உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணர்களுக்கு உணவு வழங்குவதில் சாதித் தீண்டாமை கொடுமை காலங்காலமாக அரங்கேறி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
உ.பி-யில் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தாவுத்பூர் கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில், 60 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மீதி 20 மாணவர்கள் பொதுவான மற்றும் தாக்கூர் சாதிப் பிரிவை சார்ந்தவர்கள்.
அப்பள்ளியில் மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்குவதில் சாதித் தீண்டாமை கொடுமை நிகழ்ந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. 20 மாணவர்களின் தட்டுக்கள் மட்டுமே சமையல் கூடத்தின் ஊழியர்களால் கழுவப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த 60 மாணவர்களின் தட்டுக்களையும் அவர்களே கழுவிக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தட்டுக்கள் வைக்க வேண்டும் என்றும் தீண்டாமையை அரங்கேற்றியுள்ளனர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சமையற்கூட ஊழியர்கள்.
படிக்க :
♦ உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை
♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். தாக்கூர் சாதி மக்களும் 35 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு நிகழும் சாதித் தீண்டாமையை தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த சஹாப் சிங் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு செப்டம்பர் 22-ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தால் விசாரணைக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. “நாங்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சாப்பிடும் தட்டுக்களை கழுவ மாட்டோம். எங்களை அதையும் மீறி கழுவ சொன்னால் நாங்கள் வேலையை விட்டு சென்று விடுவோம்” என்று சமையல் கூடத்தில் வேலைசெய்யும் சோமாவதி மற்றும் லட்சுமி தேவி விசாரணைக் குழுவிடமே திமிராக பதில் கூறியுள்ளனர்.
தாவுத்பூர் கிராமத்தில் தலைவரான, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சர்பஞ்ச் மஞ்சு தேவியின் கணவர் சஹாப் சிங் என்பவர் கடந்த செப்டம்பர் 18 அன்று அப்பள்ளிக்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் கண்டதை விவரிக்கிறார், “நான் ஒரு சந்திப்புக்காக பள்ளிக்குச் சென்றேன். சமையல் கூடம் சுத்தம் இல்லாமல் இருப்பதை நான் பார்த்தேன். அந்த கூடத்தில் 10-15 உணவு உண்ணும் தட்டுக்கள் மட்டுமே இருந்தது. மற்ற 50-60 தட்டுக்கள் மாணவர்களின் வகுப்பறையில் தனியாக வைக்கப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் மற்ற சாதியினரான, ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ முன்வராததால், தாங்களே கழுவிக் கொள்ளும் அவலநிலைக்கு மாணவர்களை தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நான் அறிந்துக் கொண்டேன்”.
இப்படி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு நிகழ்ந்த சாதித் தீண்டாமை கொடுமை வெளியே தெரியவந்ததையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் கரிமா சிங் ராஜ்புத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமையற்கூடத்தில் பணிபுரியும் சோமாவதி மற்றும் லட்சுமி தேவி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சாதித் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட, பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தாங்களே அடிபம்பு மூலம் தண்ணீர் எடுத்து தட்டுக்களை கழுவும் காணொலியும், அவர்களின் அவலத்தை கூறும் காணொலியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Caste discrimination in schools.
In a primary school in UP's Mainpuri, utensils of SC children were kept separately. They can't keep utensils in the kitchen. But why? Does this hurt the caste pride of the principal? Yes!! #CrushTheCaste pic.twitter.com/r14m8c37el
— Mission Ambedkar (@MissionAmbedkar) September 25, 2021
நல்ல பதிப்பு