அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 10

இந்த பாகத்தில் மூலதனத்தின் தோற்றம், புராதனத் திரட்சி, வாணிப ஊக்கக் கொள்கை போன்றவைகளை நூலாசிரியர் அறிமுகப் படுத்துகிறார். முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் மூலதனம் எப்படி வந்தது? சிக்கனமாக வாழ்ந்து செல்வத்தை சேமித்துத்தான் தொழிலை துவங்கினார்களா? இல்லை  என்றால் எப்படி என்று பதிலளிக்கிறார் ஆசிரியர். ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு அந்நாட்டில் இருக்கும் உலோகத்தின் மதிப்பிலா இல்லை அன்னிய நாடுகளோடு செய்யும் வர்த்தகத்திலா என்பதெல்லாம் ஆரம்ப கால முதலாளித்துவ அறிஞர்கள் புரிந்து கொண்டதை இப்பாகம் விளக்குகிறது. சுருங்கச் சொன்னால் முதலாளித்துவத்தின் தோற்றம் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றினூடாகவா இல்லை சில தனிநபர்களின் மேலான பண்புகளினாலா என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. கட்டுரையின் முடிவில் உள்ள வீட்டுப் பாட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள்!

– வினவு

தங்க வழிபாடும் விஞ்ஞான ஆராய்ச்சியும் : வாணிப ஊக்கக் கொள்கையினர் !

அ.அனிக்கின்

ரோப்பியர்கள் இந்தியாவின் வாசனைத் திரவியங்களைத் தேடிப்புறப்பட்டதன் விளைவாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கம், வெள்ளியின் மீது வைத்திருந்த அடக்க முடியாத ஆசையினால் அமெரிக்காவை வென்றனர்; அந்த நாட்டின் எல்லாப் பகுதிகளையும் நன்கு ஆராய்ந்தனர். பூகோள ரீதியான மாபெரும் கண்டு பிடிப்புகள் வர்த்தக மூலதனத்தின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்டிருந்தன; அவை தம் பங்குக்கு இந்த மூலதனத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகமாக ஊக்குவித்தன. வரலாற்றுரீதியாக வர்த்தக மூலதனமே மூலதனத்தின் ஆரம்ப வடிவம். இந்த வடிவத்திலிருந்துதான் தொழில்துறை மூலதனம் வளர்ச்சியடைந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை (பதினெட்டாம் நூற்றாண்டிலும் அதிக அளவில்) பொருளாதாரக் கொள்கையிலும் பொருளாதாரச் சிந்தனையிலும் வாணிப ஊக்கக் கொள்கையே முக்கியமான போக்காக இருந்தது. அதைச் சுருக்கிப் பின்வருமாறு சொல்லலாம்: பொருளாதாரக் கொள்கை – விலையுயர்ந்த உலோகங்களை மிகவும் அதிகமான அளவுக்குத் திரட்டி நாட்டிலும் அரசாங்கக் கருவூலத்திலும் குவித்து வைப்பது; தத்துவம் – செலாவணியின் (வர்த்தகம் மற்றும் பணப் புழக்கத்தின்) செயல் எல்லையில் பொருளாதார விதிகளைத் தேடுதல்.

படிக்க:
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

”உலோகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் துணிய வேண்டும்” என்றார் கதே. தங்கம் என்ற போலிக் கடவுளை வழிபடுவது முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலம் முழுவதிலும் இருந்தது; முதலாளித்துவ வாழ்க்கை முறை, சிந்தனையில் அது இணைந்த பகுதியாக இருந்தது. எனினும் வர்த்தக மூலதனம் மேலோங்கியிருந்த காலத்தில் இந்த தெய்வத்தின் பிரகாசம் மிக அதிகமாக இருந்தது. வாங்குவதும் அதிக விலைக்கு விற்பதும் வர்த்தக மூலதனத்தின் கொள்கை. வாங்கிய விலைக்கும் விற்பனை செய்த விலைக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த மஞ்சள்நிற உலோகத்தின் வடிவத்தில் வைத்திருந்தனர். இந்த வித்தியாசம் உற்பத்தியின் மூலமாக, உழைப்பின் மூலமாக மட்டுமே ஏற்பட முடியும் என்பது இன்னும் ஒருவருக்கும் தோன்றவில்லை. வெளி நாட்டில் வாங்கியதைக் காட்டிலும் அதிகமான அளவில் வெளிநாட்டில் விற்பனை செய்வது – இதுவே வாணிப ஊக்கக் கொள்கையின் அரசு ஞானத்தின் உச்சம் எனக் கூறலாம். அரசாங்கத்தை நடத்தியவர்களும், அவர்களுக்காகச் சிந்தனை செய்து எழுதியவர்களும் இந்த வித்தியாசத்தை வெளிநாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் வருகின்ற தங்கம் (அல்லது வெள்ளி) வடிவத்தில்தான் மறுபடியும் பார்த்தார்கள். நாட்டில் ஏராளமான பணம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

