Wednesday, October 4, 2023
முகப்புஅரசியல்ஊடகம்"புதிய தலைமுறை" நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

-

உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!

ழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.

தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.

பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.

உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.

இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.

புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.

புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால்  இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.

சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா? முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.

மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.  இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?

இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.

ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்  கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.

பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.

இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம்.  இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம்.  மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.  சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.

மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.

கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?

சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.

ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.

நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?

சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா?  எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.

ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.

நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.

உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.

நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சரியாக சொன்னீர்கள் தோழர்
    உலகத்துல எவனுமே நல்லவன் இல்ல, எலோரும் நாசமா போகட்டும் , 2012 ல உலகம் அழிஞ்சா தான் திருந்துவாணுக…சரிதானே

  2. வெற்றி மனிதர்கள் கடந்து வந்தப் பாதையைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை! எந்தத் துறையாகினும்! பகுத்தறிந்து நமக்குத் தேவையானதை அறியலாம்! பின் பற்றுவது அவரவர் விருப்பம்!

    புரட்சித் தலைவர்களும் பின்பற்றுதலுக்குறியவர்களே! அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கட்டுரையாளர் எதிர்பார்ப்பது, அவரது அதீத ஆசை!

  3. //ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.//

    ஓஹோ! அப்ப இதில் எல்லாம் கலந்து கொண்டால் மட்டும் நீங்கள் பாராட்டுவீர்கள் வேறு மாதிரி வழியில் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ரைட்டு. இதில் எல்லாம் கலந்து கொண்டால் தான் ஒருவர் சூப்பர் என்று நிர்ணயிப்பது யார்? உங்களுக்கு இது பெரிய விஷயம் போல மற்றவர்களுக்கு சூர்யா போல செய்வது பெரிய விஷயம்.

    இது தான் சரி என்று கூற நீங்கள் யார்? போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் எல்லோரும் அதற்காகத்தான் உழைப்பவர்கள் என்று அர்த்தமில்லை அதே போல கலந்து கொள்ளாமல் வேறு வழிகளில் தங்கள் உதவிகளை செய்பவர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல. ஊருல உங்களை தவிர மற்ற எல்லோருமே உங்களுக்கு முட்டாள்கள் தான்.

    //நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.//

    நீங்க மெச்சுனா என்ன மெச்சாட்டி என்ன? இப்ப யார் வந்து நீங்க பாராட்டலை என்று கூறினார்கள்.

    //உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும்.//

    ஆமா! வினவு சொல்லிட்டாங்க.. இனி மேல் எல்லோரும் “உ(எ)ன்னால முடியாது தம்பி” என்று தான் பாடவேண்டும்.

    புதிய தலைமுறை சிறப்பான பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. உங்கள் வாதப்படி அதனால் மற்றவர்களுக்கு பயன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் உங்கள் தளத்தை படித்தால் வரும் தலைவலி நிச்சயம் இல்லை.

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை. சிறப்பான கட்டுரைகளை வழக்கம் போல கொடுங்கள்.

    ஆனா ஒண்ணுங்க வினவு (ஆவனாத்தான் இரண்டு னு சொல்லிடாதீங்க) இது மாதிரி யோசிக்க உங்களால மட்டுமே முடியும்.

    • ஆனா ஒன்னுங்க ஆவன்னா தாங்க ரெண்டு, எவ்வளவு விளக்கு விளக்குன்னு விளக்கமாக எழுதினாலும் உங்களால மட்டும் தாங்க இப்படி பதில் சொல்ல முடியும்.

      • குறைவற்ற உங்க விரிந்த பார்வையில் இதைத்தாண்டி வேறொதுவும் தெரியவில்லையோ. சொல்வதை விளங்கச் சொல்லுமையா மங்குனி அமைச்சரே

    • //உங்கள் தளத்தை படித்தால் வரும் தலைவலி நிச்சயம் இல்லை.//

      புதிய தலைமுறையை படிச்சா தலைவலி வருவதில்லை. படிச்சு, கூலா அடுத்த வேலையை பார்க்க போயிரலாம்.

