அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 3

இத்துடன் ஆசிரியர் அனிக்கினின் முன்னுரை முடிகிறது. இந்த நூல் முதலாளித்துவம் தோன்றி நிலைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரம் எனும் துறையின் அடிக்கற்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன என்பதை விவரிக்கிறது. இந்த காலகட்டத்தின் நடை உடை பாவனைகள் மட்டுமல்ல பொருளாதரத்தின் குறிப்பிட்ட நிலையும் கூட ஆரம்ப கால பொருளாதார அறிஞர்களின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தின. இப்பகுதியில் ஆரம்ப ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து அறிஞர்கள் பொருளாதாரத்தை பேசினர், அவர்களின் பங்கு என்ன என்பதை சுருக்கமாக அறியத் தருகிறார் ஆசிரியர். இதை நூலில் விரிவாக காண இருக்கிறோம். இதற்கு அடுத்த பகுதியில் இருந்துதான் இந்த நூலின் முதல் அத்தியாயம் துவங்குகிறது. அதில் பூர்வீக மனிதன் செய்த முதல் கோடரி, வில்லிலிருந்து ஆசிரியர் கதை சொல்ல துவங்குகிறார்.

மூன்று நூற்றாண்டுகள்

அ.அனிக்கின்
 பொருளாதார அறிஞர்களின் கருத்துக்கள் தங்கள் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி மட்டத்தினால் மிகப் பெரிய அளவுக்கு நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்தப் புத்தகத்தில் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றிய வர்ணனையில் அந்தக் காலகட்டத்தில் அந்த நாடுகளில் நிலவிய பொருளாதாரக் கூறுகளைப் பற்றிய சுருக்கமான உருவரையை வாசகர் காண்பார்.

பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், அதாவது அந்த சமயத்தில் முற்போக்குடையதாக இருந்த முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பினால் முன்நிர்ணயம் செய்யப்பட்டது. சிறந்த திறமையும் சக்தி மிக்க ஆளுமையும் கொண்ட நபர்கள் மாபெரும் சிந்தனையாளர்களாகத் தோன்றினார்கள்.

மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு காட்சியை நாம் ஒரு வினாடி கற்பனை செய்து பார்ப்போம். அவர்களிடம் எவ்வளவு வேறுபாடுகளைக் காண்கிறோம்!

அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிரெஞ்சுக்காரர்களும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். இது ஆச்சரியமல்ல. அன்று இங்கிலாந்து முன்னணியிலிருந்த முதலாளித்துவ நாடு; மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் கூட அரசியல் பொருளாதாரம் என்பது மிகவும் அதிகமான அளவுக்கு இங்கிலாந்தின் விஞ்ஞானமாகவே கருதப்பட்டது. பிரான்சிலும் கூட மற்ற நாடுகளைக் காட்டிலும் சீக்கிரமாகவே முதலாளித்துவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது; ‘அரசியல் பொருளாதாரம்’ என்ற வார்த்தையே முதலில் பிரெஞ்சு மொழியில்தான் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களில் அமெரிக்கர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்; ஆனால் அறிவுசான்ற மேதையான பிராங்கிளின் அவர்களில் ஒருவர்.

முதல் பொருளாதார நிபுணர்கள் மார்க்சின் வார்த்தைகளில் ”தொழில் செய்பவர்களும் இராஜீயவாதிகளுமாக” இருந்தது வழக்கமானதே. பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அரசு நிர்வாகத்தின் செய்முறைத் தேவைகளே பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர்களைத் தூண்டின.

மான்கிரெட்டியேன் (வலது) ஜார்ஜ் வாக்கர் மற்றும் வில்லியம் லெவிஸ் (இடது)

அங்கே ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர்கள் இருக்கிறார்கள். நீண்ட தலை முடியோடு சரிகை உடையணிந்த பெருந்தகையினரையும் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் உடையணிந்த, முதலாளித்துவத் திரட்டலின் ஆரம்பக் காலத்தைச் சேர்ந்த வியாபாரிகளையும் பார்க்கிறோம். இவர்கள் அரசர்களுக்கு ஆலோசனை சொல்கின்றவர்கள் – வாணிப ஊக்கக் கொள்கையினரான மான்கிரெட்டியேன், தாமஸ்மான் ஆகியோர்.

