Monday, December 6, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

-

ருவமழை பொய்த்துப் போனதையடுத்து தீவிரமாகும் வறட்சியும், விவசாயிகளின் தற்கொலைகளும் டெல்டா மாவட்டங்களையும் தாண்டி தமிழகமெங்கும் பரவி வருகிறது. குறிப்பாக பருவமழையை மட்டுமே நம்பிய மானாவாரி விவசாயம் முற்றிலுமாக அழிந்துவருவதால், மானாவாரி விவசாயிகளின் தற்கொலைகள் தொடங்கியுள்ளது.

மதுரைமாவட்டம் பேரையூர் தாலுக்கா, பி.கன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 77 வயது பெருமாள் தேவருக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 3 ஏக்கரில் விதைத்திருந்த கம்பு பயிர், மழை போய்த்துப்போனதால் முழுவதும் கருகிவிட்டது. வர்தா புயல் மூலம் எப்படியும் மழை கிடைக்கும் என்று நம்பி 5௦ செண்டில் சாப்பாட்டிற்காக நெல்நாற்று பாவி வைத்திருக்கிறார். அதுவும் பொய்த்துப் போனது. கடைசி முயற்சியாக அவ்வப்போது ஊரும் கிணற்று நீரை நம்பி பாசிப்பயிரை நடவுசெய்துவிட்டு, அதுவும் கைசேருவதற்கு உத்திரவாதமில்லாத நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல புலம்பிக் கொண்டிருந்தவர், வீட்டிலிருந்த காலாவதியான எக்காலாக்ஸ் மருந்தைக் குடித்து இறந்துபோனார்.

இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்
இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்

பெருமாள்தேவருக்கு நான்கு மகள், இரு மகன் என மொத்தம் 6 பிள்ளைகள்! எல்லோரும் திருமணமானவர்கள். இரு மகன்களும் ஆந்திராவில் முறுக்கு போடும் தொழில் செய்து ஓரளவு வசதியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு வயதான அப்பாவை நீங்கள் கூட்டிக்கொண்டு போய் வைத்திருக்கலாமே? என்று மகனிடம் கேட்டதற்கு, “எங்ககிட்டதாங்க வந்து இருந்தாரு. இங்க மழைபெய்ஞ்சிருச்சுனு தெரிஞ்சவுடனே, என்காடு மட்டும் தரிசா கிடக்குறதா… அப்படினு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பி வந்துட்டாரு” என்றார். “ஆறு வருடமாக தனியாக சோறு ஆக்கி சாப்பிட்டுக்கிட்டு, வைராக்கியமா விவசாய வேலையும் செய்துக்கிட்டிருந்தாரு. ரொம்ப முடியலைனா நாங்க சோறு கொளம்பு கொடுத்துப் பாத்துக்குவோம்” என்கிறார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. “ஊர் பொதுப்பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் எடுத்திருக்கிறார். இது இல்லாமல் நூறுநாள் வேலை செய்யும் ஆட்களிடம் முப்பதாயிரம் வரை வட்டிக்கு வாங்கியிருக்கிறார். இந்தக் கடனை என்னைக்கு அடைக்கப்போகிறோம்” என்ற கவலையில்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.
காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.

பேரையூர் தாலுக்கா முழுவதும் மானாவாரி விவசாயம்தான் அதிகளவில் உள்ளது. சுமார் 15,000 ஏக்கர் பருத்தியும், 10,000 ஏக்கர் மக்காச் சோளமும் இந்த வறட்சியால் முற்றிலுமாக அழிந்து கொண்டிருக்கிறது. கன்னியம்பட்டி கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்களின் நீராதாரமான அல்லிகுண்டம் கண்மாயோ புதர்காடாக கிடக்கிறது. இக்குளத்தின் கீழ்புறம் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயியோ, “ஒரே ஒருநாள் மழைகிடைத்தாலும் போட்டமுதலை எடுத்துவிடுவேன்” என்று கலங்குகிறார். “ஒரு ஏக்கரில் பருத்தி பயிரிட 15,000 ரூபாய் செலவாகுது. 10 ஏக்கரில் விதைச்சிருக்கேன். பிஞ்சும்,காயுமா இருக்கு. மழையில்லாம பிஞ்சிலேயே வெடிக்குது, இந்தப் பஞ்சை யார் வாங்குவான்” என்று பெருமூச்சு விடுகிறார் பாண்டியன். இவருக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

உசிலம்பட்டி நகரை ஒட்டிய சிட்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொன்னாங்கத்தேவர் மகன் பாண்டி(67), தனது இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மாடு வியாபாரமும் செய்து வந்தார். இந்தவருடம் மழையை நம்பி, மக்காச்சோளம் பயிரிட்டு கதிர்வரும் நேரத்தில் மழையின்றி காய்ந்த தட்டையாக நிற்பதைக் கண்ட வேதனையில், வீட்டுக்கு வரும்வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டார். இவரின் நான்கு மகன்களில் மூவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்ய, ஒருவர் விபத்தில் காலை இழந்து வீட்டில் முடமாகி கிடக்கிறார். ஒரு மகள் கணவனை இழந்து வீட்டருகிலேயே பெட்டிக்கடை வைத்திருக்கிறார்.