      வினவை படிச்ச மட்டும் போதாது. தெருவில் இறங்கி போராடணும். இது பெரிய தலைவலியா இருக்குன்னு கிரி பீல் பண்ணி சொல்றார்.

      இந்த பின்னூட்டம் உருப்படியான பின்னூட்டம். வினவு சரியான பாதையில தான் போயிருட்டிருக்கு.

  4. போலித்தன ஹீரோ ஒர்ஷிப் பற்றி நல்ல விளக்கம்..மக்கள் விழிக்கணும்..

    //சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. //

    இது குறித்து வருத்தத்தோடு என் பதிவும் இன்று..

    ஏழை என்ற இளக்காரம்?.
    http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_27.html

  5. ஆதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிற இந்திய கல்வியில் கட்டமைப்பு, இன்னும் கடைக்கோடி கிராமப்புற மாணவனுக்கு பாராமுகமாகவே இருப்பது நம்மக்கு தெரிந்ததே… தட்டி தட்டிச் சலித்துபோன என் கைகளுக்கு வலுவில்லை.. எவ்வளவு நாள் தான் தட்டிக்கொண்டே இருப்பது.. தனிமனித விளம்பரமோ இல்லை வியாபாரமோ, இப்படியான ஜன்னல்கள் (கதவுகள் கூட இல்லை) அங்கொன்றும் இங்கொன்றுமாய் திறப்பதினால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னொருவனும் கல்வி கற்க முடிகிறது..!!!
    இந்த கட்டுரையில் ஒரு பதிவு குறிப்பிடப்படவேண்டியது “அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது” – எனக்கு சரியாய் விளங்கவில்லை.. அரசே கல்வியை மறுக்குபோது யாரோ ஒருவரிடமிருந்து பெறுகிற கல்வி எந்த அளவுக்கு சீர்குலைக்கும்னு புரியல..

    – தோழமையுடன் ரவீந்திரன்.

  6. அடநான் இத்தன நாள் உங்கள மாறியே சிந்திசேன்ங்க… இப்ப கொஞ்சம் மாறுபடரேன்… எதிர்க்கலைங்க மாறுபடரேன்..

    இன்றைய டீன் ஏஜ் பையனிடம் போய் சுபாஷ் சந்திர போஸ்சை பற்றி பேசினால் நிச்சயம் மறுமொழி கூற மாட்டான். அது அவனுக்கு இந்த விதத்தில் சொன்ன்னால் தான் போய்ச்சேரும். சூர்யா இப்படித்தான் முன்னேறினார் என்றும் அவர் இந்த உதவிகள் செய்தார் என்றும் கூறினால் (அவர் செய்த்து அவர் சம்பாத்திததில் 100ல் ஒரு பங்காகவே இருக்கட்டும்ங்க) நாம இப்படி ( நம்ம தலைவன் மாதிரி (??!!)) செய்யனும்ன்னு அவனுக்கு தோணும்.. அவன் அந்த அர்த்தத்துல அத புரிஞ்சுக்கறது தான் நமக்கு நல்லது.

    பகுத்தறிபவர்கள் அறியட்டும், மற்ற ஆட்டு மந்தை கூட்ட ஆடுகளை நல்ல பக்கம் திருப்பி விடுவோம் அது போதும் அவர்களும் சிந்திக்க வேண்டும் என நினைத்தால், அது நம் வாழ் நாளில் நடக்காது.

