சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கீழ்முகம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆனந்தி தம்பதியினருக்கு அகிலா(20) மற்றும் புனிதா(19) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஆனந்தி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் உதவியாளராக வேலை செய்து கொண்டு இருவரையும் படிக்க வைத்துள்ளார்.

அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022 – 2023 ஆம் ஆண்டு எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற பின்பு “மருத்துவராக வேண்டும்” என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். நீட் (National Eligibility Entrance Test) தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் புனிதாவிற்கு மருத்துவ படிப்பில் (MBBS) சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனையடுத்து பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அதிலும் மாணவிக்கு அரசு ஒதுக்கீட்டில் கூட மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைக்காத நிலையில் மனமுடைந்து செவ்வாயன்று (அக்டோபர் 8) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


பாசிச மோடி அரசானது 2017 ஆம் ஆண்டு முதல் வலுக்கட்டாயமாக நீட் தேர்வைத் திணித்து மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைத்து அனிதா தொடங்கி இன்று வரை பல படுகொலைகளைச் செய்துள்ளது.

ஆனால் திமுக அரசானது 2021 தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சட்டப்போராட்டத்தின் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நீட் தேர்விற்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வேலையினையே செய்து வருகிறது.

ஒருபுறம் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசானது மறுபுறம் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சியளிக்கிறது. தனியார் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்க அனுமதியளிக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நலன்களுக்காகச் சேவை செய்து வருகிறது.

திமுக அரசு கூறுவதைப் போன்று சட்டப் போராட்டத்தின் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. எனவே மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க