ங்கி சேமிப்பு கணக்கு பற்றியும் வைப்பு நிதி (fixed deposit) பற்றியும் நமக்கு தெரியும். சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி ஆகியவற்றில் கிடைக்கும் வட்டி போதவில்லை என்றால், பணத்தை முதலீடு செய்ய வேறு வழிகளும் உள்ளன.

பங்குசந்தையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது ஒரு வகை. வங்கி முதலீடுகளில் வட்டிதான் நமக்குக் கிடைக்கும் இலாபம். பங்குகளைப் பொறுத்தவரை நாம் வாங்கும் பங்கின் விலை உயர்ந்தாலோ அல்லது நாம் பங்கு வைத்திருக்கும் நிறுவனம் dividend எனப்படும் ஈவுத்தொகை தந்தாலோ அதுதான் நமக்கு இலாபம். வங்கி வைப்பு நிதியில் நாம் முதலீடு செய்யும் பணம் குறைய வாய்ப்பு இல்லை, எத்தனை சதவீதம் வட்டி தருவார்கள் என்று நமக்கு முன்கூட்டியே தெரியும். பங்குகள் அவ்வாறு அல்ல, நாம் வாங்கும் பங்கின் விலை குறையலாம். 100 ரூபாய்க்கு நாம் வாங்கும் பங்கு சில நாட்களிலேயே ரூ. 90-ஆக குறையலாம். Dividend எவ்வளவு தருவார்கள் என்று முதலிலேயே தெரியாது. இருந்தாலும், பொதுவாக மக்கள் எதற்காக பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என்றால், வங்கிகள் தரும் வட்டியைவிட பங்குகளின் மூலம் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆனாலும், பங்குசந்தையில் முதலீடு செய்ய, எந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வது, எந்த நிறுவனம் அதிகப்படியான இலாபத்தைத் தரும் என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். தவறான பங்குகளை வாங்கினால் மூலதனத்துக்கு ஆபத்து வர நேரிடும். அதாவது, நாம் தவறான பங்குகளை வாங்கினால் அந்த பங்குகளின் விலை குறைந்து நாம் முதலீடு செய்த பணத்தை விட குறைவான தொகையே நமக்குக் கிடைக்கும் அபாயம் உள்ளது. பங்குகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைவிட, பங்குகளில் முதலீடு செய்தால் முதலுக்கே ஆபத்து வரலாம் என்ற பயம் இருப்பதாலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள் பங்குகளில் முதலீடு செய்வது இல்லை.

வங்கிகளில் முதலீடு செய்தால் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், கிடைக்கும் இலாபம் குறைவு, பங்குகளில் இலாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆனால், முதலுக்கே ஆபத்து வரவும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவை என்று சொல்லப்பட்டவைதான் மியூச்சுவல் ஃபண்ட்கள் (mutual fund).

மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் என்ன ?

மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை ஒரு வகையான கூட்டு நிதியகங்கள். இவை பொதுமக்களிடம் பணத்தை முதலீடாகப் பெற்று நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து அந்த முதலீடு மூலம் வரும் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துத் தருபவை. இந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சொல்லப்படும் காரணம் – இவற்றில் பங்குச்சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் உரிய ஆராய்ச்சிக்கு பிறகே நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் பங்குகளில் இருந்து அதிகப்படியான இலாபத்தை அவர்களால் ஈட்ட முடியும். பிறகு அந்த இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துத் தந்துவிடுவார்கள். இந்த சேவையை செய்ய மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறு கட்டணத்தை வசூல் செய்துகொள்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட்கள் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதால் இங்கேயும் நஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு. ஆனாலும், நிபுணர்கள் ஈடுபடுவதால் நாம் செய்யும் பங்கு முதலீடுகளை விட மியூச்சுவல் ஃபண்ட்கள் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் வர வாய்ப்புகள் குறைவு. இதனால்தான் பங்குகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பல வகைகள் உள்ளன. நிபுணர்கள் முதலீடு செய்தாலும் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்தால் முதலுக்கு ஆபத்து வரும் அபாயம் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டாளர்களிடம் வாங்கும் முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்கின்றன, முதலீட்டின் ஒரு பகுதியை பங்குகளிலும் இன்னொரு பகுதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

