டந்த நவம்பர் 9-ஆம் தேதி இரவு தனது வீட்டை விட்டு வெளியே சென்ற பத்திரிகையாளர் புத்திநாத், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அதன் பிறகு நவம்பர் 12 அன்று இரவு அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி கிராமத்தை சார்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் அவினாஷ் ஜா என்று அழைக்கப்படும் புத்திநாத் ஜா, தனது பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மருத்துவமனைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் உள்ளூர் இந்தி செய்தி இணையதளமான பி.என்.என் நியூஸ்-ல் பணியாற்றுகிறார். கடந்த நவம்பர் 9-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றபோது புத்திநாத் காணாமல் போனார்.
சிசிடிவி வீடியோ காட்சிகளின்படி, நவம்பர் 9 அன்று இரவு 9:58 மணியளவில் அவர் கிளினிக்கிற்கு அருகே சாலையைக் கடந்தார். அவர் யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டும், மெயின் ரோடுக்கு அருகில் நடமாடுவதும் காட்சிகளில் தெரிந்தது. காணாமல் போன ஜா, நவம்பர் 12-ஆம் தேதி இரவு உடல் எரிந்த நிலையில் சடலமாக மிட்கப்பட்டுள்ளார். கிராமத்தில் இருந்து 5.கி.மீ தொலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
“நாங்கள் நவம்பர் 10 காலையில் அவரது அறைக்குச் சென்றபோது, கிளினிக்கிற்கு வெளியே அவரது பைக்கை இருந்தது. அவரது மடிக்கணினி இயக்கத்தில் இருந்தது; அவர் சில நிமிடங்கள் மட்டுமே வெளியே செல்ல திட்டமிட்டுள்ளார்.” என்று குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.
படிக்க :
நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !
அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
புத்திநாத் ஜா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெனிப்பட்டியில் உள்ள வித்யாபதி சௌக்கில் தனியார் முதியோர் இல்லத்தை நடத்தி வரும் ரௌஷன் குமார் சா (22) மற்றும் அனுராக் ஹெல்த் கேர் (24) என்ற உள்ளூர் தனியார் கிளினிக்கில் செவிலியராகப் பணிப்புரியும் பூர்ணகலா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
சட்டவிரோத கிளினிக்குகளுக்கு எதிரான நடவடிக்கை :
புத்திநாத் ஜா, தான் இருக்கும் பகுதியில் இயங்கி வந்த பல உரிமம் பெறாத தனியார் கிளினிக்குகளுக்கு (மருத்துவமனை) எதிராக புகார் அளிப்பது, அம்பலப்படுத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு அவர் அளித்த புகார்களின் விளைவாக, 2020 முதல் தனியார் கிளினிக்குகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிப்பது என பல சம்பவங்கள் நடந்தேறின.
இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதத்தில், ஜாவின் புகாரின் அடிப்படையில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் முறையான உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 8 தனியார் முதியோர் இல்லங்களை சோதனையிட்டனர். நான்கு இல்லங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
“சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், சில சட்டவிரோத தனியார் கிளினிக்குகள் இன்னும் புதிய பெயர்களில் இயங்குகின்றன. அவர்கள் மீது மற்றொரு சுற்று புகார் அளிக்க ஜா திட்டமிட்டிருந்தார்.” என்று ஜாவுடன் பணிபுரியும் சக ஊழியர் கன்ஹையா காஷ்யப் கூறினார்.
“தனியார் முதியோர் இல்லங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அதன் உரிமையாளர்கள் கோபமடைந்தனர். புகார் கொடுப்பதை நிறுத்தினால் பணம் தருவதாகவும் கூறியதோடு பலமுறை ஜாவை மிரட்டியுள்ளனர். ஆனால், சட்டவிரோத கிளினிக்குகளை அம்பலப்படுத்துவதில் ஜா உறுதியாக இருந்தார். புத்திநாத் ஜாவை கடத்தி எரித்துக் கொன்றதில் மருத்துவ மாஃபியாக்களின் சதித்திட்டம் இருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று ஜாவின் மூத்த சகோதரர் திரிலோக் ஜா கூறினார்.
மருத்துவ மாஃபியாக்களின் மீதான விசாரணை :
நவம்பர் 11-ம் தேதி, ஜாவின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரில், 11 மருத்துவ கிளினிக்குகளை குறிப்பிட்டுள்ளனர். அதில் அனுராக் ஹெல்த் கேர் மற்றும் அனன்யா முதியோர் இல்லத்திற்கு நவம்பர் 15-ம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். புகாரில் இந்த கிளினிக்குகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
புத்திநாத் ஜாவின் புகார்களின் அடிப்படையில், சுகாதர அதிகாரிகள் அனுராக் ஹெல்த் கேர் மற்றும் அனன்யா முதியோர் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வித் தகுதி தொடர்பான சரியான ஆவணங்களை கிளினிக் அதிகாரிகள் சமர்பிக்கவில்லை. மருத்துவமனைகள் தரமாகவும் செயல்படவில்லை.
