தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (The National Council of Educational Research and Training) தன்னுடைய ஒன்பதாம் வகுப்பு பாடத் திட்டத்திலிருந்து 3 தலைப்புகளை நீக்க திட்டமிட்டுள்ளது. மோடி அரசு மேற்கொண்ட இரண்டாவது பாடநூல் பகுப்பாய்வின் அடிப்படையில் இம்முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் சமகால உலகம் – I நூலின் திருத்தப்பட்ட பதிப்பில் கிட்டத்தட்ட 70 பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. இப்பதிப்பு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது.

வரலாறு பாடநூலிலிருந்து நீக்கப்பட்ட மூன்று தலைப்புகள் ஒன்றில் “ஆடையணிதல் : ஒரு சமூக வரலாறு (Clothing: A Social History)” என்ற பிரிவு உடை உடுத்துவதில் சமூக இயக்கங்களின் தாக்கத்தை பற்றியும், சாதி முரண்பாடு மற்றும் ஆடை கலாச்சார மாற்றம் பற்றியும் விளக்குகிறது. அதே போல தென்னிந்தியாவில் நடந்த “தோள் சீலை போராட்டம் ” பற்றிய குறிப்புகளுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. தாழ்த்தப்பட்ட நாடார் பெண்கள் ஆதிக்கச் சாதிகளுக்கு முன்பாக மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கச்சாதி நாயர்களால் தாக்கப்பட்ட வரலாறு. “அடுத்த பத்தாண்டுகளில் ஆடைக் கட்டுப்பாடுகள் மீதான வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன” என்றும் அந்த தலைப்பு குறிப்பிட்டது.

முன்னதாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) ஒரு சுற்றறிக்கையை அதன் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பியிருந்தது. “சாதி மோதல் மற்றும் ஆடை கலாச்சார மாற்றம்” என்ற தலைப்பு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு அந்த தலைப்பிலிருந்து கேள்விகள் இனி கேட்கப்பட மாட்டாது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

விக்டோரியா ராணி காலத்திலான கிரிக்கெட்டின் வரலாறு குறித்த தலைப்பும் நீக்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. சாதி, மத மற்றும் இன அரசியலும் தொடர்ந்து பிரிட்டன் காலனிய நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு பின்பற்றப்பட்டதன் வரலாறை அத்தலைப்பு பேசுகிறது.

காலனியாதிக்கத்தாலும் முதலாளித்துவத்தாலும் கிராம சமூகங்கள் மற்றும் விவசாயிகளிடம் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய “விவசாய கூலிகள் மற்றும் விவசாயிகள் (Peasants and Farmers)” என்ற மற்றொரு தலைப்பும் புதிய பதிப்பில் நீக்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கவே பாடத்திட்டத்திலிருந்து சில பகுதிகளை நீக்க மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாடத்திட்டத்தை சீரமைப்பது என்பது நடுவண் அரசு மட்டுமல்ல மாநில அரசுகளும் எடுக்கும் நடவடிக்கைதான். ஆனால், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விட சமூக அறிவியல் பாடத்திலிருந்து அதிக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது இங்கே நம்முடைய கவனத்திற்கு உரியது .

மோடி ஆட்சியை பிடித்தவுடன் வரலாறு சிலரது நோக்கத்திற்காக வளைத்து திரிக்கப்படுவது இது முதன்முறையல்ல. மோடி அரசு கல்வியை குறிப்பாக வரலாற்று பாட நூல்களை காவிமயப்படுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகிறது.

படிக்க:
இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

சமீப ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் “இந்துத்துவா” என்பதற்கான விளக்கத்தை மாற்றுவது மட்டுமல்லாமல் “முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவரங்கள்” என்பதை வெறுமனே “குஜராத் கலவரங்கள்” என்று மாற்றுவதற்காக NCERT-க்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தின் போது வாஜ்பாயி பயன்படுத்திய “இராஜ தர்மம்” என்ற மேற்கோளும் கூட தேவையற்றது என்று கருதப்பட்டது.

தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். நிலவுடைமை சமூகத்தில் மன்னனது வெற்றி  தோல்வி மட்டுமே பேசுபொருளாக  இருந்தது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் வருகைக்கு பின்னர் இந்தியர்கள் கடுமையாக சுரண்டப்பட்டாலும் ஓரளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டது.

இந்திய சமூகம் இன்று இழிநிலையில் வாழ்வதற்கு பார்ப்பனியமே முதன்மையான காரணம். தீவிர இந்துத்துவ தேசியவாதத்தை கட்டமைக்க முயலும் பார்ப்பனியம் ஒடுக்கப்பட்ட மக்களை வரலாற்று புதை குழிக்குள் தள்ளி தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றி கொள்ளப் பார்க்கிறது.


சுகுமார்
நன்றி: The Wire


இதையும் பாருங்க …

நாமக்கட்டி ஆளப் போகுது … உசாரு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க