வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட…

சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாது நடந்து வருகிறது. அதே போன்று முற்போக்கு, உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக் கூறுகளுக்கும், பிற்போக்கான பண்பாட்டு கூறுகளுக்கும் இடையேயான போராட்டங்கள் எப்போதும் நடந்தே வருகின்றன.

அதே சமயம், மக்களிடையே மத நல்லிணக்கமும், இயல்பான மதச்சார்பின்மை உணர்வுகளும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன. இவற்றைக் குலைத்திட சங் பரிவாரங்களும், மதவெறி சக்திகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆட்சி அதிகாரம் தங்களிடம் கிடைத்துள்ளதால் இந்திய பண்பாட்டு இயக்கத்தை பிற்போக்கு திசையில் இழுத்துச் செல்ல ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன.

இருபதாண்டுகளுக்கு மேலாக பொருளாதாரத்தில் பின்பற்றப்படும் நவீன தாராளமயம், மேற்கண்ட நிகழ்விற்கு, உரம் சேர்த்து வளர்த்து வருகிறது. பழமை சிந்தனைகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. தீண்டாமையும், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும், புதிய வடிவமும், புதிய உத்வேகமும் பெற்றுள்ளன.

இவற்றுக்கு எதிராக பண்பாட்டுத் துறையில் எதிர்ப்புப் போராட்டம் வலுப்படுத்த வேண்டும். இது எதிர்ப்பு போராட்டமாக மட்டுமல்லாது, மாற்று பண்பாட்டு நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாகவும் இருந்திட வேண்டும்.

… இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வலதுசாரித் திருப்பம், ஆர்.எஸ். எஸ் தலைமையிலான வகுப்புவாத சக்திகளுக்கு சாதகமாகியிருக்கின்றன. அரசு அதிகாரத்தை முழுமூச்சில் பயன்படுத்தி தங்கள் திட்டங்களை செயல்படுத்த அவர்கள் முனைகிறார்கள். மேலும், அவர்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள், சுரண்டலைத் தீவிரப்படுத்துகின்றன. பிற்போக்கு நியாயங்கள் பரவலாவதையும், சுரண்டல் தீவிரப்படுவதையும் தடுக்கும் கடமை – ஒவ்வொரு மனிதனுக்கும் எழுந்திருக்கிறது.

உண்மையில் பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது. இத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வழங்கிடும். (நூலின் முன்னுரையிலிருந்து…)

உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைப்பாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம்.

பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதல் பால் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும், இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.

மேலும், இதைப் புரிந்து கொள்வதற்கு பண்ப்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பண்பாடு என்பது என்ன?

பண்பாடு என்பது இங்கே கலை, இலக்கியம் மட்டுமே அல்ல, அது மக்கள் சமூகத்தின் வாழ்வு முறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள், உணவுப் பழக்கங்கள், தாம் வாழும் வீடு என எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.

வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றிய தமது கருத்துக்கள் எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள். கலையும், இலக்கியமும் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றிற்கு உருவம் கொடுக்கின்றன. நல்ல கலையும் இலக்கியமும் இந்த அர்த்தங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும், பண்பாடு தம்முடைய குடும்பங்களிலும், சமூகக் குழுக்களிலும், கல்வி நிலையங்களிலும் தொடர்பு ஊடகங்களின் மூலமாகவும் – விமர்சனமற்ற முறையில், உணர்வுப்பூர்வமில்லாமல் நம்மை வந்தடைகிறது.

இதனை மேலும் புரிந்துகொள்வதற்கு பயன்பாட்டிற்கும், அரசின் கொள்கைக்கும், மேலாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !

கிராம்சி அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகிறார்; ” ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விதங்களில் செலுத்துகின்றன. ஒன்று – ஆளும் வர்க்கங்களின் அரசு மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை இராணுவம், சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் துணையாகின்றன.

இரண்டாவதாக, ஆளும் வர்க்கங்களின் அதிகாரம், ஆளப்படுபடுபவரின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படைக் கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான இடைவினையைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் உணர முடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் வேர்விட்டுள்ளன. (நூலிருந்து பக். 43-44)

நூல் : பண்பாட்டுக் களத்தில் …
ஆசிரியர்கள் : ஆசிரியர் குழு, மார்க்சிஸ்ட் மாத இதழ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க