Saturday, August 13, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

-

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது. கைகளில் ‘பிட்’டு காகிதமும், சட்டைப்பையில் ‘காந்தி’காகிதம் சகிதமாக பிடிபட்டிருக்கின்றனர், ஆசிரியர்கள்.

“….பிட்டுக்காக வாத்தியார்கள் பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனதை இப்பத்தான் கேள்விப்படுகிறோம். கலி முத்திப் போச்சு” என இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் பேசிக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது, ஏப்.26 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ். மேலும், தமிழகத்திற்கு இது ஏதோ  புதிய விசயமென்றும்; விதி விலக்காக, மதிப்பெண்ணுக்கு ஆசைப்பட்டு அப்பள்ளி  முறைகேட்டில் ஈடுபட்டு விட்டதாகவும்; மற்றபடி பிற தனியார் பள்ளிகளிலெல்லாம் ‘கண்ணியம், நேர்மை’ தவறாது பொதுத்தேர்வை எதிர்கொள்ளவது போலவும் சித்தரித்தன.

ஊடகங்கள் முன்வைப்பதைப் போல, இவை முற்றிலும் புதிய விசயமா என்ன? தினசரிகளுக்கும், செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் வேண்டுமானால்  இவை புதிய செய்தியாக இருக்கலாம். மற்றபடி, தனியார் பள்ளிகள் அனைத்திலும் விதிவிலக்கின்றி நீக்கமறத் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளில் ‘ஒன்று’தான் இச்சம்பவம்.  குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் குறிப்பிடுவதைப் போல இந்தக் ‘கலி’திடீரென நேற்று முற்றியதல்ல,  தனியார் பள்ளிகளின் தொடக்கமே ‘கலி’முற்றியதன் அறிகுறிதான்.

அதிக மதிப்பெண்ணிற்கெல்லாம் ஆசைப்படாமல், தேர்ச்சி பெற்றால் போதும் என்பதற்காக ஒரு சாமான்ய மாணவன்  ‘பிட்’ஐப் பயன்படுத்தினால் அது  தண்டனைக்குரிய குற்றம். இதே முறைகேட்டை தனியார் பள்ளிகள் பின்பற்றினால், மாநில அளவில் முதல் மூன்று இடங்கள், பாராட்டுகள், பரிசுகள்.  மாநில அளவில் முன்னணி இடங்களைக் கைப்பற்றும் தனியார் பள்ளிகளின் ’வெற்றி’ யின் சூட்சுமம் இதுதான்.

“தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளின் பொழுது, பாடப் புத்தகத்தை வைத்து எழுதுவது, ஆசிரியரே விடையைச் சொல்லித் தருவது, சங்கேத வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் வாயிலாக மாணவனுக்கு விடையைத் தெரிவிப்பது, விடைத்தாளை மாற்றுவது, விடைத்தாளைத் துரத்துவது (சேசிங்) என்பதெல்லாம் சர்வ சாதாரணம். இது போன்ற தனியார் பள்ளியில் படித்து ஒரு மாணவன் மாநில அளவில் முதல் இடத்தைக் கூட எட்டியிருக்கலாம், அவன் ‘சாதித்த வெற்றியை’ நாம் புகழ்ந்து பேசும்பொழுது, அவன் மனம் குறுகுறுப்பது அவனுக்கு மட்டுமே தெரியும் ”

என்கிறார், இத்தகைய தனியார் மதிப்பெண் தொழிற்சாலை ஒன்றில் படித்து பொதுத்தேர்வை எதிர்கொண்டிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பிருத்வி.

அகப்படாத வரையில் எவனும் உத்தமன்தான் என்பதைப் போல, தனியார் பள்ளிகளின் இத்தகைய முறைகேடுகள், தமிழகம் இதுவரை ‘அறியாத’ செய்தியாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஏதோ ‘கெட்ட நேரம்’, திருவண்ணாமலையிலுள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி அகப்பட்டு விட்டது. அவ்வளவுதான் வித்தியாசம்.

எனவே, இது ஒரு தற்செயல் நிகழ்வாய் தேர்வறையில் நிகழ்ந்து விட்ட முறைகேடும் அல்ல; விதி விலக்கான சம்பவமுமல்ல; தனியார் பள்ளிகளின் விதியே இதுதான்! பானைச் சோற்றுக்கு திருவண்ணாமலை தனியார் பள்ளி ஒரு பதம்.  வினவின் வாசகர்களுக்காக மற்றொரு பள்ளியின் தகிடுதத்தத்தையும் பதம் பார்க்கத் தருகிறோம்.