    இதற்கு நிச்சயம் மறு மொழி எதிர்பார்கிறேன்

    • கூத்தாடி,

      நீங்க சீரியஸாத்தான் பேசிருக்கீங்க. ஆனாலும் எனக்கு இந்தக் கதை நியாபகத்துக்கு வருது. அதாவது என்னான்னா, இந்தக் கொக்கு பிடிக்க என்ன செய்யனும்னா… முதல் கட்டமா அப்டியே நைசா அதும் பக்கதுல நடந்து போயி அதோட தலையில கப்புன்னு ஒரு வெண்ணைக் கட்டிய வச்சிடனும். அப்புறம் அப்டியே தள்ளி நின்னு அந்த வெண்ணை வெயில்ல உருகி கண்ணை மறைக்கிற வரைக்கும் பொருமையா காத்துக்கிடக்கனும். கண்ணை மறைத்ததும் அப்படியே கபால்னு பாஞ்சு போய் பிடிச்சுடனும். நான் சரியாத் தானே பேசிருக்கேன்?
      சரி விடுங்க.
      நீங்க சொல்றா மாதிரி பூவைப் புய்ப்பம்னு சொல்ல முடியாதுங்க. ஏன்னா, ஊர்ல நாட்ல பயபுள்ளைங்க படிக்கவே வக்கு வழியில்லாம அலையுதுங்க. கடனை உடனை வாங்கி பள்ளிக்கூடத்தில் சேத்து வுட்டா அவன் என்னடான்னா ஊட்டுப் பத்திரத்த எடுத்து வைய்யு முதல்லன்னு சொல்றான். கெவுருமென்டுக்கே தனியார் பள்ளிக்கூட தொழிலதிபருங்க பெப்பே காட்றானுங்க. இந்த சூரியா அதையெல்லாம் எதிர்த்தோ – போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாகவோ ஒரு தும்மல் கூட தும்மலை.
      இந்த லக்கிலுக்கு எழுதின கட்டுரைல என்னாமோ இளைஞர்களின் ஆதர்ச நாயகன் சூர்யா தான்னு எழுதியிருக்காப்ல. அவரென்னடான்னா நவ்ரத்னா கூல் தைலத்துக்கு டான்சாடின நேரம் போக மித்த நேரத்துல டைம்பாஸ் பண்ண ஏதோ கருப்புப்பணத்துல கொஞ்சத்த அள்ளி விடுறாரு. அப்டி இருக்கும் போது மேயப் போன ஆடு எங்க மேயுதுன்னு பார்க்கிறது தப்பில்லைங்களே?
      இன்றைய டீன் ஏஜ் பைய்யனிடம் சூரியாவைப் பத்திப் பேசறதை விட சக்கீலா பத்திப் பேசினாக் கூடத் தான் ஆர்வமா மறுமொழி சொல்வான். அதுக்காக அவுகளப் பத்தி விளக்கித் தான் சமூக அக்கறையை ஊட்டனும்னு சொல்றீங்களா?

  7. தனது சுய லாபத்திற்காக மனித சமுதாயதிற்கு எதிரான
    நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபடுபவனை சாடுவோம்! கடுமையாக எதிர்ப்போம்!

    ஏனைய பிற பிழைகளை அறிவுறுத்தி இதை இப்படி செய்திருக்க வேண்டும்
    என்று வழி கட்டுவோம், அதுவே அவசிய தேவையாகிறது.

    உங்கள் மொழியின் கடுமை வாசகர்களுக்கு அறிவை தரலாம், சம்பந்த பட்டவர்களுக்கு
    வழி காட்டுமா என்பது சந்தேகமே, அணுகுமுறை ஆக்கபூர்வமான விளைவை குறித்தே
    அமைதல் வேண்டாமோ?

    சமுதாய நலன் குறித்து சிந்திக்கும் பெரும்பாலான சக்திகள் விமர்சனம் என்ற முதல்
    படியிலேயே நின்று விடுகிறனர், வாசகனும் அறிதல் என்ற நிலையிலேயே நின்று விடுகிறான்.
    “திருத்தம்” கூற யாருமேயில்லை.

    முதலில் தேவை அறிந்து நாம் நம்மை திருத்திக்கொள்வோமாக!!!

  8. ஸ்யப்ப்ப்ப்ப்ப்..எதை எழுதினா ஹிட்ஸ் வரும்முன்னு நினைச்சி வினவுல பதிவு எழுத ஆரம்பிச்சிடாங்க போல..

