“விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்தமூலையில் இருக்கும் வர்த்தகரிடமும் விற்கலாம்; விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும்” என்று சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் குறித்து பாஜக உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு தரப்பு கூறி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கான இலாபம் அதிகரிக்கும் என்றும் கூறி வருகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை பீகார் விவசாயிகளின் நிலைமை நிருபிக்கிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இதெல்லாம் இல்லாமல் போனால் விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்பதை பீகாரிலிருந்து  பாஞ்சாபிற்கு நெல் கடத்தப்படும் சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.

சமீபத்தில் பிகார், உத்திர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு நெல் கடத்தப்படும் மோசடி நடப்பதாக பஞ்சாப் போலீசு கூறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் முதன்மைச் செயலாளர், K.A.P.சின்கா இது குறித்துக் கூறுகையில், இதுவரை 69 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மோசடி (Section 420), குற்றவியல் சதி (Section 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

இதுபற்றி குறிப்பிடும் போலீசு ஆய்வாளர் குர்மீத் சிங் “ இந்த மோசடி பஞ்சாப், பிகார், உத்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள், தரகர்கள், மில் முதலாளிகளின் தலையீடு இல்லாமல் நடந்திருக்க முடியாது” என்கிறார். பஞ்சாப் மாநில, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இயக்குனர், மித்ரா கூறுகையில்,இதுவரை 128 லாரிகளும், 11 டிராலிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது”, என்கிறார்.

“பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தின் படி,  பஞ்சாப் மண்டிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நெல் மூட்டைகள், பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ. 800-க்கும் குறைவான விலையில் வாங்கப்பட்டது. அதை பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலையான 1,868 ரூபாய்க்கு விற்று லாபம் ஈட்டுகிறார்கள். பஞ்சாப் மாநில அரசின் முறையான  கொள்முதல் அமைப்பை தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார் மித்ரா.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் சுமார் 2,500 டன் நெல் இருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் விலை தேராயமாக ரூ. 5 கோடி வரை இருக்கும். ஆனால், இந்த முறைகேடான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கிறது என்பது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த சாகுபடியையும், மொத்த கொள்முதலையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தெரிந்துவிடும்.

பிடிபட்ட கடத்தல் லாரிகள்

பஞ்சாப் வேளாண் துறையின் தரவுகளின் படி, 2019-2020-ம் ஆண்டுக்கான, மதிப்பிடப்பட்ட நெல் சாகுபடி 150 லட்சம் டன். ஆனால், இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் சுமீத் பன்சல், “மொத்த நெல் கொள்முதலின் அளவு 162 லட்சம் டன்” என்கிறார். அதாவது, கிட்டத்தட்ட 12 லட்சம் டன் நெல் வேறு எங்கோ இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பாட்டியாலாவில் ஒரு மேலாளருக்கும், வர்த்தகர்க்கும் இடையில் நடந்த வாட்சப் (whatsapp) உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், “வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய நெல்லை, பஞ்சாப் மாநில மண்டிகளில் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 1,868-க்கு விற்க அனுமதித்தால் தனக்கு எவ்வளவு லஞ்சம் கிடைக்கும்?” என்று பேரம் பேசியது அம்பலமானது. அந்த மேலாளர் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குவிண்டாலுக்கு ரூ. 200 – 300 வரை லாபம் நிர்ணயித்து, தரகர்கள் நெல்லை குறைந்த விலைக்கு பிகாரில் வாங்குகிறார்கள். போக்குவரத்துக்கு ரூ.200 வரை செலவு போக மீதி லாபத்தை பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் முறையான மண்டி அமைப்பு இருக்கிறது. பிகார் போன்ற மாநிலங்களில் கொள்முதல் முறையாக நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கொள்முதலுக்கான பணமும் உடனடியாக விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை.

“மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கு நெல்லை யார் வாங்குவார்கள்? எங்கள் விளைச்சலை எங்கே கொண்டு செல்வது? நெல் அறுவடை செய்யப்பட்டு தயாராக இருக்கும் போது யாரும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் எங்கே போவார்கள்? இந்த உதவியற்றநிலை தங்கள் விளைச்சலை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க விவசாயிகளை நிர்பந்திக்கிறது”, என்று பிகார் மாநில சிறு விவசாயிகள் சங்கத்தலைவர், B.N.சிங் தெரிவிக்கிறார்.

