செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டு பிரிவு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் 2019-ல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRP) மூலம் நடந்தப்பட்ட தேர்வில், தேர்ச்சிப் பெற்றவர்கள். மொத்தம் 3,000 செவிலியர்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக மாதம் ரூ.12,000 முதல் 14,000 வரை சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

இன்னொரு பிரிவினர் கொரோனாவின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை செய்வதற்காக அரசு அழைத்தபோது தனியார் மருத்துவப் பணியை விட்டுவிட்டு அரசு மருத்துவப் பணியில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு சேர்ந்தவர்கள்.

இந்த இருவகையினருமே கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு-பகல் பாராமல் பாடுபட்டு கொரோனாவை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவும், தடுக்கவும் சேர்வுறாமல் சேவை செய்தவர்கள். உயிர் காக்கும் மருத்துவ சேவையில் சிகிச்சையில் இன்றியமையாத பணியை மேற்கொள்பவர்கள் செவிலியர்கள்தான்.

படிக்க :

♦ போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

♦ வாழ்க்கை – நாமறியாத அரசு செவிலியர்கள் !

கல்வி, பயிற்சி ஒருபுறம் இருக்க பொறுமையுடன் மனமுவந்து சேவை உணர்வுடன் பணியாற்றக் கூடியவர்கள், செவிலியர்கள். இப்படி நேரம் – காலம் பார்க்காமல், நோயாளிகளிடம் ஒவ்வாமை காட்டாமல்  சேவை செய்யக்கூடியவர்கள் தான் இன்று பணி நிரந்தரம் கோரியும், பணி பாதுகாப்புக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருபவர்கள்.

இதில், MRP மூலம் சேர்ந்தவர்கள் கடந்த 2017 முதல் இன்று வரை உள்ளிருப்பு போராட்டங்கள், கருப்புப் பட்டை அணியும் போராட்டங்கள், DMS அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் போன்ற பலவகையான போராட்டங்களை நடத்தி வருபவர்கள்.

இவர்களுடன், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.8000 சம்பளத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டர்களும் நிரந்தரம் கோரியும், பணி பாதுகாப்புக் கோரியும் போராட்டங்களை நடத்தி வருபவர்கள்.

ஆனால், தமிழக அரசோ, “காலியிடம் ஏற்பட்டால் தான் பணி நிரந்தரமும் அதற்கேற்ற சம்பளமும் வழங்க முடியும்?” என்று சொல்கிறது. “காலியிடங்கள் இல்லை என்றால் ஏன் இத்தனைப் பேருக்கு வேலைக் கொடுத்தார்கள்? பல மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதுதான் உண்மை” என்று செவிலியர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஒவ்வொரு உள்ளிருப்புப் போராட்டம், முற்றுகைப் போராட்டத்தின் போதும் அரசு அதிகாரிகள் அனைத்து கழிவறைகளையும் பூட்டுவது, சொந்த செலவில் தற்காலிக கழிவறைகளைப் பயன்படுத்துவதையும் போலீசுதுறை தடை விதிப்பது போன்ற அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் கார்ப்பிணி பெண்கள், மாதாவிடாய் பெண்கள், பெரும் அவதிக்கு உள்ளாகின்றார்கள். மேலும், போராடும் செவிலியர்களின் வீட்டிற்கு சென்று மிரட்டுவது போன்ற அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கின்றனர்.

கடந்த 2017 டிசம்பர் 4-ந்தேதி நடந்த செவிலியர்களின் போராட்டத்தினால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாக சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்ததை சாக்காக வைத்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர் போராட்டத்திற்கு தடைவிதித்ததோடு அல்லாமல் உடனடியாக பணிக்கு திரும்பும் படி உத்தரவும் போட்டது.

