விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த 2016-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவண முகமையின் அறிக்கையை மூன்று ஆண்டு கழித்து திங்கள்கிழமை வெளியிட்டது மோடி அரசாங்கம். வெளியாகியிருக்கும் அறிக்கையில் 2016-ம் ஆண்டில் மட்டும் 11,379 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சராசரியாக மாதம் 948 தற்கொலைகளும் நாள்தோறும் 31 தற்கொலைகளும் நடந்துள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்ச்சகமும் உறுதிபடுத்தியுள்ளது.
மோடி அரசாங்கம் 11,370 விவசாயிகள் 2016-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக ஜூலை 2018-ல் மக்களவையில் தெரிவித்தது. இது தற்காலிக தரவுதான் என்றும் என்.சி.ஆர்.பி. (தேசிய குற்ற ஆவண முகமை) இன்னும் இறுதி அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
என்.சி.ஆர்.பி. அறிக்கை 2015-ல் கடைசியாக வெளியானது. அதன் பிறகு, இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த அறிக்கை இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
2014, 2015-ம் ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடும்போது 2016-ம் ஆண்டின் தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் முறையே 12,360, 12,602 எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு 11,379 தற்கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக குற்ற ஆவண முகமையின் அறிக்கை தெரிவித்துள்ளது. எதனால் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை அது கூறவில்லை.
இதில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை வெறும் 8.6 சதவீதம் மட்டுமே. இந்த பரந்த முரண்பாட்டிற்குக் காரணம், விவசாய பணிகளில் ஈடுபடும் பெண்களை விவசாயிகள் என வகைப்படுத்தாததும் ஆகும்.
அதிக விவசாயிகள் தற்கொலை நிகழும் மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் தனது இழிபெருமையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2016-ல் 3,661 விவசாயிகள் அங்கே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு 4,004 பேரும் 2015-ம் ஆண்டு 4,291 பேரும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டும் அங்கே பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான ஆர்.டி.ஐ. தகவல் ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 2013 முதல் 2018 வரையான காலக்கட்டங்களில் 15, 356 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, பாஜக-வின் தென்னிந்திய நுழைவாயிலான கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2016-ம் ஆண்டு 2,079 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு 1,569 பேர் தற்கொலையால் மாய்ந்திருக்கிறார்கள்.
2014, 2015 -ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, விவசாயிகளின் தற்கொலை தெலுங்கானா மாநிலத்தில் 2016 ஆண்டு பாதியாகக் குறைந்துள்ளது. 1,347 மற்றும் 1,400 ஆக இருந்த எண்ணிக்கை 2016 -ம் ஆண்டு 645-ஆக குறைந்துள்ளது.
மேற்கு வங்கம் 2015-ம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை குறித்த தரவுகளை அளிக்க மறுத்ததைப் போல, 2016-ம் ஆண்டும் மறுத்திருக்கிறது. 2014-ம் ஆண்டு 230 தற்கொலைகள் பதிவாகியிருந்தன. அதுபோல, பீகார் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என என்.சி.ஆர்.பி. தரவு சொல்கிறது.
ஆனால், பல பத்திரிகை செய்திகள் பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்ததை செய்தியாக வெளியிட்டுள்ளன.
படிக்க:
♦ விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
♦ மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் தோரயமானதுதான் என்றபோதும், விவசாயிகள் தற்கொலையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவை பாஜக ஆண்ட மாநிலங்கள்.
பழம்பெருமையை மீட்கக் கிளம்பியிருக்கும் இவர்கள், பழமையான வேளாண் தொழில் செய்துவரும் விவசாயிகள் நலனில் காட்டும் அக்கறையை படம்பிடித்துக் காட்டுகிறது வெளியாகியிருக்கும் தரவு.
கலைமதி
நன்றி: தி வயர்