவியத் ரசியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நடந்த பனிப்போரில் மத்திய கிழக்கை கட்டுப்படுத்த இவர்களுக்குள் நடந்த நாய்ச்சண்டைகளின் பின்புலத்தில், ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்திருந்த என்பதுகளின் துவக்கத்தில் நேரடியாக ரசியாவுடன் மோதுவதை விட பதிலிப் போர் (proxy war) தான் சரியானது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவுதியுடன் சேர்ந்து பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தான் முஜாஹிதீன்கள்.

அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹென்ரி கிசிங்கர் தனது சொந்த வார்த்தைகளிலேயே தனது சாதனைகளாக ஆப்கான் முஜாஹிதீன்களின் உருவாக்கத்தைக் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவதாக, இரண்டாயிரங்களின் முதல் பத்தாண்டுகளின் இறுதியில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் நடந்த வண்ணப் புரட்சிகளும், அந்தப் பத்தாண்டுகளின் துவக்கத்தில் நடந்த ஈராக் மற்றும் ஆப்கானுக்குள் நிகழ்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பும் மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை குறிவைத்தே நடந்துள்ளன. மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதை விட அந்நாடுகளில் பதவியில் இருக்கும் – தனது பெட்ரோலியக் கொள்கைக்கு உடன்படாத – ஆட்சியாளர்களை கவிழ்க்க அமெரிக்கா பதிலிப் போர்களில் ஈடுபட்டு வருகின்றது. அதாவது, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான உள்ளூர் கலகங்கள் திடீரென முளைப்பதும் (இருப்பதிலேயே ஆக கழிசடையான சர்வாதிகார, எதேச்சாதிகார காட்டுமிராண்டி ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் உற்ற தோழமை நாடான சவூதி தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது), அந்தக் கலகங்களை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் கிடைப்பதும் இரகசியமானதல்ல.

மூன்றாவதாக, சிரியாவின் அதிபர் அசாதுக்கு எதிராக உருவான டாயிஷ் அமைப்பு அமெரிக்காவின் தயாரிப்பு தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. மத்திய கிழக்கில் அமெரிக்க எண்ணை கொள்கைக்கு முழுவதும் ஒத்து ஊதாமல் ஊசலாடிக் கொண்டிருந்த ’சர்வாதிகாரி’ அசாதுக்கு எதிராக திடீரென்று வெடித்த ‘உள்ளூர் கலகங்களை’ துவக்கம் முதலே அமெரிக்கா ஆதரித்தது. இந்த ஆதரவு வெறுமனே அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான ஆதரவு மட்டுமில்லை – அரச படைகளை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியது. அசாதுக்கு எதிராக சண்டையிட்டு வந்த ஆயுதந்தாங்கிய குழுக்களில் பங்கேற்க சவூதி அரசு தனது சிறைகளில் இருந்த ஆயுள் மற்றும் தூக்குக் கைதிகளை விடுவித்து அனுப்பியது. மேற்குலக நாடுகளின் பேராதரவு இருந்ததன் காரணமாகத் தான் அசாதுக்கு எதிரான குழுக்கள் மிக எளிதாகவும், குறுகிய காலத்திலும் ஈராக்கின் வடமேற்குப் பகுதிகளையும், சிரியாவின் சில இடங்களையும் கைப்பற்றுவது சாத்தியமானது.

பஷார் அல் அசாதுக்கு எதிரான குழுக்கள் ஒருகட்டத்தில் டாயிஷ் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற பெயரில் ஒன்றிணைந்த சமயத்தில் அத்தீவிரவாதிகளை அமெரிக்க செனேட்டர் ஜான் மெக்கெயின் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்களும், காயம் பட்ட டாயிஷ் போராளியோடு இசுரேல் பிரதமர் பேசும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இப்புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவ்வமைப்புக்கு மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் கொஞ்சம் ‘நல்ல’ பெயர் இருந்தது (அதாவது, தங்கள் பிடியில் சிக்கிய இந்திய செவிலியர்களின் கழுத்தை அறுக்காமல் திருப்பும் அளவுக்கு நல்லவர்களக அந்தக் காலத்தில் அவர்கள் அறியப்பட்டனர்).

