நம்பிக்கையின் ஆட்சி

(பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் ஃபிரண்ட்லைன் இதழில் வெளியாகியிருக்கும் ஆர். விஜயசங்கர் அவர்களின் தலையங்கம் தமிழில் …)

19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவின் சமூக அரசியல் தளங்களில் ஏற்படுத்திய சுழலின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறியது; பொருளாதாரச் சுரண்டலினால் இந்தியாவின் செல்வங்கள் கொள்ளை போனதால் மோசமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும், தொழிலாளிகளும், பழங்குடியினரும் நடத்திய போராட்டங்கள் திரண்டு, 1917-ல் நடந்த போல்ஷிவிக் புரட்சியினால் உந்தப்பட்டு அதன் கொள்கையினால் ஊக்கம் பெற்று இடதுசாரி இயக்கமாக உருப் பெற்றது; சாதியத்தினால் துளைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சுயமரியாதையும், கண்ணியமும் வேண்டிப் போராடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் போரட்டங்கள் சமூக நீதி இயக்கமாக மாறின.

இந்த இயக்கங்களின் உலகப் பார்வையின் அடிநாதமாய் இருந்தவை பிரெஞ்சுப் புரட்சியின் கோஷங்களான சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம். இந்த மூன்று மதிப்பீடுகளும் உலக வரலாற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலம், புத்தொளிக் காலம் ஆகியவை கொண்டு வந்த பூமியைப் புரட்டிப் போட்ட மனித நேய சிந்தனையின் அடிப்படையிலானவை. முதன்முறையாக இறையியலைப் பின்னுக்குத் தள்ளி மனிதநேயத்தை மையப்படுத்திய சிந்தனை அது. மனிதநேயச் சிந்தனை மதப் பழமைவாதத்தின் வேர்களையும் அது மனித சிந்தனையின் மீது கட்டிவைத்திருந்த சங்கிலிகளையும் அறுத்தது. சூரியனுக்குக் கீழே இருக்கும் (சூரியனுக்கு மேலே இருப்பதையும் கூட) எதையும் குறித்தும் ஆய்ந்து, விமரிசனத்திற்குள்ளாக்கும் சுதந்திரத்தை மனிதனுக்கு அளித்தது.

அறிவியல் வளர்ச்சியின் துணையுடன் எழுந்த பகுத்தறிவுக் காலமும், தொழிற்புரட்சியும் மத்திய கால இருளிலிருந்து மனிதனை மீட்டு நீண்ட தூரம் கொண்டு வந்தது; நவீன கால சிந்தனைகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிஸம், இறையாண்மை போன்ற சிந்தனைகளுக்கு உரமூட்டியது. இந்த சிந்தனைகள்தாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கற்கள். 1950-ல் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டது இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனை. சட்டத்தின் ஆட்சியை முதன்மைப்படுத்தி நம்பிக்கைகளின் ஆட்சியைப் பின்னுக்குத் தள்ளிய திருப்பு முனை.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

ஆனால் காலக் கடிகாரத்தின் முட்களைப் பின்னோக்கித் தள்ளும் சிந்தனைகளுக்கும் பகுத்தறிவுக்கும் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஓயவில்லை. இந்த உண்மையை நமக்கு பளிச்சென்று நினைவுபடுத்துவது இந்துத்துவம் என்கிற கொள்கை. அந்தக் கொள்கையை முன் நிறுத்திய நாத்திகரான வினாயக் தாமோதர் சவார்க்கரே இந்துத்துவத்தை தெளிவாக வரையறுக்கப்படாத இந்து மதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் திட்டம். முசோலினியின் ஃபாசிஸத்தினாலும், ஹிட்லரின் நாசிஸத்தினாலும் உந்துதல் பெற்றதாக சவார்க்கரும் அவருடைய தத்துவார்த்த வாரிசுகளும் ஒப்புக்கொண்ட அந்தத் தத்துவத்தின் சாரம் இதுதான்: “அன்னிய சக்திகளுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்று புரிந்து கொள்ளவும்) இரண்டே வழிகள்தாம் உள்ளன. அவர்கள் தம்மை முழுமையாக தேசிய இனத்துடன் [இந்து] ஐக்கியப் படுத்திக் கொண்டு அதன் கலாச்சரத்தை ஏற்றுக் கொள்வது; அல்லது தேசிய இனம் அவர்களை அனுமதிக்கும் வரையில் அதன் கருணையில் வாழ்ந்து, அது விரும்பும் போது நாட்டை விட்டு வெளியேறுவது. அவர்கள் இந்து மதத்தை மதித்து அதனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்; இந்து இனம், அதன் கலாச்சாரம் மற்றும் இந்து நாட்டினைப் புகழ்வதைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது; அதாவது, அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இருப்பைத் துறந்து விட வேண்டும்…”

