Tuesday, August 9, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க ஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் !

ஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் !

-

“தோழர்களே, நாம் இந்தக் காலகட்டத்திற்கு தேவையான கட்டுரைகளை முடிந்த அளவு வெளியிட்டு வருகிறோம். ஆரம்பித்த நாட்களை விட இப்போது நிறைய வாசகர்களைச் சென்றடைந்துள்ளோம்; எனினும், நமது தளத்தை மேலும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்து ஒவ்வொருவராக உங்களுடைய ஆலோசனைகளைச் சொல்லுங்கள்”

இது வினவு தோழர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசப்பட்ட பொருள். அதில் தோழர்கள் பலர் தளத்தின் தற்போதைய நிறைகுறைகளை மனம் திறந்து குறிப்பிட்டதோடு எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களைச் சேர்க்கலாம் என்பதற்கு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

ஒருவர் “புத்தகங்கள் அறிமுகப்படுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்; இன்னொருவர் “வரலாற்றில் இன்று” என்கிற பகுதி ஒன்றைத் துவங்கலாம் என்றார்; மற்றொருவர் “ஈழம் பற்றி நாம் எழுதுவது குறைந்து விட்டது.. அதை கவனிக்க வேண்டும்” என்றார்; மேலுமொருவர் “அரசியல் பகடிகள் குறைந்து விட்டது அதை அடிக்கடி எழுத வேண்டும்” என்றார். இதே போல் ஒவ்வொருவரும் விதவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். பல புதிய அம்சங்களை தளத்துக்குச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வந்தன.

இவ்வாறாக அந்தக் கூட்டம் முடிவுற்றது. கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றுக்காவது பொறுப்பேற்றுக் கொண்டு கலைந்தனர். அதிக நிதிச் செலவைப் பிடிக்கும் காரியங்கள் வரிசை கட்டி நிற்பதைக் கண்டு எப்போதும் வறண்ட பாலைவனம் போல் காட்சியளிக்கும் வினவின் வங்கிக் கணக்கை நினைத்து விழித்துக் கொண்டிருந்தார் நிதிப் பொறுப்பை கவனித்து வரும் தோழர்.

திரும்பி வரும் வழியில் எனக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின. “பொருளாத்தாரத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி.. இப்போதைய வலதுசாரி ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திக்காத முனை என்று ஏதுமில்லை. என்றாலும், ஏதோவொரு வகையில் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்தின் அரசியல் பேசுபொருளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இந்துத்துவ கும்பல் மக்களிடையே தங்களது கருத்துக்களை எப்படி சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது?” என்பது போன்ற கேள்விகள் மண்டையைக் குடைய, மறுநாள் இணையத்தில் அது குறித்து தேடிப் படித்துக் கொண்டிருந்த போது தான், ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் இந்தச் செய்தி கண்ணில் பட்டது

மேற்படி கட்டுரையின் சுருக்கம் :

“பிரபல நடிகை தனது தந்தையிடமே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்ததாக ஒப்புக் கொண்டார்” என்பது அந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பு. நான்கு பாக கட்டுரைத் தொடர் அது. சஸ்காடைம்ஸ் (chaskatimes.com ) என்கிற வலதுசாரி இணையதளத்தில் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியாகியுள்ளது. கட்டுரைத் தொடரின் முதல் மூன்று பாகங்களில் பிரபல இந்தி நடிகை ஆலியாபட்டின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் அவர் தனது தந்தையும் பிரபல இயக்குநருமான மகேஷ்பட்டின் மடியில் அமர்ந்துள்ளார். கட்டுரை நெடுக “பிரபல நடிகை” என்கிற விவரணையும், அதனுள்ளே ஆலியாபட் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

கட்டுரைத் தொடரின் நான்காம் பாகத்தில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயராக காரா டெலெவிங்கே (Cara Delevingne ) எனும் ஆங்கில நடிகையின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த நான்கு பாக கட்டுரை நெடுக ஏராளமான விளம்பரங்கள். சஸ்காடைம்ஸ் இணையதளத்தின் மூலத்தளம் இன்சிஸ்ட்போஸ்ட்.காமிலும் (insistpost.com) ஏறத்தாழ இதே போன்ற கட்டுரைகள். “உங்கள் இணையை படுக்கையில் நீண்ட நேரம் மகிழ்விப்பது எப்படி” “உடலுறவின் போது பெண்கள் ஏன் கண்களை மூடிக் கொள்கின்றனர்” என்பது போன்ற ‘ஆய்வு’ கட்டுரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியைப் புகழ்பாடும் கட்டுரைகளும் இடம் பிடிக்கின்றன.

