செப்டம்பர் 14-ம் நாள். அந்த தலித் குடும்பம் தீவனப் புல் அறுக்க வயலுக்குச் சென்றிருந்தது. சற்று நேரத்தில், அறுத்த சேகரித்த புல்லை வீட்டில் உள்ள கால்நடைகளுக்குப் போட எடுத்துச் சென்றுவிட்டார். தாய் ஒரு இடத்திலும் மகள் ஒரு இடத்திலும் புல் சேகரித்தார்கள். போதுமான புல்லை சேகரித்தப்பின், வீடு திரும்ப மகளை அழைத்தார் அந்தத் தாய். ஆனால், பதில் குரல் ஏதும் வரவில்லை. சுற்றிலும் தேடினார்; மகளைக் காணவில்லை. சுமார் நூறு மீட்டர் தொலைவில் புல் அறுக்கச் சென்ற மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லக்கூட அந்தப் பெண்ணால் இயலவில்லை. ஏனெனில் அவருடைய நாக்கு அறுபட்டிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை அவருடைய கழுத்தில் கட்டி இழுத்து வரப்பட்டு அங்கே கிடத்தப்பட்டிருந்தார். அவருடைய கழுத்து கிட்டத்தட்ட உடைக்கப்பட்டிருந்தது. அவருடைய முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. தன் மகளின் நிலையைக் கண்டு நிலை குலைந்துபோன தாயின் காதில், சந்தீப் என்ற பெயர் மட்டும் முனகலாக ஒலித்தது.  அந்த கிராமத்தில் தாக்கூர் சாதி வெறி பிடித்த குடிகார கிரிமினலின் பெயர் அது.

தன் மகள் நான்கு தாக்கூர் சாதி வெறி கிரிமினல்களால் கொடூர வன்கொடுமைக்கு ஆளாக்கப்படிருப்பதை அறிந்துகொண்டார் அந்தத் தாய்.தன் மகளை காப்பாற்றுவதுதான் முதல் கடமை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அந்த தலித் குடும்பம். கிட்டத்தட்ட 12 நாட்கள் கொடூர துயரத்துடன் போராடிய அந்தப் பெண், கடந்த செவ்வாய் (29-09-2020) அன்று உயிரிழந்தார்.

இந்தக் கொடூரம் நடந்தேறியது ராமனின் ராஜ்ஜியமாக பீற்றிக் கொள்ளப்படும் உத்தர பிரதேசத்தில். ராம ராஜ்ஜியம் என முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அப்படி சொல்ல முடியாது என்பதற்கு எந்த விசயமும் இல்லை என்பதால் ராம ராஜ்ஜியம் என்றே சொல்லலாம். ராம ராஜ்ஜியத்தில் நிகழ்ந்தது என்பதாலோ என்னவோ எந்தவொரு ‘இந்திய’ மைய ஊடகத்திலும் அந்தப் பெண் இறக்கும்வரை அது பேசுபொருளாகவில்லை.

படிக்க :
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
♦ பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

பாலிவுட்டின் போதை புகை மண்டலத்தில் யாரெல்லாம் மயங்கிக் கிடந்தார்கள் என வாட்ஸ் அப் பில் புலனாய்ந்து கொண்டிருந்தன அந்த ஊடகங்கள். “இந்தியாவின் மகள்களாக” யாருமில்லா விமான நிலையத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பில் கங்கணா போன்ற பெண்கள் ‘ஜான்சிராணி’களாக வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், தலித் பெண்ணின் நாக்கை வெட்டி, முதுகெலும்பை உடைத்து, அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது புகார் பதியவும்கூட முடியவில்லை.

சாதியும் வர்க்கமும் பொறுக்கிகளை பாதுகாக்கும் என்பதே ராம ராஜ்ஜியத்தில் எழுதப்பட்டிருக்கும் விதி என்பதால், கண் துடைப்பாக வழக்குப் பதியவே அந்தக் குடும்பம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அந்தப் பெண் இறந்த பின்னர், ராம ராஜ்ஜியத்தின் தளபதியாக உள்ள ஆதித்யநாத்தின் போலீசு அதிகாரி, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றார். அடிக்கும்போது வலி தாங்காமல் நாக்கைக் கடித்துக்கொண்டு தானே நாக்கை துண்டித்துக்கொண்டதாக இறந்த பெண்ணின் மீதே பழிபோட்டார். தாக்கூர் குடும்பத்துக்கும் தலித் குடும்பத்துக்கும் முன்பகை இருந்ததாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்கூட ஆதித்யநாத்தின் ஏவலாளிகள் சொன்னார்கள்.

ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி
மாணவர்களால் எரிக்கப்படும் மனுஸ்மிருதி

பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதால் நான்கு தாக்கூர் பொறுக்கிகளின் பெயர் தெரிந்தது, அதனால், வெறும் தாக்குதல் மட்டும் நடந்திருப்பதை போலீசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இல்லையெனில், புல் அறுக்கச் சென்ற பெண் தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்றும்கூட சொல்லக்கூடும். ஏனெனில் ராம ராஜ்ஜியத்தில் அனைத்து குற்றங்களுக்கும் பெண்களே பொறுப்பு.