தேசிய இயக்கம், சோஷலிச இயக்கம், சமூக நீதி இயக்கம் ஆகியவற்றை முடுக்கிவிட்ட கலப்புக் கலாச்சாரம், எல்லை சார்ந்த தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி போன்ற கருத்தாக்கங்கள் சவார்க்கருக்கும் அவருடைய கூட்டத்திற்கும் தேவையில்லை. உடனடி அபாயமாக பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டு பிற அரசியல் இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், கம்யூனிஸம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவற்றை தங்களின் இந்துக் கனவுலகத்திற்குத் தடைகளாகவும் எதிரிகளாகவும் அவர்கள் கண்டனர். அந்த லட்சியத்தை அடைவதற்காக சவார்க்கர் “வெறுப்புணர்வையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் பரப்புவதற்காக பண்டைக்கால அநீதிகள் என்ற கருத்தை உற்பத்தி செய்வதன் அடிப்படையிலமைந்த அந்த அரசியலுக்கு சேவகம் புரியும் வகையில் வரலாற்றைச் சிதைத்தார் சவார்க்கர்.” என்று ஏ.ஜி. நூரானி குறிப்பிடுகிறார்.

சவார்க்கர் இந்துத்துவத்தை முன்வைத்த சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின், மகாத்மாவின் படுகொலைக்குப் பிறகு அரசியல் வனாந்திரத்திற்குள் தனிமைப்பட்டிருந்த இந்துத்துவ அரசியல் கருவியின் தலைவர் எல்.கே. அத்வானி சவார்க்கரை உயிர்ப்பித்தார்.

தன் நெருப்புத் தேரினை முடுக்கி விட்டார். சவார்க்கரின் எதிரொலி போல் அவர் பேசியது இதுதான்: “ரத யாத்திரையின் துவக்கப் புள்ளியாக சோம்நாத் கோவிலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு அடையாள மதிப்பு இருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்கள் இழைத்த கொடுமைகளின் அடையாளமாக அது மீண்டும் மீண்டும் குறிப்பிடப் படுகிறது… முஸ்லிம் ஊடுருவல் என்கிற வரலாற்றுத் தொடர்ச்சியின் ஒரு கட்டமாக அயோத்தியைக் காட்டி, ஒப்புமைப் படுத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு நியாயம் கற்பிப்பதுதான் நோக்கம்.” (அத்வானியின் சுயசரிதையான ‘My Country, My Life) இந்து ராஷ்டிரம் என்கிற கருத்தாக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியே ரத யாத்திரை.

படிக்க:
பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !

இந்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள். மதச்சார்பின்மை குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் ஜஸ்டிஸ் வி.எம். தார்க்குண்டே இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு மதச் சார்பற்ற அரசு அமைக்கப்பட்ட பிறகும், சமுதாயத்தை மதச்சார்பற்றதாக்கும் போக்கு தொடரும் என்று அந்த அரசு உணர்ந்திருக்கிறது. சமுதாயத்தை மதசார்பின்மையாக்கும் போக்கில் கட்டாயம் ஏற்பட்டாலேயொழிய அரசு தலையிடாது.”

சமுதாயத்தை மதச் சார்பற்றதாக்குவது ஒரு தொடர் நிகழ்வு. இந்தப் போக்கினை வலுப்படுத்துவது அரசின் மூன்று அங்கங்களான நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்திருக்கும் கடமை. பாபர் மசூதி இடிக்கப் பட்ட விஷயம் நீதித் துறையின் தலையீட்டை அவசியமாக்கிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. துரதிருஷ்டவசமாக, நீதித் துறை மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் இத்தகைய தலையீட்டிற்கான வாய்ப்பை இழந்து விட்டது.

முரண்பட்ட சிந்தனைகளுக்கிடையேயான போராட்டம் தொடர்கிறது.

