காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை முறியடிப்பது என்ற கடமை இந்திய உழைக்கும் மக்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ள சூழலில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக, மோடி அரசு அச்சட்டங்களை பின்வாங்கியிருப்பதானது உறுதியான மக்கள் திரள் போராட்டங்களின் மூலமே பாசிஸ்டுகளை மண்டியிடச் செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாகவும் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட கடந்த நவம்பர் 19 அன்று திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, “வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுகிறோம்” என்று அறிவித்தார். ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவு இருந்தும் ‘ஒருதரப்பு’ விவசாயிகளின் போராட்டத்தை மதித்து ஜனநாயகப் பண்போடு இறங்கி வந்துள்ளாராம் மோடி. ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று நடிக்கிறார் மோடி.
வேளாண் சட்டங்களின் புனித நோக்கத்தை எங்களால் ‘புரியவைக்க முடியவில்லை’ என்று சொல்கிறார் மோடி. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி அம்பானி, அதானிக்கு விவசாயிகளை அடிமையாக்குவதுதான் வேளாண் சட்டங்களின் நோக்கம் என்பதை நன்கு புரிந்துகொண்டதோடு, இந்நோக்கத்தை அமல்படுத்த முனைந்தால் தங்களது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை மோடிக்கும் அவரது எஜமானர்களான அம்பானி, அதானிக்கும் விவசாயிகள் புரியவைத்துவிட்டனர். இந்த உண்மையை மோடியால்தான் ‘ஒப்புக்கொள்ள’ முடியவில்லை.
படிக்க :
மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம்
“காங்கிரஸ் தூண்டிவிடும் போராட்டம்”, “காலிஸ்தானிகள் போராடுகிறார்கள்”, “மாவோயிஸ்டு பின்னணி” – போன்ற நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதன் மூலம் இப்போராட்டத்தை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தி ஒடுக்கிவிடலாம் என நினைத்த காவிகளின் கனவை வெடிவைத்து தகர்ப்பதைப் போல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று முன்னேறியதிலும் காவி – கார்ப்பரேட்டுகளை கதிகலங்கச் செய்யும் போர்குணமிக்க போராட்ட வழிமுறைகளைக் கையாண்டதிலும்தான் விவசாயிகள் போராட்டத்தின் மகத்துவம் உள்ளது.
டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய போதே, இது ஆதிக்க சாதி ஜாட்களின் போராட்டம், பணக்கார விவசாயிகளின் போராட்டம் என பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட நிலமற்ற கூலி விவசாயிகளையும் சிறு – குறு விவசாயிகளையும் போராடுபவர்களுக்கு எதிர்நிலைப்படுத்த காவிக்கும்பல் முயன்றபோதும் அப்பொய்ப் பிரச்சாரங்களைப் புறக்கணித்துவிட்டு தலித் கூலி விவசாயிகளும், சிறு – குறு விவசாயிகளும் போராட்ட முன்னணியில் தங்களை உறுதியாகப் பிணைத்துக் கொண்டார்கள்.
“டெல்லிச் சலோ” போராட்டம் தொடங்கியபோது அகில இந்திய அளவில் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளி வர்க்கமும் போராடியது. விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர், தங்கள் போராட்டக் கோரிக்கைகளுடன் மற்றவர்களுடையதையும் இணைத்துக் கொண்டார்கள். தொழிலாளர் – விவசாயி வர்க்கங்களின் ஒற்றுமையாக அது அமைந்து.
அமெரிக்க பாடகி ரெஹானா, ஸ்வீடன் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நோம் சோம்ஸ்கி உள்ளிட்டு உலகம் முழுக்க உள்ள முக்கிய பிரபலங்கள், செயல்பாட்டாளர்கள், லிபரல் – முற்போக்கு அறிவுஜீவிகள் என குட்டி முதலாளித்துவப் பிரிவினரின் ஆதரவையும் பெற்றது.
