privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஇயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

மகாராஷ்டிரா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து களமிறங்கிய இளைஞர்கள்... சாதிய வன்மத்தால் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அவலம் !

-

“நாங்கள் நீரால் சூழப்பட்டிருந்தோம். ஆனால், எங்களுக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. முதலிரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தோம். வெளியில் இருந்து யாரும் உதவிக்கு வரவில்லை. மூன்றாம் நாள் வேறு வழியின்றி எங்களைச் சுற்றிலும் தேங்கியிருந்த வெள்ள நீரையே குடித்து உயிர் வாழ்ந்தோம்” என்கிறார் சூரஜ். சூரஜ் மற்றும் அவர் நண்பர்கள் என மொத்தம் 12 பேர் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றச் சென்று சுமார் 5 நாட்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டனர்.

“எனது தொலைபேசி முதல் இரண்டு நாட்கள் வேலை செய்தது. அப்போது எங்களுக்கு உதவி செய்ய ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சொன்னார்கள். ஆனால், எந்த உதவியும் வரவில்லை” என்கிறார் சூரஜுடன் சென்ற ராகுல். இவர்களுடன் சென்ற 23 வயதான முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் சத்யஜீத் பண்டாரே எனும் இளைஞர் கூறும் போது, “வெள்ள ஓட்டம் மிக அதிகமாக இருந்தது. பல மணி நேரம் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட எங்களுக்கு முதலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. கடைசியில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றோம்” என்கிறார்.

வீட்டின் உள்ளே சென்றவர்கள் அங்கே கிடைத்த உணவுப் பொருளை வைத்து சமாளித்துள்ளனர். வெள்ளத்தின் அளவு கூடக் கூட அவர்கள் அந்த வீட்டின் மேல் தளங்களுக்குச் சென்றுள்ளனர். இறுதியில் மீட்கப்பட்ட போது வீட்டின் கூரையின் மீது நின்று கொண்டிருந்தனர்.

இந்த இளைஞர்கள் ஏன் மாட்டிக் கொண்டனர் ?

ஆகஸ்ட் 3-ம் தேதி. மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் உள்ள பில்லவாடி கிராமம். அடுத்த 24 மணி நேரத்தில் பில்லவாடி கிராமத்தை ஒட்டிய கிருஷ்ணா நதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என அரசு நிர்வாகம் அன்றைய தினம் எச்சரிகை வெளியிட்டிருந்தது. சுமார் 1400 கிலோமீட்டர் நீளம் கொண்ட கிருஷ்ணா நதி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாசன ஆதாரம். எச்சரிகை வெளியானதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 4-ம் தேதி) ஆற்றின் நீரோட்டம் ஏழடியாக இருந்தது. அதன் பின் ஓரிரு நாளில் 12 அடியாக உயர்ந்த நீட்மட்டம் அக்கம் பக்கத்தில் இருந்த ஓரடுக்கு வீடுகளை நீரில் ஆழ்த்தி விட்டது.

ஆகஸ்டு மூன்றாம் தேதி அரசின் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றவுடனேயே அந்தக் கிராமத்தின் சில குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கட்டிக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து விட்டன. ஆனால், எழுபது வயதான சுமன் குரானே என்கிற மூதாட்டியால் உடனடியாக கிளம்பிச் செல்ல இயலவில்லை. அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். அவரது மகன் சஞ்சையும் மருமகள் ரேணுகாவும் சுமன் குரானேவை அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் வெளியில் இருந்து உதவி வரும்வரை கூடவே இருப்பதென முடிவெடுத்தனர்.

“தண்ணீரின் அளவு மிக வேகமாக கூடிக் கொண்டிருந்தது. அதே வேகத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அந்த சூழலில் எங்களால் அத்தையை எங்குமே அழைத்துச் செல்ல முடியவில்லை. வேறு வழியின்று பக்கத்து வீடு ஒன்றின் மேற்கூரைக்கு அடைக்கலம் புகுந்தோம். ஆனால், மறு நாள் காலை அந்த வீட்டின் மேல் தளமும் தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.” என்கிறார் சுமன் குரானேவின் மருமகள் ரேணுகா.

