நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் தோழர் தமிழார்வன் படுகொலை : டெல்டா மாவட்ட மக்கள் மற்றும் ஜனநாயக , முற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை !
தோழர் தமிழார்வன்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த, சிபிஐ கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் நடேச தமிழார்வன், கடந்த நவம்பர் 10, 2021 அன்று சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு காரணம் பல விசயங்கள் போலீசு தரப்பில் அடுக்கப்படுகின்றன.
படுகொலைக்கு காரணமானவர்களுக்கும் தமிழார்வனுக்கும் முன்விரோதம் இருந்தது, மணல்குவாரி இப்பகுதியில் நடத்துவதற்கு தடையாக இருந்தார், கஞ்சா விற்பனை செய்பவர்களை தட்டிகேட்டார், சாதிரீதியாக தூண்டப்படும் பகை, கட்டபஞ்சாயத்து போன்ற பல்வேறு விசயங்களை பலரும் முன் வைக்கின்றனர்.
இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது இதுவல்லாமல் வேறு ஏதேனும் ஒன்றோக்கூட காரணமாக இருக்கலாம். ஆனால் விவகாரம் இதுவல்ல, பிரச்சினை அந்தகாரணத்தோடு கடந்து சென்றுவிடக் கூடியதுமல்ல, தொடர் சங்கலியின் ஒரு கரணையாகவே இதைப் பார்க்க வேண்டும்.
ஏனெனில் சங்க பரிவாரக் கும்பல் இங்கு வளர முடியாத சூழலில், சாதிய பகைமைகள் மூலமும், ரவுடிகளை வளர்த்துவிடுவது, கட்சியில் சேர்த்து அங்கீகரிப்பது ஆகியவற்றின் மூலமும் முற்போக்கு செயற்பாட்டளர்களை ஒழித்துக்கட்டிவிட்டு தாம் வளர்வதற்கான அடிப்படையை உருவாக்குகிறது.
டெல்டா மண்ணின் பாரம்பரியம் :
தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம் ஒரு போராட்ட பாரம்பரியத்தை கொண்டது. தமிழகத்திலே பண்ணையடிமைத்தனம் கூர்மையாக இருந்தது இங்குதான். ஆகவே இயல்பாகவே கூலி விவசாயிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைமையில் அணிதிரண்டு போர்க்குணத்தோடு பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த தொடர்ச்சியான பாரம்பரியத்தை உள்ளடக்கியது. அமைப்பாக திரள்வதும், போராட்டங்களில் ஈடுபடுவதும் இந்த மக்களின் பண்பாடாகவே மாற்றப்பட்டிருந்து.
படிக்க :
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !
நிலமற்ற கூலி விவசாயிகளில் (இன்று இதில் சில மாற்றங்கள் நடந்துள்ளது) பள்ளர், பறையர் சமூகத்தை சார்ந்த மக்கள் அதிகமாக, நெருக்கமாக வாழ்ந்துவரும் பகுதி. பிற்படுத்தப்பட்ட மக்களும் கம்யூனிஸ்டு கட்சிகளில் அணிதிரண்டு நின்றதையும், அன்றளவுக்கு இல்லையென்றாலும் அதன் தொடர்ச்சி இன்றளவுக்கும் உள்ளதை பார்க்க முடியும். சாதி கடந்த உழைக்கும் மக்களின் ஐக்கியம், போர்க்குணம் நிறைந்த மண்ணாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
தேசிய அளவில் பாசிச சக்திகளின் ஆதிக்கமும், டெல்டாவில் சாதிய மதவாத சக்திகளின் வளர்ச்சியும் :
இன்று பாஜக பாசிஸ்டுகள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பாசிஸ்டுகள் தமது கட்டுபாட்டில் கொண்டுவர எத்தனிக்கும் பல்வேறு முயற்சிகளும் பூமரங்போல அவர்களையே திருப்பி தாக்கியது. தமிழக மண்ணில் வளர்ந்தோங்கிய முற்போக்கு, நாத்திகம், திராவிடம், தமிழ் தேசியம், முக்கியமாக கம்யூனிச சித்தாந்தங்களின் வளர்ச்சி, பாஜகவின் பிற்போக்கு கருத்துகள் வெற்றிபெறுவதில் இருந்து தடுத்தே நிறுத்திவைத்திருந்தன. இவற்றை நேருக்கு நேராக மோதி வீழ்த்தமுடியாது என்பதை உணர்ந்து பல்வேறு மாற்று வழிமுறைகளை கையாண்டு வருகின்றது.
