பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடத் தேர்வுகள் கடினமாகவும் சில பாடத் தேர்வுகள் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் குறை கூறுவதும், செய்திகள் வெளிவருவது வழமையான ஒன்றுதான். ஆனால், நிகழாண்டிற்கான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து வந்திருக்கும் செய்தி, அத்தகைய வழமையான ஒன்று அல்ல. கணிதத் தேர்வு ஆசிரியர்களே வெறுத்துப்போய் வேதனைப்படும் அளவிற்கு கணிதத் தேர்வு வினாத்தாள் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
“மாணவர்கள் தேர்ச்சி பெற உதவும் 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 9 கேள்விகளுள் ஒரேயொரு கேள்விக்கு மட்டும்தான் சராசரி மாணவர்களால் விடையளிக்க முடியும். மீதமுள்ள எட்டு கேள்விகளும் கடினம், மிகக் கடினம் என்ற வகையைச் சேர்ந்தவை” எனக் கணித ஆசிரியர்கள் இத்தேர்வின் பயங்கரத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
“வினாத்தாள் தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர்” எனக் கணித ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
100 மதிப்பெண் எடுக்கக்கூடிய திறமையான மாணவர்கள்கூட இந்தத் தேர்வில் 75 மதிப்பெண்கள் வரைதான் பெறமுடியும் எனும்போது, சராசரி மற்றும் அதற்குக் கீழிருக்கும் மாணவர்களின் நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான்.
சராசரி என முத்திரை குத்தப்படும் மாணவர்களைப் பயமுறுத்துவது ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகள்தான். இந்நிலையில் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வினாத்தாள் அம்மாணவர்களை நிச்சயம் மனச்சோர்வுக்குள்ளாக்கி, அடுத்த இரண்டு தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்வதிலும்கூடப் பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும்.
“பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் கணித ஆசிரியை, ஒன்பதாவது வகுப்பைச் சேர்ந்த தனது மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார். இக்குற்றச்சாட்டு நிச்சயமாக அபாண்டமானதோ, மிகைப்படுத்தப்பட்டதோ அல்ல.
நீட் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியைப் பலி வாங்கியது. இந்தக் கணிதத் தேர்வு எத்தனை இளம் மாணவர்களின் உயிரைக் குடிக்கக் காத்திருக்கிறதோ?
கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள சின்னசேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பூங்குழலி, கணிதத் தேர்வு முடிந்த அன்றே, அப்பள்ளியின் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். அம்மாணவியின் அகால மரணத்திற்கு இந்தக் கடினமான தேர்வு காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்ட பிறகு, பாடப் புத்தகங்களைக் கனமாகவும், வினாத்தாட்களை கடினமாகவும் வைப்பதன் மூலம்தான் மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க முடியும். தகுதியான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்தைத் தமிழகக் கல்வித்துறையே பரப்பி வருகிறது.
பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் மிகக் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் உள்ள பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்றுவது என்ற பெயரில் பாடப் புத்தகத்தின் எடையைக் கூட்டியிருப்பதையும் இந்தப் பின்னணியில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவரும், அவ்வளவு ஏன், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதுவதில்லை எனும்போது, ஒன்றாம் வகுப்பு தொடங்கியே மாணவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டம் என்ற சிலுவையை ஏன் சுமக்க வேண்டும்?
படிக்க:
♦ பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
♦ நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!
பள்ளிக்குப் போவதும், கற்பதும் இனிமையாக இருக்க வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் வேளையில், கல்வி கற்பதைப் பெரும் சுமையாக, மன அழுத்தமாக மாற்றிவருகிறது, இந்திய அரசு.
சூத்திரர்களுக்கும், நான்கு வருணத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களுக்கும் கல்வி கற்கும் உரிமையை, வாய்ப்புகளை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்களை அறிவாளிகளாகத் தூக்கி நிறுத்தியது, மனு நீதி. அந்த மத்தியகால நீதியை, இன்றைய ஜனநாயக யுகத்தில் கடைபிடிக்க வழியில்லை. அதனால்தான், ஏழைகளுக்கும், சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலான உரிமைகளை மறுக்க புதிய கருவிகளை, உத்திகளை உருவாக்கி வருகிறது, பார்ப்பன – பனியா ஆளுங்கும்பல்.
கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரையில் எந்தவொரு மாணவனையும் பெயிலாக்கக்கூடாது என்ற விதி கைவிடப்பட்டிருப்பது, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்களைத் தொழிற்கல்விக்கு அனுப்பிவைப்பது, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நீட் தேர்வை, பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பிற உயர்கல்வியிலும் புகுத்துவது, ஐந்தரை ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, நீட்டைப் போலவே மைய அரசால் நடத்தப்படும் எக்ஸிட் எனப்படும் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் பட்டத்தைப் பெற முடியும் என்ற புதிய தேர்ச்சி முறையை அறிமுகப்படுத்த முயலவுது ஆகிய இவையனைத்தும் கல்வித்துறையில் புகுத்தப்படும் புதிய மனுநீதிகளாகும்.
இத்தகைய புதிய புதிய தேர்வுகளின் மூலம் தகுதியும் திறமையும் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கப் போவதாக ஆளுங்கும்பல் கூறுவது வடிகட்டிய பொய். மாறாக, இது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடு. அனிதாவைப் போல திறமையிருந்தும் பணமில்லாத ஏழை மாணவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் மற்றும் உதிரித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டி, ஒதுக்கி, அவர்களைத் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துவதற்கான ஏற்பாடுகள்தான் இப்புதிய தேர்வு முறை.
மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாகப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறை கொண்டுவரப்பட்டது. இப்பொழுது, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் திணிக்கப்படுவதன் நோக்கமே, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட நிர்பந்திப்பதுதான். அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக உழைப்புச் சந்தையில் தள்ளுவதுதான். தேர்ச்சியடையாத மாணவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்கப்படும் என்ற அறிவிப்பு குழந்தைத் தொழிலாளர் முறையை மூடிமறைக்கும் தந்திரம், தேன் தடவிய விஷம் தவிர வேறல்ல.
படிக்க:
♦ கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
♦ கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !
அனைவருக்கும் தரமான, இலவசக் கல்வி அளிக்க மறுக்கும் அரசு, தனது பொறுப்பற்ற கிரிமனல்தனத்தை மூடிமறைத்துக்கொள்ள, உனக்குத் தகுதியில்லை, திறமையில்லை என மாணவ சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது.
தமிழகத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்துக்கும் குறையாத மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் கேட்டால், அவர்களுக்குத் தகுதியில்லை எனத் தொழில் அதிபர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
அப்படி அவர்கள் திறமையற்றவர்களாக வெளியே வருவதற்கு யார் காரணம்? பொறியியல் கல்லூரிகள் என்ற பெயரில் வசூல்வேட்டையை மட்டுமே நடத்திவரும் கல்லூரி அதிபர்கள், அக்கல்லூரிகள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்திருக்கும் ஏ.ஐ.சி.இ.டி., பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு அமைப்பகள், காலாவதியாகிப் போன பாடத் திட்டங்கள் ஆகியவைதான். கல்லூரி அதிபர்கள் – அதிகார வர்க்கம் என்ற இந்தக் கூட்டணியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மறுக்கும் தொழில் அதிபர்கள் – நிபுணர்கள் கூட்டம், அப்பாவி மாணவர்களைத் திறமையற்றவர்களாக, தகுதியற்றவர்களாகக் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒதுக்கிவைக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வி கற்பதிலிருந்து சூத்திரர்களும், பஞ்சமர்களும் பார்ப்பனியத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சமூக நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் அப்பார்ப்பனிய மேலாதிக்கத்தை வீழ்த்தியது. அச்சமூக நீதிப் போராட்டங்கள் தற்சமயம் வீரியம் இழந்து நிற்கும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் கல்வியில், வேலைவாய்ப்புகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள பார்ப்பன – மேல்சாதி சக்திகள் முயன்றுவருகின்றன.
இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மீண்டும் சமூக நீதி கோரிப் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆயின், இப்புதிய சமூக நீதிப் போராட்டம் நீட் உள்ளிட்ட பார்ப்பன – பனியா சூழ்ச்சிகளுக்கு எதிராக மட்டுமின்றி, கல்வியை முற்றிலுமாகவே தனியார்மயமாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.
கல்வியைப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்காதே, கல்வியைத் தனியார்மயமாக்காதே, ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி வரையிலும் தரமான, தாய்மொழிக் கல்வியை இலவசமாக வழங்கு என்பவைதான் இன்றைய காலத்தின் கோரிக்கைகளாகும்.
செல்வம்
எட்டாம் வகுப்பில் அ அம்மா ஆ ஆடு இ இலை என படித்தால் இப்படித்தான் நிலைமை இருக்கும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதுதான் இதற்கு காரணம். இன்னொரு பக்கம் திராவிடக் கட்சியினர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு கூட இந்தத் தேர்வு அந்த தேர்வு என பாடாய் படுத்தி எடுக்கிறார்கள். மொத்தத்தில் அரசு பள்ளிகள் ஏழை மாணவர்களின் நலன், சமூக நீதி என்னும் பெயரில் எந்த வகையிலும் உருப்படக்கூடாது. இந்த கட்டுரை வசை மட்டும் பாடத் தெரிந்த ஒரு அறிவிலியால் மட்டுமே எழுதப்பட முடியும்.
“மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாகப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறை கொண்டுவரப்பட்டது.”
ஆகா மாணவர்களின் மீது ரொம்பத்தான் கரிசனம். ஏழை பிள்ளைகளின வாழ்க்கையை ஏனய்யா கெடுக்கிறீர்.
இந்தியாவை பொறுத்தவரை முறையான பள்ளிப் பாடத்திட்டம், முறையாக தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நேர்த்தியான மதிப்பீட்டு முறை என்றால் அது சிபிஎஸ்சி தான். அந்த சிபிஎஸ்சி கல்வி முறையில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் என வாதிடப்படுகிறது. அப்படி எனில் இந்த நாட்டில் முறையான பள்ளிக் கல்வி சமூகத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு தான் கிடைக்கிறது என அர்த்தம். கல்விசார் வல்லுனர்களுக்கு மட்டுமே புரியும் இந்த விடயம் சமச்சீர் கல்வி மாதிரியான அரைகுறை குப்பைகளை உயர்த்திப் பிடிக்கிற அரசியல் நோக்கில் வசைபாடுவதை மட்டும் வேலையாக கொண்டிருப்பவர்களுக்கு புரியாது.