மீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பேசப்பட்ட பஞ்சமி நில விவகாரம் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பியது. திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டிருப்பதாக வெடியைக் கொளுத்திப்போட்டார் பா.ம.க. ராமதாஸ். அவை குறித்த வாதப் பிரதிவாதங்கள் பேசப்பட்டு அடங்கியும்போனது. ஆனால், தமிழகமெங்கும் பஞ்சமி நில மீட்புக்கான போராட்டமோ, தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்கள் மட்டுமே பேசக்கூடிய, நிலத்தை இழந்து பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே நின்று மல்லுக்கட்டக்கூடிய தனிநபர் பிரச்சினையாக சுருக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

இதற்கு ஓர் எடுப்பான உதாரணம்தான், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்தில் நடைபெற்றுவரும் பஞ்சமி நிலமீட்புக்கான போராட்டம். இக்கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்டிருந்த பஞ்சமி நிலத்தை முறைகேடாக அபகரித்துக்கொண்டதோடு, அந்நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து அக்கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கியிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள். முரசொலி அலுவலகம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரங்களை அள்ளிப்போட்டு, மீடியாக்களில் மல்லுக்கட்டிய பா.ம.க. ராமதாசுவின் வன்னிய சொந்தங்கள்தான் காவக்காடு கிராமத்தில் பஞ்சமி நிலத்தை அபகரித்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லெய் த்ரெமென்ஹீர். 1891-ல் செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றிய சமயத்தில், பஞ்சமி நில சட்டத்திற்கான முன்வரைவை முன்வைத்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த 1892-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் பஞ்சமி நில சட்டம். இச்சட்டத்தின்படி, அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்யலாம், வீடு கட்டி வசிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாரிடமும் விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்கு விடவோ முடியாது. பத்தாண்டுகளுக்கு பிறகு விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்குவிடவோ விரும்பினால், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (பட்டியல் சாதியினர்) என அரசால் வரையறுக்கப்பட்டுள்ள சாதியினரிடம் மட்டும்தான் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும் என்கிறது இச்சட்டம். இதனை மீறி வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நிலவுரிமை மாற்றப்பட்டால், அம்மாற்றம் செல்லாது என்றும் நட்டஈடின்றி அந்நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என்கிறது, இச்சட்டம். 1950-க்கு பிறகும் இதே நிலை தொடர்ந்ததோடு மட்டுமின்றி, மேலும் விரிவுபடுத்தப்பட்டு சேரிநத்தம், வெட்டியான் மானியம், பூமிதானம், ஜமீன் ஒழிப்பு  உள்ளிட்ட 14-பிரிவுகளின் கீழ் நிலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு விநியோகிக்கப்பட்ட நிலங்கள், வருவாய்த்துறையினரின் பதிவேடுகளில் AD (Adi Dravidar) Condition Land என்ற வகையில் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில், இவ்வகையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகளின் துணையோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் கைகளுக்கு பட்டா மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய முறைகேடுதான், கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்திலும் நடைபெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் கொடுவாளன் என்கிற சின்ன பையன் என்பவருக்கு சர்வே எண்.187 இல் 10.18 ஏக்கர் நிலம் பஞ்சமி நில வகையின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது. தமக்கு பாத்தியப்பட்ட அந்நிலத்தில் அவர் குடிசையொன்றை அமைத்து அங்கேயே விவசாயமும் செய்து வந்திருக்கிறார்.

பஞ்சமி நிலம் என்ற வகைப் பிரிவில் அமைந்துள்ள இந்நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் செட்டியார் வருவாய்த்துறை அதிகாரிகளை சரிகட்டி தமது பெயரில் (1991-இல்) போலியான பட்டா பெற்றுள்ளார். பின்னர், இவரிடமிருந்து வன்னிய சாதியைச் சேர்ந்த சாராய வியாபாரி – குமாரசாமி என்பவரின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டிருக்கிறது.

