அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 5

வரலாற்றில் மனித சமூகத்தின் அறிவியலான சமூகவியலை நிறுவிய அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில் என நூலின் ஆசிரியர் கூறுகிறார். நாடுகளை படையெடுத்து வென்று வந்த அலக்சாந்தரின் அவையில் இந்த அறிஞர் சமகால வாழ்வின் சமூகவியல் துறைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அந்த ஆய்வில் பருண்மையான விவரங்களை முன்வைத்து ஈடுபடுகிறார். அவர் காலத்திற்கு பிந்தைய தத்துவ உலகம் அரிஸ்டாட்டிலை மையமாகக் கொண்டே வாதிட்டு வந்தது. படியுங்கள். கட்டுரையின் இறுதியில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயலுங்கள்!
-வினவு

முதல் தொடக்கம் : அரிஸ்டாட்டில்
அ.அனிக்கின்

கி. மு. 336-ம் வருடத்தில் மசிடோனியாவின் அரசர் ஃபிலீப் அவர் மகள் திருமணத்தின்போது வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை யார் தூண்டினார்கள் என்பது கடைசிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பாரசீகத்தை ஆட்சி செய்தவர்களே இந்தக் கொலையைத் தூண்டினார்கள் என்று சொல்வதுண்டு; அது உண்மையென்றால் அவர்கள் தங்களுக்கே இதைக் காட்டிலும் பெரிய தீமையைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால் ஃபிலீப்பின் இருபது வயது நிரம்பிய மகன் அலெக்ஸாந்தர் அரியணையில் அமர்ந்தார்; அவர் சில வருடங்களுக்குள்ளாகவே வலிமையான பாரசீகப் பேரரசை வெற்றி கொண்டார்.

Political-Economy-Aristotle-and-alexander
அரிஸ்டாட்டிலின் சீடராக அலெக்சாண்டர்

அலெக்ஸாந்தர் ஸ்டகீரா என்ற நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானியின் மாணவர். அலெக்ஸாந்தர் மசிடோனியாவின் சக்கரவர்த்தியான பொழுது அரிஸ்டாட்டிலுக்கு வயது நாற்பத்தெட்டு; அவருடைய புகழ் கிரேக்க உலகம் முழுவதிலும் விரிவாகப் பரவியிருந்தது. இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அரிஸ்டாட்டில் மசிடோனியாவை விட்டு ஏத்தென்ஸ் நகரத்துக்குச் சென்றார். அதற்குக் காரணமென்னவென்று நமக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அலெக்ஸாந்தரோடு கருத்து வேறுபாடு அதற்குக் காரணம் அல்ல.

அவர்களிருவருக்கும் நல்ல உறவுகள் இருந்தன. அந்தத் திறமைமிக்க இளைஞர் பிற்காலத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிற, நிலையில்லாது நடந்து கொள்கின்ற கொடுங்கோலனாக மாறிய பிறகுதான் அவர்களுக்கிடையே உறவுகள் சீர்கேடடைந்தன. பண்டைக்கால உலகத்தின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் இருந்த காரணத்தால் அரிஸ்டாட்டில் அந்த நகரத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். அங்குதான் அவருடைய ஆசிரியரான பிளேட்டோ வாழ்ந்து மடிந்தார்; அரிஸ்டாட்டிலும் தன்னுடைய இளமைப் பருவத்தை அங்கேதான் கழித்தார்.

காரணம் எதுவாக இருந்தபோதிலும், கி.மு. 335 அல்லது 334-ம் வருடத்தில் அரிஸ்டாட்டில் தன்னுடைய மனைவி, மகள், சுவீகார மகன் ஆகியோரோடு ஏத்தென்சுக்குப் போனார். அடுத்த பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களில் கிரேக்கர்களுக்குத் தெரிந்த எல்லா நாடுகளையும் அலெக்ஸாந்தர் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், அரிஸ்டாட்டில் ஒரு மகத்தான விஞ்ஞான  மாளிகையை நிர்மாணித்தார்; தன்னுடைய வாழ்க்கைப் பணி முழுவதையும் குறிப்பிடத்தக்க வேகத்தோடு பொதுமைப்படுத்தி முழுமையாக்கினார். எனினும் அவர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தை நண்பர்கள், மாணவர்கள் மத்தியில் அமைதியாகக் கழிக்க முடியாது போய்விட்டது.

பழைய ஏதென்ஸ் (ஏத்தென்ஸ்) நகரத்தின் எச்சங்கள்.