இவ்வாறாக நடத்தப்படும் இன்சிஸ்ட்போஸ்ட் இணையதளத்திற்கு அம்பானியின் நெட்வொர்க்18 குழுமத்தால் நடத்தப்படும் பர்ஸ்ட்போஸ்ட் (firstpost.com) இணையதளத்தை விட அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். அலெக்ஸா மதிப்பீட்டின் படி உலகளவில் 1477 -வது இடத்தைப் பெற்றிருக்கும் இன்சிஸ்ட்போஸ்ட், இந்தியளவில் 105 -வது இடத்தில் இருக்கின்றது.

இன்சிஸ்ட்போஸ்ட், சஸ்காடைம்ஸ் போன்ற தளங்களில் இடம் பிடிக்கும் இந்துத்துவ ஆதரவுக் கட்டுரைகள் மெல்ல மெல்ல இண்டியா.காம், போஸ்ட்கார்ட் நியூஸ், ஆப்இந்தியா.காம் போன்ற பிற வலதுசாரி இணையதளங்களுக்கும் செல்வதுண்டு. இதுபோன்ற தளங்களில் வெளியாகும் இந்துத்துவ “ஆதரவு” கட்டுரைகள் நேரடியாக லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதுடன், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியே கோடிக்கணக்கானவர்களைச் சென்று சேர்கின்றன. பல சந்தர்பங்களில் இது போன்ற ஆபாசத்தளங்களில் வெளியாகும் கட்டுரைகளை இந்துத்துவ தலைவர்களே கூட “ஆதாரங்களாக” காட்டுவதும் உண்டு.

தங்களது கட்டுரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஏராளமான முகநூல் குழுமங்களை இவர்கள் நடத்தி வருகின்றனர். “அழகிய பஞ்சாப் மாடல்கள்” என்பது அவ்வாறான ஒரு முகநூல் குழுமம். சில லட்சம் பேர்களை சந்தாதாரர்களாக கொண்டுள்ள இந்தக் குழுமத்தில் பெண்களின் ஆபாசப் படங்களின் இடைக்கிடையே சஸ்காடைம்ஸ் மற்றும் இன்சிஸ்ட்போஸ்ட் ஆகிய தளங்களில் வெளியாகும் பாரதிய ஜனதா ஆதரவுக் கட்டுரைகளின் இணைப்புகளும் பகிரப்படுகின்றன.

இவை தவிர்த்து, “ஐ சப்போர்ட் இந்தியன் ஆர்மி” “ஐ சப்போர்ட் அஜித் தோவால்” “வீ சப்போர்ட் நரேந்திர மோடி” “ஐ ட்ரஸ்ட் பிஜேபி” போன்ற முகநூல் குழுமங்களிலும் பகிரப்படுகின்றன. சில பல லட்சங்களில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இக்குழுமங்களில் இருந்தே வாசர்களைக் கவர்கின்றனர்.

இத்தளங்களை நடத்துபவர் அங்கித் குமார், பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமானவர் என்பதையோ, அதற்கு ஆதாரமாக பல்வேறு சந்தர்பங்களில் அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் முக்கிய தலைகளோடு எடுத்த புகைப்படங்கள் உள்ளன என்பதையோ தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால், தேசபக்தியும், ‘தேக’பக்தியும் எப்படி ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்பட முடியும் என்பது உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். அப்படி வியந்து போகிறவர்கள் அந்தக்கால அக்கிரகார மற்றும் ‘மேல் சாதி’த் தெருவின் திண்ணைகளையும் அங்கே விவாதிக்கப்படும் விசயங்களையும் அறியாதவர்களாகவே இருக்க முடியும்.

