Thursday, June 20, 2024
முகப்புசெய்திகையிழந்து உயிரையும் இழந்த ஒரு தொழிலாளியின் கதை !

கையிழந்து உயிரையும் இழந்த ஒரு தொழிலாளியின் கதை !

-

ங்கே இறந்து பிணமாக ஒசூர் அரசு மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருக்கும் முனியப்பன் (32) தருமபுரி மாவட்டம், மாரண்டள்ளி அருகில் உள்ள சிக்கதோரணம்பெட்டம் (சி.டி.பெட்டம்) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஒசூர் சிப்காட்டில் உள்ள அசன் சர்க்யூட் ஆலையில் பணிபுரிந்த இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாலையில் நடந்த ஆலை விபத்தொன்றில் தனது கையை இழந்தார். இந்த ஆலை விபத்து எப்படி நடந்தது என்பதுதான் முதலாளித்துவ பயங்கரவாதத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

முனியப்பன்
முனியப்பன்

வேலை செய்யும் இயந்திரத்தின் சென்சார் நீக்கப்பட்டு அபரி மித உற்பத்தி செய்ததால்தான் இயந்திரத்தில் கை சிக்கி இவரது கையை இழந்துள்ளார். இதற்கு பிறகுதான், இந்த இயந்திரத்தில் சென்சார் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தத் தொழிலாளிக்கு இலகுவான வேலைகள் வழங்கப்படவில்லை. மேலும், இவர் 12 மணி நேர வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த விபத்திற்கு பிறகு உடலின் சீர்நிலை கெட்டு இவர் தொடர்ந்து உடல் நலமின்மைக்கு ஆளாகி வந்தார்.

குறைந்த கூலி என்பதாலும் கையிழந்த பின்னர் வேறு இடங்களில் வேலை தேடுவது கடினம் என்பதாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி வேறு வழியின்றி இந்த கொடுமையான வேலையை செய்து வந்தார். இதனால் உடல் தொடர்ந்து சீர்கெட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி அவர் உடல் நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். அன்று மாலை உயிரிழந்தார். இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம், இவரது கை துண்டாகி இழக்க நேரிட்டதும், அதனைத் தொடர்ந்து இவருக்கு பாதுகாப்பான வேலையும், போதுமான மருத்துவமும் முறையாக கொடுக்கப்படாததுமே!

முனியப்பனின் மரணம் குறித்த செய்தி கேட்டு தோழர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கே தொழிலாளர்கள் குவிந்திருந்தனர். மஞ்சள் காமாலை நோயினால் தான் முனியப்பன் இறந்தார் என்றும் இந்த நோய் இவர்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இருப்பதாகவும் பொய் வழக்கு பதிவு செய்ய ஆலை நிர்வாகமும் போலீசும் திட்டமிட்டது. தொழிலாளர்கள் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். இதன் பின்னர், விபத்தின் தொடர்ச்சியாகத்தான் முனியப்பன் மரணம் நிகழ்ந்துள்ளது என்பதை நிறுவி, வழக்கு பதிவு செய்வதற்கான தோழர்களின் போராட்டம் நள்ளிரவு வரை நடந்தது. அதன் பின்னர் மறுநாள் காலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், அரசு மருத்துவமனையிலிருந்து மாரண்டள்ளிக்கு அருகில் உள்ள சிக்கதோரணம் பெட்டம் கிராமத்திற்கு முனியப்பனின் உடல் எடுத்து செல்லப்பட்டது.

முனியப்பனின் மனைவி கோமதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். முனியப்பன் கை இழந்தவர் என்று தெரிந்துதான் அவரைக் கரம்பிடித்துள்ளார் அவரது மனைவி கோமதி. முன்னுதாரணமாக இருந்த கோமதியின் வாழ்க்கையில் மேலும் பெரும் துயரம் கவ்விக் கொண்டுள்ளது. முனியப்பனுடைய வேறு உறவுகள் இல்லாமல் அனாதையாக நிற்கின்றனர் அவரது மனைவி, மகன் மற்றும் அவரது தந்தை! அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லையே என நெஞ்சம் கனத்தது!

ஞாயிறு அன்று அவரது ஊரில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் ஊரே கூடி நின்றது! சோகத்தில் ஆழ்ந்திருந்தது! வினைப்பயன் என்று கருதியவர்கள் முனியப்பனின் ஆன்மா அமைதியடைய சடங்குகள் செய்து முடித்தனர். ஆனால், முதலாளித்துவ வினையின் விளைவுதான் இந்த மரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, முதலாளித்துவத்தின் ஆன்மா சாந்தியடைவதற்கான வேலையில் நாம் இறங்குவோம்!

செய்தி :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க