000
அனைத்து மாநிலங்களிலுமுள்ள விவசாயிகள் சங்கத்தை “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற ஒரு பொதுஅமைப்பின் மூலம் இணைத்து நாடெங்கும் விவசாயிகள் ஒற்றுமையைக் கட்டியமைக்க முயற்சித்த அதே வேளையில், மோடி அரசை எதிர்த்த அவர்களின் போராட்ட வடிவங்களும் மிகவும் கூர்மையாகவும் நாம் கற்றுக் கொள்ளும் வகையிலும் இருந்தது.
விவசாயிகள் முன்னெடுத்த, ரிலையன்ஸ் ஜியோ சிம் எரிப்புப் போராட்டம், ஜியோ செல்போன் கோபுரங்களைத் தாக்கியது, ரிலையன்ஸ் கடைகளின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள், அதானி பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய போராட்ட நடவடிக்கைகள், யாருடைய நலனுக்காக இந்த விவசாயச் சட்டங்கள் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதோ, அவர்களுக்கே (அம்பானி – அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு) நேரடியாக எச்சரிக்கைவிடும் வகையில் அமைந்தது.
மேலும், பா.ஜ.க. அலுவலங்களை முற்றுகையிட்டு போராடுதல், பொதுநிகழ்ச்சிக்கு வரும் பா.ஜ.க. தலைவர்களை விரட்டியடித்தல், அக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை ஊர் விலக்கம் செய்தல் என விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு ஜாட் விவசாயிகள் மத்தியிலிருந்த செல்வாக்கை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிந்தன.
அடுத்ததாக, போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது; மோடி அரசுக்கெதிராக போராடுகின்ற பிற உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் விவசாயிகள் போராட்டத்தை இணைக்கவில்லை; ஆரம்பத்தில் அவ்வாறு பிற மக்கள் போராட்டங்களோடு இணைத்தாலும் வளர்ச்சிப்போக்கில் அவற்றைக் கைவிடத்தொடங்கியது இந்த முக்கிய பலவீனமான அம்சம் இருந்தபோதிலும் விவசாயிகள் மேற்கொண்ட போராட்ட வடிவங்கள், அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு போன்றவற்றால் மோடி அரசுக்கு ஏற்பட்ட புறநிலை நெருக்கடியே இச்சட்டங்கள் பின்வாங்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
‘செயல்திறனற்றவர்’: மோடியை கோபித்துக் கொள்ளும் கார்ப்பரேட்டுகள்
ஓராண்டு காலம் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக விவசாயிகளை கடுமையாக அடக்கி ஒடுக்கி பணியவைக்க முயற்சித்த மோடி, திடீரென்று இப்படி பின்வாங்கியிருப்பது கார்ப்பரேட்டுகளுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஃப்ர்ஸ்ட் போஸ்ட் செய்தி இணையதளத்தில் “பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது ஏன் அரசியல் ரீதியாக தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் தர்க்கரீதியாக அநியாயமானது – என்பதற்கான ஐந்து காரணங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை கார்ப்பரேட்டுகளுக்கு மோடி மீது ஏற்பட்டிருக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.
“இது பிரதமரின் மிக மோசமான முடிவு. அவர் செயல்திறன் குறைந்தவராகவும், பலவீனமானவராகவும், பயனற்றவராகவும் காணப்படுகிறார். மேலும் இந்தியாவின் விவசாயத் துறையை சக்திவாய்ந்த நிலப்பிரபுத்துவ குலாக்குகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு முக்கிய பொருளாதார மறுசீரமைப்பைச் செய்வதற்கான பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டார்.”
“அவர் (மோடி) உறுதியை வெளிப்படுத்தி, தனது நிலைப்பாட்டை அமல்படுத்திருந்தால், இந்தியாவின் சீர்திருத்தவாதி என்ற அவரது பிம்பத்தை மேலும் மெருகூட்டியிருப்பதோடு விவசாயப் பொருளாதாரத்தை விடுவித்து, 1991-களின் பொருளாதார சீர்திருத்தங்களைப் போன்ற நடவடிக்கைகளை விவசாயத் துறையில் செயல்படுத்தியிருப்பார்” – என்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற மோடியை கடிந்துகொள்ளும் கட்டுரையாளர், தேர்தல் நோக்கத்திற்காகத்தான் இச்சட்டங்கள் பின்வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று அடுத்து சொல்கிறார்.
