.பி. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு நடந்துவந்த குண்டாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, சட்டம் நிலைநாட்டிவிட்டதாகப் பீற்றி வருகிறார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியோடுதான் இந்து மதவெறிக் கும்பலின் இந்த சுயதம்பட்டத்தை ஒப்பிட முடியும். பழைய குண்டர்கள் இடத்தை இப்பொழுது புதிய குண்டர்கள், அதாவது யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குண்டர்கள் இடத்தை இப்பொழுது தாக்கூர் குண்டர்கள் பிடித்திருக்கிறார்கள்.

இந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.

இந்த உண்மையை உன்னாவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளம் பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவமும், அதற்காக நீதி கேட்டுப் போராடிய அப்பெண்ணின் தந்தையை குல்தீப் சிங்கின் தம்பியும், அவனது அடியாட்களும் அடித்துக் கொன்ற சம்பவமும் அம்பலப்படுத்துகின்றன.

உ.பி. உன்னாவில் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும், காஷ்மீர் முசுலீம் சிறுமிக்கும் நேர்ந்திருக்கும் கொடூரங்களுக்கு இடையே அநேக ஒற்றுமைகள் உள்ளன.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இருவருமே இந்துத்துவக் கும்பலால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமி ஆஷிஃபா முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியின் காரணமாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்றால், உ.பி.யில் ஆதிக்க சாதித் திமிரின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.

சாதி – தீண்டாமையையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பது போலவே, முசுலீம் எதிர்ப்பு இந்துத்துவா அரசியலையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்டவர்கள் போராடிய பிறகுதான், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சம்பவங்களிலுமே குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் முனைப்புக் காட்டி வருகிறது. இரண்டு சம்பவங்களிலுமே வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது.

கதுவா சம்பவத்தில் உள்ளூர் போலீசு குற்றவாளிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டதென்றால், உ.பி. சம்பவத்திலோ யோக்கியன் ஆதித்யநாத்தின் கீழுள்ள போலீசு துறையே குற்றவாளிகள் செங்கர், அவனது தம்பி அதுல் சிங் ஆகியோரின் எடுபிடியாக நடந்துகொண்டு, அப்பெண்ணின் தந்தையைக் கொல்லுவதற்கும் உடந்தையாக இருந்திருக்கிறது.

கதுவா சம்பவம் விவாதப் பொருளாக இருந்த நேரத்தில், நரேந்திர மோடி அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் சுவிட்சர்லாந்துக்குப் பறந்து போனார். உன்னாவ் சம்பவத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய ஆதித்யநாத்தோ, அதைப் புறக்கணித்துவிட்டு ம.பி. மாநிலத்திலுள்ள கோவிலுக்குச் சாமி கும்பிடப் போனார்.

உன்னாவ் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்திருக்கிறது. எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டால், வேலை வாங்கித் தருவார் எனத் தந்திரமாக குல்தீப் சிங்கின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அத்தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பலவாறு மிரட்டி, குல்தீப் சிங்கும் அவனது அடியாட்களும் பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கின்றனர்.

உள்ளூர் போலீசு ஒப்புக்குச் சப்பாணி பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைதும் செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்தது. அவ்விளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிறகுதான், இப்பாலியல் பலாத்கார சம்பவமும், அப்பெண்ணின் தந்தை எம்.எல்.ஏ.வின் தம்பியால் அடித்து உதைக்கப்பட்டு, அவனது தூண்டுதலால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையிலேயே எம்.எல்.ஏ.வின் கைக்கூலி போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதும் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை நாறிப் போன பிறகும்கூட, ஆதித்யநாத் அரசு குற்றவாளி குல்தீப் சிங்கைக் கைது செய்யவில்லை. காரணம், முதல்வர் ஆதித்யநாத் மட்டுமல்ல, அவரது அரசே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அதிகாரிகளால் நிரம்பி வழிகிறது என்பதுதான்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங்கைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்த பிறகும்கூட, மாநில போலீசு அசையவில்லை. மாறாக, உ.பி. மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், சாதிப் பாசத்தோடு, ‘‘குல்தீப் சிங் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என வக்காலத்து வாங்கியதோடு, அந்தக் காமக் கொடூரனை வார்த்தைக்கு வார்த்தை ‘‘மாண்புமிகு” என மதிப்புக் கொடுத்து அழைத்தார்.

இறுதியாக, ஆதித்யநாத் அரசு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, குல்தீப் சிங்கைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது. அவனைக் கைது செய்வதற்குள், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடி வந்த சுரேந்தர் சிங், எம்.எல்.ஏ.வின் தம்பியாலும் போலீசாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களால் இரத்தக் கசிவுக்கு ஆளாகி இறந்து போனார்.

குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு, அவன் மீது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டது தொடர்பாக போஸ்கோ வழக்குப் பாய்ச்சப்பட்டிருக்கலாம். ஆனாலும், அவன் பா.ஜ.க.-விலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. அவனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை.

எந்தவொரு ஆதிக்கசாதியைச் சேர்ந்த தலைவனும் அவனைத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் கொலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, பா.ஜ.க.

அப்பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்து வருகிறார்கள் குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள். உ.பி. பைரியா மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘‘இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்ணைப் போய் யாராவது வன்புணர்வார்களா?” என ஆணாதிக்கத் திமிரோடு அறிக்கைவிடுத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரும் பார்ப்பன சாதிவெறியனுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகை நிருபர்களைக் கேவலமாகச் சித்திரித்து பதிவிட்டதற்கும், சுரேந்திர சிங்கின் திமிருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

பெண்கள் குறித்த இந்து மதவெறிக் கும்பலின் பார்வை ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும், பிற்போக்குத்தனமும் நிரம்பியது என்பதைத்தான் உ.பி. சுரேந்திர சிங்கும், தமிழகத்து எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, எச்ச ராஜா வகையறாக்களும் நிரூபித்து வருகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக யோக்கியன் ஆதித்யநாத் அரசு, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தா மீது நடந்துவந்த பாலியல் வல்லுறவு மற்றும் கடத்தல் வழக்கைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்து, தனது ஆட்சியில் பெண்களின் கதி இதுதான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திய ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, ‘‘ராம ராஜ்ஜியம் அமைப்போம் என யாத்திரை நடத்துபவர்கள் கூறுவதில் என்ன தவறு காண முடியும்?” என எதிர்கேள்வி எழுப்பியது இந்து மதவெறிக் கும்பல்.

ராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக்காட்டுகின்றன.

– குப்பன்
புதிய ஜனநாயகம், மே 2018

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க