புராதனத் திரட்சி

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

வாணிப ஊக்கக் கொள்கை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முந்திய வரலாறு என்பது போல புராதனத் திரட்சி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் முந்திய வரலாறு ஆகும். புராதனத் திரட்சி என்ற சொற்றொடரை ஆடம்ஸ்மித் உருவாக்கினார் எனத் தோன்றுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள பல உற் பத்திப் பிரிவுகளின் வளர்ச்சியின் மூலமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைகின்ற நிலையை மூலதனத்தின் புராதனத் திரட்சி ஏற்படுத்தியது என்று அவர் எழுதினார் (அதை ”சென்ற காலத்திய திரட்சி” என்று கூறினார்).

மார்க்ஸ் ”புராதனத் திரட்சி என்று சொல்லப்படுவது” என்று எழுதினார். ஏனென்றால் ஸ்மித் காலம் முதல் இந்தச் சொற்றொடர் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் வேரூன்றியிருந்ததோடு, முதலாளி வர்க்கத்தினர் இதற்கு ஒரு விசேஷமான, நன்னெறி சார்ந்த பொருளையும் கற்பித்து வந்தனர்.

புராதனத் திரட்சியின் மொத்தப் போக்கின் விளைவாகத்தான் சமூகத்தில் முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று வர்க்கங்கள் பிரிந்தன. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் புராதனத் திரட்சியின் மொத்த நிகழ்வையும் ஒரு வனப்புமிக்க வாழ்க்கையாகச் சித்திரிக்கின்றனர். வெகு காலத்துக்கு முன்பு சுறுசுறுப்பானவர்கள் – குறிப்பாக புத்திசாலித்தனம், சிக்கனம் ஆகியவற்றைக் கடைப்பிடித்த உயர்ந்தவர்கள் – ஒரு பக்கத்தில் இருந்தார்கள்; மறுபக்கத்தில் தங்களிடமிருந்தவற்றையும் இன்னும் மற்றவற்றையும் ஊதாரித்தனமாகச் செலவழித்த சோம்பேறிகளான கீழ்மக்கள் இருந்தார்கள்… முதலில் சொல்லப்பட்டவர்கள் செல்வத்தைக் குவித்தனர்; பின்னால் சொல்லப்பட்டவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர்; அவர்களிடம் விற்பனை செய்வதற்குத் தங்கள் உடம்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த வசீகரமான வாழ்க்கையில் அறமும் நீதியும் ஆட்சி புரிகிறது; உழைப்புக்கு வெகுமதியும் சோம்பேறித்தனத்துக்கும் ஊதாரித்தனத்துக்கும் தண்டனையும் தரப்படுகிறது.

பலாத்கார, மோசடி வழிகளில்தான் புராதன திரட்சி நடந்தேறியது.

இதைக் காட்டிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று இருக்க முடியாது. மூலதனத்தின் புராதனத் திரட்சி என்பது ஒரு உண்மையான வரலாற்றுப் போக்காக இருந்தது. ஆனால் அது மூர்க்கத்தனமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது. அதில் ஒடுக்குமுறையும் பலாத்காரமும் மோசடியும் கையாளப்பட்டன.