இன்னொரு கோஷ்டி, இவர்கள் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைத் தோற்றுவித்தவர்களான பெட்டி, புவாகில்பேர் மற்றும் ஆடம் ஸ்மித்தின் இதர முன்னோடிகள். தலையில் பெரிய டோபாவும் நீண்ட கோட்டும் உள்ளே திருப்பிவிடப்பட்ட அகன்ற கைகளும் கொண்ட உடைகளை அணிந்திருக்கிறார்கள். இவர்கள் தொழில்முறையில் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடவில்லை; ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு தொழில் இன்னும் தோன்றவில்லை. பெட்டி – ஒரு மருத்துவர்; தோல்வியடைந்த அரசியல்வாதி. புவாகில்பேர்  -ஒரு நீதிபதி. கான்டில்லான் – ஒரு வங்கி முதலாளி. லாக் – ஒரு பிரபலமான தத்துவஞானி. அவர்கள் அரசர்களிடமும் அரசாங்கங்களிடமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள். இப்பொழுது அறிவு வளர்ச்சிபெற்று வருகின்ற பொதுமக்களுக்காகவும் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் பற்றிய தத்துவப் பிரச்சினைகளை முதல் தடவையாக எழுப்புகிறார்கள். இவர்களில் பெட்டி குறிப்பிடத்தக்கவர். அவர் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல; தெளிவும் முனைப்பும் கொண்ட தற்சிந்தனையாளர்.

ஜான் லோ

இதோ சுறுசுறுப்புமிக்க ஜான் லோ. இவர் திட்டங்கள் தயாரிப்பதில் நிபுணர்; வீர சாகசக்காரர்; காகிதப் பணம் வெளியிடலாம் என்பதை முதலில் ” கண்டுபிடித்தவர்”; பணவீக்கத்தின் முதல் தத்துவாசிரியர் மட்டுமல்ல, அதை நடைமுறையில் பிரயோகித்தவர். லோவின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வரலாற்றின் உயிர்க்களை ததும்பும் பக்கங்களில் ஒன்றாகும்.

மோலியேர் அல்லது ஸ்விப்டின் படங்களில் நாம் காண்பது போன்ற பெரிய டோபாக்களுக்கு பதிலாகக் குட்டையான, முகப் பூச்சு தடவிய டோபாக்களைப் பார்க்கிறோம். இவற்றில் நெற்றியின் மீது இரண்டு முடிச்சுருள்கள் தொங்குகின்றன. பின்னங்காற் சதைகளை வெண்மையான பட்டுக் காலுறைகள் மூடியிருக்கின்றன. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்த பிரெஞ்சுப் பொருளாதார நிபுணர்களான பிஸியோகிராட்டுகள், அறிவியக்கத்தின் மாபெரும் தத்துவஞானிகளின் நண்பர்கள். பிரான்சுவா கெனே அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் தொழிலால் மருத்துவர்; விருப்பத்தினால் பொருளாதார நிபுணர். இன்னொரு சிறந்த அறிஞர் டியுர்கோ ; புரட்சிக்கு முந்திய பிரான்சின் மிகச்சிறந்த முற்போக்கான அரசியல்வாதிகளில் ஒருவர்.

ஆடம் ஸ்மித்… அவர் புகழ் ருஷ்யாவில் மிக அதிகமாகப் பரவியிருந்தது. அதனால்தான் புஷ்கின் தன்னுடைய எவ்கேனிய் ஒநேகின் என்ற கவிதை நாவலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளில் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைச் சித்திரிக்கும் பொழுது பின்வருமாறு எழுதினார்:

ஆடம் ஸ்மித்திடம் அறிவைத் தேடினார்
பொருளியலில் அவர் புலியானார்.
தங்கத்தின் பேருதவி இல்லாமல்
அரசுகள் வளமாக ஆரோக்கியமாக
இருப்பது எப்படி என்பதை
அவர் அழகாகச் சொல்லுவார்.
அந்த இரகசியம் என்ன?
ஆதாரமான மூலப்பொருட்கள்; அவை
அங்கே செல்வத்தைக் குவிக்கின்றன.(1)

ஸ்மித்தின் வாழ்க்கை அநேகமாக நியூட்டனின் வாழ்க்கையைப் போன்றதாகும். அதில் வெளியே நடைபெறுகின்ற சம்பவங்கள் குறைவு; ஆனால் அதிகத் தீவிரமான அறிவுசார்ந்த வாழ்க்கை உள்ளே இருக்கிறது.