நான்காவதாக, ஜிஹாதி அல்லது புனிதப் போர் என்பதற்கு வஹாபியர்கள் எழுதும் விளக்கவுரைகளில் மதப் புனிதத்திற்கு பின்னே அமெரிக்க நலன்தான் ஒளிந்துள்ளது. முஜாஹிதீன்கள், தலீபான்கள், அல்-காயிதா, போக்கோ ஹராம்(நைஜீரியா), டாயிஷ்(ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்-ஷபாப் (சோமாலியா), லிபிய இசுலாமிய போர்க் குழு (LIFG), மக்ரீப் நாடுகளுக்கான அல்-காயிதா, இந்தோனேஷியாவின் ஜெமா இசுலாமியா போன்ற வஹாபிய பயங்கரவாத இயக்கங்களின் பின்னணியில் அமெரிக்காவின் பிராந்திய அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நலன்கள் உள்ளன.

ஐந்தாவதாக, அமெரிக்காவின் தயாரிப்புகளாக இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு சிந்தாந்த தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலுமாக சொந்த நலன்களும் உள்ளன. இவ்விருவரின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரண்படாத வரை மேற்குலகம் இப்பயங்கரவாத குழுக்களை ’நல்ல’ தலீபான்கள் என்றும் ’நல்ல’ அல்-காயிதா என்றும் ’நல்ல’ ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். ஆப்கானில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படையினரின் ட்ரக்குகள் தொலைதூர பிரதேசங்களுக்கு பாதுகாப்பாக செல்ல நல்ல தலீபான்களுக்கு தண்டம் கட்டிய வகையில் ஏற்பட்ட செலவுகளை அமெரிக்க அரசே ஆவணப்படுத்தியுள்ளது.

எப்போது நல்லவர்கள் கெட்டவர்களாக மாறுவார்கள்? நல்லவர்களின் சித்தாந்த மற்றும் பிராந்திய நோக்கங்களை அடிப்படையாக கொண்ட அவர்களின் சொந்த நலன்கள் எப்போது அமெரிக்க நலன்களோடு முரண்பட்டுப் போகின்றதோ அப்போது நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகளாக மாறுவார்கள். சரியாகச் சொன்னால் ஒரு மிருகத்தை வளர்த்து விட்டு அது தின்னு கொழுப்பெடுத்து ஆடும் போது புதிய மிருகத்தை இறக்குவது அமெரிக்க உத்தி. அந்த வகையில் தாலிபான்கள் மற்றும் அல்கைதாவோடு இந்த புதிய ஐ.எஸ்.எஸ் மோதத் துவங்கியிருக்கிறது. மத்திய ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகள் மற்றும் மக்களை நிரந்தர போரில் வைத்திருக்க இசுலாமிய மதம் அமெரிக்காவிற்கு நன்கு பயப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் பயங்கரவாதிகள் புதிதாக விளக்கப்படுகிறார்கள். பிறகு அவர்களை கெட்டவர்கள் என்று உலக மக்களின் பொதுப்புத்தியில் நிலைநாட்டிவிட்டு போரையும் தொடுப்பார்கள்.

கெட்டவர்களை அழிக்க பரந்தாமன் அவதரித்தே ஆக வேண்டும் என்பதால், அமெரிக்க படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, போர் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், அடிப்படை கட்டமைப்பு நொறுக்கப்படுவது, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது, குழந்தைகளின் உடல்கள் குண்டுகளால் குதறி எறியப்படுவது போன்ற காட்சிகளுக்குப் பின் கெட்டவர்கள் அழிக்கப்பட்டு மேற்குலக விளக்கத்தின் அடிப்படையிலான ஒரு ‘ஜனநாயக’ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ‘ஜனநாயக’ பொம்மை ஒன்று அதிபராக பதவியில் அமர்த்தப்படுவார்.