இது மனிதனுடைய தீய நோக்கத்தினால், ”ஆதியிலிருந்தே” அவன் பலாத்காரத்தைச் சார்ந்திருப்பவன் என்பதன் காரணமாக ஏற்பட்ட விளைவு அல்ல. புராதனத் திரட்சியின்போது ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு முதலாளித்துவத்துக்கு மாறுகின்ற புறவய வரலாற்று விதி இயங்கத் தொடங்கியிருந்தது. இந்தப் போக்கு சமூகத்தின் பொருளாதார வரலாற்று வளர்ச்சியை ஊக்குவித்தபடியால் அது சாராம்சத்தில் முற்போக்கானதாகும். புராதனத் திரட்சி நடைபெற்ற காலம் ஒப்புநோக்கில் உற்பத்தி வேகமாகப் பெருகிய காலம், ஆலைத்தொழில் நகரங்களும் வர்த்தக நகரங்களும் வளர்ச்சியடைந்த காலம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்த காலம், ஆயிரம் வருடங்களாகத் தேங்கிக் கிடந்த பிறகு நுண்கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்ந்த மறுமலர்ச்சிக் காலம்.

இந்தக் காலத்தில் பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகள் வீழ்ச்சியடைந்து அவைகளின் இடத்தில் புதிய, முதலாளித்துவ உறவுகள் ஏற்பட்டு வந்த காரணத்தால் விஞ்ஞானமும் கலாச்சாரமும் வேகமாக வளர்ச்சி அடைய முடிந்தது. கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் அழிக்கப்படும் பொழுது, அரை நிலப்பிரபுத்துவ, அரை சுதந்திரமான நில உடைமையாளர்கள் நகரங்களிலும் கிராமப்பகுதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினராக மாற்றப்படும் பொழுது அந்த வாழ்க்கையில் வனப்பு ஏது? பணம் சேர்ப்பதையே மதமாகக் கொண்ட முதலாளித்துவச் சுரண்டல்காரர்களின் வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வனப்புமிக்க வாழ்க்கையைப் பற்றிப் பேச முடியுமா?

காலனிகளைத் தேடிய பயணம் – கொலம்பஸ்

பதினாறாம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய நாடுகளில் – இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலமான – முடியாட்சியைக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட தேசிய அரசுகள் வளர்ச்சியடைந்தன. பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தில் மன்னர்கள் முரண்டு செய்த பிரபுக்களைத் தோற்கடித்து அவர்களை அடக்கி விட்டார்கள். நிலப்பிரபுத்துவ காலத்தில் பிரபுக்கள் வைத்திருந்த ஆயுதந்தாங்கிய படைகளும் பரிவாரங்களும் கலைக்கப்பட்டன; அவர்களுக்கு இப்பொழுது “வேலையில்லாத நிலை” ஏற்பட்டது. அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாக மாற விரும்பவில்லை என்றால் இராணுவத்தில் அல்லது கடற் படையில் சேர்ந்து, அமெரிக்கா அல்லது கிழக்கிந்தியத் தீவுகளில் இருக்கும் கற்பனையையும் மிஞ்சிய செல்வங்களைத் தேடிக் காலனிகளுக்குப் புறப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களாக மாறியிருந்தால் அவர்கள் நிலவுடமையாளர்களைப் பணக்காரர்களாக்கியிருப்பார்கள்; வெளிநாட்டுக்குப் போனதன் மூலம் அவர்கள் வியாபாரிகளை, தோட்டச் சொந்தக்காரர்களை, கப்பல் முதலாளிகளைப் பணக்காரர்களாக்கினார்கள். அவர்களில் சிலர் ”ஏணியில் மேலே ஏறிச் சென்றனர்”; அதிகமாகப் பணம் சேர்த்துக் கொண்டு தாங்களே வியாபாரிகளாக அல்லது தோட்டச் சொந்தக்காரர்களாக மாறினார்கள். இன்னும் சிலர் கடலில் கொள்ளையடித்தும் நேரடியாகவே திருடியும் அதிகமான பணத்தைச் சேர்த்தார்கள்.