ஸ்மித்தைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவது என்றால் ஸ்மித்தைப் பின்பற்றுவது என்றுதான் அர்த்தம். அந்த மாபெரும் ஸ்காட்லாந்துக்காரரை ”சரி செய்ய” (அதாவது குறைகளை அகற்றுவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகச் “சரியான து” என்ற அர்த்தத்தில்) ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் பணியை பிரான்சில் ஸேய், இங்கிலாந்தில் மால்தஸ் போன்றவர்கள் செய்தனர். பல்கலைக் கழகங்களில் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பிக்கத் தொடங்கினர்; பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு அது ”அவசியமானது” என்ற நிலை ஏற்பட்டது.

இப்பொழுது செல்வம் படைத்த வங்கிக்காரரும் சுயமாகக் கல்வி கற்ற மேதையுமான டேவிட் ரிக்கார்டோ காட்சியில் தோன்றுகிறார். இது நெப்போலியன் யுகம். எனவே அவர் தலையில் டோபா காணப்படவில்லை. பழைய காலத்து நீளமான கோட், முழங்கால் வரை கால் லேசு களுக்கு பதிலாக அவர் உள்கோட்டும் நீளமான, உடலுடன் ஒட்டிய குறுங்கால் சட்டையும் அணிந்திருக்கிறார். முதலாளித்துவ மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ரிக்கார்டோ முடித்து வைத்தார். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்ற இரண்டு முக்கியமான வர்க்கங்களின் நலன்களுக்கிடையே உள்ள போராட்டத்தை அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அவருடைய வாழ்நாளுக்குள்ளாகவே அவர்மீது தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.

படிக்க :
♦ கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
♦ சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

ரிக்கார்டோவைப் பின்பற்றியவர்களை வெவ்வேறான பல குழுக்களாகப் பிரிக்கலாம். ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகள் அவருடைய போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக உபயோகிப்பதற்கு முயற்சித்தார்கள். மறுபக்கத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் ரிக்கார்டோவின் போதனையின் மிச்சத்தில் கொச்சையான அரசியல் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் பணிகள் ஆரம்பமான பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுக்களை நாம் நெருங்கி வருகிறோம்.

மூலச்சிறப்புடைய பொருளாதார அறிஞர்கள் முதலாளி வர்க்கத்தின் மிக முற்போக்கான பகுதியின் கருத்துக்களை எடுத்துக் கூறும்பொழுது இங்கிலாந்தில் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இடம் பிடித்திருந்த, பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் ஏற்பட்ட புரட்சி வரை மேலாதிக்கம் வகித்த நிலப்பிரபுத்துவ, நிலவுடமையாளர்களான பிரபுக்களோடு மோதிக்கொண்டார்கள். பிரபுக்களின் நலன்களுக்குத் துணையாக இருந்த அரசுடனும் நாட்டிலிருந்த திருச்சபையோடும் மோதிக் கொண்டார்கள். முதலாளித்துவ அமைப்பிலிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் அங்கீகரித்தார்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே பல பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்ப்பு, கலகம், போராட்டம் ஆகியவற்றைச் சந்தித்தனர். ஸ்மித் எவ்வளவோ ஜாக்கிரதையானவர்தான்; ஆனால் அவரும் பிற்போக்கு சக்திகளால் தாக்கப்பட்டார். மார்க்சுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகளில் உயர்ந்த கொள்கைகளையும் தனி முறையாகவும் பொது வாழ்க்கையிலும் அதிகமான துணிச்சலையும் கொண்ட பலரைச் சந்திக்கிறோம்.