கி. மு. 323-ம் வருடத்தில் அலெக்ஸாந்தர் இறந்தார்; அப்பொழுது அவருக்கு முப்பத்து மூன்று வயது கூட முடியவில்லை. ஏத்தென்ஸ் நகரவாசிகள் மசிடோனிய ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள்; அரிஸ்டாட்டிலை ஊரை விட்டுத் துரத்தினார்கள். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் ஈபோயா என்ற தீவிலிருக்கும் சால்சிஸ் என்ற இடத்தில் மரணமடைந்தார்.

அரிஸ்டாட்டில் விஞ்ஞான வரலாற்றில் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். அன்றைக்கிருந்த அறிவின் எல்லாத் துறைகளையும் பற்றி அவர் புத்தகங்கள் எழுதியிருந்தார். அதிலும் மனித சமூகத்தின் விஞ்ஞானமாகிய சமூகவியலை நிறுவியவர்களில் அவரும் ஒருவர்; அந்த சமூகவியலின் சுற்றுவட்டத்துக்குள் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்ந்தார். அவருடைய சமூகவியல் எழுத்துக்கள் ஏத்தென்சில் அவருடைய கடைசி வருடங்களில் எழுதப் பட்டவை. அவை – முதலாவதாகவும் முதன்மையாகவும் – நிக்கமாகஸிய அறவியல் (அவருக்குப் பின்னால் வந்தவர்கள் நிக்கமாகஸ் என்ற அவருடைய மகன் பெயரை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தார்கள்) என்ற புத்தகமும் அரசின் அமைப்பு பற்றிய ஆராய்ச்சி விரிவுரையான அரசியல் என்ற புத்தகமுமாகும்.

இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டிலும் அரிஸ்டாட்டில் “புதிய ரகத்தைச்” சேர்ந்த விஞ்ஞானியாக இருந்தார். அவர் தம்முடைய கொள்கைகளையும் முடிவுகளையும் சூக்குமமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவில்லை; எப்பொழுதுமே விவரங்களை கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகே அவற்றை உருவாக்கினார். ஏராளமான விலங்கியல் மாதிரிகளைச் சேகரித்து அதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் விலங்கின வரலாற்றை எழுதினார். அதுபோலவே அரசியல் என்ற நூலுக்காக அவரும் அவருடைய மாணவர்களும் 158 கிரேக்க மற்றும் நாகரிகமற்ற அரசுகளுடைய அமைப்புச் சட்டங்களைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்தனர். பெரும்பாலும் அவை போலிஸ் (polis) என்ற நகர அரசின் வகையைச் சேர்ந்திருந்தன.

கடந்த பல நூற்றாண்டுகளாக அரிஸ்டாட்டில் என்றதும் மாணவர்களும் சீடர்களும் சூழ்ந்திருக்கின்ற அறிவு நிரம்பிய ஆசான் நம்முடைய நினைவுக்கு வருவார். அவர் ஏத்தென்சில் கழித்த கடைசி வருடங்களின்போது தமது ஐம்பதுக்களில் உற்சாகமும் துடிப்பும் கொண்டவராக இருந்தார் என்று அறிகிறோம். லைசியம் என்ற ஏத்தென்ஸ் நகரத் தோட்டத்தில் பெரிபகோஸ் என்ற பாதையில் மாணவர்கள், நண்பர்களோடு பேசியபடியே நடந்து செல்வதை அவர் விரும்பியதாகத் தெரிகிறது. அவருடைய தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அவருடைய அறவியலும் அரசியலும் உடனே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் அல்லது உரத்த சிந்தனைகளின் வடிவத்தில் இருக்கின்றன. ஒரு கருத்தை விளக்க முற்படும்பொழுது அரிஸ்டாட்டில் அதை வெவ்வேறு கோணங்களில் அணுகி திரும்பத் திரும்ப அந்தக் கருத்தை ஆராய்கிறார், தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்.