நதிக்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசித்து வந்தவர்களால் உடனடியாக தப்பிச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி, அதே கிராமத்தில் மேட்டுப் பகுதியில் வசித்து வந்த தனது சாதியைச் சேர்ந்தவர்களை காப்பாற்றவே அக்கறை காட்டியுள்ளார். அந்த கிராம நிர்வாகத்திற்கு சொந்தமாக இருந்த இரண்டு படகுகளில் ஒன்று பழுந்தடைந்த நிலையில், மற்றொன்றை மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களை மூன்றடி வெள்ள நீரில் இருந்து காப்பாற்ற அனுப்பி வைத்தார் கிராம நிர்வாக அதிகாரி. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இன்னமும் மாட்டிக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வெளியில் இருந்து எந்த உதவியும் வந்து சேரப் போவதில்லை என்கிற நிலையில்தான் முதலில் குறிப்பிட்ட அந்த 12 இளைஞர்கள் களமிறங்கினர்.

எழுபது வயதான மூதாட்டி சுமன் குரானே.

இளைஞர்கள் அபாயகரமாகச் சுழித்துக் கொண்டு ஓடும் வெள்ள நீரில் நீந்தியபடி ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கே எவரும் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என பார்த்துள்ளனர். அப்படி சோதித்த போது தான் சுமன் குரானேவின் குடும்பம் வெள்ளத்தில் மாட்டியிருப்பதை கண்டுள்ளனர். வந்த இளைஞர்களில் சிலர் தங்கி விட ஒருசிலர் மட்டும் திரும்பச் சென்று பின்னர் எப்படியோ கிராம நிர்வாக அதிகாரியை கெஞ்சிக் கூத்தாடி படகை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். படகில் வெள்ளத்தில் ஏற்கனவே மாட்டிக் கொண்ட குடும்பங்களை ஏற்றிய பின் இந்த இளைஞர்களை ஏற வேண்டாம் எனவும் மீண்டும் படகை அனுப்புவதாகவும் சொல்லியிருக்கிறார் கிராம நிர்வாக அதிகாரி. மீட்கப்பட்டவர்களை அனுப்பி விட்டு மீண்டும் படகு வரும் எனக் காத்திருக்கத் துவங்கினர் இந்த இளைஞர்கள்.

“நாங்கள் படகை எடுத்துக் கொண்டு வரும்போது அதிலேயே எங்களில் சிலரும் திரும்பி விடுகிறோம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால், கிராம அதிகாரி அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. மீண்டும் படகை அனுப்பி வைப்பதாக உறுதி சொன்னார். ஆனால், சொன்னபடி அனுப்பவே இல்லை” என்கிறார் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட இளைஞர் குழுவைச் சேர்ந்த 19 வயதான ராகுல் காம்ளே. இத்தனைக்கும் அந்தப் படகில் 20 பேர் வரை பயணிக்க முடியும். ஐந்து நாட்கள் வெளியுலகத் தொடர்பும் இன்றி, உதவியும் இன்றி ஏறத்தாழ மரணத்தின் விளிம்புக்கே சென்று விட்ட அந்த இளைஞர்களை இறுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் வந்து ஆகஸ்ட் 9-ம் தேதி தான் மீட்டனர்.

இந்த இளைஞர்களும், கிருஷ்ணா நதியை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசித்த அந்த மக்களும் இவ்வாறு நிர்கதியாய் விடப்பட்டதற்கு குறிப்பான சில காரணங்கள் உண்டு.

