CBSE தேர்வில் 2002-ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காவி குண்டர்களின் வன்முறை தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கபரிவாரங்களை விட அதிகளவில் பதறிப்போய் அத்தகைய கேள்வி கேட்கபட்டதற்காக மன்னிப்புக்கேட்டுள்ளது சி.பி.எஸ்.இ.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி புதன்கிழமை நடைபெற்ற சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு சமூகவியல் கால 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இதுதான் :
“2002-ல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு பரவலாக, முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசாங்கத்தின் கீழ் நடைபெற்றது?”
மாணவர்கள் தேர்வு செய்ய வழங்கப்பட்ட தெரிவுகள் :
(அ) காங்கிரஸ் (ஆ) பாஜக (இ) ஜனநாயகம் (ஈ) குடியரசுக் கட்சி
தேர்வு முடிந்த சில மணிநேரங்களிலேயே,  இந்தக் கேள்வி பொருத்தமற்றது மற்றும் சி.பி.எஸ்.இ.-யின் வழிகாட்டுதல்களை மீறியது என்று சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.
படிக்க :
பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்
தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில், இது தொடர்பான முதல் டிவிட்டில், “இன்றைய 12-ம் வகுப்பு சமூகவியல் காலம் -1 தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது பொருத்தமற்றது மற்றும் வினாத்தாள்களை அமைப்பதற்கான வெளிப்புற பாட நிபுணர்களுக்கான சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதல்களை மீறுவதாக இருக்கிறது. சி.பி.எஸ்.இ. செய்த தவறை ஒப்புக் கொள்கிறது மற்றும் பொறுப்பான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தது.
தனது இரண்டாவது டிவிட்டில், “தாள் அமைப்பாளர்களுக்கான சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதல்கள், கேள்விகள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சமூக மற்றும் அரசியல் தேர்வுகளின் அடிப்படையில் மக்களின் உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கேட்கக்கூடாது என்றும் தெளிவாகக் கூறுகிறது.” என்று தெரிவித்துள்ளது சி.பி.எஸ்.இ நிர்வாகம்.
என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகமான ‘இந்தியன் சொசைட்டி’யில், ‘கலாச்சார பன்முகத்தன்மையின் சவால்கள்’ என்ற அத்தியாயத்தின் கீழ் உள்ள ஒரு பத்தியிலிருந்து இந்தக் கேள்வி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
‘தேசம் – மாநிலம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அடையாளங்கள்’ என்ற துணைப்பிரிவின் கீழ் பக்கம் 134-ல் உள்ள பத்தி பின்வருமாறு கூறுகிறது :
“எந்தவொரு பிராந்தியமும் ஒரு வகையான வகுப்புவாத வன்முறையிலிருந்து முற்றிலும் விலக்கு பெறவில்லை. ஒவ்வொரு மத சமூகமும் இந்த வன்முறையை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதிர்கொண்டுள்ளன. இருப்பினும், சிறுபான்மை சமூகங்களுக்கு விகிதாச்சார தாக்கம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. வகுப்புவாத கலவரங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்கக்கூடிய அளவிற்கு, இந்த விஷயத்தில் எந்த அரசாங்கமும் அல்லது ஆளும் கட்சியும் குற்றமற்றவர்கள் என்று கூற முடியாது.
உண்மையில், இரண்டு பெரும் அதிர்ச்சிகரமான சமகால வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சிகளின் கீழும் நிகழ்ந்துள்ளன. 1984-ல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. 2002-ல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலாக முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை பாஜக அரசாங்கத்தின் கீழ் நடந்தது.” என்று உள்ளது.
சி.பி.எஸ்.இ. தேர்வு செயல்முறை பொதுவாக இரண்டு பாட நிபுணர்களின் குழுக்களை உள்ளடக்கியது. ஒன்று வினாத்தாள் அமைப்பாளர்கள், மற்றொன்று மதிப்பீட்டாளர்கள். வினாத்தாள் அமைப்பவர்களுக்கு தங்கள் கேள்விகள் வினாத்தாள்களில் இடம்பெறுமா என்பது கூட தெரியாது. வினாத்தாள்கள் ஒவ்வொன்றையும் மதிப்பீட்டாளர் குழு பார்வையிடும். அவர்கள், கேள்விகள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதா, பாடப் புத்தகங்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கு மார்க் வெயிட்டேஜ் பிரித்து கேள்வித் தாளை தயார் செய்வார்கள். அதன்பின், வினாத்தாள்கள் இறுதி செய்யப்பட்டு சி.பி.எஸ்.இ.-க்கு சமர்ப்பிக்கப்படும்.
எனவே, சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
படிக்க :
அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குருக்களை புனிதர்கள் போல் சித்தரிக்கும் கேள்விகள் கேட்கப்பட்ட போதும், விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் குறித்த கேள்வியை கேட்டதற்கு மட்டும் சி.பி.எஸ்.இ பதறுகிறது.
2002 குஜராத் கலவரம் நடத்தியது யார்? பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் யார்? உ.பி-யில் மாட்டு இறைச்சிக்காக தலித் மக்களை தாக்குதல் மற்றும் படுகொலை செய்யும் கும்பல்கள் யார்? மாட்டு மூத்திரத்தையும் மாட்டு சாணத்தையும் மருந்து என்று கூறும் மூடர்கள் யார்? நாட்டில் இந்துமதவெறியை தூண்டிவிட்டு கலவரம் செய்பவர்கள் யார்? இன்னும் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன. இதற்கு வரலாறு பதில் சொல்லும் !

சந்துரு
செய்தி ஆதாரம் :   த குயிண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க