நன்றி : ஃபேஸ்புக்கில் ஆர். விஜயசங்கர். ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

1 மறுமொழி

 1. சைதாப்பேட்டையிலிருந்து செங்கல்பட்டுக்கு டிரெயினில் பயணம். எப்போதும்போல பக்கத்திலிருப்பவர்களிடம் பேசிக்கொண்டே வந்தேன். என் சீட்டின் கடைசியில் முஸ்லீம் இளம்பெண் அமர்ந்திருந்தார். பேச்சை ஆரம்பித்து இருவரும் ஒன்றானோம். தன்னுடைய போனில் செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தவர், ஐ.ஐ.டி,மாணவி பாத்திமா லத்தீப் பற்றிப் பேசினார். ”எதுக்கு இந்தப் புள்ள இப்படி செய்தது…. அப்பா, அம்மாவை நினைக்காம போய்டுச்சி….. னு ஆதங்கப்பட்டார். எல்லா பாடத்துலயும் முதலா வந்திருக்கா….. ஆனா,இன்னிக்கி இந்தியாவுல இருக்கிற முஸ்லீம்களோட நிலமய சரியா படிக்காம போய்ட்டாளே இப்படி பண்ணிட்டாளே! துக்கமா இருக்கு… அவளோட அப்பா அம்மாக்குத்தான் தாங்கமுடியாத வாழ்நாள் வேதனைய கொடுத்துட்டா..’’ என்றார்.
  பிறகு, நான் “அயோத்தி தீர்ப்பு பற்றி எல்லோரும் என்னன்வோ பேசிக்கிறாங்களே அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க…”.. என்றேன்.
  அவர்,”இறந்த மாணவி பாத்திமா லத்தீப்புக்குகூட நாங்க வாய்திறந்து துக்கப்பட முடியாது….. அயோத்தி பத்தி யார்கிட்டேயும் பேசக்கூட பயமா இருக்கு”…. என்றார்.
  “அயோத்தி தீர்ப்பு அயோக்கித்தனமானது…அது,கொடுமை, என்னாலும் ஏற்க முடியாத தீர்ப்பு” என்றேன்.
  அதன் பிறகு, பேச ஆரம்பித்தார்.
  “பக்கத்து வீட்டுக்காரங்க துணிகாயப்போட நம்ம வீட்டு அத்துல, ஒரு கயிறுக்கட்டுனாக்கூட நம்மளுக்கு எவ்வளவு கோவம் வரும்….. ஆனா, எங்களோட கோயில இடிச்சி, அசிங்கப்படுத்திட்டு, பல வருஷத்துக்கப்புறம் அந்த இடம் எங்களோடதுனு சொன்னா எப்படியிருக்கும்… அதுவும் சட்டப்பூர்வமா கோர்ட்டே வந்து நின்னா எப்படியிருக்கும். சொல்லுங்க….
  இந்து… நம்பிக்கைனு சொல்றாங்களே…. பாபர் மசூதி கண்கூடா எல்லாரும் பார்த்த நிஜம் இல்லையா?பல ஆண்டுகளா நாங்க தொழுதுட்டு வந்த நம்பிக்கை…. அதுல கை வைச்சி….. எங்கள எதுவும் பேச முடியாத நிலைக்கு தள்ளிட்டு…” என்று சொன்னவர் துயரத்துடன் “போங்க என்ன மேல சொல்லறதுன்னே விளங்கல…. பறிக்கொடுத்ததுக்குக்கூட வாய்விட்டு எங்களால கதறி அழ முடியாத சூழல உருவாக்கிட்டாங்க….
  அயோத்தி தீர்ப்பப் பத்தி பேசுனாலே கலவரமாயிடும். இந்துக்களுக்கு எதிராயிடும்னு பயமுறுத்தி வாய அடைச்சிட்டாங்க….ஒருத்தவங்க நம்பிக்கைய சிதைச்சிட்டு பலம் இருக்கறவனோட நம்பிக்கைய ஏத்துக்க முடியுமா… அது மட்டும் எப்படி உண்மையான நம்பிக்கையா இருக்க முடியும்? எங்க குரல கேட்க யாரு இருக்கா..? எல்லாப் பக்கமும் அவங்க ஆளுங்க…. தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கூட நியாயமா சொல்லயே…. நாங்க எங்கப் போய் யாருக்கிட்ட முறையிடறது… எல்லா இடத்திலியும் அவங்கத்தானே நிரம்பிக்கிடக்கிறாங்க…. . யாரு காதுல வாங்கப் போறாங்க சொல்லுங்க… ஏதோ நிராதரவா நிக்கற மாதிரியே இருக்கு…”.என்றார்,ஆதரவற்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க