privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !

பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !

-

பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொன்று விடுவது, அல்லது பிறந்தவுடன் கொன்று விடுவது போன்ற பழக்கங்கள் இந்தியாவின் கிராமப்புறங்களில் தான் அதிகமென நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

நன்றி : ரெயுட்டர்ஸ்

“கன்யா லைஃப்” எனும் தொண்டு நிறுவனம் இந்திய அரசின் 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து இதை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் 500 பெரிய நகரங்களின் மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதாச்சாரத்தை வைத்து இந்த புள்ளிவிவரக் கணக்கை தயாரித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 500 நகரங்களின் மொத்த சராசரியாக, 1000 ஆண் குழந்தைகளுக்கு 902 பெண் குழந்தைகள் தான் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் கிராமப்புறங்களின் மொத்த சராசரியாக  1000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த இந்திய சாராசரியை எடுத்துக் கொண்டால், கடந்த 20 ஆண்டுகளில் பாலின விகிதாச்சாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. 1991-ம் ஆண்டு, 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 என்ற விகிதத்தில் இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, 2011-ம் ஆண்டில் 918ஆகக் குறைந்துள்ளது.

இயற்கையாகவே, பிறப்பின் அடிப்படையில் குழந்தைகளின் பாலின விகிதம், 100 பெண் குழந்தைகளுக்கு 102 – 106 ஆண் குழந்தைகளாக இருக்கின்றது. அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 – 980 பெண் குழந்தைகள் என்பது தான் இயல்பான ஆண் – பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம். இது, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்ற வகையில் இல்லாது இருப்பதற்கான காரணம், ஆண் குழந்தைகளின் இறப்பிற்கான வாய்ப்புகள் இயல்பாகவே அதிகமாக இருப்பதையொட்டி இயற்கையின் சமன்படுத்தும் வழிமுறையே இது, என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, இந்தியாவின் தலைநகர் டில்லியில் 832-கவும்,  பொருளாதாரத் தலைநகர் மும்பையில் 852-கவும் இருக்கிறது.

பாலின விகிதாச்சாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நகரம், மோடியின் குஜராத்தில் உள்ள மஹேசனா நகராகும். இங்கு 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 762 பெண் குழந்தைகளே இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா, மோடிநகர் ஆகியவை முறையே 772 மற்றும் 778 பெண் குழந்தைகள் என அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சராசரியாக 1000 ஆண் குழந்தைகளுக்கு 900-கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளனர். இதில் பெரும்பான்மை மாநிலங்கள் இந்துத்துவம் ஊறித்திளைக்கும் மாநிலங்கள் என்பது வியக்கத்தக்கதல்ல.

நமது நாட்டில், பிறக்கும் முன்னரே குழந்தைகளின் பாலினத்தைத் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு நடைபெறுவதையும், பிறந்த பின்னர் பெண் குழந்தைகளைக் கொன்று விடுவதும் பரவலாக இருப்பதையே இது காட்டிகிறது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் வசதிகள் 1960களின் நடுவில் தான் இந்தியாவிற்குள் வந்தன. அத்தகைய கருவிகளின் உற்பத்தி 1994-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. உற்பத்தியின் அதிகரிப்பு விகிதத்தோடே, பெண் குழந்தைகளைக் கருவிலேயே கலைக்கும் விகிதமும் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்க சோதனை நிலையங்கள் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிவதை தடை செய்து சட்டம் கொண்டு வந்தது இந்திய அரசு.

வழக்கமான சட்டங்களைப் போன்றே இன்றளவும் இச்சட்டமும் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. இதனைக் கடந்த 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை உறுதி செய்கிறது. பரிசோதனை நிலையங்களில், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பெற்றோர்களிடம் சொல்கிறார்களா என்பதைச் சோதனை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பல மாநிலங்களில் அப்பணியைச் சரிவரச் செய்வதில்லை என நிறுவுகிறது, அந்த அறிக்கை.

மராட்டியத்தில் இத்தகைய சோதனைகள் 55% பரிசோதனை நிலையங்களில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. மோடியின் குஜராத்தில் இச்சோதனைகள் 27% இடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளன. இத்தகைய சோதனை நிலையங்கள் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையாக இருப்பதுவும், சட்ட விரோத முறைகளில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதும் தான் நகர்ப்புறங்களில் பெண்குழந்தைகளின் விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணமாகும்.

இந்தியாவில் பார்ப்பனியத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ள ஆண் – பெண் உறவுகளும் சரி, ஆண் – பெண் வேலைப் பிரிவினையும் சரி, பெண்களைப் பின் தங்கிய சூழலில், பொருளாதாரச் சுதந்திரம் அற்றவர்களாகவே இருத்தி வைத்திருக்கிறது. பார்ப்பனியம் பெண்களை ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவே அன்று தொட்டு இருத்தி வைத்திருக்கிறது. இதன் விளைவாகவே, வரதட்சணை, உடன்கட்டை ஏறுதல், பால்ய திருமணம், மறுமணம் மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன.

இப்புறச் சூழல்களின் காரணமாகவே இந்தியாவில் பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஒரு பாரமாக பார்க்கப்படுகின்றன. அதுவே பெண் சிசுக் கொலை முதல் கருக்கலைப்பு வரை நீடித்துச் செல்கிறது.

சமூகத்தில் நிலவும் வரதட்சணைப் பிரச்சினை தொடங்கி, இராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் இன்றளவும் நடைபெற்று வரும்  பால்ய திருமணங்கள் வரை தடை செய்யப்படும் போதும், பொருளாதார ரீதியாக பெண்கள் சுயசார்பு பெறும் போதும் மட்டும் தான் பெண்களின் நிலை முன்னேறும்.

மோடியின், மகளுடன் செல்ஃபி எடுக்கும் ‘திட்ட’மாகட்டும், ’பேட்டி பச்சாவ்’ திட்டமாகட்டும், அவை வெற்றுச் சவடால்கள் தான் என்பது இன்றளவும் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிரூபிக்கின்றன.

பார்ப்பனியக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டாமல், பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படும் அவலத்தைத் தடுப்பதற்கும் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கும் வழி வேறு இல்லை.

மேலும் படிக்க:

Beti Bachao: The Declining Sex Ratios Of Indian Cities

————————————————————————–

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் நலன் சார்ந்து செய்திகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வழங்க
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள். நன்றி !

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவுகள், புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்னூல்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க