கட்டணக்-கொள்ளை

திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற முறைகேடு அம்பலமாவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியிலுள்ள குறிஞ்சி மெட்ரிகுலேசன் பள்ளி என்ற ‘மதிப்பெண் தொழிற்சாலை’ யில் தற்போதைய பொதுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், பொதுவில் அங்கு மதிப்பெண்கள் தயாரிக்கப்படும் செயல்முறை குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பெருமை மிக்க பள்ளிகளில் ஒன்று இந்த குறிஞ்சி மெட்ரிக் பள்ளி. கண்டிப்புக்குப் பெயர் போனதாம். தினம் ஒரு தேர்வு, அனு தினமும் படிப்பு… கக்கூசுக்கு போகும் நேரம், தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் புத்தகமும் கையுமாய் படிப்பு குறித்தே மாணவர்களைச் சிந்திக்கப் பழக்கியிருக்கும் பள்ளி.  தவிர்க்கவியலாத காரணங்களினால், ஒரு நாள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டால் கூட, எப்பேர்பட்ட பணக்காரனே ஆனாலும், அதிகாரம் பொருந்திய அரசியல்வாதியாய் ஆனாலும் பள்ளி முதல்வரின் தயவைக் கோர கால்கடுக்க காத்துக் கிடக்க வேண்டுமாம்.  அவ்வளவு கண்டிப்பு… அம்பூட்டு டிசிபிளின்…!

‘இப்படியாக’ப்பட்ட, இப்பள்ளியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர்தான் வி.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் வரதராசன். இவரது மகன் கார்த்திக் விஜய் இதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவன்.  தனியார் பள்ளி என்ற போதிலும், பள்ளிக்கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்தேர்வு நடைபெறும் மையம் என்பதால், அப்பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தேர்வு மைய தலைமைக் கண்காணிப்பாளர், மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் என அனைவரையும் ‘ஏதோ’ ஒரு வகையில் சரிக்கட்டிய குறிஞ்சி பள்ளி நிர்வாகம், தமது பள்ளியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான வி.டி.யின் செல்ல மகனுக்கு மட்டும் சிறப்புச் சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இதன்படி, சக மாணவர்களோடு தேர்வறையில் தேர்வை எதிர்கொண்ட கார்த்திக் விஜய் தேர்வு நேரம் முடிந்ததும் தனது விடைத்தாளை தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல், தேர்வு அறையையொட்டி நிறுத்தப்பட்டிருக்கும் பள்ளி வாகனம் ஒன்றின் உள்ளே நுழைகிறார். அங்கே இவருக்காகக் காத்திருக்கும் அந்தந்த பாடப்பிரிவிற்குரிய ஆசிரியர்கள் புத்தகமும் கையுமாக இருந்து, தேர்வு நேரத்தில் அந்த மாணவன் எழுதாமல் விட்ட கேள்விகளுக்கான பதில்களை எழுத உதவி புரிகின்றனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்கள், தேர்வு நேரம் முடிந்தும் விடைத்தாளோடு பள்ளி வாகனத்திற்குள் நுழையும் மர்மம் அறிந்து, விசிலடித்தும், அவ்வாகனத்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தும் கெக்கலித்துக் கூச்சலிட்டிருக்கின்றனர். இதன் காரணமாக அப்பள்ளியைச் சேர்ந்த குண்டர்களால் விரட்டியடிக்கப்பட்ட அம்மாணவர்கள், இச்சம்பவத்தைத் தமது பெற்றோர்களிடம் கூறிப் புலம்பியிருக்கின்றனர்.

இவ்வாறு தனது மகன் மூலம் இக்கொடுமையை அறிந்த நண்பர், தமிழ்ப் பாடத்திற்கான தேர்வு முடிந்தவுடனே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளிக்கிறார். நடவடிக்கை எதுவுமில்லை; ஆங்கிலத் தேர்வின் பொழுதும் முறைகேடு தொடர்கிறது. மீண்டும் மாவட்ட முதன்மை அதிகாரியைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோருகிறார். முதன்மைக் கல்வி அலுவலரோ, “யாருய்யா நீ? அப்பள்ளி மாணவனின் பெற்றோரா? நீ சொல்றத நான் எப்படி நம்புறது? ஆதாரம் இருக்கா? ஃபோட்டோ வச்சிருக்கியா? செல்ஃபோன்ல வீடியோ எடுத்திருக்கியா?” எனக் கேள்விக் கணைகளாய் வீசுகிறார். ”என் மகனே சாட்சி” என்கிறார் நண்பர். “சார்! நாங்க என்ன பண்ணனும்னு சொல்றீங்க? தேர்வைக் கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்; கூடுதலாகப் பறக்கும் படையை அனுப்பி வைத்தும் கண்காணித்து வருகிறோம். இதற்கு மேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறி இணைப்பைத் துண்டித்து விடுகிறார்.