மகாராஷ்டிராவின் கிராம அமைப்பில் (ஏன் நாடெங்கிலும் கூட இதே நிலைதான்) ஒரு விசேஷம் உண்டு. ஊரின் மையமாக உயர்சாதியினரின் தெருக்கள் அமைந்திருக்க, அதை அடுத்து மராத்தாக்களின் தெருக்கள் இருக்கும். கடைசியில், ஊருக்கு வெளியே தாழ்ந்த நிலத்தில் அமைந்திருப்பது தலித் குடியிருப்புகள். பில்லவாடி கிராமத்தில், கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டி உள்ள தாழ்ந்த நிலத்தில் இருந்தது தலித் குடியிருப்புகள். நதிப்பெருக்கால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்ததும் இதே பகுதியில் வசித்தவர்கள் தாம்.

இதே போல் அக்கம் பக்கத்து கிராமங்களான சாதே நகர், மௌலானா நகர், சகர்வாடி உள்ளிட்ட இடங்களிலும் இதேதான் நிலைமை. தாழ்வான பகுதியில் அமைந்திருந்த தலித் குடியிருப்புகள் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. பில்லவாடி கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 13,000. இதில் தலித்துகள், நாடோடி பழங்குடி இனத்தவர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களோடு மராத்தாக்களும், ஜெயின்களும் சொற்ப எண்ணிக்கையில் பிராமணர்களும் வசிக்கின்றனர்.

ஐந்து நாட்கள் தப்பி உயிர்பிழைத்த, ராகுல் காம்ளே மற்றும் சுராஜ்.

பில்லவாடி கிராமத் தலைவர் (சர்பன்ச்) விஜய்குமார் சொபாடே ஜெயின் சாதியைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகரான விஜய்குமார் சொபாடே, தான் வேண்டுமென்றே தலித் குடியிருப்புக்கு படகை அனுப்ப மறுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறார். அவை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக குறிப்பிடுகிறார். ஆனால், உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் அங்கே நேரடியாக மக்களிடம் பேசிய போது அந்தப் பகுதிகள் பெரிதாக வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். தெருவின் நுழைவாயில் வரை ஓரிரு அடி நீர் மட்டம் சேர்ந்து கொண்டதாகவும், அதற்குள் தங்களது கிராமத் தலைவர் தங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து விட்டதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

”இந்தப் பகுதிகளில் தலித்துகள் நேரிடையாக தாக்கப்படும் சம்பவங்கள் குறைவுதான். ஆனால், இது போன்ற தருணங்களில் நாங்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படுவது சாதாரணம்” என்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த தலித் செயல்பாட்டாளர் பிரபுல் காம்ளே. வெள்ளம் வடிந்த பின் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீடுகள் பெரும் சேதாரமடைந்திருந்ததோடு கால்நடைகளின் பிணங்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

படிக்க:
கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

தப்பிக்கும் அவசரத்தில் பலரும் தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளின் மூக்கனாங்கயிறுகளை அவிழ்த்து விட்டு வந்துள்ளனர். எப்படியாவது அவை நீந்தி தப்பிக் கொள்ளும் என்கிற எண்ணத்தில். ஆனால், இப்போது கால்நடைகள் எதுவும் எஞ்சவில்லை என்பதோடு ஆங்காங்கே அழுகிய நிலையில் அவற்றின் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன. இப்போதே பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ள நிலையில் கால்நடைகளின் இறந்த உடல்கள் உடனடியாக அகற்றப்படாவிட்டால் பெரும் நோய்கள் பரவுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

”நிவாரணப் பொருட்களும் அப்படியே எங்களுக்கு வந்து சேர்வதில்லை. மேல் சாதி மக்கள் எடுத்துக் கொண்டது போக எஞ்சியதுதான் எங்களுக்கு கிடைக்கின்றது” எனக் குறிப்பிடும் பிரபுல் காம்ளே, “இயற்கையின் சீற்றம் எந்தப் பாகுபாட்டையும் பார்ப்பதில்லை; ஆனால், மனிதர்கள் பார்க்கிறார்களே?” என வேதனையுடன் குறிப்பிடுகிறார்.


சாக்கியன்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க