“நாடாளுமன்றத்தின் கீழவையில் 300 இடங்களுக்கு மேல் உள்ள ஒரு கட்சி, ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒருசிலரின் அச்சத்தால் நாட்டிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி நன்மை பயக்கும் நோக்கங்களை அடைய முடியவில்லை என்றால், ஜனநாயக அரசியல் அமைப்பு அபகரிக்கப்பட்டிருப்பது என்பது தெளிவாகிறது.”
‘ஜனநாயகம்’ அபகரிக்கப்பட்டிருக்கிறதாம். ‘நாட்டிற்கு’ எனும் சொல்லை ‘முதலாளிகளாகிய எங்களுக்கு’ என்றும் ‘ஜனநாயகம்’ என்பதை ‘முதலாளிகளின் விருப்பம்’ என்றும் மாற்றி வாசித்தால் இன்னும் இதைக் கூர்மையாகப் புரிந்துகொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் உச்சமாக, விவசாயிகளின் போராட்டத்திற்கு அஞ்சி, இப்படி பின்வாங்குவதால் ஏற்படும் ‘ஆபத்து’ குறித்து சொல்லும் கட்டுரையாளர் “எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு சாத்தியமான கருவியை அளிக்கிறது. எல்லாவற்றையும் தெருக்களில் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், தேர்தல் வெற்றிகளால் என்ன பயன்?” என்று அச்சமுறுகிறார்.
“எல்லா பிரச்சினைகளுக்கும் களத்தில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வு என்று சொல்பவர்கள் எதார்த்தம் புரியாதவர்கள். தேர்தலையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்” – என்று சொல்பவர்களின் கூற்றை எதிர்நிலையில் கேலிசெய்கிறது அம்பானியின் ஃப்ர்ஸ்ட் போஸ்ட்.
பின்வாங்கலுக்குத் தேர்தல் மட்டும்தான் காரணமா?
எங்கள் அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்துதான் இச்சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால், மோடி ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல (statesman-like) முடிவெடுத்திருப்பதாக இம்முடிவை வரவேற்றிருக்கிறார் அமித்ஷா.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நெருங்க உள்ள நிலையில், அதை மனதில் வைத்துதான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருப்பதாக பா.ஜ.க. எதிர்பாளர்கள் அனைவரும் கூறுகிறார்கள். பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கு ‘தேர்தலும் ஒரு கருவி’ என்று பேசுபவர்கள், “பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதற்கு, மத்தியில் ஆட்சி இருந்தால் மட்டும் போதாது. மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிப்பதன் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் தனது திட்டத்தை எதிர்ப்பே இல்லாமல் செயல்படுத்த முடியும்” என்று கூறுகிறார்கள்.
ஆம், அது உண்மைதான். அந்த வகையில், பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது இந்துராஷ்டிரத் திட்டத்தின் சோதனைக் களமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியாக வேண்டிய நிலையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் உள்ளது. ஆனால் தேர்தல் நோக்கத்திலிருந்து மட்டுமே பின்வாங்கியிருக்கிறார்கள் என்பது ஒரு அம்ச காரணம் மட்டுமே. மேலும் அது அவர்களின் இரண்டாம்பட்சக் கவலையும் கூட.
எனில் முதன்மையானது எது? பாசிசக் கட்சியான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது மக்கள் அடித்தளத்தை இழந்துகொண்டுவருகிறது என்பதுதான் அது. இதுகுறித்துதான் அவர்கள் அதிகம் கவலையடைகிறார்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் இதுநாள் வரை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி வைத்திருந்த இந்துத்துவ முனைவாக்கம் (hindutva polarization) சிதைந்துகொண்டு வருகிறது. இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அடித்தளமாக இருந்த பெரும்பான்மை ஜாட் விவசாயிகளை வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படுத்தியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் இதுநாள்வரை அவர்களை சாதிரீதியாக ஒடுக்கிவந்த ஜாட்களும் ஒன்றுசேர்ந்து போராடியிருக்கிறார்கள்.