“பாரம்பரியம் ஒரு சிதைந்த மரத்தைப் போல பெண்களை உலர்த்துகிறது,
அங்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும்,
அங்கு அவர்கள் வேறொருவரின் கரும் நிழலின் கீழ் வாழ வேண்டும்.
அத்தகைய நாட்டில் பெண்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம்,
ஒரு பெண்ணாகப் பிறப்பது ஒரு குற்றம்

 – ஹிரா பன்சோட் என்ற மராத்திய தலித் பெண் கவிஞரின் வரிகள் இவை. பாரம்பரிய என்ற இடத்தில் ராம ராஜ்ஜியம் என இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.  ராம ராஜ்ஜியத்தின் ஆதார பிரதிகள் அனைத்தும் பெண்களை, குறிப்பாக விளிம்பு நிலை பெண்களை உணர்வற்ற ஒரு பொருளாகவே பெண்களைக் கருதுகின்றன.

மனுஸ்மிருதி இப்படி சொல்கிறது: ‘ஒரு பெண், தனது வாழ்க்கையில் எந்த நிலையிலும், சுதந்திரமாக இருக்க தகுதியற்றவள் – அவள் திருமணம் செய்து கொள்ளும் வரை தந்தை அவளைக் காத்துக்கொள்ள வேண்டும், இளமையில் கணவன், மற்றும் வயதான வயதில் மகன். (பிரிவு I, வசனம் 9.3).

‘உயர்சாதி’ பெண், ‘தாழ்ந்த’ சாதி ஆணை மனதாலும் தீண்டக்கூடாது. ஆனால், ‘உயர்சாதி’ ஆண், ‘கீழ்சாதி’ பெண்களை வன்புணர்வு செய்துவிட்டு, நீரில் மூழ்கி எழுந்துவிட வேண்டும். ‘கீழ்சாதி’ பெண்ணை தொட்ட தீட்டு கழிந்துவிடுமாம். ராம ராஜ்ஜியத்தின் புனித நூல்கள் இப்படி விதி எழுதி வைத்திருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த விதியை பின்பற்றும் புதல்வர்கள் பெயரளவில் ‘ஜனநாயகம்’ என சொல்லிக்கொள்ளும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சாதியும் அது அளித்திருக்கும் மேலாதிக்கமும் அவர்களை கொடும் குற்றங்களிலிருந்து தப்ப வைத்துக்கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

2006-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் நிகழ்ந்த இழிபுகழ்பெற்ற கொடூரத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நின்ற போட்மாங்கே குடும்பம் என்ன ஆனது? பையாலால் போட்மாங்கே மனைவி, மகள் இருவரும் ஊரார் முன் நிர்வாணமாக்கபட்டனர். இரண்டு மகனையும் அடித்தே கொன்றனர். 17 வயது மகளை சாதி வெறி கும்பல் வல்லுறவு கொண்டது. அந்தச் சிறுமி இறந்த பிறகும் அவரை வன்புணர்ந்தது அந்தக் கும்பல். மனைவி, மகள், மகன்கள் ஊரார் முன் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில், போட்மாங்கே மட்டும் உயிர்பிழைத்தார். நீதி கிடைத்ததா? மனுஸ்மிருதி நீதியாக உள்ள நாட்டில் தலித்துகள் மீதான கொடுமைகள் இயல்பானவை என நீதிமன்றத்துக்குத் தெரியும்.

1992-ம் ஆண்டு குழந்தை திருமணங்களை எதிர்த்து நின்ற பன்வாரி தேவி, ஆதிக்க சாதி வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.   தலித் பெண்கள், பழங்குடி இன பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பெரும்பாலான குற்றங்களில் ஆதிக்கசாதிவெறி முதன்மையான கருவியாக உள்ளது. அதை புனிதப்படுத்துபவையாக ராம ராஜ்ஜியத்தின் மனுஸ்மிருதிகளும் புராணங்களும் உள்ளன.

இந்திய சமூகத்தின் அடிகட்டுமானம் மனுஸ்மிருதிகளின் மீது எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், புத்துணர்வுடன் அமைக்கப்பட்டிருக்கும் ராம ராஜ்ஜியத்தில் தினந்தோறும் ஆதிக்க சாதி ஆண்களின் கைகளால் விளிம்பு நிலை பெண்கள் உடைத்து எறியப்படுகிறார்கள். புல் அறுக்கச் சென்று ஆதிக்கசாதி பொறுக்கிகளால் உடைத்து எறியப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண், ஊரின் ஒதுக்குப்புறமாக புல் அடர்ந்த இடத்தில் குடும்பத்தினருக்கும்கூட தெரியாமல் அவசர அவசரமாக எரியூட்டப்படுகிறார்.  பெண்களிலும்கூட,  தான் நீதியைக் கூட பெற முடியாத சாதியைச் சேர்ந்த ஒரு பெண் என்பதை அவர் அறிந்திருக்கக்கூடும். ராமனின் ராஜ்ஜியத்தில் அநீதியே, நீதி.


அனிதா

நன்றி: த வயர்
, என்டீடிவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க