Monday, July 26, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் நாப்கீன் மாத்தாம பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும் ?

நாப்கீன் மாத்தாம பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும் ?

-

செவிலியர்களுடன் ஒரு நாள் – 29. 11. 2017

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துல போராட்டம் நடத்துற செவிலியர்கள பாத்துட்டு வரலாம்ன்னு போயிருந்தேன். காம்பவுண்டுக்கு வெளியவே முட்டு முட்டா போலீசு குவிஞ்சுருந்தாங்க. உள்ள யாரையும் விடல. மீடியாக்காரவங்களே கேமராவ வச்சுகிட்டு ரோட்டுக்கு எதிர்லதான் நின்னாங்க. நிலமைய பாத்தா இவங்கள தாண்டி வளாகத்துக்குள்ள நுழையிறது சவால்தான். டீ குடிக்க வந்த செவிலியர் கூட்டத்தோட கூட்டமா ஒரு வழியா உள்ள வந்து சேந்தேன்.

மக்கள்கிட்ட இப்படி குப்பைய சேத்து வைக்காதிங்க, தண்ணிய மூடி வைங்க, காய்ச்சி குடிங்க, குழந்தைக்கி கைய கழுவிட்டு சாப்பாடு குடுங்க, அழுக்கில்லாத உள்ளாடைகள போடுங்க இப்படி சொல்லும் போது அவங்க செவிலியரா மட்டும் இருக்க மாட்டாங்க. நம்ம வீட்டாளுங்களாவே தோணும். ஆனா டி.எம்.எஸ். வளாகத்துல செவிலியருங்க இருந்த நிலை சொல்லி மாளாது!

அவங்க குந்திருந்த எடம் பூரா கட்டம் கட்ட பயன்படுத்துற சரளக்கல்லு. அதுல துணி, பேப்பரு, துப்பட்டாவெ விரிச்சுப்போட்டு கொத்தடிமை கணக்கா குந்திருந்தாங்க. அவங்க இருந்த எடத்த சுத்தி மூணு நாளா அள்ளப்படாத சாப்பாட்டு குப்பைங்க. ஒரே நாத்தம். இது கூட பரவாயில்ல, டாய்லெட்டு நிலைமையோ இன்னும் மோசம்.

தேனி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர், “நூறு பேரு இருந்தாலே அதுல நாலு பேருக்காவது பீரியட்ஸ் இருக்கும். ரெண்டாயிரம் பேருக்கும் மேல இருக்கோம், என்ன செய்ய முடியும் சொல்லுங்க? ஒரு பொம்பள தண்ணி இல்லாமெ நாப்கீன் மாத்தாமெ பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும்? மூணு நாளா இந்த கொடுமைய அனுபவிக்கிற பொம்பளைங்களுக்கு போராட்டமும் வேண்டாம் வேலையும் வேண்டான்னு ஓடத்தான் தோனும்.”

பெண் செவிலியருங்க சீருடையில சரியா கீழ உக்கார முடியாம செரமபட்டது தெரிஞ்சுது. வெளிய ரோட்டோர டீ கடையில சொல்லி லெக்கீன்ஸ் வியாபாரிய வரவச்சு காசிருந்தவங்க வெள்ளக் கலர்ல வாங்கி போட்டுகிட்டாங்க. சுத்தி வளச்சு போலீசு நிக்குது. இருக்குற எந்த கட்டடத்துலயும் உள்ள போக அனுமதி கெடையாது. குழந்தைக்கி பால் குடுக்குற தாய்மாரெல்லாம் போராட்டத்துல இருக்காங்க. எங்குன ஒதுங்க முடியும்?

இந்த இலட்சணத்துல ஒரு அரசு அதிகாரி பேசும் போது சொல்றாங்க “நீங்க எல்லாம் எங்க பிள்ளைங்க மாதிரி. இந்த வயசுல எங்க எல்லாருக்கும் பிள்ளைங்க இருக்கு. நீங்க மூணு நாளா இங்க பனியிலயும் குளிருலயும் இருக்குறத பாக்கும் போது தாங்க முடியல.” அந்த அம்மா பேசின பத்து நிமிசத்துல இந்த டயலாக்க மூணு தடவ சொல்லுது.

