ஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கண்டியூரில் இருந்து திருவையாறு வரை சுமார் 7 கிலோ மீட்டர் வரை புறவழிச்சாலை அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலத்தை அளவிடும் பணி நடந்து வருகிறது.
புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்கள் அனைத்தும் பசுமையான விவசாய நிலங்கள்தான். நெடுஞ்சாலை அமைப்பதற்கு சுமார் 7 கிலோமீட்டர் அளவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த இருப்பதால் திருவையாறு, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கதறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 04 அன்று சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டியூர் அருகே உள்ள தங்களின் விளைநிலங்களில் தூக்குக் கயிறை மாட்டிக் கொண்டும், சங்கு ஊதியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்கள் வழியே சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களின் எதிர்ப்பையும் மீறி புறவழிச்சாலை அமைக்கும் பணியை செய்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் கூறினர்.
***
இதேபோல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விளைப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்று கூறி அந்த பகுதி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது.  அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், நெல் மற்றும் உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா போன்ற தானியங்களைய இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக,  விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்ற நிலையே இருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 05-ம் தேதியன்று தங்களின் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்ற விவசாயிகள், விவசாயப் பொருட்கள் மிகவும் குறைவான விலைப்போவதால்  கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோவமடைந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
***
தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தினந்தோறும் போராடும் சூழல்தான் இருக்கிறது. ஏற்கனவே வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடன், உரம் போன்ற வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் வாழவழியற்று இருக்கிறார்கள் விவசாயிகள்.
படிக்க :
வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம் !
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விவசாயத்தை அழிக்கும் கொடிய திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை, கெயில் எண்ணெய் குழாய் பதிப்பு, ஒஎன்ஜிசி விரிவாக்கம் போன்றவற்றை கொண்டு வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர் விவசாயிகள்.
தமிழகத்தில் விடியல் அரசு வந்துவிட்டால் போராட வேண்டிய தேவை இருக்காது என்றும், இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசு என்றும் சிலர் கூறினார்கள். இன்றும் கூறிவருகிறார்கள். ஆனால், அந்த கூற்றுகள் எல்லாம் பொய்தான் என்று சமீபத்திய விவசாயிகள் தொழிலாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் எடுத்துக்காட்டுகிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைதான் எங்கும் நிறைந்து இருக்கும். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்ற எண்ணம் கானல் நீர் போன்றது.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க