    • விட்டா வினவு என்ன எழுதனும்னு நீங்க லிஸ்டு கொடுப்பீங்க போல

    • @@@@ பாக்குறவனை எல்லாம் குறை சொல்வது திட்டுவது.எவனும் உருப்படக்கூடாது தெருவுல இறங்கி போராடி போராடி நாட்டை நாசமாக்கணும்… – வினவுத்துவ கொள்கை..@@@

      இதைத்தானே சந்தோஷ் நீங்க வினவு பஸ்ஸில் எழுதுனீங்க. சரி தெருவில இறங்கி போராடினா நாடு நாசமாகும்னு சொல்றீங்களே அப்ப நாட்டை நலம் பெறச்செய்ய என்ன வழின்னு கல்வெட்டுல பொறிச்சு வச்சு நீங்க அதுக்கு பக்கத்துலேயே போய் உக்காந்தீங்கன்னா நாங்கெல்லாம் வந்து படிச்சிட்டு விவரமாயிக்குவோம். நாட்டின் நன்மையை முதன்மையாக எண்ணும் நீங்கள் இதை நிச்சயம் செய்வீர்கள் என எதிர்பாக்கிறேன்

    • வினவு ஏற்கெனவே நல்லா ஹிட்டாத்தான் சந்தோஷ் போய்ட்ருக்கு. நடுத்தர வர்க்கத்தை குத்திக்காட்டும் இப்படிப்பட்ட நல்ல கட்டுரைகள் எதையாவது எழுதினால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் உங்களைப் போன்ற மத்தியமர்கள் ஹிட்ஸ் ஹிட்ஸ் என்று காமெடி பன்னுவது தான் கேவலமாக இருக்கிறது. ஆமா இதே டயலாக்கை எத்தனை நாளைக்கு தான் (எத்தனை பதிவுக்குத் தான்) பேசுவீங்க ? டயலாக்கை மாத்துங்கப்பா.

  9. மிக நல்ல கட்டுரை. தர்மகர்த்தா சிந்தனை எல்லா துறைகளிலும் கோசலோச்சுவதை இந்த கட்டுரை மிக நன்றாக விளக்குகின்றது.

    ஆதவன்.

  10. புதிய தலைமுறை செய்தியாளர்கள் தங்களுடைய பணியை சரியாக நிறைவேற்றியுள்ளனர்.
    சரி.இதனுடன் அவர்கள் முன்னேறிய(முன்னேறியிருந்தால்)கதையை உண்மையாக கூறுவார்களா?

  11. 2007 வரை இன்சினீரிங் கல்லூரிகளில் டோட் 1‍‍ (அரசு கல்லூரிகள்), டோட் 2 (தனியார் கல்லூரிகளில் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் ரூ 14,000 கட்டணம்), டோட் 3 ‍(தனியார் கல்லூரிகளில் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் ரூ 36,000 கட்டணம்) என மூன்று வகைகள் இருந்து வந்தன. இப்போது டோட் 2 வை தூக்கிவிட்டு டோட் 3 டோட் 2 என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் ரூ 12,000 முதல் 14,000 ல் கிடைத்து வந்த படிப்பு 36,000 க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி அவர்கள் பிடுங்கும் இதர கட்டணங்கள் ஒரு வருடத்துக்கு 1 லட்சத்துக்கும் மேலே வந்து விடுகிறது. இதையெல்லாம் தட்டி கேட்காமல், சும்மா 1000 நோட்டுபுத்தகங்கள், 50 கணினிகள் வழங்கி தங்களை ஒரு சமூக சேவகராய் காட்டிக்கொள்வது அவ‌ர்களுக்கு தன்னை தானே தர்மவானாக கருதிக்கொள்ளும் சுய திருப்தியை,சுய‌ அரிப்பை தருமே ஒழிய சமூகத்தை மயிரளவேனும் மாற்றாது. அதை கட்டுரைகளாக்கும் சிலருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தை பேட்டி கண்ட திருப்தி கிடைக்குமே ஒழிய சமூகத்துக்கு ஒண்ணும் விளங்காது.

