சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் அவர்களின் நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜுன் 29-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் முன்வைத்து போராடும் கோரிக்கைகளில் மூன்று முக்கிய கோரிக்கைகளைப் பற்றி சுருக்கமாக முதலில் பார்ப்போம்.

***

1) 2009-ம் ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்டதே அரசாணை 354. அரசு மருத்துவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு ஊதியமானது நான்காம் நிலை மருத்துவ அதிகாரி என்ற பிரிவின்கீழ் வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாணையில் கூறியிருப்பது. அரசாணை 354-ஐ அமல்படுத்தாததால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவரும் ஏறக்குறைய ரூ.40,000 வரை இழக்கின்றனர்.

தற்போதைய விதிமுறைகளின் படி, மருத்துவர்கள் 20 ஆண்டுகள் மருத்துவப் பணியை முடித்த பிறகே நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்பு படிப்பு முடித்து அரசுப் பணியில் சேர 30-32 வயதாகும் நிலையில், நான்காம் நிலை மருத்துவ அதிகாரி ஊதியத்தைப் பெறும்போது 50 வயதைக் கடந்து விடுகின்றனர். இந்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அரசாணை 354 இயற்றப்பட்டது.


படிக்க : 13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!


இந்த அரசாணையை நிறைவேற்ற திமுக அரசுக்கு 300 கோடி வருடத்திற்கு செலவாகும். கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசானது, மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு செலவு செய்ய நிதி இல்லாமல் தவிக்கிறது. நாம் என்ன செய்ய?

2) கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு 25 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் மட்டும் 110 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்க தரவுகள் கூறுகின்றன.

அதிமுக அரசானது இறந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை முறையாக வழங்கவில்லை. ஆட்சிக்கு வந்த திமுக அரசும் அதிமுக விட்டுச்சென்ற பணியை தொடர்ந்தது. ஆகஸ்ட் 2021 புள்ளிவிவரப்படி 34 மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 8.5 கோடி விடுவித்து அரசாணையை திமுக அரசு வெளியிட்டதே சிறந்த சான்று. அதுவும் கூட முறையாக அமல்படுத்தப்பட்டதா என்பது வேறு விசயம்.

கொரோனா முதல் அலையில் தனியார் மருத்துவர்கள் பணிசெய்ய மறுத்தபோது தங்கள் உயிரை கொடுத்து மக்கள் உயிரைக் காப்பாற்றினார்கள் அரசு மருத்துவர்கள். ஆனால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூட போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலைதான் இங்கு நிலவுகிறது.

3) கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ல் வெளியிடப்பட்ட அரசாணை 4D2 மூலமாக மருத்துவப் பணியிடங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இந்த மறுசீரமைப்பு பணிகள் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்த விதிகளின்படி அமையவில்லை.

சான்றாக, மதுரை மருத்துவக் கல்லூரி உளவியல் துறையில் 250 மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 9 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு பணியாற்றுவது 5 ஆசிரியர்களே. இந்த நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், சென்னை எழும்பூர் மருத்துவமணையில், மயக்கவியல் துறை மருத்துவர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்வதற்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு, நோயாளிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. (செய்தி ஆதாரம், இந்து தமிழ், 17.03.2022)

ஆளும் வர்க்க ஊடகங்களால் மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள் என்ற பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடவில்லை, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்கவும் போராடுகிறார்கள் என்பதற்கு காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையே சான்று.


படிக்க : மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !


மருத்துவர்கள் தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் போராட்டம் நடத்தவில்லை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்து தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட, போராட்டக்களத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாணை 354-ஐ நிறைவேற்றுவோம் என வாக்குறுதியளித்தார்.

மருத்துவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளரை பதினைந்து தடவைக்கு மேல் போய் பார்த்தும், தர்ணா போராட்டம், கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் போன்று ஐந்துக்கு மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசானது தங்கள் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே மிச்சம்.

திமுகவானது எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏப்ரல் 16, 2020 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களுக்கு 10 இலட்சத்தை ஒரு கோடியாக உயர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

ஒரு கோடி நிவாரணமாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மருத்துவர்களுக்கு 25 இலட்சத்தை வழங்கவே, முக்குகிறார்கள்! முனங்குகிறார்கள்!. மருத்துவர்களுக்கே இவர்கள் நிவாரணம் வழங்கவில்லை என்றால் மற்ற செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு எல்லாம் நிவாரணம் வழங்கி இருப்பார்கள். அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை எல்லாம் கழிவறைக் காகிதமாக கசக்கி தூக்கி எறிவது என்பது எல்லாம் எல்லா ஓட்டுக்கட்சிகளின் வழிமுறைதானே. திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

***

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சரி, திமுக ஆட்சிக் காலத்திலும் தங்கள் கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராடி வந்துள்ளார்கள். ஏன் அவர்களின் போராட்டம் வெற்றி அடையவில்லை.


படிக்க : சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !


தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மட்டும் போராடவில்லை. செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மின்சார ஊழியர்கள் ஆகியோரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடிக் கொண்டுதான் உள்ளார்கள். ஏன் இவர்களின் போராட்டங்கள் எல்லாம் வெற்றி அடைய மாட்டிக்கின்றன?

அவை எல்லாம் அடையாளப் போராட்டங்களோடு நின்று விடுகின்றன. அரசை பணியவைப்பதை நோக்கி நகரவில்லை. அரசும் இவர்கள் சில நாட்கள் போராட்டம் செய்துவிட்டு கலைந்து விடுவார்கள் என்று நம்முடைய போராட்டங்களை கண்டுகொள்வதில்லை.

செவிலியர்களும், மருத்துவர்களும் மருத்துவத்துறையில் தான் உள்ளார்கள். அவர்கள் கூட தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றினைந்து போராடவில்லை.

மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி. வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடமும் அதுவே.


ஆயிஷா


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க