அரிஸ்டாட்டில் தன் காலத்தின் குழந்தையாகவே இருந்தார். அவர் அடிமையைப் பேசுகின்ற கருவி என்றுதான் கருதினார்; அடிமை முறை இயற்கையானது, தர்க்க ரீதியானது என்று முடிவு செய்தார். இதைத் தவிர இன்னொரு வகையிலும் அவர் பழமைவாதியாகவே இருந்தார். தம் காலத்திய கிரீஸ் நாட்டில் வர்த்தகமும் பண உறவுகளும் வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை. சிறு அளவில் இருக்கும் விவசாயப் பொருளாதாரமே (அங்கே எல்லா வேலைகளையும் அடிமைகள் செய்வார்கள் என்பதும் இயற்கையே) அவருடைய இலட்சியம். இந்தப் பொருளாதாரம் அநேகமாகத் தன்னுடைய எல்லா அடிப்படைத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்ளும்; அப்படிச் செய்ய முடியாத சிலவற்றை பக்கத்திலிருப்பவர்களோடு “நியாயமான பரிவர்த்தனையில்” பெற்றுக் கொள்ள முடியும்.

அரிஸ்டாட்டிலின் தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

பொருளியலாளர் என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் சிறப்பு, அரசியல் பொருளாதாரத்தினுடைய சில இனங்களை முதன் முதலாக நிறுவியதிலும் அவற்றினிடையே உள்ள இடைத் தொடர்பை எடுத்துக் காட்டியதிலும் அடங்கியிருக்கிறது.

சிதறிக் கிடக்கின்ற பல்வேறு துணுக்குகளிருந்து அரிஸ்டாட்டிலின் “பொருளாதார அமைப்பை” நாம் உருவாக்க முடியும். அதை ஆடம்ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் முதல் ஐந்து அத்தியாயங்களோடும் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் முதல் புத்தகத்தின் முதல் பகுதியோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வியப்படைகின்ற அளவுக்கு சிந்தனையோட்டம் தொடர்ச்சியாக இருப்பதைக் காண முடியும். அது முந்தியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலே வளர்ச்சியடைந்து புதிய கட்டத்தை அடைவதைக் காணலாம். விலைகள் உருவாவதையும் அவை மாற்றமடைவதையும் பற்றிய விதியைக் (அதாவது மதிப்பின் விதியைக்) கண்டுபிடிக்க வேண்டும்மென்ற உந்துதல் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில், அரிஸ்டாட்டில் முதல் மார்க்ஸ் வரையிலும் காணப்படுகிறதென்று லெனின் எழுதினார்.

அரிஸ்டாட்டில் ஒரு பண்டத்தின் இரண்டு அம்சங்களை – அதன் பயன் மதிப்பையும் பரிவர்த்தனை மதிப்பையும் – நிறுவியதோடு பரிவர்த்தனைப் போக்கையும் ஆராய்ந்தார். பரிவர்த்தனையின் அல்லது பரிவர்த்தனை மதிப்புக்களின் அல்லது, கடைசியில், அவற்றின் பணவியல் வெளியீடான விலைகளின் இணை உறவுகளை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இது அரசியல் பொருளாதாரம் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொண்ட பிரச்சினையாக மாறியது. அவருக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; அல்லது பதிலை அடைவதற்கு முன்பே அவர் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்திவிடுகிறார், தன் விருப்பத்துக்கு விரோதமாகவே அதைவிட்டுப் போய்விடுகிறார் என்று சொல்லலாம். எனினும் பணத்தின் தோற்றம், அதன் செயல்களைப் பற்றி அவர் புத்திசாலித்தனமான சில கருத்துக்களைச் சொல்கிறார்; பணம் மூலதனமாக – புதிய பணத்தை உற்பத்தி செய்கின்ற பணமாக – மாற்றமடைகிறது என்ற கருத்தை அவருக்கே உரிய பிரத்தியேகமான வழியில் எடுத்துச் சொல்லுகிறார்.

இந்த மாபெரும் கிரேக்க அறிஞர் கடந்து வந்த விஞ்ஞான ஆராய்ச்சிப் பாதை இது; ஆனால் இதில் தெளிவின்மையும் கூறியது கூறலும், எடுத்துக் கொண்ட பொருளைவிட்டு விலகிப்போவதும் அதிகமே.

அரிஸ்டாட்டிலின் விஞ்ஞானப் பாரம்பரியம் எப்பொழுதுமே மாறுபட்ட அபிப்பிராயங்களுக்கு இடமளித்திருக்கிறது. தத்துவம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூகம் பற்றிய அவருடைய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடாக, மீற முடியாத மதச்சட்டமாக மாற்றப்பட்டது.

கிறிஸ்தவ திருச்சபை, போலியான விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிற்போக்காளர்கள் புதியனவற்றுக்கும் முற்போக்கானவற்றுக்கும் எதிரான போராட்டத்தில் அதைப் பயன்படுத்தினார்கள். மறுபக்கத்தில் விஞ்ஞானத்தைப் புரட்சிமயமாக்கிய மறுமலர்ச்சிக் காலத்து மக்கள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை வறட்டுத்தனமான கோட்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பயன்படுத்தினார்கள். அரிஸ்டாட்டிலுக்கான போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அது மற்றவைகளோடு சேர்ந்து அவருடைய பொருளாதாரக் கொள்கை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது.