எந்த தாயும் கைக்கொழந்தைய வச்சுகிட்டு அத்தன குளிருல வெட்ட வெளியில கெடக்குறத பாத்துட்டு இருக்க மாட்டா. அந்தம்மா தாம்பிள்ளைங்களா நெனச்சதுன்னே எடுத்துக்குவோம். தனிச்சு போராட்டத்துக்கு ஒரு முடிவு சொல்ல முடியாதுன்னே வச்சுக்குவோம். ஆனா டி.எம்.எஸ். அதிகாரிங்கற முறையில குடிக்க தண்ணியும், சுகாதாரமான டாய்லெட்டும் தந்துருக்கலாம். அந்தம்மா என்னவோ “உங்களால் நான் உங்களுக்காகவே நான்” அப்புடிங்குற ரேஞ்சுலேயே பேசுச்சு.

இத கேட்ட கன்னியாகுமரி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர் சொன்னாங்க “இந்தம்மா சொந்தம் கொண்டாடலன்னு நாங்க அழல. இந்த தொழில நாங்க புனிதமா நெனச்சு செய்றொம். நோயாளிங்கள சுத்தபத்தமா இருக்க வச்சு அருவெறுப்பு பாக்காமெ ராத்திரி பகலா உழைக்கிறோம். ஆனா பாருங்க எங்கள சுத்தியே நோய் பரப்பும் வசதி அனைத்தையும் செஞ்சு கொடுத்துருக்கு அரசு. நாங்க என்னங்க பெருசா கேட்டுட்டோம். நேரங்காலம் பாக்காமெ வேலை செய்றோம் எங்களுக்கு பிச்ச போடாதிங்க சமமா நடத்துன்னு சொல்றோம்.”

அதிகாரிங்க பேசிட்டு போன பிறகு அங்கே ஒரே சலசலப்பு. அதிகாரிங்க ஒத்திகை பாத்துட்டு வந்து அரங்கேத்துன நாடகம் சரியில்லன்னு திருப்பி அனுப்பிட்டாங்க செவிலியருங்க. எரிச்சலோட திரும்பி போனாங்க போலீசுங்க. பேச்சுவார்த்தையில திருப்பம் வருமான்னு மேடை பக்கத்தையே பாத்திருந்த செவிலியருங்க திரும்பவும் பேச ஆரம்பிச்சாங்க.

“ஒங்களுக்கே தெரியும் அம்மா செத்ததும் பதவிக்காக என்ன தர்மயுத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு. நாங்க மட்டும் கடைசி வரைக்கும் ஒப்பந்த பணியாளரா இருக்கனும்ன்னு சொல்றது ஞாயமாங்க. வருசத்துக்கு 200 பேரு பணி நெரந்தரம் பன்னுவோம்னு விஜயபாஸ்கரு சொல்றாரு. அவரு கணக்குப்படி பாத்தா நானு இந்த கையில வேலைக்கான ஆட்ரையும் இந்த கையில ரிட்டேயர்மெட்டுக்கான ஆர்டரையும் வாங்கிட்டு வீட்டுக்குதான் போகணும்.”

“இவளாவது ஆர்டரை வாங்கி பாக்குறதுக்கு உயிரோட இருப்பா. என் வயசுக்கு நான் பரலோகம் போயிருவேன். எனக்கு 42 ரெண்டு வயசாகுது. தனியாரு மருத்துவமனையில வேலை பாத்தப்ப நல்ல சம்பளம் வாங்கினேன். தனியாரு எப்ப வேணுன்னாலும் வீட்டுக்கு அனுப்பிடுவான் அரசு வேலையின்னா ஒரு நிம்மதி இருக்குமேன்னு சேந்தேங்க. தூத்துக்குடி பகுதிய சேந்தவ நானு. என்ன தூக்கி திருவாரூல போட்டானுங்க. மாத்திகிட்டு போக ரெண்டரை லட்சம் குடுத்தேன்”-னு தன்னோட மன ஆதங்கத்த ஆத்தரத்தோட சொன்னாங்க திருவாரூர் பகுதிய சேந்த செவிலியர் ஒருவர்.

“எனக்கு 25 வயசாகுது. பேங்குல எஜுகேசன் லோனு வாங்கிதான் படிச்சேன். சொந்த ஊரு திருநெல்வேலி. வேலை பாக்குறது திருப்பூரு. இன்னும் கல்யாணம் ஆகல. திருநெல்வேலிக்கே மாத்திக்கலாம்ன்னா 2 லட்ச ரூபா லஞ்சம் கேக்குறாங்க சுகாதாரத் துறை ஆளுங்க. இன்னும் படிப்புக்கு வாங்குன லோன கட்ட முடியல. 7,700 சம்பளத்த வச்சு வாடக குடுத்து சாப்பிட்டு வீட்டுக்கு பணம் அனுப்பனும், பஸ்சு காசுக்கு பயந்து ஊருக்கு போறது கூட தள்ளி போட்டுருவேன். இப்ப சொல்லுங்க நாங்க என்ன செய்யட்டும்”னு இது விருதுநகர் பகுதி செவிலியரோட கேள்வி.