இங்கே பரிசீலிக்கப்படும் காலகட்டத்தின்போது ருஷ்யாவில் சில துணிச்சலான தற்சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் என்ற போதிலும், இந்தப் புத்தகத்தில் ருஷ்யாவின் பொருளாதாரத் தத்துவத்தின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. ருஷ்யாவில் மாபெரும் பீட்டர் காலகட்டத்தைச் சேர்ந்த அருமையான எழுத்தாளரும் விஞ்ஞானியுமான இவான் பொசோஷ்கோவை (1652-1726) மட்டும் இங்கே குறிப்பிடுவது போதுமான து. ருஷ்யாவில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விசேஷமான கவனம் செலுத்தி எழுதப்பட்ட முதல் கட்டுரையை இவர் எழுதினார்; புரட்சிகரமான அறிவியக்கத்தினரும், “பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து மாஸ்கோவுக்கு ஒரு பயணம்” என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும், அந்தப் புத்தகத்தில் நிலவுடமையாளர்களையும் முடியாட்சியையும் கூட விமர்சனம் செய்திருந்தவருமான அலெக்ஸாந்தர் ராடிஷெவ் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் அதிகமான கவனம் செலுத் தினார்.

ருஷ்யாவின் புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டவர்களான டிசம்பரிஸ்டுகள் 1825 டிசம்பர் மாதத்தில் ஜாருக்கு எதிராக எழுச்சியை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இவர்கள் சில முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை எழுதினார்கள். இவற்றில் நிக்கலாய் துர்கேனிவ் (1789 – 1871), பாவெல் பெஸ்டெல் (1793-1826), மிஹயீல் ஒர்லோவ் (1788-1842) எழுதிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்து விளங்கின. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் புரட்சிகரமான ஜனநாயகவாதியுமான நிக்கலாய் செர்னிஷேவ்ஸ்கி (182 8-1889) மிகவும் ஆழமான பொருளாதாரச் சிந்தனையாளர்; முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் சிறப்புமிக்க விமர்சகர். அவருடைய விஞ்ஞானக் கட்டுரைகளையும் நடைமுறைப் பணிகளையும் மார்க்ஸ் மிகவும் உயர்வாகக் கருதினார்.

எனினும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யா பொருளாதார வளர்ச்சியில் மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருந்தது. பண்ணையடிமை முறை இன்னும் நீடித்தது; முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இன்னும் கருவடிவத்தில் மட்டுமே உருவாகியிருந்தன. எனவே ருஷ்ய பொருளாதாரச் சிந்தனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்குத் தனித்தன்மையைக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் என்ற விதை ருஷ்யாவின் செழிப்பான மண்ணில் விழுந்து சீக்கிரமாக வேரூன்றியது. “மூலதனம்” முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது ருஷ்ய மொழியில்தான். கீவ் நகரத்தைச் சேர்ந்த பேராசிரியர் என்.லீபெர் (1844-1888) மார்க்சின் போதனைகளுக்கும் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோவின் கோட்பாடுகளுக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆராய்ந்த சிலரில் ஒருவராவார்.

அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி ஆழமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிப்பதற்கு ”ஒட்டகத்தின் சகிப்புத் தன்மையும் ஞானியின் பொறுமையும்” அவசியம் என்று ஹெய்ல்ப்ரோனர் கூறுவார். வாசகர் இந்தப் புத்தகத்தைப் படிக்க அந்த அளவுக்குப் பாடுபடத் தேவையிருக்காது என்று நான் நம்புகிறேன்.

எனவே அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் அரசியல் பொருளாதாரம் வரையிலும் நமது ஆராய்ச்சிப் பயணத்தைச் செய்வோம். இந்த நீண்ட பயணத்தில் முக்கியமான இடங்கள் சிவற்றில் நாம் தங்கிச் செல்ல வேண்டியிருக்கும்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அத்தியாயம் ஒன்று: தோற்றுவாய்கள்

அடிக்குறிப்பு:
(1) A. Pushkin, Eugene Onegin, N.Y., 1963, p.8

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க