நாம் இப்போது பாரிஸ் தாக்குதலுக்குத் திரும்புவோம். இத்தாக்குதல் குறித்து இரண்டு கருத்துக்களை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தனது உருவாக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் கொண்டு பஷார் அல் அசாதின் ஆட்சியைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் நோக்கம். இதற்காகவே அவ்வமைப்பிற்கு ஆயுத சப்ளை மட்டுமின்றி, இராணுவ போர்தந்திர ரீதியிலான உதவிகளையும் அமெரிக்காவும் அதன் வட்டார நேச நாடுகளான இசுரேல் மற்றும் சவூதி அரசுகளைக் கொண்டு செய்து வந்தது. எனினும், நீண்ட கால நோக்கில் சிரியாவை முற்றிலுமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் விடுவது அமெரிக்காவின் நோக்கமில்லை. ஆப்கான், ஈராக் போல் ஒரு பொம்மை ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அமெரிக்க நோக்கங்களுக்கு உகந்தது. எனவே, ஒருபக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முன்னேறி வரும் போதே அது ஒரு காட்டுமிராண்டிக் குழு என்பதை உலகிற்கு காட்ட அதனிடம் சிக்கிய வெளிநாட்டவர்களின் கழுத்தறுப்புக் காட்சிகளை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆரம்பகால வெற்றிகளுக்குப் பின் அது ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான இடங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. நாகரீக உலகின் ஒரே தலைவன் என்கிற தனது கடமையை ஆற்ற அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நேட்டோ படைகளைக் கொண்டு துவங்கியது. இந்த தாக்குதல் ஓராண்டு காலம் நீடித்த நிலையிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பலவீனமடையவில்லை என்பதோடு அதன் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணை வயல்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை – மாறாக சிரியாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எண்ணை வயல்களோ நேட்டோவின் எதேச்சையான தவறுகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன. ஆச்சரியமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து துரப்பணம் செய்யப்படும் எண்ணை சர்வதேச எண்ணைச் சந்தைக்குள் ‘எப்படியோ’ நுழைந்ததோடு, கச்சா எண்ணையின் சர்வதேச விலையில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தி ரசியாவின் எண்ணை வர்த்தகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது வட்டார நண்பனை இழக்க விரும்பாத ரசியா, பஷார் அல் அசாதுக்கு ஆதரவாக களமிறங்கியது. தனது புவிசார் நோக்கங்களுக்காக பஷார் அல் அசாதின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது, ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு பிராந்தியத்திலிருந்து சர்வதேச கச்சா எண்ணைச் சந்தைக்குள் நுழையும் எண்ணையைத் தடுத்து தனது பொருளாதாரத்தைக் காத்துக் கொள்வது என்ற இரண்டு மாங்காய்களை ரசியா ஒரே கல்லில் அடிக்க நினைக்கிறது. ரசியாவின் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் தகர்க்கப்படுகின்றன என்கிற செய்தி ஒரு பக்கமும், நேட்டோவின் உளவுக் கருவிகளான (intelligence assets) நல்ல ஜிஹாதிகளையும் சேர்த்தே தாக்குகின்றது என்கிற குற்றச்சாட்டும் கடந்த மாதத்தில் மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

ரசியாவின் எதிர்பாராத வருகையைத் தொடர்ந்து, இதற்கு மேலும் அசாதுக்கு எதிரான பதிலிப் போரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நேட்டோவின் மயிலிறகு அடிகளும் போதுமானதல்ல என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சிரியா தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரசியாவுக்கு இடையே வியன்னாவில் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையில் தற்போதைய நிலவரப்படி ரசியாவின் கையே ஓங்கியுள்ளது. இப்பேச்சு வார்த்தையைப் பொறுத்த வரை, அமெரிக்காவின் நோக்கம், சிரியா மற்றும் ஈராக்கை ஒன்றாகச் சேர்த்து மூன்று கூறுகளாக பிரிப்பது மற்றும் அசாதுக்கு மாற்றாக ஒரு மேற்கத்திய கட்டுப்பாட்டின் கீழான பொம்மை தலைமை. ரசியாவின் நோக்கம் அசாதின் தலைமையிலான ஒன்றுபட்ட சிரியா.