  12. சரியாதான் சொல்றீங்க… ஆனா அரசாங்கமே மக்களை பிச்சைகாரன் மாதிரி இலவசத்த தூக்கி எறிஞ்சுட்டு கோடி கோடியா ஏப்பம் விட்டு ஆட்சியாலும் அரசியல்வாதிகள் பாக்கெட்ல கொட்டுது. அதுக்கெல்லாம் நீங்க ஏன் ஒண்ணுமே சொல்றதில்லை.

  13. நண்பரே… முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நான் சூர்யாவின் ரசிகரல்ல. எனினும் நீங்கள் குறிப்பிட்ட மற்ற கதாநாயகர் லிஸ்டிலிருந்து சூர்யா தள்ளி நிற்கிறார். என்னதான் மேனேஜர் உத்யோகம், திரையுலகை அடுத்து வெளியே வேலை என்று இருந்தாலும் அதை என்னால் தவறாகக் காணமுடியவில்லை… எனக்கு “பவர்” இருந்தால் என் மகனையும் மேலாளர் ஆக்க எனக்கு விருப்பம் அதிகமாகத்தான் இருக்கும். சரி இதைவிடுங்கள், சூர்யா ஒரு வாரிசு என்பதால் உங்களால் அவரை ஒத்துக் கொள்ளமுடியவில்லை இல்லையா? எனில் சூர்யாவை ஒரு நடிகராகப் பாருங்கள்.. எந்தவொரு வாரிசும் நடிப்பில்லையே நீடிக்க முடியாது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை… உதா: சிபிராஜ்!

    சரி.. போகட்டும்… இதெல்லாம் தவறாகவே இருக்கட்டும்.
    அகரம் பவுண்டேஷன் பற்றி நீங்கள் கூறுவதுதான் உறுத்தலாக இருக்கிறது. ஏனெனில் அதன் பலனை அனுபவித்தவர்கள் எனது அண்ணன் குடும்பத்தினர்.. பரிட்ச்சையில் நல்ல மார்க் எடுத்திருந்தும் படிக்கவைக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில் சூர்யாவின் அகரம் தான் உதவியது… அண்ணன் மகனது நான்கு வருட பொறியியல் படிப்புக்கும் (அதுவும் சென்னையில்) சூர்யாவே செலவு செய்கிறார்… நிற்க.. சூர்யா கோடிகளில் சம்பாதிக்கட்டும்.. யார்தான் சம்பாதிக்கவில்லை?? அவர்களில் ஒருவரேனும் முன் வந்து இதைச் செய்தார்களா?? இல்லை.. என்னைப் பொறுத்தவரையில் ஒரே ஒருவனைப் படிக்க வைத்தாலும் சூர்யா ஒரு “வள்ளல்” தான்!!! நீங்கள் ஆயிரத்தெட்டு குற்றம் சொல்லிக்கொண்டு பதிவுக்கு ஹிட்ஸ் வாங்கிக் கொண்டேயிருங்கள்… (அதற்காகத்தானே எழுதவந்தோம்!) இவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டேயிருப்போம்!!

    மற்றபடி உங்களது மற்ற பதிவுகள் எப்பொழுதும் வாசிக்கத் தக்கன!

  14. சூர்யா நடத்தும் “அகரம்” நிறுவனமே கறுப்பை வெள்ளை ஆக்கத்தான் என்று சொல்லப்படுகிறதே! அது உண்மையா?

  15. செய்யட்டும் ஐய்யா செய்யட்டும் நல்லா செய்யட்டும், நல்லது தான் செய்றார். செய்யட்டும்…

    ஆனா இதையே காரணமா வச்சி நாளைக்கு அவரு “கண்ணாடி போடாத கலைஞர்” ஆகாம இருந்தா நல்லது… இப்ப இருக்காரே ஒரு கருப்பு எம் சி ஆறு… அவர மாதிரி…

    அப்படி ஒரு நாள் வந்தால்… நீங்க எல்லாரும் என்ன சொல்வீங்க… ஆகா பாருடா… சொந்த காசுலே எல்லாத்தையும் கொடுத்தாரு நாம இப்ப நம்ம ஆட்சிய இந்த கண்ணாடி இல்லாத கலீஞர் கிட்டே கொடுப்போம்னு கொடுப்பீங்க…

  16. நாட்டில் நிலவுகிறது பலப் பல பலவீனங்கள். 1947ல் 37 கோடி ஜனத்தொகை. இன்று 121 கோடி ஜனத்தொகை. எவ்வளவோ முன்னேறியிருந்தும், வருமை பேய் நம்மைவிட்டு போகவில்லை. அரசிடம் வருமானம் பற்றாக்குறை. அதனால் தனியார் துறையை திறந்துவிடுகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த வசதிப் பற்றாக்குறையை வைத்து கொள்ளை லாபம் அடிக்கிறது.

