கடந்த 5000 ஆண்டுகளாக மதிப்பின் ஆகச்சிறந்த புகலிடமாக தனது தரத்தை நிரூபித்து வந்திருக்கிறது தங்கம். இன்று, முதலீட்டாளர்கள் சந்தையின் நிலையற்ற தன்மையில் தங்கத்தில் முதலீடு செய்யத் துடிக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில், பல நாடுகளின் மத்திய வங்கிகளும், தங்கத்தை வாங்கிக் குவிப்பதில் இணைந்திருக்கின்றன.
கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் மத்திய வங்கிகளால் வெள்ளமென வாங்கிக் குவிக்கப்பட்ட தங்கத்தின் அளவு இதுவரை வாங்கியதிலேயே இரண்டாவது அதிகபட்சமான அளவு என்று உலக தங்கக் கழகம் இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடுகளின் மத்திய வங்கிகள் மட்டும் சுமார் 651.5 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது இந்நிறுவனம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 74% அதிகக் கொள்முதல் நடந்துள்ளது என்கிறது இந்நிறுவனம்.
மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா !
- ரசியா :
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ரசிய மத்திய வங்கி தங்கம் வாங்குவதில் முரட்டுத்தனமாக ஈடுபட்டுவருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் அது சீனாவை அதிகமாக தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருந்து பின்னுக்குத் தள்ளியது. கடந்த 2018-ம் ஆண்டு ரசியா 274 டன்கள் தங்கம் வாங்கி உலகின் முன்னணி தங்கக் கொள்முதலாளராக மாறியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2,149 டன்னாக தமது தங்கப் பங்குகளை உயர்த்தியதன் மூலம் தனது அன்னியச் செலாவணி கையிருப்பை 31.1 டன் தங்கமாக உயர்த்தியது.
அமெரிக்க கருவூலத்தை அடக்கி வைக்க தங்கத்தை வாங்குதல் என்பது ரசியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் பொருளாதாரத்தை டாலரிலிருந்து விடுவிப்பது என்ற அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.
- ஃப்ரான்ஸ் :
பாரிஸ் 2,518 டன் தங்கம் கையிருப்பைக் கொண்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் மொத்த அன்னியச் செலாவனி கையிருப்பில் 60% ஆகும். பிரான்சு நாட்டு அரசியல்வாதியும் தேசியப் பேரணிக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சியின் தலைவருமான மரைன் லி பென், தேசத்தின் தங்கம் விற்கப்படுவதை நிறுத்தும்படியும், வெளிநாடுகளில் உள்ள பிரான்சின் தங்கத்தை, நாட்டிற்கு மீட்டுத் திருப்பும் படியும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்.
- இத்தாலி :
2,534 டன் தங்கத்தைத் தனது கருவூலத்தில் வைத்துக் கொண்டு இப்பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இத்தாலி. இது அந்நாட்டின் அன்னியச் செலாவனி கையிருப்பில் 70% ஆகும். இத்தாலியின் மத்திய வங்கி பின்பற்றும் கொள்கையின் படி, தங்கத்தின் மீதான முதலீடு, பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் காலகட்டங்களில் மிகவும் பாதுகாப்பானவை. மேலும் அவை அமெரிக்க டாலரின் நிலையற்றதன்மையிலிருந்து காக்கும் காப்பு வளையமாகும்.
படிக்க:
♦ ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்
♦ தங்கத்தின் வழிபாட்டிற்கு காரணம் என்ன ? பொருளாதாரம் கற்போம் – 10
- ஜெர்மனி :
ஜெர்மனியின் டியூட்ஸ்சே பண்டெஸ் வங்கி (மத்திய வங்கி) 3,483 டன் தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டுள்ளது. இது அந்நாட்டின் அந்நியச் செலவாணி கையிருப்பில் 70% ஆகும். இவ்வங்கி ஃப்ரான்சின் மத்திய வங்கியிலும், அமெரிக்க மத்திய வங்கியிலும் உள்ள தனது 674 டன் தங்கத்தை மீட்க முயற்சித்து வருகிறது. நாட்டின் தங்கத்தை மீட்கும் வேலை எதிர்வரும் 2020-ம் ஆண்டோடு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்கா :
அமெரிக்காதான் தங்கக் கையிருப்பில் உலகில் முதலிடம் வகித்துவருகிறது. மொத்தம் 8407 டன் தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த தேசிய அன்னியச் செலாவணி கையிருப்பில் இது 75% ஆகும். தங்கத்தை அதிக அளவில் வாங்குவது டாலரின் மதிப்பை இறங்கச் செய்துவிடும் என்பதால் அமெரிக்க அரசு, பிறநாடுகளைப் போல தங்கம் வாங்குவதில் செயல்துடிப்புடன் ஈடுபடுவதில்லை.
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : RT.com