“பதிவு செய்யப்படாத தனியார் கிளினிக்குகள் குறித்து நாங்கள் அடிக்கடி புகார்களைப் பெறுகிறோம். ஆனால், 21 தனியார் கிளினிக்குகள் மீது புத்திநாத் ஜா புகார் அளித்துள்ளார். அவற்றில், ஒரு கிளினிக்கைத் தவிர மற்ற அனைத்தும் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது.” என்று மதுபானியின் சிவில் சர்ஜன் சுனில் குமார் ஜா கூறினார்.
புத்திநாத், அனுராக் உடல்நலக் காப்பகத்திற்கு வந்ததாகவும், அங்கு அவர் பூர்ணகலா தேவியை சந்தித்ததாகவும் போலீசு தனது செய்தியில் கூறியுள்ளது. ரௌஷன் குமார் சா, பிட்டு பண்டிட், தீபக் பண்டிட், பவன் குமார் பண்டிட் மற்றும் மணீஷ் குமார் ஆகிய 5 பேர் ஜாவை கடத்தியபோது கிளினிக்கிற்கு வெளியே இருந்தனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 16-ம் தேதியன்று FIR-ல் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புத்திநாத்தின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பெனிப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்.
“ஜாவை படுகொலை செய்தது மருத்துவ மாஃபியாவின் பங்கு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஏனெனில், ஜா ஒரு பத்திரிகையாளர் மற்றும் வெளியிப்படைத்தன்மை ஆர்வலர் என்ற வகையில் சட்டவிரோத கிளினிக்குகளுக்கு எதிராக புகார்களை பதிவு செய்தார். இதன் விளைவாக சில கிளினிக்குகள் மூடப்பட்டது மற்றும் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், நவம்பர் 7-ஆம் தேதி 8-9 தனியார் கிளினிக்குகள் மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று புத்திநாத் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.” என்று அவரது உறவினர் பி.ஜே.பிகாஷ் கூறினார்.
“கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கைக்கூலிகளாக இருக்கலாம். எனவே போலீசு இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று ஜாவுடன் வேலை செய்யும் சக ஊழியர் கன்ஹையா காஷ்யப் கூறினார்.
ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை :
புத்திநாத் ஜாவின் கொலை பீகாரில் வெளிப்படைத்தன்மை ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கிழக்கு சம்பாரனை தளமாகக் கொண்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர் விபின் அகர்வால் பிளாக் அலுவலகத்தில் இருந்து திரும்பியபோது, பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இவர் அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ-க்களை தாக்கல் செய்துள்ளார்.
2006-ம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது. இந்த செயல்பாடு குற்றவாளிகளை மேலும் வலிமைப்பெறச் செய்கிறது. தொலைதூரப் பகுதிகளில் பணிப்புரிபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
000
பத்திரிகையாளரும், தகவல் அறியும் உரிமை செயப்பாட்டாளருமான புத்திநாத் ஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரமானது என்று எல்லைகளற்ற நிருபர்கள் (Reporters Without Borders) அமைப்பு கூறியுள்ளது.
புத்திநாத் ஜா மருத்துவ மாஃபியாக்களுக்கு எதிராக தொடர்ந்து போராடியுள்ளார். அந்த சட்டவிரோத கிளினிக்குகள் தொடர்பாக ஜா முகநூலில் தொடந்து செய்திகள் வெளியிட்டு வந்தார். ஜா வை மாஃபியாங்கள் பலமுறை மிரட்டி பணியவைக்க முயற்சித்துள்ளனர். நவம்பர் 15-ம் தேதி முதல், சட்டவிரோத கிளினிக்குகளின் அடையாளங்களை தனது முகநூலில் வெளிடப்போவதாக ஜா கூறியுள்ளார்.
படிக்க :
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !
RSF-ன் ஆசிய பசிபிக் மேசையின் தலைவரான டேனியல் பாஸ்டர், புத்திநாத் ஜாவின் கொடூரமான மரணம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். “இந்த பயங்கரமான கொலையில் சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நடத்தி, கொலை செய்தவர்களையும் செய்ய தூண்டியவர்களையும் சுதந்திரமான விசாரணைக்கு உபடுத்த வேண்டும். இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் முடிவுக்கு வரவேண்டும்” என்றார்.
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் தங்கள் பணி தொடர்பாக கொல்லப்பட்ட நான்காவது பத்திரிகையாளர் ஜா என்று RSF தெரிவித்துள்ளது. அக்டோபரில், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் நடத்தியப் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி நிருபர் ராமன் காஷ்யப் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் சென்ன கேசவுலு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஜூன் மாதம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் சுலப் ஸ்ரீவஸ்தவா மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த மூன்று படுகொலைகள் தொடர்பாக நடந்துவரும் விசாரணையில் இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என RSF தெரிவித்துள்ளது.
RSF-ன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 180 நாடுகளில் 142-வது இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் தரவரிசை கடுமையாக சரிந்துள்ளது.
இந்தியாவின் பத்திரிகையாளர் சுதந்திரம் சரிந்துவரும் நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், நிருபர்கள், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும், அடக்குமுறைகளும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. மாஃபியா கும்பல்களிடமிருந்தும், காவிக் குண்டர்களிடமிருந்தும், அரசு அடக்குமுறை சட்டங்களில் இருந்தும் இவர்களை பாதுகாப்பதும், குரல் கொடுப்பதும் உழைக்கும் மக்கள் அனைவரின் கடமை !

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க