இதன்பிறகும் எவ்விதச் சலனமும் இன்றி, கணிதத் தேர்விலும் அதே முறைகேடு தொடர்ந்திருக்கின்றது. இம்முறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட முயற்சிக்கிறார் நண்பர். இவரது தொலைபேசி அழைப்பை ஏற்றுப் பதிலளிக்கும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரோ, இவரது புகாரை செவிசாய்த்துக் கேட்கக்கூட அவகாசமின்றி, “அய்யா, ஆட்சியரின் தொலைபேசியில் இவ்வளவு நேரம் எல்லாம் பேசக் கூடாது. நீங்க சொன்ன விசயத்தைக் குறித்துக் கொண்டேன். ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்”என்ற பதிலோடு, அவரும் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் கூட, இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ மாவட்ட ஆட்சியரோ அப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உண்மை விபரத்தைக் கண்டறியவோ, மாணவர்களிடம் விசாரணை நடத்தவோ முயற்சிக்கவில்லை. அறிவியல் தேர்விலும் அதே போல அம்மாணவனுக்குச் சிறப்பு சலுகை தொடர்ந்திருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம், இம்முறை பள்ளியைச் சேர்ந்த குண்டர்களுக்குப் பதிலாக, நிர்வாக இயக்குநர்களே களத்தில் இறங்கி அம்மாணவனுக்குப் பாதுகாப்பாக பள்ளி வாகனத்தில் உடனிருந்திருக்கின்றனர். தேர்வை முடித்துச் செல்லும்  மாணவர்களை, பள்ளி வளாகத்தை விட்டு உடன் வெளியேறுமாறு விரட்டியிருக்கின்றனர்; மாணவர்கள் மீது எரிந்து விழுந்திருக்கின்றனர்.

இனி யாரிடம்தான் முறையிடுவது என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்ட அந்த நண்பர், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் சென்று புகார் அளிக்க முயற்சிக்கிறார்; அதுவும் சில காரணங்களால் முடியாமல் போய் விடுகிறது. எனவே, இறுதி முயற்சியாக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், பள்ளிக்கல்வித் துறையின் செயலருக்கும் மின்னஞ்சல் வழியே புகாரை அனுப்பி விட்டு இறுதித் தேர்விலாவது அம்முறைகேடு நிகழாது தடுக்கப்படாதா? என அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருந்தார், அந்த நண்பர். அதிரடி நடவடிக்கைகள் கிடக்கட்டும், அனுப்பிய மின்னஞ்சல் புகாருக்கு ஒற்றை வரி பதில் கூட இல்லை, இதுவரை.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகளை மட்டுமின்றி, அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கள்ளக்கூட்டையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றது இச்சம்பவம். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக, திருவண்ணாமலை தனியார் பள்ளியின் முறைகேட்டைக் கையும் களவுமாகப் பிடித்த மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா தமது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்,

“…சில மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினரே பிட் தர்றாங்கங்கிறத உறுதி பண்ணினேன். அதுக்கப்புறம் இதில் கல்வித்துறையில இருக்கிற அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னதால நான் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையில இருக்கிற சிலரைத் தேர்வு செய்து தனியா டீம் ஒன்னு ரெடி பண்ணி ரெய்டுக்கு கிளம்பினோம்”. (நக்கீரன், ஏப். 21-24)

இதில் எது முறைகேடு? இந்த முறைகேட்டிற்கு யார் காரணம்? மாணவர்களுக்கு பிட் வழங்கிய தனியார் பள்ளிகளின் ‘கெட்ட நடத்தை’களும், கையூட்டுப் பெற்றுக்கொண்டு இவற்றைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கும் அரசு அதிகார வர்க்கத்தின் அணுகுமுறைகள் மட்டும்தான் முறைகேடா, என்ன?

“தனியார் பள்ளியே ஒரு முறைகேடு. ‘பசங்களுக்கு பிட் பேப்பர் கொடுத்தான், காப்பி அடிக்கிறத கண்டுக்காம விட்டான்’ என்பதெல்லாம் சர்வசாதாரணம். புறம்போக்கு நிலங்களை வளைத்து, தனியார் பள்ளிக்கான கட்டிடம் கட்டுவதிலிருந்தே தொடங்கி விடுகிறது முறைகேடு. வரி ஏய்ப்பு உள்ளிட்டு அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக கல்வி அறக்கட்டளையின் கீழ் பள்ளிகளை நடத்துவதும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விடப் பல மடங்கு வசூலிப்பதும், பள்ளிக்கூடம் என்று பெயர்ப்பலகையை வைத்துக்கொண்டு ‘என்னிடம்தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டும்’ என  மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, துணிக் கடைகளையும், செருப்புக் கடைகளையும், ஸ்டேஷனரீஸ் கடைகளையும் நடத்துவதும், ஸ்பெசல் கிளாஸ், ஸ்மார்ட் கிளாஸ் என பிலிம் காட்டி பெற்றோர்களிடம் கத்தியைக் காட்டாத குறையாகப் பணத்தை வழிப்பறி செய்வதுமாக நீள்கிறது இத்தனியார் கல்விக்கொள்ளையர்களின் சாம்ராஜ்யம்.

