“மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடக்கும் ஊழலும் முறைகேடுகளும் ஒழிக்கப்படும்; தரமான மருத்துவர்கள் உருவாக இதுவே சிறந்த வழி; அதுதான் ஒரே நாடு – ஒரே தேர்வு” என நீட் தேர்வுக்கு நியாயம் கற்பித்தது மோடி கும்பல். ஆனால், ஆண்டுதோறும் அரங்கேறி வந்த மோசடிகள், ‘தரமான – நேர்மையான’ நீட் தேர்வின் முகத்திரையைக் கிழித்து வந்தன. இவ்வாண்டில் நீட் மோசடிகள் ஒரு புதிய உச்சத்தை எட்டி விட்டன. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியே நீட் வேண்டாம் என சொல்லுமளவுக்கும், வட இந்திய மாணவர்களே நீட்டுக்கு எதிராகப் போராடும் நிலையும் உருவாகி விட்டது.
எவ்வளவு அம்பலமானாலும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மோடி கும்பல். தொடர்ந்து மோசடிகளைச் செய்வதன் மூலம் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது. “சிற்சில இடங்களில் முறைகேடு நடந்திருக்கலாம், அதெல்லாம் பெரிய விசயமில்லை” என உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்கிறது ஒன்றிய அரசு. மேலும், கொதித்தெழுந்து போராடும் மாணவர்களின் கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்க்காமல், “உங்களால் என்ன செய்ய முடியும்?” என மக்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
தொடர் மோசடிகள், முறைகேடுகள் அம்பலமாகிவிட்ட நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை நாடு தழுவிய அளவில் மாணவர்கள் எழுப்பி போராடத் தொடங்கி விட்டனர்.
அதே சமயத்தில், உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்து நீதி வழங்கிவிடாதா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, மறுதேர்வு நடத்தக் கூட தயாராக இல்லை.
“அவ்வாறு நடத்தினால், நேர்மையாக எழுதிய மாணவர்கள் லட்சக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள்; எனவே, மோசடி செய்தோரை மட்டும் தனியே கண்டுபிடிக்க வேண்டும்” என உத்தரவு போடுகிறது. இதன் மூலம் நீட்டை தொடரச் செய்வதும், திரைமறைவுக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுமே அதன் நோக்கமாக உள்ளது.
படிக்க: நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி
இந்நிலையில், பல தேர்வு மையங்களில் நடந்த மோசடிகள், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு என அனைத்தின் பின்னணியிலும் உள்ள ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலையும், கோச்சிங் சென்டர்கள், தேசிய தேர்வு முகமை என்னும் தனியார் அமைப்பு ஆகியவற்றின் பகல் கொள்ளைக்கு முடிவு கட்டுவது எப்படி என்ற கேள்விதான் நம் முன்னால் நிற்கிறது. அதற்கு இந்த வெளியீடு வழிகாட்டும், துணை நிற்கும்.
நீட் தேர்வு மோசடிகளை எதிர்த்து இந்தியா முழுவதும் மாணவர் போராட்டங்களும், விவாதங்களும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அப்போராட்டங்களையும் விவாதங்களையும் சரியான திசையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியுள்ளது. அதற்கு உதவும் விதமாக, “நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ் – பாஜக, கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் ஜூலை மாத இதழில் வெளிவந்த கட்டுரையை, எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக சிறு வெளியீடாகக் கொண்டு வருகிறோம். இலட்சக்கணக்கான மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் இவ்வெளியீட்டைக் கொண்டு சேர்க்க, மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் உதவிபுரிய வேண்டுகிறோம்.
நீட் உள்ளிட்ட அனைத்து வகையான மோசடிகள், பாசிச ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் ஆணிவேரான பாசிசக் கும்பலை ஒழித்துக்கட்ட மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம். இதுவொன்றே ஒரே திறவுகோல் என்பதை உணர்ந்து களத்திற்கு வருவோம், ஒன்றிணைந்து செயல்படுவோம்.
வெளியீடு:
நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!
வெளியிடுவோர்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு
முதல் பதிப்பு: ஜூலை 2024
தொடர்புக்கு: 9444836642
நன்கொடை: ₹10
G-Pay No: 9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube