கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: “கல்லாக” கிடக்கும் நோயாளிகள் – கள ரிப்போர்ட்

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லாமல் நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு.

ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனையில் இலட்சக்கணக்கில் செலவுச் செய்து சொகுசாக படுத்து கிடக்க, ஓட்டுப் போட்ட மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத அரசு மருத்துவமனையில் அநாதையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

ஒரு அறையில் 20 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் 40-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைத்து, குப்பை வண்டியில் குப்பைகளை அடைப்பதுபோல் நோயாளிகளை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். போதிய காற்றோட்ட‌ வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. ஒரு நோயாளிக்கும் இன்னொரு நோயாளிகளுக்கும் இடையே விடப்படும் இடைவெளி கூட விடமால் நெருக்கமாக‌ படுக்கைகளை அமைந்துள்ளனர்.

குளுக்கோஸ் ஏற்றுவதற்கு சரியான உபகரணங்கள் இல்லாமல் ஜன்னல் கம்பிகளில் குளுக்கோஸ் பாட்டிலை மாட்டி தொங்க விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் கட்டிடத்தில் லிப்ட் வசதிகள் கிடையாது. மூன்றாவது மாடி என்றாலும் நோயாளிகள் நடந்துதான் செல்ல வேண்டும். உணவு வாங்குவதற்கு கூட நோயாளிகள் இறுதி தளத்திற்கு நடந்து வருகின்றனர்.


படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !


போதிய மருத்துவர்கள் வசதியும் கிடையாது. தினமும் ஒரு மருத்துவர்தான் வருகிறார். அறைகளில் அடைத்து வைக்க முடியாத நோயாளிகள், நோயாளிகளை கூட்டி செல்ல பயன்படுத்த படும் சறுக்கு படிக்கட்டு‌க்கு அருகே படுக்கை அமைத்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவொரு பேன் வசதியோ, அவசர சிகிச்சை அளிப்பதற்கு உபகரணங்கள் வசதிகளோ கிடையாது. நோயாளிகளுக்கு பாதுகாப்பு வசதி துளியும் இல்லை. நோயாளிகளின் பொருட்கள் வைப்பதற்கும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

ஒரு பெண் நோயாளியை சந்தித்து பேசியபோது, “செவிலியர்கள் சரியாக வருவது கிடையாது பலமுறை கூறியும் குளுக்கோஸ் ஏற்றுவது கிடையாது. எனக்கு ரத்தம் ஏற்ற வேண்டும், ஆனால், அதை யாரும் தயார் செய்துக் கொடுக்க முன்வரவில்லை. கொசுக்கடி மத்தியில் இந்த படிகட்டு அருகே தனியே அமர்ந்து காத்திருக்கிறேன்” என்றார்.

நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சந்தித்து பேசியபோது, “நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இதுவரை ஒரு முறைதான் எனக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். சரியான கவனிப்பு இல்லை. செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர் சொன்னால்தான் எங்களால் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருமுறைதான் மருத்துவர் வருகிறார். அதுவும் எல்லா‌ நோயாளிகளையும் பார்த்து முடிப்பதற்குள் 12 மணி ஆகிவிடுகிறது. நீங்கள் கொஞ்சம் மருத்துவரிடம் சொல்லி உடனே பார்க்க சொல்லுங்கள் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது” என்று இறுதியாக நம்மிடம் கூறினார்.

செவிலியர்களை சந்தித்து பேசியபோது, ”இங்கு செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை நாங்கள் எல்லோரையும் பார்த்து கொள்கிறோம். எல்லா நோயாளிகளையும் சந்தித்து பேசி மருந்துகளை வழங்கி வருகிறோம். ஆம், இங்கு இருக்கும் செவிலியர்கள் மனிதாபிமானத்தோடு தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் இந்த அரசோ இவர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் ஏதுமில்லை. 40-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கு கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நிலையும் இதேதான். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் இங்கு கிடையாது. இருக்கும் ஒன்று, இரண்டு பேர்தான் தலைக்குமேல் சுமைகளை போட்டுகொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார்.

2019-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 3400 செவிலியர்களை கான்ட்ராக்டர் முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு மூன்று முறை கான்ட்ராக்டர் கால‌ நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால், இவர்களுக்கு பணி நிரந்தரம் இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டு முறை போராட்டம் நடத்தியும் இவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

கொரோனா காலத்தில் தேவதைகளாக பார்க்கப்பட்ட செவிலியர்களை தற்போது குப்பை காகிதமாய் தூக்கி எறிந்துவிட்டது அரசு. கொரோனா காலத்தில் உயிரை விட்ட மருத்துவர்களுக்கும் இதுவரை சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை.


படிக்க : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை


உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, அப்பாவி மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை, ஆனால் இந்த அரசு பல நூறு கோடி செலவு செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துகிறது அரசு.

குஜராத்தில் எப்படி மோடி திரையிட்டு சேரிகளை மறைத்தாரோ அதேபோன்று சாலைகளில் எல்லாம் சதுரங்க விளையாட்டு பலகை வரைந்து ஏழைகளின் நிலை வெளியே தெரியாமல் மறைத்துள்ளது திமுக அரசு. நேப்பியர் பாலத்தை மிக பெரிதாக சதுரங்க பலகையாக மாற்றத் தெரிந்த அரசின் கண்ணுக்கு, அதன் கொஞ்ச தொலைவில் நீண்ட ஆண்டுகளாக இடிந்த குடிசையில் வாழும் சத்தியா நகர் மக்களை தெரியவில்லை.

செஸ் போட்டியில் பங்கு பெற்ற நபர்களுக்கு 3500 உணவுப் வகைகளை அரசு தயார் செய்துள்ளது. அதில் எந்த வகை உணவும் “ரிப்பீட்” ஆகாது என்றும் கூறியுள்ளது. காலை சாப்பிட்ட உணவு  மதியம் கிடைக்குமா என தவித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மத்தியில், பன்னாட்டு வீரர்களுக்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி படையல் வைத்து கொண்டிருக்கிறது திமுக அரசு!


பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க