    ஏழைகள் நாம், நம்முடைய கண்ணீரை நாமே தொடைத்துக்கொள்வோம். அதற்கு பல பல தியாகங்கள் செய்ய வேண்டும். முதலில் குடியை நிறுத்துவோம். உலக நடப்புகளை தெரிந்துக்கொள்வோம். ஒழுக்கத்தோடு வாழ்வோம். கிடைக்கும் வருவாயில் சிறிதளவேனும் சேமிப்போம். ஓட்டுக்காக இலவசங்களையோ, பணத்தையோ வாங்காதிருப்போம். அவர்களின் பேச்சுக்கு மயங்கி ஓட்டைப் போடாதிருப்போம். தனி மனிதர்களின் குழுக்கள் தான் சமுதாயம். தனி மனித ஒழுக்கம் தான் முதலில் தேவை. அப்போது தான் வரப்புயர நெல் உயரும் என்கின்ற கொள்கைக்கேற்ப தனிமனிதன் ஒழுக்கோத்தோடு வாழத் தொடங்கினால் அவனை ஆளுகின்ற அரசாங்கமும் ஒழுக்கத்தோடு இருக்கும்.

    அழுது பயண் இல்லை. ஆர்பாட்டமும் தேவையில்லை. அமைதியாகவே புரட்சி மலர்ந்து விடும். மொட்டாய் இருப்பதை யாரும் வன்முறையால் கத்திக்கொண்டு கீறி பூவை மலர வைத்து விடமுடியாது.

  17. Superrrrrrrrb Article…..

    En manakumuralkal inke velipatrukinrathu……great Article…..
    Ivanukaluku Media le epoum vallal mathiri kanpikanum….last Pongal time le poor students ku help parenu perle ,Vijay TV le ivan panna alumbu thanga mudiyala ….ivanuku periya Fans Group vera….unmaiyana manitharkal likes this article ……great to Read my dear Vinavu…..Dont Follow Him(Cine Peoples)….Follow u

  18. “மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.”

    ஒருவரின் பார்வைக்கு சகிக்கமுடியாத ‘அழகைக்’ கொண்டவர் மற்றொருவரின் காதலராவது இப்படித்தான். மீண்டும் மீண்டும் பார்க்கிற போது மனதில் ஆழமாகப் பதிவாகி பிறகு அதுவே அழகானதாகத் தோன்றுகிறது. மனம் ஏற்கிறது. இது ஒரு வகை உளவியல். இப்படித்தான் சிலர் கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

    “உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான்.”

    அலுவலகங்களில் ‘கேரியர் டெவலப்மெண்ட்’ என்று சொல்லித்தான் ஊழியர்களைக் காயடிக்கிறார்கள்.

    சிறந்த பதிவு. பலரை சிந்திக்கத்தூண்டும். வாழ்த்துக்கள்.

  19. அகரம்… நடிகர் சூர்யாவால் மட்டுமே நடத்தபடுவதாக பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது… அதில் தங்களை இணைத்து கொண்டு சில மாத காலம் மக்களிடம் சென்று வேலைகளை செய்வது நடுத்தர வகுப்பு மக்களே… அகரத்திற்கு கருப்பு பணத்தை அள்ளி தெளிக்கும் முதலாளிகளை விட… நடிகர் சூர்யாவை விட… அதில் தங்களை இணைத்து கொண்டு நேரத்தை செலவு செய்து களத்திற்கு சென்று வரும் நடுத்தர வகுப்பு மக்களின் உழைப்பு சூர்யா சுரண்டி விளம்பரம் தேடி கொண்டு இருக்கிறார்… விஜய் டிவி போன்றவை அந்த கதாநாயகன் பிம்பத்தை பெரிதாக்கி கொண்டு இருக்கிறது… இப்போது புதிய தலைமுறை…

