பாசிச மோடி கும்பல் அதிகாரத்திற்கு வந்து நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய பின்னர் புற்றீசல்களைப் போலப் பெருகி மாணவர்களின் வதைமுகாம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன நீட் பயிற்சி மையங்கள். அவ்வாறான பயிற்சி மையங்களில் ஒன்றுதான் நெல்லையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜல் நீட் அகாடமி (JAL NEET Academy).

இந்த மையத்தின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த ஜலால் அகமது. இவர் கட்டுப்பாடு என்கிற பெயரில் மாணவர்களைச் சித்திரவதை செய்வதாக வீடியோ ஆதாரத்துடன் அமீர் உசேன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் ஜலால் மாணவர்களைப் பிரம்பால் அடிப்பதும், மாணவியின் மீது செருப்பை வீசி தாக்குவதுமான சிசிடிவி காட்சி வெளியானது. இதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று மாணவர்களின் காயங்களைச் சோதனை செய்து விசாரணையும் நடத்தியது. பயிற்சி மையத்தின் உரிமையாளரான ஜலால் அகமது தலைமறைவானார்.

உரிமையாளர் ஜலால், மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் தூங்கினால் அவர்கள் எதிர்காலம் கெட்டுப் போய்விடும் என்கிற அக்கறையினால் பிரம்பால் அடிக்கவில்லை. ஒழுக்கம் மீறுகிறார்கள் என்பதற்காக செருப்பை எடுத்து வீசவில்லை. மாணவர்கள் தூங்கி அதனால்  தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் பயிற்சி மையத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து தன்னுடைய லாபம் குறைந்து விடும் என்பதனாலேயே மாணவர்களுக்கு இந்த தண்டனையை அளித்திருக்கின்றனர்.

மேலும் சமூக நலத்துறை நடத்திய ஆய்வில்  முறையான அனுமதியின்றி மாணவிகள் தங்கும் விடுதி இயங்குவது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி நெருக்கமான வகுப்பறையில்  அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருப்பது, போதுமான கழிப்பறை வசதி இல்லாதது, ஆபத்துக் காலத்தில் உபயோகிக்கக் கூடிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதது.. இப்படி பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்திருப்பது தற்போதைய விசாரணையில் வெளிவந்துள்ளது.


படிக்க: புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!


இத்தனை நடந்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகாரளிக்க முன்வரவில்லை. வெளியூர் மாணவர்களைத் தவிர உள்ளூர் மாணவர்களைக் கொண்டு வழக்கம்போல் பயிற்சி மையம் இரண்டொரு நாளில் இயங்கத் தொடங்கியது. வகுப்பறையில் தூங்கியதால் அடித்தார், இது சரிதானே என பெற்றோர்கள் நினைத்திருக்கலாம் என்பதைத் தாண்டி தங்களது வாரிசுகளை மருத்துவராக்கியே தீர வேண்டும் என்கிற வெறியே முதன்மையானதாகத் தெரிகிறது. பெற்றோர்களின் இந்த எண்ணத்தைப் பயன்படுத்தி நெல்லையைச் சுற்றியுள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்கிக் கொண்டு நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

தங்கள் கவுரவத்திற்காகப் பிள்ளைகளை இதில் படிக்க வைக்கும் பெற்றோர்களே இதில் அதிகம். இதனால்தான் பயிற்சி மையத்தில் தங்கள் பிள்ளைகள் மீதான தாக்குதல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதையும் பொருட்படுத்தாமல், தங்கள் பிள்ளைகள் சுயமரியாதை இழந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அதே பயிற்சி மையத்தின் காலில் அவர்களை விழவைக்கிறது.

சமூக நலத்துறையும் தன் பங்கிற்கு அனுமதி பெற்று மாணவிகள் விடுதியை நடத்திக் கொள்ளுமாறு நோட்டீஸ் அனுப்பி, பயிற்சி மையத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் அநீதி இழைத்திருக்கிறது.

இங்கு மட்டுமல்ல ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா (Kota) எனும் நகரத்தில் நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் பல இயங்கி வருகின்றன. அதிலும் இவ்வகையான கொடுமைகள், மன உளைச்சலால்  2023ஆம் ஆண்டில் 8 மாதங்களில் மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 100 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் தற்கொலைகளைத் தடுக்க கோட்டா நகரின் நிர்வாகம் விடுதியில் மின்விசிறிகளுக்கு இரும்பு கம்பி வலை போடவும், ஸ்ப்ரிங் பொருத்தப்பட்ட மின்விசிறிகளை உபயோகிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சி தங்களது லாபத்தை உயர்த்திக் கொள்கின்றன இதுபோன்ற பயிற்சி மையங்கள்.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை! | வெளியீடு


தமிழ்நாட்டில் அனிதா முதல் ஜெகதீசன் வரை எண்ணற்றோர் நீட் தேர்வால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒற்றைக் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தகுதி, நுழைவுத் தேர்வு என்பதன் பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பொசுக்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது பாசிச மோடி கும்பல். மருத்துவக் கல்வியை கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் சதி இதன் பின்னால் அடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தங்கள் உயிரைக் கொடுத்து இரத்தம் குடிக்கும் இந்த கொடிய நீட் தேர்வை ஒழித்துக்கட்ட முயன்றிருக்கிறார்கள் நம்முடைய அனிதாக்கள். இந்த நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்ட வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இத்தேர்வை ஒழிக்க வேண்டுமானால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கார்ப்பரேட்டுகளையும் நீட் பெயரில் மாணவர்களைக் காவு வாங்கும் பாசிச மோடி கும்பலை வீழ்த்துவது முன்னிபந்தனையாக உள்ளது.


களச்செய்தியாளர்,
நெல்லை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க