வேளாண் சட்டத்தை எதிர்த்து, நவம்பர் 26,27 ஆகிய இரு தினங்களில், விவசாயிகள் சங்கம் நடத்தவிருக்கும்  ”டெல்லி சலோ !” போராட்ட பேரணிக்கு அனுமதி மறுத்திருக்கிறது டெல்லி போலீசு.

கொரோனா சூழலை பயன்படுத்திக் கொண்டு மோடி அரசு அவசர அவசரமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த பல வாரங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, அம்மாநிலத்திற்கான சரக்குப் போக்குவரத்தை நிறுத்தி அவர்களை பழிவாங்கத் துடித்தது மோடி அரசு. ஆயினும் வேளாண் மசோதாவை எதிர்ப்பதில் துளியும் தயக்கமின்றி முதல் நாள் முதல் பஞ்சாப் விவசாயிகள் போராடி வந்திருக்கின்றனர்.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டத் திருத்தங்கள் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்க வழிவகை செய்வதாக இருக்கின்றன. இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வு முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு நேரடியாக பலியாக்கப்படும். விவசாயிகளின் விலை பொருளுக்கு கார்ப்பரேட் நிர்ணயிப்பதுதான் விலை என்ற நிலை ஏற்பட்டால், விளைவித்த பொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைமையே விவசாயிகளுக்கு ஏற்படும்.

அந்தக் காரணத்தால்தான் பஞ்சாப் விவசாயிகள் கடுமையானப் போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். இந்தப் போராட்டங்களை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என மோடி அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில், அனைத்து விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து ”சம்யுக்தா கிசான் மோர்ச்சா” என்ற அமைப்பை ஏற்படுத்தி மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்  வரையிலும் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தன.

தடுக்கும் போலீசை புறங்கையால் தள்ளிவிட்டு வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியை நோக்கி விரைகிறார்கள் பஞ்சாப் விவசாயிகள் (நவ. 25)

அதன் ஒரு பகுதியாக இன்று (நவ. 26, 2020) நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணியாகச் சென்று 26, 27 தேதிகளில் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தனர்.

இதனை ஒட்டி, விவசாயிகளின் டெல்லி பேரணி மற்றும் போராட்டத்திற்கு  அனுமதி வழங்க முடியாது என்று டெல்லி போலீசு அறிவித்துள்ளது.  நேற்று (நவ. 25-ம் தேதி) தனது டிவிட்டரில் இது குறித்து அறிவிப்பு செய்துள்ள டெல்லி போலீசு, கொரோனா தொற்று காரணமாக இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்திருக்குறது. டெல்லி போலீசு மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரியானா மாநில போலீசும் விவசாயிகளின் பேரணியைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், பஞ்சாபில் இருந்து அரியானாவிற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் அடைத்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியானா போலீசின் இந்தத் தடைகளை மீறி பஞ்சாப் விவசாயிகள் அரியானா மாநிலத்திற்குள் நுழைய அரியானா விவசயிகள் உதவி செய்கின்றனர். கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி அனைத்துவித மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவுச் சட்டங்களை நிறைவேற்றி வரும் மோடி அரசு, அதற்கு எதிரான ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களையும் கொரோனா ஊரடங்கைக் காட்டி தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

படிக்க :
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

♦ நவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் ! அணிதிரள்வோம் || அசுரன் பாடல் !!

இன்று நடைபெறும் தொழிலாளர் போராட்டத்தை விவசாயிகள் ஆதரித்திருப்பது, தங்களது பொது வேலை நிறுத்தத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளையும் இணைத்து அனைத்து இந்திய அளவில் தொழிலாளர்கள் போராடுவதும், பாசிசத்திற்கு எதிரான போரில் தவிர்க்க முடியாத வர்க்க அணி சேர்க்கையே ஆகும்.

இத்தகைய வர்க்க அணி சேர்க்கையை – தொழிலாளர் விவசாயி வர்க்க ஐக்கியத்தைக் – கட்டியமைப்பதும் வளர்த்தெடுப்பதும்தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி !!


சரண்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க