    மற்றபடி சூர்யா ஒரு சராசரி நடிகர்தான்… ஈழத்தில் நடந்த இனபடுகொலை முடிந்து போன பிரச்சனை… என சொன்ன சராசரிக்கு கீழான பொது புத்தியுள்ள மனிதர்…

    புதிய தலைமுறையில் சுற்றுசூழல் ஆர்வலர்களின் நல்ல கட்டுரைகளும்… போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினா/விடை போன்றவை படிக்கும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக வந்திருந்து பார்த்துள்ளேன்… இதையெல்லாம் பின் தள்ளிவிடும் இழிவான வியாபார தந்திரமாக மக்கு மர மண்டை சூர்யாவை காட்சி பொருளாக்கியுள்ளார்கள்…

  20. I havent seen such a crappy website ever in my life… all u maniacs do is complain about others… if u cant compete with the world y complain abt whos doing good?

  21. நல்ல கட்டுரை வினவு. கலைஞரின் இலவசத்துக்கும்,சாய்பாபாவின் கல்வி,மருத்துவமனை சேவைகளுக்கும்,நடிகர் சூர்யாவின் அறக்கட்டளைக்கும் என்ன சம்மந்தம் அனைத்தும் கருப்புப் பணங்களே மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்டவையே நம் கையை வெட்டி நமக்கே சூப்புகொடுப்பதை கூட உணர முடியாமல் உணர்சியற்ற சவமாய் வாழ்வதில் அர்த்தமில்லை. இந்த கட்டுரை சுரனை உள்ளவர்க்கு புரிந்தால் போதும்.

  22. செல்லுலாய்ட் கண்ணாடி :

    கந்தன் கருணையின்
    ஜிகினா ஒளி வட்டத்தில்,
    கிராபிக்ஸ் இல்லாத
    இருண்டகாலத்தில்
    உதித்த தலைமுறை.
    கதா நாயகி
    கிடக்காத காரணத்தால்
    கம்ப ராமாயணத்தில்
    கதா காலட்சேபம்.
    பழைய தலைமுறை!

    சினிமாவில் நுழைய
    பதினாறு முறை
    படையெடுக்காமல்,
    வாரிசு அஸ்திரத்தால்
    பின் வாசல் வழியாக
    கஜினியாகிப் போனது
    புதிய தலைமுறை.

    சினிமாவில் விதையூன்றி,
    செடியாகிக் காய்க்கிறது.
    வீட்டில் பூத்திருக்கும்
    புத்தம்புதிய தலைமுறை மட்டும்
    சினிமாவிலிருந்து விலகி
    வெட்டியான் வேலைதேடி
    செட்டில் ஆகப் போகவதில்லை.
    அதுவும் சினிமாவில்
    பணம் காய்க்கும் ஆலமரந்தான்.

    வாரிசுகள் பெருக்கத்தால்
    ஒரு வட்டத்துள் சுருட்டப்படும்
    சினிமா ரீல்கள்.
    திரையுலகை பட்டா போடும்
    தலைமுறை ஆக்கிரமிப்பு

    தையல் இயந்திரமும்
    பலகை பலப்பமும்
    இவர்களின்
    இல்லாத மனிதாபிமானத்தை
    எடுத்தியம்பும் கருவிகள்.

    இந்த எடுபடாத
    பாடாவதியைத்தான்
    நமக்கு
    நாசூக்காக,
    ஒரு ‘எம்.பி.ஏ’ தனமாக,
    ஒரு டைரக்டர் டச்சில்
    மனிதாபிமானத்தை
    பிழிந்து கொடுக்கிறார்
    அகரம் அறக்கட்டளையில்.
    அது தனித் திறமைதான்.