கடன் பத்திரம் என்பது குறைந்த காலத்தில் நிதி தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களால் வெளியிடப்படும் பத்திரம். இந்த பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வட்டி தருவதாகவும் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அசலைத் திருப்பி தருவதாகவும் அந்த பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன. பொதுவாக நிறுவனங்கள் தரும் வட்டி விகிதம் வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவும் பங்குகளில் வரக்கூடிய இலாபத்தை விட குறைவாகவும் இருக்கும். இந்த பத்திரங்களிலும் முதலீட்டை இழக்கும் அபாயம் உண்டு. நாம் எந்த நிறுவனத்தின் பத்திரத்தை வாங்குகிறோமோ அந்த நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் நமது முதலீடு நமக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக பெரிய நிறுவனங்கள் திவால் ஆவது குறைவு. ஆகையால் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் ஒரு பாதுகாப்பான அதே சமயம் வங்கி முதலீட்டை விட நல்ல இலாபத்தைத் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது. கடன் பத்திரங்களிலும் சாதாரண மக்கள் முதலீடு செய்வது எளிது அல்ல, அதனால்தான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை நாடிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் முதலீடுகள் மூலம் வாங்கும் பங்குகளையும் கடன் பத்திரங்களையும் – Assets Under Management (AUM) – நிர்வகிக்கும் சொத்துகள் – என்று கூறப்படுகிறது, அதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த சொத்துகள் என்று அர்த்தம். 2009-ல் சுமார் 10 இலட்சம் கோடியாக இருந்து இந்த AUM 2019-ல் 25 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் சேவையை SBI, HDFC போன்ற உள்நாட்டு வங்கிகளும், பிராங்கிளின் டெம்பிள்டன் போன்ற வெளிநாட்டு வங்கிகளும் வழங்கி வருகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட்கள், முதலீடுகளின் ஒரு பகுதியை இலாபம் அதிகம் வரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பு குறைவான பங்குகளிலும் மீதியை பாதுகாப்பான அதே சமயம் ஒரு அளவு இலாபம் வரக்கூடிய நிறுவனக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. எத்தனை சதவீதம் பங்குகளில் எத்தனை சதவீதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பது மியூச்சுவல் ஃபண்ட்க்கு – மியூச்சுவல் ஃபண்ட் வேறுபடுகிறது.

ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பல விதமான திட்டங்களை (scheme) வழங்க முடியும். எடுத்துக்காட்டாக SBI பல நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்யும் திட்டம் ஒன்றை வழங்குகிறது. அதே போல் பல நிறுவன கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய திட்டத்தை தேர்வுசெய்து கொள்ளலாம். மேலே கூறியது போல, அதிக இலாபம் அதே சமயம் குறைவான பாதுகாப்பை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களை தேர்வு செய்வார்கள். அதே போல், ஓரளவு இலாபத்துடன் அதிக பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களை தேர்வு செய்வார்கள்.

இதில் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வங்கி வைப்பு நிதியை விட அதிக இலாபம் – ஆனால் மிகுந்த பாதுகாப்பு தேவை என்று விரும்புபவர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இவர்கள் எண்ணம் என்னவென்றால், இலாபம் குறைவாக இருந்தாலும் முதலுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான். கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழக்கில் டெப்ட் பண்ட் (debt fund) என்று அழைக்கிறார்கள். இந்த டெப்ட் பண்டுகள் வாடிக்கையாளர்கள் தங்களிடம் முதலீடு செய்யும் தொகையில் பெரும்பகுதியை (70% மேல்), பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் பல நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதிலும் முதலீடு செய்கிறார்கள்.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்யும்போது ஒரே நிறுவனத்தின் பங்குகளிலோ அல்லது ஒரே நிறுவனத்தின் கடன் பத்திரத்திலோ முதலீடு செய்வது இல்லை. பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் பல நிறுவனங்களின் பங்குகளிலும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாக இருந்தால் பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. முதலீடு செய்திருக்கும் எதாவது ஒரு நிறுவனம் திவால் ஆனாலும் மொத்த முதலீடு இழப்பு ஏற்படாமல் இருக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது.