தரமானக் கல்வியை, சிறந்த விழுமியங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதெல்லாம் மோசடி. பணம் சம்பாதிப்பது ஒன்றே இவர்களது நோக்கம். ரியல் எஸ்டேட் பிசினஸ், நகைக்கடை முதலாளிகள்  தமது வியாபாரத் தந்திரத்திற்காக ஆடித் தள்ளுபடி, சிறப்புத் தள்ளுபடி என அறிவிப்பதை போல, இவர்கள் 100% வெற்றி, மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கிறோம், பெற்றுத் தருகிறோம் என அறிவிக்கின்றனர். இந்த ‘சாதனை’யை நிகழ்த்திக்காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அவற்றையெல்லாம் செய்யத் துணிகின்றனர்.

பெரும்பாலும் உண்டு உறைவிடப் பள்ளிகளாகவே இயங்கும் இத்தகைய மதிப்பெண் தொழிற்சாலைகள், அதிகாலையே இயங்கத் தொடங்கி நள்ளிரவு வரையில் படி படி என மாணவனைச் சித்திரவதை செய்கின்றன.  பத்தாம் வகுப்பிற்கான பாடங்களை 9ஆம் வகுப்பிலேயேயும், 12ஆம் வகுப்பிற்கான பாடங்களை 11 ஆம் வகுப்பிலேயேயும் நடத்தி முடித்து விடுகின்றனர்.  அதிகபட்ச கட் ஆஃப் மார்க் ஐப் பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையை மாணவர்களிடம் உருவாக்கி விடுகின்றனர். இரு ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் படிப்பதும், தினம் ஒரு தேர்வை எதிர்கொள்வதும், வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பருவ மற்றும் கோடை விடுமுறைகளில் கூட தம் பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் உடனிருந்து மகிழும் வாய்ப்புகளை மறுத்தும், தேர்வுக் காலங்களில் போதுமான கால அளவு நித்திரையை மறுத்தும் என  பல வடிவங்களிலும்  கறிக்கோழி வளர்ப்பைப் போல ‘அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை’உற்பத்தி செய்கின்றன இப்பள்ளிகள்;  ஒரு கணமும் சமூகத்தைப் பற்றி சிந்திக்கத் தெரியாத மனித உணர்ச்சி ஏதுமற்ற ரோபோ எந்திரங்களாக, அம்மாணவர்களை உருமாற்றித் தள்ளுகின்றன.

ஒன்பது மற்றும் 11 ஆம் வகுப்பிலேயே மாணவர்களை வடிகட்டி விடுவது; பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான் எனச் சந்தேகிக்கும் மாணவனை தனித்தேர்வராக (பிரைவேட்டாக) தேர்வெழுத வைப்பதன் மூலமும் இந்த 100 சத வெற்றியை உத்திரவாதப்படுத்துகின்றன. இவையெல்லாம் தனியார் பள்ளிகள் அனைத்திலும் பின்பற்றப்படுகின்ற பொது விதிகள்.

இவற்றுக்கு அப்பால், இத்தனியார் பள்ளிகள் தனது ‘தகுதி’க்கும் ‘வசதி, வாய்ப்பு’ களுக்கும் ஏற்ப பாடப்புத்தகத்தை வைத்து எழுத அனுமதிப்பது, ஆசிரியரின் மூலம் விடையைச் சொல்லித் தருவது, சங்கேத வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் வாயிலாக மாணவனுக்கு விடையைத் தெரிவிப்பது, விடைத்தாளை மாற்றுவது, விடைத்தாளைத் துரத்துவது (சேசிங்) போன்ற ‘துணிச்சல் மிக்க’ காரியங்களில் ஈடுபடுகின்றன. இந்த ரிஸ்க்குக்குதான் காசு.

இவற்றின் மூலம்தான் தனியார் பள்ளிகள் நூறு சத தேர்ச்சியையும்; முன்னணி இடங்களையும் கைப்பற்றுகின்றன. இத்தகைய தகுதியையும், தேர்ச்சியையும் பெறுவதன் மூலம் இத்தனியார் பள்ளிகளின் கட்டாய வசூலும் இலட்சங்களை எட்டுகின்றன. இத்தகைய ரிஸ்க்குகளையெல்லாம் அரசு அமைக்கும் கல்விக்கட்டண நிர்ணயிப்பிற்கான கமிட்டிகள் ‘கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை’என்பதே இவர்களது பெருங்குறை. எனவே அரசு நிர்ணயிக்கும் கட்டணமெல்லாம் கட்டுப்படியாகாது என மூர்க்கமாக எதிர்க்கின்றனர். பள்ளிகளை இழுத்து மூடி விடுவோம் என அரசையே மிரட்டிப் பார்க்கின்றனர். இக்கல்விக் கொள்ளையர்கள், தமது கொள்ளையை எவ்விதத் தடங்களுமின்றி நடத்தி முடிக்க தங்களுக்குள் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டு, எதையும் செய்யத் துணிந்த ஒரு மாஃபியா கூட்டமாகவே செயல்படுகின்றனர்.”