தாழ்ந்து விட்ட தனது நிலையை மாற்ற உடனடியாக நேரடிப் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உள்ளது. எனவே அப்படியான ஒரு போருக்கு உகந்த மனநிலையை ஏற்படுத்த பாரிஸ் தாக்குதல் போன்றவை தோற்றுவிக்கும் அனுதாபம் அமெரிக்காவுக்கு தேவை. ஆகவே பாரிஸ் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

இதற்கு மாறான ஒரு கோணத்தை பிற முதலாளிய ஊடகங்கள் முன்வைக்கின்றன. அதாவது, இசுலாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் தம்மால் எங்கு வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை பறைசாற்றிக் கொள்ளவும் இந்த தாக்குதலைத் தொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர். சமீபத்தில் எகிப்துக்கு அருகே ரசிய விமானம் விழுந்து நொறுங்கியதைச் சுட்டிக்காட்டும் மேற்கத்திய ஊடகங்கள், அதுவும் கூட ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலே என்கின்றன.

நேட்டோ படைகள் தங்களை சிரியாவில் தாக்கினால், தம்மால் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை உணர்த்தவே பாரிஸில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்கின்றன மேற்குலக முதலாளிய ஊடகங்கள். பாரிஸ் தாக்குதலுக்குப் பின் நேட்டோ படைகளும் ரசிய படைகளும் தனித்தனியே ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பை எதிர்கொள்வதை விட, இவர்கள் இருவரும் இணைந்தே அவ்வமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், சிரியாவின் எதிர்காலம் குறித்து இணைந்தே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய முதலாளிய ஊடகங்களின் ஏகாதிபத்திய சாய்விலிருந்தும் ஏகாதிபத்திய கொள்கைகளின் பாதந்தாங்கிகளாக அவர்கள் இருப்பதும் அவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை நாம் தனியே விளக்கத் தேவையில்லை. இந்தக் காரணிகளால் தான் சிரியாவின் இன்றைய சீரழிவுகளுக்குப் பின் மேற்கத்திய நாடுகள் உள்ளன எனபதையும், பாரிஸ் தாக்குதல் மேற்கத்திய நாடுகளின் சிரியா கொள்கைகளின் தொடர் விளைவுதான் என்பதையும் இவை அங்கீகரிக்க மறுக்கின்றன. இன்னொரு பக்கம் பாரிஸ் தாக்குதலே அமெரிக்கா நடத்திய சதி என்று சதிக் கோட்பாட்டாளர்கள் முன்வைப்பதில் ஒரு பாதி ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளும் மறுபாதி அனுமானங்களாகவும் உள்ளன. உண்மைகளையும் அனுமானங்களையும் கலந்து கட்டி அவர்கள் வந்து சேரும் முடிவுகளும் விபரீத கற்பனைகளாக இருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது குறுகிய கால நலனுக்காக செய்த வல்லரசு அரசியல், இராணுவ மற்றும் உளவுச் சதிவேலைகளின் எதிர் விளைவுகள் என்பதே தர்க்க ரீதியில் வந்தடையக் கூடிய முடிவாக இருக்கிறது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது குறுகிய கால நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்னெடுத்த சதி நடவடிக்கைகளின் விளைவை மொத்த உலகமும் சந்திக்கிறது – இந்த மொத்த உலகத்திற்குள் ஏகாதிபத்தியங்களும் வருவதால் தவிர்க்கவியலாத படிக்கு அந்த நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களும் அந்த எதிர் விளைவுகளின் பாதிப்புகளை அனுபவிக்கிறார்கள்.

பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பியர்களை உளவியல் ரீதியில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்புப் போருக்குத் தயார் செய்யும் வேலையை ஏகாதிபத்தியங்கள் தமது ஊதுகுழல்களான முதலாளிய ஊடகங்களைக் கொண்டு துவங்கி விட்டன. இரட்டை கோபுரத் தகர்ப்பிற்கு பழிவாங்க ஆப்கானுக்குள் நுழைந்து மீள முடியாத புதைகுழிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் சிரியாவிற்குள் நுழைவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சவப்பெட்டிகளின் வரலாறு மீண்டும் திரும்புகின்றது – ஆனால், ஆப்கானை விட ரசியாவின் இராணுவ ஆதரவைக் கொண்டுள்ள சிரியா பலமானதொரு சவாலை வழங்கலாம், அது சர்வதேச எண்ணைச் சந்தையில் தாக்கத்தையும் அதன் தொடர்ச்சியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமாக மக்களின் மேல் சுமையாக விழுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

பிரெஞ்சு மக்களும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் இந்த நேரத்தில் தமது அரசுகளின் ஆக்கிரமிப்பு வெறியை சொந்த மண்ணில் எதிர்த்து நிற்க வேண்டும். அதுவே ஆக்கிரமிப்பு தேசங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளின் கடமையும் கூட.

மற்றொரு புறம் இசுலாமிய மதவதம் என்பது அமெரிக்க நலனுக்காக மட்டுமே தோன்றி வளர்ந்தது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் தொடர்பில்லை என்று பல்வேறு இசுலாமிய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இசுலாமிய சர்வதேசம், மதப்புனிதம் இன்ன பிற கோட்டுபாடுகள் அனைத்தும் அல்லா அருளிய அருட்கொடைகள் என்று மதவாதிகள் நம்புகிறார்கள். உண்மையில் இவற்றை அல்லா அருளவில்லை, அமெரிக்காதான் வழங்கியது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. மாறாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கமே இசுரேலின் சதி என்று ஒளிந்து கொள்கிறார்கள்.

அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு இசுலாமிய நாடுகளில் மதவாதிகளால் அணிதிரட்டப்பட்ட மக்கள் குறிப்பிட்ட காலம் வரை இவ்வியக்கங்களை புனிதப் போர் இயக்கங்களாவே அங்கீகரித்திருக்கின்றனர்.

மறுபுறம் இந்த இயக்கங்களின் பயங்கரவாதங்களுக்கு குறைவில்லாத செயல்களை நடத்திவரும் சவுதி அரசை இவர்கள் கண்டிப்பதில்லை. கூடவே சவுதியின் நல்லெண்ண தூதர்களாகவும் பேசுகிறார்கள்.

ஆகவே இந்த வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினை என்ன? இசுலாம் ஒரு மதம் மட்டுமே. அதாவது ஒரு தனிநபரின் ஆன்மீக நம்பிக்கைக்காக சில கோட்பாடுகளைக் கூறும் சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் வைத்திருக்கும் ஒரு வழிபாட்டு முறை. இந்த அளவைத் தாண்டி இசுலாம்தான் இந்த உலகின் சர்வரோக நிவாரணி. பங்குச் சந்தை, பெட்ரோல் விலைஉயர்வு, பாலியல் பிரச்சினைகள், கல்வி, வரலாறு, அறிவியல் அனைத்தையும் குர்ஆனிலும், நபிகளின் வரலாற்றில் இருந்து மட்டும்தான் தேடுவோம் என்று சொல்வது தவறு.

இல்லை இது சரிதான் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்க தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். நாடுகள், மக்களது சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் மதத்தை அடிப்படையாக வைத்துப் பார்ப்பது என்பதை உண்மையில் அல்லாவோ இல்லை நபிகளோ செய்யவில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் காலை நக்கி வாழும் சவுதி வகாபியசமும்தான் இந்த விபரீதப் பார்வையை இசுலாமிய மக்களிடம் கொண்டு சேர்த்தன.

ஆக பாரிஸ் தாக்குதலில் நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிப்பது போல இசுலாமிய மதவெறியர்களையும் கண்டிக்க வேண்டும். இருவரும் அவர்களது நலனுக்காக தோன்றி இணைந்து வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால்தான் உலக மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவதில் நாம் வெற்றிபெற முடியும்.

– தமிழரசன்