“உணவு மறுக்கப்படுகிறது ! பெண் செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு தடை ! போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு ! பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் !” என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள் MRB ஒப்பந்த செவிலியர்கள்.

கடந்த 2015 -ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் 11ஆயிரம் செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் கழித்து நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது அரசு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஏமாற்றி வருகிறது அரசு.

MRB தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்தார்கள். அதற்கு தேர்வு எதுவும் கிடையாது. அரசாணை 230 -ன் படி ஒப்பந்தம் செய்து எடுப்பார்கள். சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” எடுப்பார்கள். பிறகு 10 1A விதிகளின் படி அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013 -க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. இந்த தேர்வு முறை வந்த பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

தற்போது அரசும் இந்த 230 அரசாணையைத் தான் பிரதானப்படுத்துகிறது. இதுவே ஒரு மோசடி தான். ஆனால் போராடும் செவிளியர்களோ, G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.

இந்த கோரிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் தங்கள் சொந்த செலவில் சென்னையில் கூடியிருக்கிறார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகம் முழுவதும் வெள்ளை நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. “போராட்டம் நடக்க இருப்பதால் எங்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று போலீசிடம் கூறியுள்ளது டி.எம்.எஸ். நிர்வாகம். அதனால், போராட்டத்திற்கு வந்த பாதி செவிலியர்களை வழியிலேயே கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலிசு. 100 -க்கும் மேற்பட்ட போலிசு, போராடும் செவிலியர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தி வருகிறது.

மழை பெய்த போது போராட்டத்தில் பிசு பிசுப்பு ஏற்பட்டு விடும் என்று போலிசு நினைத்திருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவிலியர்கள் அனைவரும் குடையுடன் வந்ததால் அவ்வளாகம் முழுவதும் வண்ணமயமாகியதை கண்டு காக்கிச் சட்டை அதிர்ச்சியடைந்திருக்கும்.

வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி செவிலியர்கள் என அனைவரும் கையில் குழைந்தையுடன் போராட்ட களத்தில் குதித்துள்ளார்கள். “நாங்கள் புதியதாக எதையும் கேட்கவில்லை. இருக்கின்ற சட்டத்தை அமல்படுத்து என்கிறோம். ஆனால் அதனை செய்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.

ஏற்கனவே விதி 191 மற்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை. கேட்டால் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் நீதிபதிகள். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குறது அரசு…. இரண்டுமே எங்களை ஏமாற்றுகிறது என போராட்டத்தின் முன்னணியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த டி.எம்.எஸ். வளாகத்தில் இதற்கு முன்பு மருத்துவர்கள் 13 நாட்களாக போராடினார்கள். எந்த போலீசும் வரவில்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காக அமைதி முறையில் போராடுகிறோம். ஆனால் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். பேச்சு வார்த்தைக்கு போலீசு மூலம் கூப்பிடுகிறது நிர்வாகம். இதற்கும் போலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு போலீசு?

நோயாளிகள், மக்கள் இவர்கள் கூடவே வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களை தீவிரவாதிகளைப் போல் அச்சுறுத்துகிறார்கள். “நீங்க உடனடியாக கலைந்து போகவில்லை என்றால்  பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போட்டு விடுவோம்”என்று மிரட்டுகிறது போலீசு. இந்த வளாகத்தில் 13 அலுவலகம் உள்ளது. எந்த அலுவலகத்தின் பணிகளையும் நாங்கள் முடக்கவில்லை. எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் அமைதியான முறையில் கூடியிருக்கிறோம். பிறகு ஏன் போலீசு மிரட்டுகிறது என்பது புரியவில்லை. என்கிறார்கள்  போராடும் செவிலியர் முன்னணியாளர்கள்.

இவ்வளவு பேர் நாங்க கூடியிருக்கிறோம். இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். “சாப்பாடு வாங்க கூட போக முடியாத அளவுக்கு போலீசு மிரட்டுகிறது…. பெண்கள் கழிவறைக்கு செல்ல கூட இடமில்லை. அலுவலகத்து உள்ளே செல்லவும் அனுமதியில்லை….. பத்திரிக்கையாளர்களை கூட உள்ளே அனுமதிக்காமல் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.. நாங்கள் என்ன தீவிரவாதியா?” என்று கொந்தளிக்கிறார்கள் செவிலியர்கள்.

குழுவாக இருந்த செவிலியர்களில் இருபத்தைந்து வயது பெண் செவிலியர் ஒருவர், “என் சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் கிருஷ்ணகிரியில இருக்ககும் ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை செய்றேன். எங்களுக்கு கொடுக்கும் 7500 ரூபாய் சம்பளத்தில் வாடகையே 3000 கட்டி விடுகிறேன். மீதி பணத்தில் நான் என்ன செய்ய முடியும்… மூணு வேள சாப்பாடு ஒழுங்கா சாப்பிட முடியல. என்னோட தேவைக்கு கூட வேலை செய்றவங்க கிட்ட கடன் கேட்க முடியல…. இன்றைய விலைவாசியில் வாழ முடியாமா? எவ்ளோ கஷ்டங்களை தான் நாங்க சுமக்கிறது….” என்று கேட்கிறார்.

அதுபோக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. அதன் தொல்லைகளை தினந்தோறும் சந்திக்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பணியாற்றுகிறோம். மருத்துவர்கள் இல்லை. ஆய்வக பணியாளர் இல்லை, மருந்தாளுனர் இல்லை. இவர்கள் வேலையையும் நாங்கள் சேர்த்தே கவனிக்கிறோம்.