ராஷ்டிரிய கிசான் சபாவின் தலைவர், ரமஷிஷ் ராய் இது குறித்துக் கூறுகையில், “14 ஆண்டுகளுக்கு முன்பு 2006-ல் பிகார் அரசு, விவசாயிகளை தாராளமயப்படுத்துவதாக சொல்லி வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை (Agriculture Produce Market Committee(APMC)) ஒழித்தது. ஆனால், இது விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியில் விட்டுவிட்டது. இந்த இடைத்தரகர்கள்தான் விவசாயிகளுக்கு வரவேண்டிய கொஞ்ச நஞ்ச லாபத்தையும் பறித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), என்பது விவசாயிகளின் விளைச்சலை மலிவான விலைக்கு விற்க நிர்பந்திக்கும் இடைத்தரகர்கள், முதலாளிகளிடம் இருந்து விவசாயிகளை பாதுக்காக்க கொண்டுவரப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாத போதும், APMC குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விளைபொருட்களை விற்பதற்கான களமாக இருக்கிறது.

படிக்க :
♦ எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), ஒழிக்கப்படும் போது, இடைத்தரகர்களை நம்பி இருக்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலையை இடைத்தரகர்கள் மதிப்பதில்லை. லாபம் ஒன்றே நோக்கமாக இருக்கும் அவர்களுக்கு விவசாயிகளின் வாழ்க்கைநிலை பற்றிய அக்கறை சிறிதும் இருப்பதில்லை.

அரசு கொள்முதலும் இல்லை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவும் இல்லை, என்றான போது, விளைபொருட்களுக்கான விலை உத்தரவாதம் ஒன்றுமில்லை. இது விவசாயிகளை கையறுநிலைக்கு இட்டுச்செல்கிறது. அவர்களை விவசாயத்தில் இருந்தே வெளியேறும்படி செய்கிறது. அப்படி, விவசாயத்தை விட்டு வெளியேறியவர்கள் தான் இன்று பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

விவசாய வல்லுநர் தேவேந்திர சர்மா கூறுகையில், “பிகார் மாநிலத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை, ஒழிக்காமல் இருந்திருந்தால் பிகார் இந்தியாவின் மலிவு விலை தொழிலாளர்களின் கூடாரமாக மாறாமல் இருந்திருக்கும்” என்கிறார். சுதந்திரச் சந்தை என்பது விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்காது என்பதற்கு பிகார் ஒரு சிறந்த உதாரணம்.

கார்ப்பரேட்டுகளைப் பொறுத்தவரையில் இது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் விவகாரம். விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவது, விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டுவது, குறைந்த கூலிக்குத் தேவையான ரிசர்வ் பட்டாளங்களை உருவாக்குவது என மூலதனத்தின் ஆட்சிக்கு சாதகமான நிலைமைகளையே இந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் உருவாக்கவிருக்கிறது.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை ஒழித்தால் நிறைய தனியார் மூலதனம் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள், பெரிய மண்டிகளை கட்டுவார்கள், விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று போலியான, சாத்தியமற்ற ஆருடங்களைச் சொல்லி ஏய்த்து வருகிறது கார்ப்பரேட் ஆதரவுக் கும்பல். ஆனால், அது சந்தையை ஒரு சிலரின் ஏகபோகமாக மாற்றி விவசாயிகளை சுரண்டுவதற்குதான் இட்டுச்செல்லும் என்பதை பிகார் விவசாயிகளின் நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

இப்படி கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விவசாயிகளை சந்தை சக்திகள் ஒட்டச் சுரண்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை சட்டப்பூர்வமாக்கும் வேலையையும், சிறு சிறு தரகர்களை ஒழித்துவிட்டு கார்ப்பரேட் தரகர்களைக் கொண்டு வரும் வேலையையும் தான் வேளாண் சட்டத்திருத்தங்களின் மூலம் பாஜக செய்யத் துடிக்கிறது.

இன்றைய பிகார் விவசாயிகள் அடிமாட்டுக் கூலிக்குப் பணி செய்யும் நாடோடிகளாக மாற்றப்பட்டிருப்பதே அதற்குச் சான்று !


சீனிச்சாமி
செய்தி ஆதாரம் :
The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க