அரசர்கள் பிரபுக்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கைத்தொழில், வர்த்தக முதலாளிகளும் நகரவாசிகளும் அரசர்களை ஆதரித்தனர், நேசசக்திகளாகத் துணை புரிந்தனர். இந்தப் போராட்டத்தின் போது நகரங்கள் அரசர்களுக்குப் பணமும் ஆயுதங்களும் சிலசமயங்களில் நபர்களையும் கொடுத்து உதவி செய்தன. பொருளாதார வாழ்க்கையின் மையம் நகரங்களுக்கு மாறியதனால் நிலப்பிரபுக்களின் அதிகாரமும் செல்வாக்கும் இற்றுப் போனது. உதவி செய்த முதலாளிகள் தங்கள் பங்குக்கு நிலப்பிரபுக்கள், ”சாதாரண மக்கள்’ ‘, அந்நியப் போட்டியாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தங்களுடைய நலன்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்று கோரினர். அரசும் இந்த ஆதரவைக் கொடுத்தது. வர்த்தகக் கம்பெனிகளும் கைத்தொழில் குழுக்களும் அரசர்களிடமிருந்து பலவிதமான சிறப்பு உரிமைகளையும் ஏகபோக உரிமைகளையும் பெற்றன. ஏழை மக்கள் உற்பத்தியாளர்களிடம் வேலை செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கின்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வேலை செய்யவில்லையென்றால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அதிகபட்சக் கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. வாணிப ஊக்கக் கருத்தினரின் பொருளாதாரக் கொள்கை நகர முதலாளிகளின், குறிப்பாக வர்த்தக முதலாளிகளின் நலன்களுக்கு ஆதரவாகப் பின்பற்றப்பட்டது. வாணிப நிறுவனங்களின் வளர்ச்சி பல சமயங்களில் பிரபுக்களின் நலன்களுக்கும் சாதகமாக இருந்தது. ஏனென்றால் அவர்களுடைய வருமானங்கள் ஏதாவதொரு வகையில் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டிருந்தன.

எல்லாத் தொழில் முயற்சிக்கும் ஆதாரமாக, திருப்புமுனையாகப் பணம் இருக்கிறது. அதை வைத்திருப்பவர் மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கு அல்லது மறுபடியும் விற்பனை செய்வதற்குப் பண்டங்களை வாங்குவதற்காக அதை உபயோகிக்கிறார்; தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்க அதை உபயோகிக்கிறார். அப்பொழுது அது பண மூலதனமாக மாறுகிறது. இந்த உண்மையே வாணிப் ஊக்கக் கொள்கையின் அடிப்படை; அதன் நோக்கமும் சாராம்சமும் நாட்டுக்குள் பணத்தை – விலையுயர்ந்த உலோகங்களைக் கவர்ந்திழுப்பதாகும்.

படிக்க:
♦ அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !

வாணிப ஊக்கக் கொள்கையின் ஆரம்பகாலத்தில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்வீகமாக இருந்தன. அந்நிய நாட்டு வியாபாரிகள் தங்கள் பொருள்களின் விற்பனையில் கிடைத்திருப்பதை அந்த நாட்டுக்குள்ளாகவே செலவழித்துவிட வேண்டும் என்று கட்டாயம் செய்யப்பட்டனர். அவர்கள் அப்படிச் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக விசேஷமான ”மேற்பார்வையாளர்கள்” நியமிக்கப்பட்டனர். அவர்கள் சில சமயங்களில் மாறுவேடமணிந்து வருவதுமுண்டு. தங்கம் மற்றும் வெள்ளியை ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டது.

பின்னர், அதாவது பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய அரசுகள் இன்னும் ஆக்கபூர்வமான, வளைந்து கொடுக்கக்கூடிய கொள்கைக்கு மாறின. ஒரு நாட்டுக்குள் பணத்தைக் கவர்ந்திழுப்பதற்கு மிகவும் நம்பிக்கையான வழி ஏற்றுமதிப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதும் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுமே என்பதை ஆட்சி செய்தவர்களும் அவர்களுடைய ஆலோசகர்களும் உணர்ந்து கொண்டனர். எனவே அரசு தொழிலுற்பத்தியை ஊக்குவிக்க ஆரம்பித்தது, உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தியது, அவற்றுக்கு உதவியளித்தது.