சின்ன பையன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து ஆண்டு அனுபவித்து வந்த பஞ்சமி நிலத்துக்கு வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி உரிமை கோரியதோடு மட்டுமன்றி, ரவுடிகளை வைத்து அக்குடும்பத்தாரை அப்புறப்படுத்தவும் முயற்சித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் தாக்கி கொலைமிரட்டல் விடுப்பதும்; பாத்திரங்களை வீசியெறிந்து அராஜகம் செய்வதும்; இதன் உச்சகட்டமாக குடிசைக்கு தீவைப்பதும் என சாராய வியாபாரி – குமாரசாமி வகையறா தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், 26. 10.1991 -இல் சின்ன பையன் இறந்த பிறகு, அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த சமாதியையும் அடித்து நொறுக்கியதோடு, மண்ணில் புதைந்திருந்த சின்ன பையனின் எலும்புக்கூட்டையும் தோண்டியெடுத்து வீசியெறிந்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி கும்பலின் தொடர் வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல், ”நிலம் போனாலும் போய்த்தொலையட்டும் உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம்” என்று, 2015-ஆம் ஆண்டு வாக்கில், அக்கிராமத்தை விட்டே இடம்பெயர்ந்து, மேட்டூர் வீரக்கல் பகுதிக்கு சென்றுவிட்டனர், சின்ன பையனின் குடும்பத்தினர்.

அவர்களை விரட்டிவிட்ட கையோடு, சின்னப் பையனுக்குச் சொந்தமான நிலத்தை மட்டுமின்றி அவரது நிலத்தையொட்டி அமைந்திருந்த பொதுப்பயன்பாட்டிற்கான பாதையையும் மறித்து வேலி அமைத்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி உரிமை கோரும் அந்த 10 சென்ட் இடம் சின்ன பையனுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம்தான் என்ற போதிலும், அவரது நிலத்தின் ஒரு பகுதியின் வழியாகத்தான் மலை கிராமமான மெச்சேரியிலிருந்து பென்னாகரம் செல்லும் பிரதான சாலைக்கு செல்ல முடியும். மேலும், ஆடு – மாடுகளை மேய்ச்சலுக்காக மலைப்பகுதிக்கு ஓட்டிச்செல்வதற்கும்; விவசாய வேலை கிடைக்காத நாட்களில் மலைப்பகுதியில் விறகு பொறுக்க போவதற்கும் சின்ன பையனுக்குச் சொந்தமான நிலத்தையொட்டிய பொதுப்பாதையைக் கடந்துதான் அக்கிராம மக்கள் செல்ல வேண்டும். வருவாய்த்துறை பதிவேடுகளில் ஊர் பொதுப்பயன்பாட்டிற்கான பாதை என்றுதான் பதிவாகியிருக்கிறது.

ஏற்கெனவே, குமாரசாமியின் தொடர் அட்டூழியங்களால் ஆத்திரமுற்றிருந்த கிராம மக்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் மறித்து வேலி அமைக்கப்பட்டதை எதிர்த்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அநீதியைத் தட்டிக்கேட்ட மக்கள் மீதே பொய்வழக்குப் போட்டதோடு, முன்னின்று போராடிய ஆண்கள் சிலரை குறிவைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர், பென்னாகரம் பெரும்பாலை போலீசார். ஆதிக்க சாதிப்பற்றோடு, நேற்றுவரை சாராயம் காய்ச்சி வந்த குமாரசாமியுடன் போலீசாருக்கு இருந்த தொழில் பற்றும் சேர்ந்து வினையாற்றியது. குமாரசாமியின் கூலிப்படையாகவே செயல்பட்டது, பெரும்பாலை போலீசு. அக்கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் இன்றுவரை எதிர்கொண்டு வருகின்றனர். ஏறத்தாழ 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.