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மாடு வியாபாரமும் நின்றுவிட்டது. மகனின் மருத்துவச் செலவு, பேரனின் கல்லூரி படிப்புச் செலவு ஆகியவற்றுக்கு வாங்கிய கடன் நெருக்கடிதான் பாண்டியை சாகடித்திருக்கிறது.  MSW பட்டாதாரி ஹரிஹரன் தனது இரண்டுமாடி வீட்டைக்காட்டி, “இது எங்க அப்பா சம்பாதிச்சதுங்க. நான் ரெண்டு பால்மாட்டை வச்சுதான் பொழைப்பை ஓட்டுறேன். இப்ப தீவனம்கூட கிடைக்க மாட்டேங்குது. நிலமும் தரிசாக் கிடக்குது. இந்த ஊருல பொழைக்குறதுக்கு ஒண்ணுமில்ல.” என்றவரிடம், ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்!

தீவனமில்லாமல் பால் கரைப்பது எப்படி15 வருடத்திற்கு முன்பு, சிட்லம்பட்டி கிராமம் வளமான விவசாயப் பூமியாக இருந்தது. “உசிலம்பட்டி பெரிய கண்மாய்தான் இக்கிராமத்தின் நீராதாரமாக இருந்தது. கண்மாயில் நீர் தேங்கினால் இந்த ஊர்கிணறுகளில் மட்டுமல்ல, சுற்றியுள்ள பத்து கிராமங்களிலும் நீர் வற்றாது” என்கிறார்கள் இந்த ஊர் பெரியவர்கள். மழைநீரை மட்டுமே நம்பியுள்ள 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்ப்பட்டி கண்மாயில், 11 ஏக்கர் ஹவுசிங் போர்டு ஆக்கிரமிப்பில் உள்ளது. அருகில் உள்ள தனது பிளாட்டுகளுக்கு இடையூறாக இருப்பதால், இதன் வரத்துக் கால்வாயை வேறு குளத்திற்கு திருப்பிவிட்டிருக்கிறது ஓ.எஸ்.ஆர் என்ற ரியல் எஸ்டேட்டு கும்பல். எனவே மழையே பெய்தாலும் குளம் நிரம்ப வழியேயில்லை. இக்கண்மாயை நம்பியுள்ள 12 ஊரணிகளும் இன்று காய்ந்துகிடக்கிறது. சுற்றுவட்டார விவசாயிகளின் உயிராதாரமான உசிலை கண்மாயை தூர்வாருவதற்குக் கூட அரசு முன்வரவில்லை. சில விவசாயிகள் தாமாக முன்வந்து நிதிவசூலித்து சுற்றுக்கரையை மட்டும் பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், உசிலை வட்டார விவசாயத்திற்கு நிரந்தர தீர்வாக, வைகை அணைநீரை ஆதாரமாகக் கொண்டு 58 கிராமக் கால்வாய் திட்டத்தை அமுல்படுத்தியது தமிழக அரசு. கிளைக் கால்வாய்கள் எல்லாம் வெட்டிமுடித்தவர்கள், வைகை நீர்வரும் தொங்குபாலம் அமைக்கும் வேலையை பாதியில் கிடப்பில் போட்டுவிட்டது அரசு. மீதமுள்ள சுமார் 45 அடிநீளத்திற்கு பாலம் கட்டமுடியாமல் கடந்த 10 வருடமாக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத தமிழக அரசின் திமிர்தான் பாண்டியின் மரணத்திற்கு காரணம்.

ஆனால், விவசாயிகளின் சாவையும்கூட, தற்கொலை, அதிர்ச்சிமரணம் என்று வகைபிரிக்கிறது கொலைகார தமிழக அரசு. என்னிடம் நிவாரணம் பெற வேண்டுமானால் தூக்குப் போட்டோ, விஷம் குடித்தோதான் சாகவேண்டும் என்று விவசாயிகளை மிரட்டுகிறது ஓபிஎஸ் அரசு. கொலைகாரனிடமே நிவாரணம் கேட்டு கெஞ்சி நிற்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர் விவசாயிகள். ஆனால் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதை வெறும் நிவாரணப் பிரச்சினையாக மட்டும் பார்த்து துரோகமிழைக்கிறார்கள். சோறு திங்கும் ஒவ்வொருவரும் விவசாயிகளுக்காக களத்தில் இறங்க வேண்டிய நேரமிது. இல்லையேல் இன்றைக்கிருக்கும் தமிழகம் கூட விரைவிலேயே இல்லாமல் போய்விடலாம்.

இறந்து போன விவசாயி பாண்டி
இறந்து போன பாண்டி

பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.
பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.

சருகாகிப் போன நெல்நார்று.
சருகாகிப் போன நெல்நாற்று.

தொங்கு பாலம்.1
கட்டி முடிக்காமல் பாதியில் நிற்க்கும் தொங்கு பாலம்

கருகிய அவரை செடி.
கருகிய அவரை

அல்லிகுண்டம் கண்மாய்
அல்லிகுண்டம் கண்மாய்

வற்றிப் போயுள்ள கிணறு
வற்றிப் போயுள்ள கிணறு

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலம்பட்டி வட்டாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க