வெங்காய விலை, உரிக்காமலேயே கண்களில் நீரை வரவழைக்கும் அளவிற்குத் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையொட்டி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் வெங்காய ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் துரிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்தை ஒட்டி,  வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசு தெற்காசிய நாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதிக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

படிக்க :
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

தேர்தலில் தனது ஓட்டுக்களை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வெங்காய இறக்குமதியில் நுகர்வோர் பாதுகாப்புக்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.

குறிப்பாக வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் போது, அவ்வெங்காயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து நீக்கச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்ற விதியை தளர்த்தியுள்ளது.   தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்கு ஏற்படவிருக்கும் உடல்நலக் கேட்டை உதாசீனப்படுத்தியிருக்கிறது பாஜக அரசு.

வெங்காய வரத்து குறைவை ஒட்டி, கடந்த செப்டெம்பர் 14 அன்றே வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தாகச் சொன்னாலும், அந்தத் தடையும் முழு வெங்காய ஏற்றுமதிக்கு மட்டும்தான். வெங்காயத்தை பொடியாக்கி ஏற்றுமதி செய்யவும், நறுக்கிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையும் இல்லை என்று கூறியிருந்தது மத்திய அரசு.

வெங்காயத்தை மதிப்புக்கூட்டு சேவைகள் புரிந்து ஏற்றுமதி செய்யும் பெருநிறுவனங்களுக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது பாஜக அரசு.

பல இடங்களில் மழை காரணமாக உற்பத்தி பாதிப்பு என்று கூறப்பட்டாலும், பராமரிப்பகங்களில் வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் மழை காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கல்களும் நடந்து வருவதாகவும், மாநில அரசுகள் இதனைக் கண்டுகொள்ள மறுப்பதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய விளைபொருட்கள் பாதுகாப்புச் சட்டங்கள் இருந்த சூழலிலேயே கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கடுமையான வெங்காயத் தட்டுப்பாட்டை நாடு சந்தித்திருக்கிறது. குறிப்பாக வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்திருக்கிறது.

தற்போது மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கும் புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், இது போல அனைத்து காய்கறிகளின் விலையும் தீயாக உயரும் அபாயம் உள்ளது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் விவசாயம் கொண்டுவரப்படும்போது பதுக்கலும், செயற்கையான தட்டுப்பாடும் உருவாக்கப்பட்டு, அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு மக்களின் தலையில்தான் விடியும்.

வேளாண் திருத்த மசோதாக்கள் தற்போதைய சட்ட விரோத பதுக்கலை சட்டப்பூர்வமான அனுமதி பெற்ற பதுக்கல்களாக மாற்றுகின்றன. வெங்காயத்தைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை என தற்போது எச்சரிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு , வருங்காலங்களில் இப்படி வாய்ச்சவடால் அடிக்க முடியாது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் இனி காய்கறிகளை நமக்கு எட்டாக்கனிகளாக்கப் போகின்றன. இச்சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயி மகன் எடப்பாடியாரின் ஆட்சி மக்கள் வாயில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தப் போவதாக வாய்ச் சவடால் அடித்துத் திரிகிறது.


கர்ணன்
செய்தி ஆதாரம் : பிபிசி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க