அன்றாடம் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும், மலையிலிருந்து விறகு பொறுக்கித் தலைச்சுமையாய் சுமந்து வரும் மக்களும், ஆத்திர அவசரத்துக்கு மெயின்ரோட்டுக்குக்கூட சென்றுவர முடியாமல் அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் சித்திரவதைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

விவசாய வேலையுமின்றி, ஆடு – மாடு மேய்ச்சல் தொழிலும் குறைந்து போனதாலும், மலைப்பகுதிக்கு விறகு சேகரிப்பது ஏறத்தாழ நின்று போனதாலும், பிழைப்புக்காக மாவட்டம் விட்டு மாவட்டமாக புலம்பெயரும் கூலித்தொழிலாளிகளாக மாறிவிட்டதாலும் பொதுப்பாதைக்கான போராட்டத்தை தொடருவதில் கிராம மக்களின் ஆர்வம் குறைந்து போனது. வருவாய்த்துறை அதிகாரிகளையும் போலீசையும் தமது கைக்குள் போட்டுக்கொண்டு, அடாவடி செய்துவரும் குமாரசாமி கும்பலை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்று அக்கிராம மக்கள் விரக்தியடைந்து காலப்போக்கில், பின்வாங்கினர். நிலவுரிமைக்கான போராட்டத்தில் பொய்வழக்கை எதிர்கொண்ட சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, இன்றுவரை எதிர்த்து நிற்கின்றனர்.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி என்ற தனிநபருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சின்னபையன் என்ற தனிநபர்களுக்கிடையிலான நிலப்பிரச்சினையாக இதனை சுருக்கி பார்த்துவிட முடியாது.

மண்ணில் புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டைக்கூட விடாமல் எடுத்துவீசியிருப்பது அப்பட்டமான சாதிவெறியன்றி வேறென்ன? அடங்கிக்கிடக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட சாதியினர், உரிமையென்று தட்டிக்கேட்பதைச் சகிக்க முடியாமல்தானே போலீசு நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். குமாரசாமியின் பார்வையிலிருந்து, தான் உரிமை கொண்டாடும் நிலத்தில் வேலி அமைத்திருப்பதாக வாதிடக்கூடும். உண்மையில், தனது நிலத்தைச் சுற்றி போடப்பட்ட வேலியாக மட்டும் அது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போட்டிருக்கும் தீண்டாமை வேலி அது.

2015-ம் ஆண்டு முதலாக, இக்கிராம மக்களின் நிலவுரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். மேலும், இக்கிராம மக்களின் போராட்டத்தை அறிந்த பஞ்சமி நில மீட்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நாகர்சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகம் அவர்கள் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளார். பஞ்சமி நிலமீட்பு தொடர்பாக இவர் தொடர்ந்த வழக்கில்தான், கடந்த 2015-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலர் அடங்கிய பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவை அமைக்க வேண்டுமென்றும் அக்குழு ஆறுமாதகாலத்திற்குள் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்திரவிட்டிருந்தது.

அருங்குணம் விநாயகம் அவர்களின் முன்முயற்சியினால்,  கெண்டையனஹள்ளி கிராமம் மற்றும் பாலக்கோடு  சிடி பட்டம் கிராமம் உள்ளிட்ட  கிராமங்களைச் சேர்ந்த மக்களை அணிதிரட்டி, கடந்த டிசம்பர்-16 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டிருக்கின்றனர். மக்கள் அதிகாரம் தோழர்களும் உடன் சென்றனர்.

பஞ்சமி  நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்க கோரியும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி  நிலங்களை கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் நில கணக்கு எடுத்து பஞ்சமி  நிலமீட்பு  மத்திய குழுவிற்கு அனுப்பி வைக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”பஞ்சமி நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்கு! தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழியைத் தடுக்கும் தீண்டாமை முள்வேலியை அகற்று! நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும்  மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற கண்டன முழக்கம் காவக்காடு கிராமத்திற்கானது மட்டுமல்ல!

– பு.ஜ செய்தியாளர்,
தருமபுரி.

1 மறுமொழி

  1. இந்துத்துவா வெறித்தனத்தின் அடிப்படைகளில் ஒன்றுதான் சாதித்துவா வெறித்தனம். சாதித்துவா வெறித்தனத்துடன் நட்புக் கொண்டவர்களால் இந்துத்துவா வெறித்தனத்தை எதிர்க்க முடியுமா? திராவிடக் கட்சிகள் அனைத்தினதும் நிலையும் இதுதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க