முசாபர்நகர் கலவரத்தால் மூர்க்கமாக இந்துத்துவ அரசியல்படுத்தப்பட்டிருந்த மேற்கு உத்தரப்பிரதேச ஜாட்கள் தற்போது முஸ்லீம்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டத்திற்கெதிராக விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்தில் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். தாங்கள் இதுநாள் வரை பா.ஜ.க.வை ஆதரித்து தவறு செய்துவிட்டதாக அங்கு பேசிய முஸ்லீம் தலைவரிடம் கூட்டத்திலேயே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் ஒரு ஜாட் விவசாயத்தலைவர்.
ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் இம்மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.
காவி – கார்ப்பரேட் பாசிசம் தேர்தலின் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே அது தனது எல்லா நிகழ்ச்சிநிரலையும் அமல்படுத்துவதற்கு போதுமானதல்ல. உழைக்கும் வர்க்க விரோத, ஜனநாயக விரோத பாசிச திட்டங்களை மேலிருந்து அமல்படுத்தும்போது கீழிருந்து தேசவெறி, மதவெறியால் மக்களை துருவப்படுத்தும்போதுதான் அத்திட்டங்களை நியாயப்படுத்தி செயல்படுத்த முடியும். தன்னையும் தனது திட்டங்களையும் எதிர்ப்பவர்களை ‘தேசத் துரோகி’, ‘இந்து விரோதி’ என்று வசைபாடுவதன் பின்னால் ஒளிந்துகொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அது தகர்ந்து போவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தற்போது முக்கியப் பிரச்சினை.
வேளாண் சட்டங்கள் விசயத்தில் “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையேயான பிளைவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிப்பதாக மோடி வேளாண் சட்டங்களைப் பின்வாங்கியதற்கான அடுத்த நாள் (20.11.2021) வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையொன்று கூறுகிறது.
எனவே, இந்த பின்வாங்கல் என்பது சங்கபரிவாரக் கும்பல் மீண்டும் அம்மாநிலங்களில் புகுந்து தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக, அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொண்ட ‘சுவாசிப்பதற்கான அவகாசம்’… நமக்கல்ல!
படிக்க :
விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
விவசாய சங்கத் தலைவர்களின் மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்டம், சாலையில் முட்கம்பிகளை புதைத்தது, அரியானாவில் விவசாயிகளின் மண்டையைப் பிளந்தது, உ.பி. லக்கிம்பூர் – கேரி படுகொலைகள் என ஓராண்டு காலம் கடும் பாசிச ஒடுக்குமுறைகளைக் கையாண்டு இச்சட்டங்களை எப்படியாவது அமல்படுத்தியே தீர வேண்டும் என உறுதியாக இருந்த பா.ஜ.க. அரசு, மறுகாலனியாக்க கொள்கையின் முக்கிய அங்கமான வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டத்தை எளிதில் கைவிட்டுவிடாது.
மண்டி முறை, குறைந்தபட்ச ஆதாரவிலை போன்றவற்றை ஒழித்துக்கட்டும் வேலையை மோடி அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டும் செய்யும். எனவேதான் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்ட உத்தரவாதம் கொண்டுவரவேண்டும் என்று போராடுகிறார்கள் விவசாயிகள். மேலும் வேளாண் வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம், வேளாண் உற்பத்தியாளர் சங்கம் (FPO), மின்னணு உழவர் சந்தை (eNAM) என விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் திட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே தற்போது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பதென்பது ஒரு ‘தொடக்கநிலை வெற்றி’ மட்டுமே.
எனினும், பாசிச மோடி அரசை பணியவைத்த ஒரு மக்கள்திரள் போராட்டத்தின் முன்னேற்றம் என்ற வகையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் மோதி வீழ்த்துவதற்கு முன்நிற்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இது ஊக்கமளிப்பதாகும். இந்த ஊக்கத்தோடு இறுதி வெற்றிவரை போரிடுவோம்!
(குறிப்பு : புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க