வாணிப ஊக்கக் கொள்கையில் ஏற்பட்ட இரண்டு கட்டங்களும் அதன் பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சியில் இரண்டு கட்டங்களோடு ஒத்து வருவதைக் காணலாம். ஆரம்பகால வாணிப ஊக்கக் கொள்கை-அதற்குப் பணவியல் முறை என்றும் பெயருண்டு – நாட்டுக்குள் பணத்தை வைத்திருப்பதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளை விளக்கியதற்கு அப்பால் போகவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கை நாட்டின் செல்வ வளத்தின் தோற்றுவாய்களைப் பூர்வீகத் திரட்சியில் பார்க்கவில்லை; அந்நிய வர்த்தகத்தின் வளர்ச்சியிலும், சாதகமான வர்த்தக சமநிலையிலும் (இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும் எனப்படுவது) அதைப் பார்த்தது. தனக்கு முந்தியவர்கள் ”நிர்வாக நடவடிக்கைகளில் காட்டிய தீவிரத்தை” அது அங்கீகரிக்கவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கைவாதிகள், அரசின் தலையீடு அவர்களின் கருத்துப்படி இயற்கைச் சட்டத்தோடு பொருந்தியிருந்தால் மட்டுமே அதை அங்கீகரித்தார்கள். இயற்கைச் சட்டத் தத்துவஞானம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான செல்வாக்கைப் பெற்றிருந்தது. இந்த விஞ்ஞானமே இயற்கைச் சட்டக் கருத்துக்களின் சுற்று வட்டத்துக்குள் வளர்ச்சி அடைந்தது என்றும் ஓரளவுக்குச் சொல்லலாம்.

அரிஸ்டாட்டில் மற்றும் ஏனைய பண்டைக்கால சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட இயற்கைச் சட்டக் கருத்துக்கள் புதிய யுகத்தில் புதிய உள்ளடக்கத்தைப் பெற்றன. இயற்கைச் சட்டத் தத்துவஞானிகள் கருத்தளவான “மனிதனின் இயற்கை”, அவனுடைய ”இயற்கையான” உரிமைகள் ஆகியவற்றிலிருந்து தங்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டார்கள். மத்திய காலத்தில் இருந்த மதச் சர்வாதிகார ஆட்சி, மதச் சார்பற்ற சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றோடு இந்த உரிமைகள் அதிகமான அளவுக்கு முரண்பட்டிருந்தபடியால், இயற்கைச் சட்டத் தத்துவம் முக்கியமான முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த மனிதாபிமானிகள் இயற்கைச் சட்டக் கருத்து நிலையை ஏற்றுக்கொண்டனர்.

அரசைப் பொறுத்தவரை அது மனிதனின் இயற்கையான உரிமைகளை-இவற்றில் தனிச் சொத்துரிமையும் பாதுகாப்பும் அடங்கும்-உத்தரவாதம் செய்யக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்று இந்தத் தத்துவஞானிகளும் அவர்களைப் பின் தொடர்ந்த வாணிப ஊக்கக் கொள்கை யின் தத்துவாசிரியர்களும் கருதினார்கள். முதலாளித்துவச் செல்வத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தக் கொள்கைகளின் சமூக அர்த்தமாகும்.

பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இயற்கைச் சட்டத்துக்கும் உள்ள தொடர்பு பிற்காலத்தில் வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தோடு ஏற்பட்டது. ஏனென்றால் மூலச் சிறப்புடைய மரபினரின் (இங்கிலாந்தில் ஆடம் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களும் பிரான்சில் பிஸியோகிராட்டுகள் என அழைக்கப்பட்டவர்களும்) வளச்சிக் கட்டத்தின் போது முதலாளி வர்க்கத்துக்கு முன்பிருந்த மாதிரி அரசாங்கப் பாதுகாப்பு தேவைப்படவில்லை; மேலும் அது பொருளாதாரத்தில் அதிகமான அரசுத் தலையீட்டை எதிர்த்தது.

(தொடரும்…)

 

  • கேள்விகள்:
  1. இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டதற்கு வர்த்தக மூலதனம் காரணம் – ஏன்?
  2. 15 – 18 நூற்றாண்டுகளில் நிலவிய வாணிக ஊக்கக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
  3. முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலத்தில் தங்கத்தை வழிபடும் போக்கு இருந்ததற்கு காரணம் என்ன?
  4. புராதனத் திரட்சி என்று கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகளாக நூலாசிரியர் கூறுவது எவை?
  5. புராதானத் திரட்சி ஒரு மூர்க்கமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது என்று நூலாசிரியர் கூறுவதை விளக்குக!
  6. சொத்து, அதிகாரமிழந்த நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பில் தங்களது நிலையை எப்படி மாற்றிக் கொண்டனர்? சான்றுடன் விளக்குக!
  7. 17 – 18-ம் நூற்றாண்டுகளில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் இருக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய அரசுகள் புரிந்து கொண்டதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க