“எந்த நோயாளிய கேட்டாலும்….. காலைல இருந்து இந்த ஒரு பொண்ணு தான் ஓடிகிட்டே இருக்குன்னு” சொல்லுவாங்க. அவ்வளவு பணிசுமை சார்.

நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை” என்ற சோகத்துடன் வரும் அந்த வார்த்தைகளில் இருந்து செவிலியர்களின் துயரங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அரசின் மற்ற துறையில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை உண்டு. ஆனால் எங்களுக்கு அதுகூட இல்லை…. நாங்கள் விடுமுறை எடுப்பதாக இருந்தால் சம்பளம் இல்லா விடுமுறை தான்… இது தான் எங்களின் வாழ்க்கை….. ஆனால் இதனை நாங்கள் எடுத்துக் கூறினால் “செவிலியர்களுக்கு சேவை தான் முக்கியம்” என்கிறார்கள். எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசு என்று ஒருசேர குரலில் கூறுகிறார்கள் போராடும் செவிலியர்கள்.

“இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றால் எந்த முகத்த வைத்துக் கொண்டு பணிக்கு போவது” என அழுது கொண்டே கேட்கிறார் 45 வயனதான பெண் செவிலியர். நீங்க ஏன் கலங்குறிங்க… நாம வெற்றி பெறாம இங்கிருந்து போகப்போறதில்லை என்று தேற்றுகிறார்கள் சக செவிலியர்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள் தான்.. எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேட்கிறார் முதுகலை செவலியர் படிப்பு முடித்துள்ள ஒரு பெண் செவிலியர்.

இந்த நியாமான கோபமே இவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. இனி இந்த அரசை நம்பினால் பலனில்லை. போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.. அதனால் தான் போராட்டத்திற்கு முதல் நாளே “டெர்மினேட்” செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

“நீ கொடுக்கும் சம்பளத்திற்கு அடிமையாக வேலை செய்வதை விட, டெர்மினேட் செய்வதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு தெரியாமல் இங்கிருந்து கலையப் போவதில்லை”என்று அதிகார வர்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல் கூறுகிறார்கள் அந்த செவிலியர்கள்.

செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய அதிகார வர்க்கம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 30 பேரை உள்ளே அழைத்து சென்று சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தை இறுதியாக தோல்வியில் முடிந்தது.

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை இன்னும் நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்கிறோம்… சம்பளம் வேண்டுமானால் கொஞ்சம் ஏற்றி தருகிறோம். மற்றபடி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதற்கு சுகாதாரத்துறை செயலர், அமைச்சர், நிதித்துறை செயலர் இவர்கள் முன்னிலையில் தான் தீர்மானிக்க முடியும். எங்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுங்கள்… அதன் பிறகு முடிவை அறிவிக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனை ஏற்காமல் வெளியில் வந்துவிட்டனர் செவிலியர்கள்.

பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த செவிலியர்களுக்கு “பேச்சு வார்த்தை தோல்வி” என்ற செய்தி சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை தான்.

ஆனால் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்தவுடன் அனைத்து செவிலியர்களும் கைதட்டி வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் அதிகாரம் இல்லையே அப்புறம் எதுக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிடனும்” என்ற கேள்வி அதிகார வர்க்கத்தை நோக்கி எழுந்தது.

இதனை சற்றும் எதிரபரத அதிகாரிகள், இன்னும் அதிகமான போலீசை குவித்து உளவியல் ரீதியாக அச்சுறுத்த முயன்றது. போலீசு உயர் அதிகாரிகளை கொண்டு அட்வைசு மழை பொழிந்தது. கீழிருந்த செவிலியர்கள்… “நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்….. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்யாதே…” என்ற கலகக் குரல் எழுந்தது.

கடைசி வாய்ப்பாக போராட்டத்தின் பிரதிநியான புஷ்பலதாவை மிரட்டி போராட்டத்தை கலை இல்லை என்றால் உன் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதால் பயந்த புஷ்பலதா, தற்போது அதிகாரிகள் கேட்கும் கால அவகாசத்தை நாம் தரலாம். எனவே போராட்டத்தை முடித்து கொள்வோம் என்றார்.

ஆத்திரமடைந்த செவிலியர்கள்… “இன்னுமா இவர்களை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கையையே இழந்து விட்டோம். இனி வழக்கு நம்மை என்ன செய்து விடப்போகிறது. உங்கள் மீது வழக்கு போட்டால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம்… நீங்கள் சொல்லி வரவில்லை. எங்கள் சொந்த முயற்சியில் வந்துள்ளோம்…. நூறு வழக்கு போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என்று செவிலியர்கள் உறுதியுடன் கூறவே…… திணறினார் புஷ்பலதா.

மற்றொருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் எப்படி வெற்றி பெற்றோம்.. தொடர்ந்து அங்கேயே இருந்ததால் தான் முடிந்தது. அது போன்று நாம் போராடுவோம். என்று இறுதியாக எடுத்த முடிவின் அடிப்படையில் இரவு போராட்டத்தை தொடர அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தனர். தங்கள் அலைபேசிகளை கொண்டு போராட்டம் நாளையும் தொடரும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.

அதிகார வர்க்கமோ தூக்கத்தை தொலைத்து விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.! நேற்றை விட சுமார் 1,800 செவிலியர்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களது போராட்டம் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!

-வினவு செய்தியாளர்.

 

1 மறுமொழி

  1. 10 nurses went to meet health minister. They threatened them. They captured 7 nurses and threatened other 3 nurses to say o media that the protest is stopped.

    It is complete threatening.Still protest is not at end. Please media publish they are threatened.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க