என்கிறார், இத்தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.இராஜூ.

“மேற்கூரைகளின்றி, இருக்கை வசதிகளின்றி, வகுப்பறைகளின்றி வெட்டவெளியிலும்; போதிய ஆசிரியர்களின்றி கல்வி கற்பதற்கான எவ்விதச் சூழலுமின்றி உழலுகின்றன அரசுப் பள்ளிகள். இப்பள்ளிகளில் பயின்று, நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ‘ஏழை மாணவன்’என்பதனாலேயே மறுக்கப்படுகின்றன, மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான வாய்ப்புகள். இது முறைகேடில்லையா?

பல ஆயிரங்களில் தொடங்கி சில இலட்சங்கள் வரையில் பள்ளி நிர்வாகம் துண்டுச்சீட்டில் கிறுக்கித்தள்ளும் தொகையை ‘காணிக்கை’யாகச் செலுத்தி தன் பிள்ளையை எப்படியாவது இத்தகைய ‘புகழ்’பெற்ற பள்ளிகளில் சேர்த்து விடுவதைத் தன் வரலாற்றுக் கடமையெனக் கருதும் பெற்றோர்களது நினைப்பில் இல்லையா முறைகேடு? கல்விக் கட்டண வசூலில் செய்யும் அடாவடி தொடங்கி ஓராண்டுக்கு முன்னரே அனைத்துப் பாடங்களையும் நடத்தி முடித்து விடும் முறைகேடு வரையிலான தனியார் பள்ளிகளின் இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் நன்கறிந்தும் தமது பிள்ளைகளின் ‘எதிர்காலத்திற்காக’இவற்றையெல்லாம் சகித்துக் கொள்கின்றனரே பெற்றோர்கள், இதற்குப் பெயர் என்ன?  இவற்றையெல்லாம் தரமான பள்ளிகளின் சில ‘தொந்திரவு’களாக மட்டும் தானே பார்க்கின்றனர்?   இங்கே எது முறைகேடு? எதுவரை முறைகேடு? இந்த முறைகேட்டைத் தீர்மானிக்கும் எல்லைக்கோடு எது?”

எனக் கேள்வி எழுப்புகிறார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன்.

மேலும்,

“பெருமைமிக்க பள்ளிகளே இத்தகைய முறைகேடுகளைச் செய்யலாமா? நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து போகலாமா? என அறம் சார்ந்த பிரச்சினையாக இதனை அணுகுவதே மோசடி. “நாயே, நாயைத் தின்னும் உலகம் இது. இதில் அறநெறிகளுக்கு இடமில்லை, அப்பட்டமான முதலாளித்துவ இலாபவெறியைத் தவிர!” என்பதே தனியார்மயத்தின் அடிநாதமாக இருக்கையில், இத்தனியார்மயத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, இதுவொன்றுதான் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வல்லது என்று திடமாக நம்பும் இவர்கள், இதற்குள் ஒரு நீதி, நேர்மையை எதிர்பார்ப்பது மோசடியன்றி, வேறென்ன? ”

என்கிறார், அவர்.

அவர் சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

_______________________________________________

இளங்கதிர்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

 1. What a shame,Open Cheating,Gross Injustice.

  I feel we should open Central government Schools in TN and offer good education to everyone in CBSE. No point trusting State Government Corrupt people.

  • “should open Central government Schools in TN ”

   ஆகா..அருமையான யோஜனை..
   தமிழையே ஒட்டுமொத்தமா பள்ளியிலிருந்து துரத்திட்டு இந்தியையும் ஆங்கிலத்தையும் எல்லோர் மண்டையிலும் திணிச்சிடலாம்..
   எப்படிங்க..இப்படி எல்லாம் யோஜிக்கிறீங்க?

   இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லீங்க, நீங்க!!

   • நான் படித்த சி.பி.எஸ்.சி பள்ளியில் தமிழ் தான் இரண்டாவது மொழியாக இருந்தது. (முதல் = ஆங்கிலம்)

 2. There is a big problem here,why did the government let the school kids write exams at the same venue.

  Even big schools like PSBB/VidyaMandir in Madras dont get that privilege.

  Why did the parents not complain against that?

 3. Harikumar,

  Did you read the article clearly?
  The article warns us how the private schools illegally making business and preparing of dummy students.

  First read the article and comment.

  • I agree but are government schools better,is the problem because of private schools or corrupt govt officers and bad educational policies like letting students write exams in their own schools.

   I have never seen this happening in CBSE schools,many of them private or ICSE schools.

