ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!

பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.

0

ர்வதேச செவிலியர் தினம் என்று கூறப்படும் மே 12-அன்று, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நிரந்தர செவிலியர்களின் சம்பளத்திற்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை திமுக அரசு தற்போது பறித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு செவிலியர்களின் கடும் போராட்டத்தின் விளைவாகப் பெறப்பட்ட உரிமை அது.

கடந்தாண்டு நவம்பரில், தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM) ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பின்போது ஊதியம் வழங்க முடியாது என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. கடந்த மே 2 அன்று, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி) நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் உட்பட அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்று தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் அறிவித்துவிட்டது.

மேலும், எம்.ஆர்.பி-யால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஊதியத்தை மீட்டெடுக்குமாறு சுகாதாரத்துறை அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இப்போது நிரந்தர செவிலியர்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


2015-ஆம் ஆண்டுமுதல் சுமார் 13,000 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

3,000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஆர்.பி செவிலியர்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செவிலியர் ஊழியர் சங்கம் (TNMNEA) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் உயிரைப் பணயம் வைத்த செவிலியர்களை அரசாங்கம் உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ₹18,000 மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி வருகிறது; ஆனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க மறுக்கிறது” என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவர் வாசுகி அவர்கள் கூறினார்.

மேலும், “அரசின் கருணையால் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்படவில்லை; கடினமாக போராடி பெறப்பட்டவை அவை. மகளிர் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமை வழங்கப்பட்டது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு என்பது என்ன நியாயம்?” என்று வாசுகி கேள்வி எழுப்பினார்.


படிக்க: கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !


தினமும் 12 – 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தாலும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுவதில்லை. நோயாளிகளை கவனிப்பது மட்டுமல்லாமல், தரவு உள்ளீடு (Data entry) போன்ற நிர்வாக பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், மகப்பேறு காலத்திலும் கூட விடுப்பின்றி வேலை செய்யவேண்டிய கட்டாயத்தையும் தற்போது ஏற்படுத்தியிருக்கிறது மு.க. ஸ்டாலினின் திமுக அரசு.

திமுக தனது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் 356-வது வாக்குறுதியாகக் கூறியிருந்த  ”அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று போராடிய செவிலியர்கள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட பணி நிரந்தரம் செய்யப்படாத 2472 செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், திமுக அரசோ பணி நிரந்தரம் செய்ய மறுத்துவிட்டது.

பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க