அந்த மாபெரும் கிரேக்கரின் பொருளாதாரக் கருத்துக்களைப் பற்றி மதிப்பிடுகின்ற இரண்டு மேற்கோள்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன. அவற்றை கவனமாகப் படியுங்கள். முதலாவது மேற்கோள் ஒரு மார்க்சிஸ்டும் சோவியத் பொருளாதார நிபுணருமான எஃப். பொலியான்ஸ்கி எழுதியது. இரண்டாவது மேற்கோள் அமெரிக்கப் பேராசிரியர் ஜே. பெல் என்பவர் எழுதிய பொருளாதாரச் சிந்தனை பற்றிய முதலாளித்துவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

பொலியான்ஸ்கி :

“அரிஸ்டாட்டில் மதிப்பைப் பற்றி அகவயமான கருத்துக் கொண்டவரல்ல; அதைப் பற்றி புறவயமான பொருள் விளக்கம் தருவதில் நாட்டம் கொண்டவர் எனலாம். இது எப்படி இருந்தபோதிலும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்ய வேண்டிய சமூகத் தேவையை அவர் தெளிவாகப் பார்த்தார் என்றே தோன்றுகிறது. உற்பத்திச் செலவின் கலவையை அவர் ஆராயவில்லை; இந்தப் பிரச்சினையில் அவருக்கு அக்கறை இல்லை என்பது உண்மையே. எனினும் அந்தக் கலவையில் ஒருவேளை உழைப்புக்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.” (1)

பெல் :

”அரிஸ்டாட்டில் மதிப்பைத் தன்வயமானதாக ஆக்கினார்; அதைப் பண்டத்தின் உபயோகத்தைப் பொறுத்திருக்குமாறு செய்தார். பரிவர்த்தனை மனிதனின் தேவைகளைச் சார்ந்திருக்கிறது… ஒரு பரிவர்த்தனை நியாயமானதாக இருந்தால் அது தேவைகளின் சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது. உழைப்பின் செலவை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை.”(2)

இந்த இரண்டு மதிப்பீடுகளும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான வகையில் மாறுபட்டிருப்பதை சுலபமாகப் பார்க்க முடியும். இரண்டு மேற்கோள்களும் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை இனமான மதிப்பைப் பற்றி பேசுகின்றன. இதை நாம் அடிக்கடி சந்திக்கப் போகிறோம்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அரிஸ்டாட்டில் பகுதியின் தொடர்ச்சி

அடிக்குறிப்பு:
(1) பொருளாதாரச் சிந்தனை வரலாறு, முதல் பகுதி, மாஸ்கோ , 1961, பக்கம் 58 (ருஷ்ய மொழி).
(2) J. Bell, A History of Economic Thought, N.-Y., 1953, p. 41.

கேள்விகள்:

  1. அலெக்சாந்தர் – ஒரு சிறு குறிப்பு வரைக. அதில் அவர் வென்றெடுத்த நாடுகள், இந்திய வருகை ஆகியவற்றையும் குறிப்பிடுக.
  2. பண்டைக்கால உலகின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் குறிப்பிடப்படுவது ஏன்?
  3. நிக்கமாகஸிய அறிவியல் புத்தகம் – சிறு குறிப்பு வரைக.
  4. அரிஸ்டாட்டில் செய்த ஆய்வுகளில் உள்ள அணுகுமுறைகள், சிறப்பு அம்சங்கள் எவை?
  5. பெரிபடேடிக்ஸ் தத்துவ மரபு – சிறு குறிப்பு தருக.
  6. அடிமை முறை பற்றி அரிஸ்டாட்டிலின் கருத்து என்ன?
  7. அரிஸ்டாட்டிலை தோழர் லெனின் பாராட்டுவது ஏன்?
  8. அரிஸ்டாட்டில் கருத்துக்களை கிறித்தவ திருச்சபை பிற்போக்கிற்காக பயன்படுத்தியதற்கு சான்று தருக! அதே போன்று அரிஸ்டாட்டில் கருத்துக்களை மறுமலர்ச்சி கால மக்கள் முற்போக்காய் பயன்படுத்தியமைக்கு சான்று தருக!

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