 4. பிரதமரே ஒரு டம்மி , பாடசாலை டம்மி , முதல் மார்க வாங்குறவனும் டம்மியா! டம்மி வல்லரசு ஆயிடுவமில்ல

 5. பள்ளிகளில் செய்முறை தேர்வின் பொழுது மாணவர்களிடம் 50 ரூபா வாங்கி கறி சோறு பொடுறாங்கா வேற பள்ளிகளில் இருந்து வர ஆசிரியருக்கு. ஆனால் இது தனியார் மற்றும் அரசு பள்ளினு இரண்டு பள்ளிகளிலும் நடக்கிறது.இதுவும் சேத்துக்குங்க

 6. அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும்.
  அண்மை பள்ளிகூடங்களை அரசு திறக்க வேண்டும். தமிழ் மொழி வழியில்
  கல்வி தரவேண்டும். எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி வசதிகள் இருக்க வேண்டும்.
  கல்வியின் தரம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அரசு அனைத்து பள்ளிகளையும் ஒன்று
  போல் நடத்த வேண்டும். தனியார் பயிற்று பள்ளிகள் இருக்க கூடாது. தனியார் மயம் அனைத்து
  முறைக்கேடுகளுக்கும் வழி வகுக்கும். எனவே அரசு இது போன்ற முறைகேடுகளை தடுக்க
  உடனடியாக அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும். கல்வியை
  வணிகமாக்க துடிக்கும் தனியார் முதலாளிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
  அவ்வாறு ஒடுக்க தவறினால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போரடடுவார்கள்.
  அப்போது யாரும் எதிர் நிற்க முடியாது.

  • ஓய் பறையரே,

   கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல முன்னெல்லாம் எங்களவாதான் வாத்தியார்களா இருந்தா. தர்ம நியாயத்துக்கு கட்டுப்பட்டு நன்னா சொல்லிக்குடுத்தா. இப்போ கோட்டா, ரிசர்வேஷன்னு உங்களவாதான் ஜாஸ்தி கவர்மெண்டு ஸ்கூல் வாத்தியார்களா இருக்கா. அப்புறம் கவர்மெண்டு ஸ்கூலெல்லாம் கெட்டு போச்சுனு பொலம்பி என்ன ஓய் பிரயோஜனம்?

   • vaguppu edukka vendiya vaathiyaaru poga vendiya training institutela ulla training vaathiyarukke reservationna eppadi irukkum paathukunga.

    Hahaha, paavam pacha pullainga vaazhakaya kedukkura intha adiga prasangikanga.

    Inaikki kooda orutharu pazhaya studentu OC vaathiyaru kitta padicha aalu solraaru,munna maadhiri illa ippa ellamnnu.

 7. Dinamani frequently writes Editorials condemning Govt run schools and calls Govt school teachers as irresponsible.It will not take into account the poor infrastructure in Govt schools,various misc work like election work,taking survey for issuing ration cards thrust upon Govt school teachers.It will not appreciate the good results shown by Chennai schools for the past few years.It will glorify the pvt schools.Like the happenings in TN Assembly,Dinamani will write controversial editorials and publish articles written by certain individuals who toe its thinking.It will not publish comments critical of its editorials and articles.Girl students of some of these schools do not have proper toilet facilities in spite of paying fees in lakhs.A well respected lady who was against Samacheerkalvi has been honoured by TN Govt recently.

 8. பிட் அடிப்பது முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இருந்து இருக்கிறது. அதற்கு அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவி செய்தும் இருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்ட ஒட்டு மொத்த காப்பி அடித்தல் இப்போது நிறுவனமயமாகி, லாபகரமான தொழில் ஆக்கப்பட்டு விட்டது.பழைய மாணவர்களும், இப்போதைய மாணவர்களும் நடிக்கக்கூடாது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்கால மாணவர்கள் விலங்குகளாகக்கூட இல்லை இதயமே இல்லாத இயந்திரங்களாக உருவார்கள். பல பத்தாண்டுகளாக ஆள்மாறட்டம், போலி ஜாதிச்சான்று மோசடிகள் நடந்துகொண்டுவருகிறது. கல்விமுறைமாற்றம், அதிகவேலைவாய்ப்புகள், திறமைக்கு, நேர்மைக்கு மதிப்பு வரவேண்டும், அதற்கு அரசியல் மாற்றம் வரவேண்டும். எப்போது, எப்படி?.