“எந்த மாமிக்கு எந்த மாமாவோடு தொடர்பு” என்பதில் துவங்கி, “அவா தளுக்கிண்டு போறா, இவா குலுக்கிண்டு போறா”, “என்ன ஓய், சார்வாள் ரொம்ப மேயுராறாமே” என்கிற அவதானிப்பு வரையிலான “பலான” சமாச்சாரங்களுக்கு இடையே “அடுத்த வாரம் வரலட்சுமி நோன்பு வருதோன்னோ” என்கிற “ஆன்மீக” விசாரணைகளும் நடக்கும். “அக்கிரகாரம் மற்றும் மேலத்தெருவிற்குள் அபச்சாரமா?” என்று நம்ப முடியாமல் திணறுகிறவர்கள் மேற்படித் தெரு – அக்கிராங்களை கண்டறியாதவர்களாகவே இருக்க முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் கூட இத்தகைய சாதிப்பிரிவினர் பணியாற்றும் அரசு – தனியார் அலுவலக உணவு இடைவேளைகளில் கமல் பேசுவது போன்ற சென்னைத் தமிழில் இத்தகைய காமசாஸ்திரங்களை நடப்பு அரசியல் – குற்ற நிகழ்வுகளோடு இணைத்து பேசுவதைப் பார்க்கலாம். இல்லை நீங்கள் நித்தியானந்தா மற்றும் அவரது சிஷ்யர்களின் வீடியோக்களிலும் கேட்கலாம்.

ஆபாசமும் ஆன்மீகமும் பார்ப்பனியத்தின் இரண்டு கண்கள். எனவே இந்துத்துவ அரசியல் பிரச்சாரங்களிலும் அது அவ்வாறாகவே அமைந்திருப்பதில் எந்த வியப்புமில்லை. சொல்லப் போனால் மதவெறி, இனவெறி உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களின் உள்ளார்ந்த கூறுகளும் அபாயகரமான பாலியல் வெறியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதற்கு பல ஆய்வுகள் இருக்கின்றன. சுருங்கச் சொன்னால் “கற்பும் – விபச்சாரமும்” பார்ப்பனியத்தின் இரு பக்கங்கள். ஆகவே இந்த ‘வெற்றிகரமான’ மசாலாவோடு இணைந்து வலதுசாரி பிரச்சாரங்கள் பொது புத்தியோடு இணைந்து அதன் பாதையிலேயே பயணிப்பதால் எளிதில் பலரைச் சென்றடைகிறது.

உதாரணமாக “ஆலியா பட்டுக்கு அறிவுக் கூர்மையில்லை; ஆனால் பாலுறவு நிலைகளில் அவர் கைதேர்ந்தவர்” என்பது சஸ்காடைம்சில் வெளியாகியுள்ள ஒரு “ஆய்வு”கட்டுரை (மெய்யாகவே அப்படி ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறான்). இதற்கு அக்கம் பக்கமாகவே “எதுவும் செய்யத் துப்பில்லாத காங்கிரசுக்கு பதில் வெற்றியோ தோல்வியோ பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்” என்கிற ஒரு கட்டுரையும் வெளியாகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பார்ப்பனிய இந்துத்துவத்தால் புடம்போடப்பட்ட இந்திய நடுத்தர வர்க்க அரைவேக்காடு ஒருவர் இக்கட்டுரைகள் இரண்டையும் அக்கம் பக்கமாக படிக்கும் போது எவ்வாறான மன எழுச்சிக்கு ஆளாவார்? “பெண்கள் என்றாலே புணர்ச்சி இயந்திரம் என்பதால் அவர்கள் தசைப் பிண்டமாக இருந்தால் போதும், மூளையெல்லாம் தேவையில்லை” என்கிற அவரது பார்ப்பனிய கண்ணோட்டத்தை மெல்லத் தடவிக் கொடுத்து அதில் அவர் புளகாங்கிதம் அடைந்திருக்கும் பலவீனமான தருணத்தில் மோடியின் பராக்கிரமத்தை மூளைக்குள் இறக்கி விடுகின்றனர்.