பாசிசம் என்ற விஷச்செடி வளர்ந்தோங்க வேண்டுமென்றால், அதற்கு வளமான மண் அதாவது பிற்போக்கு கருத்துகளின், சித்தாந்தங்களின் வளர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்ட பாஜக சாதிய, மதவாத, இனவாத, பிற்போக்குத்தனங்களை பல்வேறு வழிகளில் வளர்த்தெடுத்து வருகின்றது.
அனைத்து சாதிய சங்கங்களையும் பாஜக அரவணைத்து, அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் வளர்த்து வருவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இடைநிலை சாதிகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அணிதிரட்டுவதும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மத்தியிலேயே சாதிய பிளவை கூர்மைப்படுத்துவதும் என பல்வேறு முயற்சிகளை பாஜக தமிழகத்தில் செய்து வருகிறது.
டெல்டா மண்ணிலும் அவ்வாறே பல்வேறு சாதிகளையும் சங்கங்களாக, கட்சிகளாக வளர்வதற்கு ஊக்கமளித்து வருகிறது. குறிப்பாக இம்மாவட்டங்களில் அதிகமாக, நெருக்கமாக வசித்துவரும் உழைக்கும் மக்களான பள்ளர் மற்றும் பறையர் சமூக மக்கள் இடையே சில ஆண்டுகளில் அம்மக்களே அறியாமல் பல மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இவ்விரண்டு சமூக மக்களும் நிலமற்ற கூலி விவசாயியாக, ஒரே வாழ்நிலையில், அக்கம் பக்கம் ஒரே தெருவில், தங்களுக்குள் இயல்பாக திருமண குடும்ப உறவுகளோடு வாழ்ந்து வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகள் இவர்களை வர்க்கமாக திரட்டி அமைப்பாக்கி வைத்திருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தற்போது கம்யூனிஸ்டுகள் கிட்டதட்ட மக்கள் திரளை இழந்துவிட்ட சூழலில், சாதிய, பிற்போக்கு சக்திகள் மிக வீரியமாக வளர்ந்து வருகின்றன. பண்டிகை காலங்கள் என்றாலே சாதிய மோதல்கள் நிறைய நடந்துவருகின்றன. சில ஆண்டுகளாக இவற்றின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. கொலைகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்க தொடங்கியுள்ளன.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டமும் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் :
நாம் அனைவரும் அறிந்த ஒன்றான, டெல்டா மாவட்டம் முழுக்க பூமிக்கடியில் நிலக்கரி படிமமும், அதனோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் வளங்களும் நிறைந்துள்ள பகுதி. இதற்கான திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகவும், அமைப்புகளின் தலைமையிலும் நடந்த வண்ணம் உள்ளன. கிரெட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், மீத்தேன் எடுக்க அனுமதி பெற்றிருந்தாலும், மக்கள் போராட்டங்களால் பின்வாங்கி ஓடியது. இன்றும் பல்வேறு ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதியை அரசு வழங்கினாலும், மக்கள் போராட்டங்கள் அவற்றை தடுத்தே வைத்திருக்கின்றன. எனினும் ஒஎன்ஜிசி திருட்டுத்தனமாக (திமுக, அதிமுக இரண்டு கட்சியும் இதை அனுமதித்தே வருகின்றன) இவ்வேலையை செய்து வருகிறது, ஆனாலும் புது இடங்களில் கிணறு அமைக்கும் போது மக்கள் எதிர்த்து போராடவே செய்கின்றனர், தடுக்கின்றனர்.
இந்த போராட்ட உணர்வு, இம்மண்ணின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்.
தேசிய அளவில் பாசிச சக்திகளின் ஆதிக்கமும், பகுதியளவில் சாதிய மதவாத, பிற்போக்கு சக்திகளின் வளர்ச்சியும், இவற்றிற்கு பின்னால் உள்ள ஆளும் வர்க்க நலனான ஹைட்ரோ கார்பன் மண்டலமாகடெல்டாவை மாற்ற துடிக்கும் ஆளும் வர்க்கத்தின் (கார்ப்பரேட்டுகளின்) நலனும் ஒன்றோடு ஒன்று துணை புரிந்துக்கொண்டு வளர்வதை அறியலாம். டெல்டாவில் நடந்து வரும் பல்வேறு மாற்றங்களை ஆளும் வர்க்கங்களின் நலனோடு இணைத்து பார்க்கும்போதுதான் பிரச்சினையின் ஆழமும், அதன் தீவிரமும் அறிய முடியும்.