    ஏனென்றால்,
    இன்றைய அகரம்
    நாளைய லகரம்.
    அகரம் லகரமாகி,
    நாளையொரு தேதியில்
    தன்னிகர்ப் பல்கலையாகலாம்.
    மனிதாபிமானப் பரிமாணம்.

    ***

    இருக்கட்டும் நண்பா,
    அது ஒரு நிழலுலகம்.
    நீ
    நிஜத்துக்கு வா.

    கிரீசில்,
    கால்தடம் பதியாத
    எங்கேயோ ஒரு
    ஏகாந்த லொகேஷனில்,
    காதலர்களின்
    கனவுப் பாட்டில்
    நீயும் கலந்திருந்தாய்.

    ஜெர்மன் நகரத்து
    வீதிகளில் உலாவி,
    ஆல்ப்ஸ் மலைச் சரிவு
    மரத்தைச் சுற்றிய
    காதல் கிறக்கத்தில்
    நீயும் கிறங்கிப்போனாய்.
    கொடுத்து வைத்தவன் நீ;
    காட்சி முடியும் வரை.

    காட்சி முடிந்து,
    மூத்திரச் சந்தைக் கடந்து
    உன் இருப்பிடத்துள்
    குனிந்து செல்.
    உனக்கு
    இன்றைய ‘டின்னர்’ மெனு :
    ஒரு ரூபாய் அரிசியில்
    வடித்துவைத்த சோறு!

  23. திரையுலகில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அதை பாராட்டியோ அல்லது காறித்துப்பியோ எழுதுவது பத்திரிக்கைகளின் தலயாய பணி.

    சினிமாக்காரன் தும்மினாலோ துப்பினாலோ அது செய்தியாகி விடுகிறது. விடுமுறை நாட்களில் சினிமா தான் டிவியை ஆக்கிரமிக்கிறது. எனவே இன்றைய இளைஞ்சர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விட சூரியா தான் அதிகம் தெரிந்திருக்கிறது. கிசுகிசுக்களின் மூலம் சூர்யாவை விட நடிகைகளை நன்கு தெரிந்திருக்கிறது. இப்படி இவர்களை பற்றி எதாவது எழுதி இலவச விளம்பரம் தருவது ‘ஊடக தர்மம்’.

    எத்தனையோ சுப்பனும் குப்பனும் எதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு கையில் காசு இல்லாத நிலையிலும் நாலு பேருக்கு நல்லது செய்தால், அது அந்த நால்வரை தவிர வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை.

    முதலில் ஊடகங்கள் திருந்த வேண்டும்.
    புகழின் உச்சியில் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
    இது போன்ற தேவையற்ற, சினிமாக்காரர்களின் பதிவை வினவு தவிர்க்கலாமே!

  24. சினிமா உணவில் ஊறுகாயைப் போன்றது. அதையே உணவாகக் கொள்ளாதீர்கள்.

  25. நடிகர்களை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்று commoditise செய்வதில் பத்திரிகைகள் எப்போதுமே பெரும் ஆர்வம் காட்டுகின்றன. தஸாப்தங்களுக்கு ‘brand’ செய்யத் தேவையான material-ஐ உருவாக்கிக் கொள்ள முனைகின்றன. மேலே பலர் சொல்லியிருப்பது போல சூர்யா பொருட்படுத்தத்தக்க பொதுசிந்தனை உடையவர் அல்ல. ‘fairness cream’ விளம்பரங்கள் முதல் அவருடைய நிலைப்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாதவையே!

  26. கல்வி உரிமையாக பார்கப்பட வேண்டும், எனத் துண்டிய சிந்தனைக்கு நன்றி.

  27. இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

    நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும், தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் -திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் – கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் – வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் – து£த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் -குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் – நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் – காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர். இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

    எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

  28. //இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை//

    அட நான் என்னவோ அரசாங்கம் சரியாக கார்ப்பொரேஷன் பள்ளிக்கூடங்களை நடத்தாததால் தான் ஏழைகள் படிக்க முடிவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சூரியாவின் சதி என்பதி விளக்கியதற்கு வினவுக்கு நன்றி.