இப்போது அவர் தான் பங்கேற்கும் முகநூல் குழுமங்களிலும், வாட்சப் குழுமங்களிலும் மேற்படி “பராக்கிரமத்தை” பகிர்வார். அது பல சுற்றுகள் சுற்றி கடைசியில் குருமூர்த்தி போன்ற மெத்தப் படித்த மேதாவிகளின் பார்வைக்கும் வந்து, அவர் போன்றவர்களால் தங்களது ட்விட்டர் அல்லது முகநூல் பக்கங்களிலும் பகிரப் படுகின்றன. சில முஸ்லீம் மதவெறியர்களும் விவாதங்களின் போது இத்தகைய ஆபாச வார்த்தைகள், ஆணாதிக்க சொற்றொடர்களை பயன்படுத்துவதை பார்க்கலாம். “பொட்டை, சேலை கட்டி வா” என்றெல்லாம் இவர்களும் தொட்டதுக்கெல்லாம் சவால் விடுவார்கள். இங்கே பார்ப்பனியம் போல வளைகுடாவில் ஷேக்குகளின் இஸ்லாமும் இத்தகைய இரட்டை நிலையோடுதான் பயணிக்கிறது.

இப்படியாக இந்த மதவெறியர்கள் மக்களுக்கு ஒழுக்கமும், தங்களுக்கு கேளிக்கையும் அறமென்பதை வைத்திருக்கிறார்கள். இதில் உலக அளவில் பார்ப்பனியம்தான் சீனியர் என்பதால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தமது மரபை கண்டெடுத்திருக்கிறார்கள்.

****

ல்ட்நியூஸ் இணையதளத்தின் கட்டுரையை வாசித்து முடித்த போது ஆயாசமாக இருந்தது. “சாக்கடையில் உழலும் பன்றிகளோடு போட்டியிடாதே. அவை உன்னைத் தமது நிலைகளுக்குத் தாழ்த்தி பின் எளிதில் வென்று விடும்” என்கிற பழைய பொன்மொழி நினைவுக்கு வந்தது.

அந்தப் பழமொழி சொல்லப்பட்ட காலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நாம் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மொத்தமாக பன்றிகளோடு சேர்த்து சாக்கடைகளை நிரவி மூட வேண்டியிருக்கிறது.

சாக்கியன்

 

  1. பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப – பிரம்மச்சரியம் காத்தால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் உன்னதங்கள் வாய்க்கின்றன — பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்பதுதான் உண்மையான இந்துத்துவா. இந்திய-இந்து பண்பாட்டின் அடிப்படை.ஒரு இல் என்ற இராமாயாண போதனை மக்களை கவா்ந்துள்ளது. மனைவிதான் நல்ல காதலி.கணவன்தான் நல்ல காதலன் என்பது புதுக்கவிதை. இதை தாங்கள் பிரச்சாரம் செய்யுங்கள். மகாத்மா காந்தியின் கருத்து தொகுப்பான Self control or self indulgence என்ற புத்தகத்தில் Moral bankruptcy என்ற பிரெஞ்சு புத்தகத்தின் சுருக்கம் இணைக்கபபட்டுள்ளது.அவசியம் படிக்க வேண்டும். மொழிபெயா்த்து தமிழில் வெளியிடுங்கள்.அனைவருக்கும் நல்லது.ஆாஎஸ்எஸ பிஜேபியை தாக்கி எழுதுவது மட்டும் தங்கள் நோக்கமாக இல்லை. ஆபாச ஒழிப்பு நஞ்சு இலக்கிய ஒழிப்பு தங்களது கொள்கையாக இருக்க வேண்டும்.
    சுயகட்டுப்பாடடை வலியுருத்தி தாங்கள் எந்த கட்டுரையாவது வெளியிட்டதுண்டா ?

    ஆண்கள் கற்பு நெறியை கைவிட்டபோது
    இந்து சமூகம் பலகீனமடைந்து வீழ்ந்து போனது என்கிறாா் சுவாமி விவேகானந்தா். இந்த கருத்து தங்களுக்கு ஏற்புடையதா?

  2. மக்கள் விரும்புவதைத்தான் ஊடகங்கள் தருகின்றன`
    கசப்பு மாத்திரையை விழுங்க இனிப்பு தருவதுபோல் ஆபாசம் தரப்படுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க