ஜீ டிவி (Zee TV) பற்றி நமக்கு தெரியும்; இந்த தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனத்தின் பெயர் எஸ்செல் குழுமம் (Essel group). இந்த எஸ்செல் குழுமம் ஜீ டிவி போல பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. இது போக டிஷ் டிவி (Dish TV) என்கிற DTH சேவையையும் வழங்கி வருகிறது. இன்னும், கட்டுமானம் போன்ற பல துறைகளிலும் செயல்பட்டு வருகிறது இந்த எஸ்செல் குழுமம்.

எஸ்செல் குழுமம் கடன் சுமையில் தத்தளிக்கிறது என ஜனவரி 2019 முதலே செய்திகள் வர தொடங்கின. கடனை அடைப்பதற்காக அதனுடைய சில நிறுவனங்களின் பங்குகளை விற்க இருப்பதாக 2019 ஜனவரி மாத துவக்கத்தில் செய்திகள் வெளியாயின. இந்த திட்டம் நிறைவேறாததால், எஸ்செல் குழுமத்தின் முக்கிய சொத்தான ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தில் 50% பங்குகளை விற்க இருப்பதாக 2019 பிப்ரவரி துவக்கத்தில் செய்திகள் வெளியாயின. இந்த திட்டமும் நிறைவேறவில்லை.

மார்ச் ஏப்ரல் என நாட்கள் கடக்க கடக்க தான் இன்னும் செய்திகள் வெளியாக தொடங்கின. நாட்டில் உள்ள ஏறத்தாழ அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. இந்த கடன் பத்திரங்களில் சில ஏப்ரல் 15-ம் தேதி முதிர்ச்சி அடைய உள்ள நிலையில், அதற்கு செலுத்தவேண்டிய தொகை எஸ்செல் குழுமத்திடம் இல்லை. (கடன் பத்திரம் முதிர்ச்சி அடைவது என்றால் அந்த பத்திரத்தின் பெயரில் வாங்கிய கடனை, அதாவது, அசலை கொடுத்துவிட வேண்டும் என்று பொருள்). கடனை திருப்பி செலுத்த பணம் கையிருப்பு இல்லாததால் தான் பணத்தை திரட்ட எஸ்செல் குழுமம் கடும் முயற்சி எடுத்து வந்தது.

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த மேற்கூறிய விவரங்களுடன் இந்த செய்தி எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்று பார்ப்போம் …

மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட்கள் எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகை ரூ. 7500 கோடி. இந்த கடன் பத்திரங்களில் சில ஏப்ரல் 2019-ல் முதிர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. எஸ்செல் நிறுவனம் கடன் சுமையில் தத்தளிப்பதால் அதன் கடன் பாத்திரங்களில் முதிலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வட்டி மட்டுமல்ல அசலே திரும்ப கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் பல வகை திட்டங்கள் உண்டு. முதல் வகையில், நாம் ஒரு திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்துகொண்டே இருக்கலாம், நமது முதலீடு பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும், அந்த முதலீட்டின் மதிப்பு ஏறுவது இறங்குவதை பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட்களில் நாம் செய்துள்ள முதலீட்டின் மதிப்பும் ஏறும் இறங்கும். நமக்கு எப்போது தேவையோ அப்போது நமது முதலீட்டை திரும்ப எடுத்துக்கொள்ளலாம், நமது முதலீட்டின் அப்போதைய மதிப்பு என்னவோ அதை பொறுத்து நமக்கு இலாபமோ நட்டமோ ஏற்படும். இரண்டாவது வகை LIC முதலீடு போன்றது, நாம் முதலீடு செய்யும் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு உயரும் என்று கூறி முதலீடுகளை பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, நாம் 1000 ரூபாய் முதலீடு செய்கிறோம் என்றால் அது ஒரு வருடத்தில் 1100 ரூபாயாக ஆகும் என்று உத்தரவாதம் தந்து முதலீடு பெறுவார்கள். இது கிட்டதட்ட வங்கி வைப்பு நிதியை போன்றது. குறிப்பிட்ட காலம் முடிந்ததும் நமக்கு பணத்தை தந்துவிடுவார்கள். இவ்வாறான திட்டங்களுக்கு பெயர் fixed maturity plan (FMP), அதாவது, குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சியடையும் திட்டம்.

பொதுவாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே FMP திட்டங்களை நடத்துவார்கள். ஏனென்றால், கடன்பத்திரங்களில்தான் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு இலாபம் வரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் FMP திட்டங்களில் வந்த பணத்தையே கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தன. இந்த FMP திட்டங்கள் சில ஏப்ரல் மாதத்தில் முதிர்ச்சியடையும் திட்டங்கள். மேலே கூறியது போல, எஸ்செல் குழுமத்தின் சில கடன் பத்திரங்களும் ஏப்ரல் மாதத்தில் முதிர்ச்சியடையும் நிலையில் இருந்தது. எஸ்செல் குழுமத்திடம் இருந்து சரியாக பணம் வந்து சேர்ந்திருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஏப்ரலில் முதிர்ச்சி அடையும் தங்களது FMP திட்டங்களுக்கு சரியாக பணத்தை திருப்பி தந்திருப்பார்கள். எஸ்செல் குழுமத்திடம் இருந்து வர வேண்டிய பணம் வராததால் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சரியான நேரத்தில் திருப்பி தர இயலாத நிலையில் உள்ளனர். இது போல் ஒரு நிலைமை வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறுகிறார்கள்.

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 6 FMP திட்டங்களும், HDFC மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒரு FMP திட்டமும் ஏப்ரலில் முதிர்ச்சி அடைய இருந்தன. ஆனால், இவர்கள் எஸ்செல் குழும கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்ததால் முதிர்ச்சி அடைந்தவுடன் பணத்தை திரும்பத் தர இயலவில்லை. திரும்பத் தர இயலவில்லை என்றால் முழுவதுமாக அல்ல, எடுத்துக்கட்டாக ஒரு முதலீட்டாளர் 1000 ரூபாய் முதலீடு செய்து 6 மாதங்களுக்கு பிறகு 1100 ரூபாய் கிடைக்கும் என்ற திட்டமாக இருந்திருந்தால் இப்போது அந்த முதலீட்டாளருக்கு 1100 க்கு பதிலாக 950 ரூபாயோ அதற்கு குறைவாகவோதான் கிடைக்கும். ஏனென்றால் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் மட்டும் தன்னிடம் இருக்கும் அனைத்து பணத்தையும் முதலீடு செய்வது இல்லை, பல நிறுவனங்களின் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்கிறது.

இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்று நாம் யோசித்து பார்த்தால் புரியும். வங்கியில் போட்டு வைத்திருந்த பணம் குறைந்தால் வங்கி என்ற அமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வாறு குறையுமோ அதே போல்தான் இதுவும். இன்னொரு விந்தை என்னவென்றால், எஸ்செல் குழுமம் ஒன்றும் உப்புமா கம்பெனி அல்ல, அது பங்குச் சந்தைகளில் நல்ல மதிப்பை பெற்றிருந்த நம்பகமான கம்பெனி. அதற்கே இந்த நிலை என்றால் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு லேசாகப் புரியும்.

இது எஸ்செல் நிறுவனத்துக்கு மட்டும் வந்திருக்கும் நிலை அல்ல, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், IL&FS என்ற நிறுவனம் – இது போன்ற பல பெரிய நிறுவனங்கள் இதே நிலையில்தான் உள்ளன.

முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறிதான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.

இதற்கு நமக்கு இரண்டு விதமான தீர்வுகள் கூறப்படுகின்றன. ஒன்று, ஒரு விரல் புரட்சி, இன்னொன்று, புல்வாமா, மோடி vs ராகுல், பால்கோட், பாரத் மாதா, இந்து மதம், இன்னும் பல!

—————–
** இந்த கட்டுரையின் வரைவை படித்து கருத்து தெரிவித்த தோழர்கள் பிரதீப்குமார் மற்றும் சக்திவேலுக்கு நன்றி.

செய்தி ஆதாரங்கள் :

Essel Group in talks to raise $400 million to refinance debt
Essel promoters open to selling over 50% of their stake in ZEEL, in talks with over 2 buyers
Zee horror show: Mutual fund investors in 6 Kotak debt plans get a scare

– அருண் கார்த்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க