மக்களை, போராடுபவர்களை பயமுறுத்தி பணியவைக்கும் பாசிஸ்டுகளின் ஒரு யுக்தி:
இந்த கொலைக்கூட தமிழார்வன் தனியாக இருக்கும் இடத்தில் நடத்தியிருக்கலாம். ஆனால் பட்ட பகலில், நூற்றுக்கணக்கான மக்கள் நெரிசல் நிறைந்துள்ள கடைவீதியில் நடந்தது என்பதை வெறும் விவரமாக, எதேச்சையாக நடந்ததாக கடந்துவிடக் கூடியதல்ல. கொலையாளிகள் இதன் மூலம் மக்களுக்கு சொல்லவரும் செய்தியென்ன? பயம்!
இந்த பயம் தான் குஜராத்தில், உத்திர பிரதேசத்தில் பாசிச சக்திகளை காலூன்ற செய்ததில் முக்கிய பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
படிக்க :
இன்றைய உத்தரப் பிரதேசம் தான் நாளைய ராம ராஜ்ஜியம் !
தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இதை எதிர்த்து மக்கள் அதிகாரம், சிபிஐ, சிபிஎம், விசிக இன்னும் பல ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் கண்டித்துள்ளன. எனினும் இவர்களிடம் இன்னும் ஒருங்கிணைந்த செயல்பாடும், ஒத்த புரிதலும் எட்டவில்லை. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் பாசிசசத்தின் பின்புலமான ஆளும் வர்க்கத்தின் (கார்ப்பரேட்) நலனை இணைத்து பார்க்கவில்லை, பாசிசத்தை வீழ்த்துவதிலும் ஒருங்கிணைந்த பார்வையில்லை. ஆகவே பெயரளவிலான ஐக்கியம்மட்டுமே தற்போது வரை இருந்துவருகிறது. பல நேரங்களில் வெறும் தேர்தல் கூட்டணியாக காற்றில் கரைந்துவிடுகிறது.
பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.
இரண்டாவதாக, சாதி மத இன பிற்போக்கு சித்தாந்தங்களால் பாசிச சக்திகள் மக்களை தனது அரசியலுக்கு வென்றெடுத்து வருவதை உணர்ந்து, உடனடியாக மக்களிடம் பல்வேறு பிரச்சாரங்கள், போராட்டங்களை முன்னெடுத்து மக்களை பாசிச சக்திகளுக்கு எதிரான மக்கள் முன்னணியாகஒருங்கிணைக்க வேண்டும். (இதற்காக 100 நாள் வேலைகள், டாஸ்மாக் எதிர்ப்புகள், குடிநீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சாதிய பிரச்சனை என அனைத்து அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மக்கள் தரப்பில் நின்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.) பாசிச, பிற்போக்கு சக்திகளை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, தற்காப்பு தாக்குதல் குழுக்களை உருவாக்கி சமூக, பிற்போக்கு சக்திகளை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.
பாசிசத்தை வீழ்த்தும் மாபெரும் பணியை உழைக்கும் மக்களின், முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் கைகளில் வரலாறு ஒப்படைத்துள்ளது. இவை கடினமான பணியாக இருந்தாலும், இம்மண்ணின் பாரம்பரியம், மக்களின் போராட்ட உணர்வு, ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் பாசிசத்தை வீழ்த்தும், இறுதியில் வெற்றிக்கொள்ளும் என்பதை உணர்ந்து இதற்கான வேலைகளில் ஈடுபடுவதுதான் இக்கணத்தின் அவசியம் !

கந்தசாமி

1 மறுமொழி

  1. கட்டுரையின் நோக்கம் சிறப்பாக உள்ளது. பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ் – பாஜக தனது காலை தமிழகத்தில் ஊன்ற சாதிய சங்கங்களை ஊக்குவிக்கிறது. அதை கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடும் முற்போக்கு சக்திகளுக்கு எதிராகத் திருப்பிவிட்டு திட்டமிட்டு படுகொலையை செய்து பயத்தை ஏற்படுத்துகிறது. அதற்கெதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும்; தற்காப்பு தாக்குதல் குழுக்களை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையும் வலியுறுத்துகிறது.

    அதேசமயம், கட்டுரையில் போதுமான விவரங்கள் இல்லை என்றே கருதுகிறேன். அதாவது, தோழர் நடேச. தமிழார்வனின் கார்ப்பரேட் எதிர்ப்பு அல்லது மக்களுக்கான அவரது விடாப்பிடியான போராட்டத்தைக் காட்டியிருக்க வேண்டும். அல்லது வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான ராஜ்குமார் கும்பலின் அரசியல் சமூகப் பின்னணியைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகைய விவரங்களோடு குறிப்பிட்டிருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க