 9. இது இன்று நேற்றல்ல… தனியார் என்றைக்குக் கல்விக்கொடையில் இறங்கினார்களோ அன்று முதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் வேலை வாய்ப்பைத் தடை செய்து குறைந்து ஊதியம் அல்லது கூலியில் ஆசிரியர்களை கௌரவ விரிவுரையாளர் என்று நியமனம் செய்து பொது மக்களுக்குக் கல்வியுரிமையை நிலை நாட்டதொடங்கியதோ அப்போதே தனியார் கல்வித் தந்தைகள் இதனை போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தி வருகிறார்கள். குறைந்த கூலியில் வேறு வழியின்றி இது போன்ற செயல்களைச் செய்யும் படியாக நிலையில் இருக்கும் அப்பாவி ஆசிரியர்களைப் பெரும் குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன, விளம்பரத்திற்காக இந்த தனியார் கல்வித் தந்தைகளின் காலடியில் படுத்து கிடக்கும் நமது சனநாயகத்தின் நான்காம் தூண்….

 10. ஊத்தங்கரை, ராசிபுரம், திருச்செங்கோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற சில ஊர்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களே பெரும்பாலான மருத்துவப் படிப்புக்கான இடங்களையும், கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலை)-பி.எஸ்.ஜி போன்ற கல்லூரிகளில் ECE, Mechanical போன்ற படிப்புகளுக்கான இடங்களையும் அள்ளிச் செல்கின்றனர். இது எப்படிச் சாத்தியம்? மேற்கண்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டும் எப்படி அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது?

  பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள்களை தமிழக அரசு நியமிக்கும் முப்பது குழுக்கள் தனித்தனியே ரகசியமாகத் தயாரிக்கிறார்களாம். மேற்கண்ட தனியார் பள்ளிகள் இந்தக் குழுக்களுக்கு பணம் கொடுத்து முன்கூட்டியே முப்பது கேள்வித்தாள்களையும் பெற்றுவிடுகின்றனவாம். பிறகு இந்தக் கேள்வித்தாள்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் திருப்பத் தேர்வுகளை (revision test) நடத்துகிறார்கள். இந்த முப்பது கேள்வித்தாள்களில் ஒன்றுதான் பொதுத் தேர்வில் வழங்கப்படுகிறது. இப்படி செய்தால் அதிக அதிப்பெண்கள் ஏன் பெறமுடியாது? இந்த மோசடி மாணவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமுமில்லை. இது ஒரு வகை மோசடி.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பரின் மனைவி ஆர்க்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு தேர்வை கண்காணிக்கும் பணிக்காக அனுப்பப்படுகிறார். இவர் அரசுப்பள்ளியில் பணிபுரிபவர். எப்பொழுதும் போல தேர்வு மையத்தில் கறாராக நடந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த பள்ளித் தாளாளரும் அங்கு முகாமிட்டிருந்த மாவட்ட உதவிக் கல்வி அலுவலரும் “உங்கள் வருகைப்பதிவேடு பதிவு செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம்” எனக்கூறி தேர்வு தொடங்கிய அரைமணிநேரத்திற்குள் வீட்டிற்கு மிரட்டி அனுப்பப்படுகிறார்.

  கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப்போல தனியார் பள்ளிகளில் முறைகேடு நடப்பதால் “நம்ம பள்ளிப் பிள்ளைகளும் மேலே வரட்டுமே” என்ற தயாள குணத்தோடு சமீப ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நடந்து வருவதாகச் சொல்கின்றனர்.

  ஆக மொத்தத்தில் திருடனை ஒழிப்பதற்குப் பதிலாக “நாமும் திருடிவிட்டுப் போவோமே” என்கிற பண்பாட்டைத்தான் தனியார் பள்ளிகள் வளர்த்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான கொடிய நோய். இந்த நோயின் ஊற்றுக்கண் தனியார் பள்ளிகள். எனவே தனியார் பள்ளிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும், அரசுப்பள்ளிகளை முறையாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கும் நாம் போராடினால் மட்டுமே இத்தகைய முறைகேடுகளுக்கு முடிவு கட்ட முடியும்.

 11. ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது அந்த பிரச்சனையை ஒழிப்பதைப் பற்றி பேசாமல், உடனே தனியார்மயம், அரசுடமையாக்கல் என்று ஒரு கற்பனை பதிலைத் தருகிறீர்கள். அரசுப் பள்ளிகளில் இப்படி முறைகேடுகள் செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

  தனியார் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவரை ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி விட்டீர்கள். நான் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் என்ற முறையில் கூறுகிறேன். ‘பிட்’ அடித்தால் ‘பாஸ்’ மதிப்பெண் எடுக்கலாம். ஏற்கனவே ஓரளவுக்கு படித்தவர் 70-80 மதிப்பெண் எடுக்கலாம். ஆனால் முதல் மதிப்பெண் எல்லாம் எடுக்க முடியாது. ஏனெனில் பிட்டடிக்க செலவிடும் நேரத்தில் மற்ற பதில்களை முடிக்கமுடியாது.

  சரி. பிரச்சனைக்கு வருவோம். இது போல் பித்தலாட்டங்கள் கூடாது என்று தான், எந்த பள்ளி மாணவரும் அதே பள்ளியில் தேர்வு எழுதக்கூடாது என்றும், ஒரே ஹாலில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கவேண்டும் என்றும் சட்டம் உள்ளது. இதை ‘முறையாக’, ‘நேர்மையாக’ செயல்படுத்தினாலே போதுமானது.

  சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒத்துமொத்த தனியார் பள்ளிகளையும், நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்க்ளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  • “ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது அந்த பிரச்சனையை ஒழிப்பதைப் பற்றி பேசாமல், உடனே தனியார்மயம், அரசுடமையாக்கல் என்று ஒரு கற்பனை பதிலைத் தருகிறீர்கள். அரசுப் பள்ளிகளில் இப்படி முறைகேடுகள் செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? ” அரசுடமை ஆக்கப்பட்டால் லாபவெறி இருக்காது. தனியார் பள்ளிகள் அதிகமாக
   கொள்ளை அடிக்கின்றனவே ??? அது முறைகேடு இல்லையா ???

   • லாப வெறி இருக்காதா? அனைத்து பள்ளிகளும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அப்படியென்றால் அந்த பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர் தலைக்கு மேலே கத்தி தொங்கும். ஏதாவது செய்து தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தினால், டி.ஓ.இ யிடம் இருந்து தப்பலாம். இல்லையென்றால் மெமோ, பணிமாற்றம் அளிக்கப்படும் என்ற எண்ணத்தில் தவறு செய்யமாட்டார்களா?

    கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பெரும்புள்ளியின் மகன் முறைகேடாக மதிப்பெண் வாங்கியுள்ளார். எப்படி? சம்பந்தப்பட்டவர்கள் (அரசு கண்காணிப்பாளர்கள் உட்பட) ‘கவனிக்கப்பட்டுள்ளனர்’. நாளையே அந்த பள்ளி அரசுடமை ஆக்கப்பட்டு விட்டது என வைத்துக்கொள்வோம். அடுத்த வருடம் அந்த மாணவரின் தம்பியோ தங்கையோ பரிட்சை எழுதுகிறார். அவர் தந்தை மீண்டும் சம்பந்தப்பட்டவர்களைக் ‘கவனித்து’ முறைகேடு செய்யமாட்டார் என என்ன நிச்சயம் ?

 12. தேவையான சமயத்தில் வெளியிடப்பட்ட சிறப்பான கட்டுரை, அருமையான கட்டுரைக்கு பாராட்டுகள்.

 13. ‘அரசு’ பல்கலைகழகங்களில் செய்யப்படும் ‘பேப்பர் சேசிங்’கிற்கும் தனியார், லாபவெறி, முதலாளித்துவம் தான் காரணமா ?

 14. அன்புள்ள நண்பரே
  பள்ளிகளில் நடைபெறும் தில்லுமுல்லுகள் தாங்கள் செய்திதாள்களை கண்டபிறகுதான் அறிந்திருப்பீர்கள், அங்குநடக்கும் தில்லுமுல்லுகளுக்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது வேலியே பயிரை மேய்வது போல்தான் உள்ளது, நல்ல பழக்கவழக்கங்களை கற்பிக்கும் ஆசிரியர்களும் அதற்கு உடன்போகும் அதிகாரிகளும் உடன் போகின்றனர், ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை நினைவு கூறுகிறேன். சென்ற வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த குற்றச்சாட்டு பைல் இன்றுவரை முடிந்தபாடில்லை, அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் தாளார் பணியிலிருந்து விலகியபின் அவரது பணிக்காலபிரிவில் அவருடைய கையொப்பத்தை பயன்படுத்தி இரண்டு ஊதிய உயர்வுகள் போர்சரி கையொப்பம் மூலம் போட்டு ஊதிய உயர்வுகளை பெற்று அதனை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் கண்டறிந்து நிரூபணம் செய்து பின் கூட அன்னாருக்கு யாதொரு நடவடிக்கையும் எடுக்காத உயரதிகாரிகள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசான்கள் போர்சரி கையொப்பம் போட்டு தில்லுமுல்லு பண்ணும் ஆசிரியர்களுக்கு உடன் போகும் அதிகாரிகள் தான் இன்னும் உள்ளனர், இதன் பொருட்டு நடவடிக்கை தொடர கல்வித்துறை இயக்குநர் துறை செயலர் வரை நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்தும் இதுவரை யாதொரு நடவடிக்கையும் அன்னார் மேல் தொடராமல் அவருக்கு இதுவரை ஒத்துபபோகும் அதிகாரிகளே இன்னும் உள்ளனர் ஆண்டு ஒன்றும் ஆகியும் சுமார் 100 பக்க எழுத்துமூலம் வழக்கு தொடர்ந்தும் அன்னார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, இது போன்ற செயல்களால் கல்வித்துறை எப்போது திருந்தும்
  இப்படிக்கு
  வை,பூமாலை
  சுந்தரபாண்டியம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க