“நானு திருப்பூர் மாவட்டத்துல வேலை செய்றேன். ஒரு செவிலியரு 8 உள் நோயாளிகள பாத்து பராமரிக்கணுமுன்னு விதி சொல்லுது. ஆனா நாங்க ஒரு நாளைக்கி 70, 80 நோயாளிங்கள கவனிக்கிறோம். அதுவும் ஆண்கள் வார்டு அதுல 30 பேரு ஆப்ரேசன் செஞ்சவங்க. டாக்டரோட பல வேலைகள நாங்க பாக்கணும். டாய்லெட் கழுவலன்னா கூட எங்களதான் கேப்பாங்க. ஒரு நிமிசத்துல பதினஞ்சு வேலையப் பத்தி மூளை சிந்திக்கனும். இவ்வள வேலை செய்றதுக்கு நியாயமான சம்பளம் குடுன்னுதான் கேக்குறோம்.”

அதே பகுதியில வேலை செய்ற ஆண் செவிலியர் சொல்லும் போது, “எங்க அப்பா ஒரு துப்புறவு தொழிலாளிங்க. லோன் வாங்கித்தான் படிச்சேன். முப்பத்தேழு வயசாகுது. 7,700 சம்பளத்த வச்சு கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துறதுன்னு பயந்தே தள்ளி போட்டிருக்கிறேன். பகல் இரவுன்னு மாறி மாறி டூட்டி போடுவாங்க. பகுதி நேரமா வேற வேலைக்கும் போக முடியாது. சுகாதார அமைச்சர் சொல்றாரு மத்த மாநிலத்த விட தமிழ்நாடுதான் ஒப்பந்த தொழிலாளர வருங்காலத்துல நிரந்தர தொழிலாளரா நியமிக்க முன்வந்துருக்கும் மாநிலமுன்னு. இந்தாளு சொல்ற கணக்குப்படி பாத்தா வருங்காலங்கறது எங்களுக்கு இறந்த காலமா மாறிடுமுன்னு நாங்க சொல்றோம்.”

கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.

வெளிய வந்த போது போலீசு நிறுத்தினாங்க. நான் என்னமோ போராட்டத்தை தூண்டி விட்டது போல ஓரங்கட்டி நிக்க வச்சாங்க. எதுக்கு கலர் டிரஸ் போட்ருக்க, ஐடிய காமி, யார பாக்க வந்தியோ அவங்கள போன் பன்னி இங்க வரச்சொல்லு இப்படி அடுக்கிகிட்டே போனாங்க.

“என்னோட அக்கா பொண்ணுக்கு சாப்பாடும் அவசர செலவுக்கு காசும் குடுக்க வந்தேன். குடுத்துட்டேன், வெளிய போறேன். உள்ள வரும்போதுதான் எல்லாத்தையும் செக்பண்ணித்தான் விட்டாங்க. நான் பள்ளிகூடத்துக்கு பிள்ளைய அழைக்க போகனும், நேரமாயிருச்சு, இப்ப நீங்க வேற நிறுத்தி வச்சா என்ன செய்ய?” என்று போலீசிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

இப்ப போராட்டம் நீதிமன்றத்தால நிறுத்தப்பட்டாலும் அந்த செவிலியருங்க அடுத்த முறை ஜட்ஜ் ஐயாவுக்கு கட்டுப்படாம வெற்றி கிடைக்குற வரை போராடுவாங்க! ஏன்னா ஒவ்வொரு போராட்டமும் நிறைய விசயங்கள கத்துக் கொடுக்குது!

சரசம்மா


 

  1. ”ஒரு நிமிசத்துல பதினஞ்சு வேலையப் பத்தி மூளை சிந்திக்கனும். இவ்வள வேலை செய்றதுக்கு நியாயமான சம்பளம் குடுன்னுதான் கேக்குறோம்.”
    உண்மையான வரிகள்.

  2. மருத்துவச் சேவையில் இவர்கள் வாடாமலர்கள்;
    மனித நேயமே இவர்கள் தரும் அருமருந்து;
    இவர்களது சேவைக்குப் பணம் பொருள் ஈடன்று;
    தங்கள் உடல்நலன் குறித்த அச்சமின்றி ஏழைகளுக்கு சேவையாற்றும் இவர்கள் நான் காணும் நைட்டிங்கேல்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க