மேலும், செவிலியர்களின் போராட்டத்தை துச்சமாக மதித்து அடக்குமுறை மூலம் ஒடுக்கிய, ஊதிய உயர்வுக்கும், நிரந்தரம் செய்வதற்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அடிமை அதிமுக அரசிடமே ஊதிய உயர்வுக்கு தேவையான நடவடிக்கையை தொடரும்படியும், அது குறித்த அறிக்கையை 2018 ஜனவரி 8-ம் தேதிக்குள் தரும்படியும் கர்ஜித்தது. இது கர்ஜனை அல்ல நரியின் ஊளை என்பதை புரிந்துகொண்டு ஓரம் கட்டிவிட்டது அன்றைய தமிழக அரசு.

அச்சமயத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு போராடிய செவிலியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன். மேனாள் நீதிபதியே சொல்லிவிட்டாரே என்று செவிலியர்கள் பின்வாங்கினர்.

உத்தரவு போட்ட நீதிமன்றமும், அறிவுரை வழங்கிய நீதிபதியும், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு கழிப்பறைக் காகிதமாக்கியதைப் பற்றி எந்தவித அக்கறையையும், பொறுப்பையும் எடுத்துக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

நீதிமன்ற உத்தரவுக்கு பணிவது என்பது உழைக்கும் மக்களுக்குதானே தவிர பண முதலைகளுக்கோ, ஆளும் கட்சிக்கோ, அதிகார வர்க்கத்திற்கோ இல்லை. அதனால்தான் செவிலியர்களின் வாழ்வாதாரத்திற்கான முழக்கம் என்பது செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக உள்ளது. இருப்பினும் போராடும் செவிலியர்கள் தங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்கச் செய்ய அரசின் செவிப்பறையைக் கிழிக்கும் வகையில் தொடர்ந்து முழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 2021 செப்டம்பர் 29 அன்று மீண்டும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி DMS அலுவலகத்தை செவிலியர்கள் தங்கள் குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர். இதை ஒடுக்க “மக்கள் நண்பனாக” தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட போலீசின் போக்கிரிதனம் சொல்லி மாளாது.

போராடும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியது. அவர்களின் மார்பகங்களில் கையை வைத்து தள்ளியது, பெண் என்றும் பார்க்காமல் தாக்கியது, சிறையில் அடைத்தது போன்ற தரங்கெட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டது. கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைத்து தாயைப் போல சேவை செய்த செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது கொடுமையிலும் கொடுமை.

படிக்க :

♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

♦ அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !

பெண்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசோ, தனது தேர்தல் அறிக்கையில் வாக்கு அளித்தப்படி செவிலியர்களை நிரந்தரம் செய்யாமல், அவர்களை மாவட்ட ஆட்சியரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து பணி நீக்கம் செய்வது என்ற நூதன வழியில் சதி செய்கிறது. மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தான் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றார்கள். இந்த நடவடிக்கை செவிலியர்களை அச்சத்தில் உறையச் செய்திருக்கிறது. தமிழக அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை கண் துடைப்புக்காக என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

மருத்துவ சேவையில் தனியார்மயத்தைப் புகுத்தி இலவச மருத்துவ சேவையை காயடிப்பதும், தனியார் மருத்துவக் கொள்ளையால் நாம் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல், நம் எதிர்கால சந்ததியினருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்காத சூழல் ஏற்பட்டுவிடும் நிலைமைதான் நீடிக்கிறது.

எனவே இது செவிலியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்ல நம் அனைவருடைய உயிரையும் பறிக்கப் போகும் பிரச்சினை. கொரோனா நோயாளிகளை மரணத்தில் இருந்து காப்பாற்றிய, இனியும் தொடர்ந்து தாயாக இருந்து மருத்துவ சேவை செய்யப்போகிற இவர்களுக்காக நாமும் களத்தில் இறங்கிப் போராடுவதே அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். அது மட்டுமல்ல, இது நமது கடமையும் கூட.

மக்கள் திரள் போராட்டமே மன்னனையும் மண்டியிடச் செய்யும் என்ற நடைமுறை உண்மை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். மேலும் நமக்கும் நம் எதிர்காலத்திற்குமாகவும் தொடர்ந்து இலவச மருத்துவம் கிடைக்க இடைவிடாமல் நடத்தும் போராட்டமே நம் எதிர்காலத்தைக் காக்கும் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க