நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு

நீட் என்பது ஒரு எதார்த்தம் என்று அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டுவிட்ட அனைவருக்கும் தனது அடாவடித்தனத்தின் மூலம் பாடம் கற்பித்திருக்கிறது இந்திய அரசு.

மிழகம் முழுவதும் சுமார் 1.07 லட்சம் மாணவ மாணவிகள் மே 6-ஆம் தேதியன்று மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியது சி.பி.எஸ்.சி.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ”தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்க தங்களுக்கு நேரமில்லை” என சி.பி.எஸ்.சி. வாதாடியதையும், அதை ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். இதனை வினவின் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

தேர்வு மைய ஒதுக்கீட்டால் கடுமையான உளவியல் தாக்குதல்களுக்கு ஆளான தேர்வெழுதச் சென்ற மாணவ மாணவிகளைச் சோதனைகள் எனும் பெயரில் மேலும் சித்திரவதை செய்துள்ளனர். மாணவர்கள் கொண்டு வந்த கைப்பையில் இருந்து, கைக் கடிகாரம், கண் கண்ணாடி, தண்ணீர் பாட்டில் வரை பிடுங்கி வைத்துள்ளனர்.

தூரப்பார்வை உள்ள மாணவர்கள் கண்ணாடி இல்லாமல் தேர்வெழுத முடியாமல் தவித்துள்ளனர். மாணவிகளின் காதணி, மூக்குத்தியில் இருந்து வளையல் துப்பட்டா வரை பறித்துள்ளனர்.

பாவாடைச் சட்டை தாவணியுடன் தேர்வெழுத வந்த மாணவிகளின் தாவணியைக் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். ஆண் ஆதிகாரிகள் சூழ்ந்து நிற்க, பெண்களின் தலையை கலைப்பது, மேலாடையை உருவுவது என உளவியல் ரீதியில் சித்திரவதை செய்துள்ளனர்.

நரபலி கேட்கும் நீட் !

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் மகாலிங்கத்துக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையம் எர்ணாகுளத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரசு நூலத்தில் நூலகராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணசாமி, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தனது மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் சென்றுள்ளார்.

தெரியாத ஊருக்கு அலைய நேர்ந்த அவலமும், இதனால் தனது மகனின் கவனம் சிதறக்கூடுமோ என்கிற மன உளைச்சலுமாகச் சேர்ந்து அவரை மாரடைப்பு மரணத்துக்கு தள்ளியிருக்கிறது.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (வலது) , சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன்

கஸ்தூரி மகாலிங்கம் தேர்வெழுதி முடிக்கும் வரை அவனது தந்தையின் மரணச் செய்தி சொல்லப்படவில்லை. தேர்வெழுதி வெளியே வந்த மகாலிங்கம், “அப்பா எங்கே” எனக் கேட்டு கதறி அழுதது தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகி நெஞ்சை உலுக்கியது.

இன்னொரு சம்பவத்தில் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் என்கிற கூலித் தொழிலாளி நீட் தேர்வெழுதுவதற்காக தனது மகள் ஐஸ்வரியாவை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தேர்வெழுதி முடித்து விட்டு வெளியே வந்த ஐசுவர்யா, வினாத்தாள் மிக கடுமையாக இருந்ததாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கண்ணன்,  மகளோடு ஊர் திரும்பும் வழியிலேயே மாரடைப்பில் இறந்து போயிருக்கிறார்.

வெறும் நிர்வாகச் சீர்கேடல்ல

வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது மட்டுமின்றி, தமிழகத்துக்குள்ளேயே பல்லாயிரம் மாணவர்களுக்கு வெவ்வேறு வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது சி.பி.எஸ்.இ.

மாவட்டம் விட்டு மாவட்டம் பயணித்து அங்கேயே ஓட்டல்களில் அறையெடுத்து தங்கி சாவதானமாக தேர்வு மையத்துக்குச் செல்ல பலருக்கும் பொருளாதார வசதி இல்லை.

பின் தங்கிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் நேரடியாக தேர்வு மையத்துக்குச் செல்லும் திட்டத்தோடு ஊரில் இருந்து கிளம்புகின்றனர். ஆனால், பல மாணவர்களை ஓரிரு நிமிட தாமதத்திற்கே தேர்வெழுத அனுமதிக்காமல் திருப்பியனுப்பி உள்ளனர் அதிகாரிகள்.

மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்தைச் சுற்றிலும் போலீசாரைக் குவித்து ‘பாதுகாப்பு’ ஏற்பாடுகளையும் செய்து மாணவர்களின் தேர்வெழுதும் மனநிலையைக் குலைத்துள்ளனர். சேலத்திலும் மதுரையிலும் தமிழில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

பல தேர்வு மையங்களின் முன் பெற்றோர் போராடியதற்குப் பின் பல மணிநேரங்கள் கழித்து தமிழ் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மெய்யனூர் தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த மாணவர்கள் தமிழ் வினாத் தாள் வருவதற்காக பல மணிநேரம் காத்திருந்து பசிக்கும் வயிற்றோடு தேர்வெழுதியுள்ளனர்.

ஓசூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெங்களூருவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வெழுதச் சென்ற மாணவர்களின் முழுக்கைச் சட்டைகளைக் கிழித்து விட்டு உள்ளே அனுப்பியுள்ளனர். உடன் வந்த பெற்றோர் காத்திருக்கவும் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்பதால் பெற்றோர் மணிக்கணக்கில் தெருவோரத்தில் வெயிலில் காத்திருந்துள்ளனர்.

மேலும், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களைக் கண்டுபிடித்து நேரத்துக்குச் செல்வதிலும் ஏராளமாகச் சிரமப்பட்டுள்ளனர் பெற்றோர். தேர்வெழுதச் செல்லும் தங்கள் பிள்ளைகளை உடனழைத்துக் கொண்டு பதற்றத்தோடு அலைந்து திரிந்து தேர்வு மையத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவையெல்லாம் வெறும் நிர்வாக குறைபாடுகள் என்று  காட்டுவதற்கு பாஜக வினர் பெரிதும் முயற்சிக்கின்றனர். ஆனால் எந்த வட இந்திய மாநில மாணவர்களும் தென் மாநிலத்துக்கு தேர்வெழுதச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படவில்லை. இது தமிழக மக்கள் மீது மோடி அரசு திட்டமிட்டே ஏவியிருக்கின்ற உளவியல் தாக்குதல்.

நீட் என்ற பெயரில் தமிழகம் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளைப் பிடுங்கிக் கொண்டது மட்டுமின்றி, தமிழகத்து மாணவர்களை தேர்வுக்காக தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கவும் செய்திருக்கிறது டில்லி. இந்த திமிர்த்தனம் சி.பி.எஸ்.இ நிர்வாகத்துக்கு மட்டுமே உரியதல்ல. உச்ச நீதிமன்றத்தின் தமிழ் வெறுப்பும், இந்தி தேசிய ஆதிக்கத் திமிரும் அதற்கு சற்றும் குறைந்ததல்ல.

அனிதாவின் மரணத்துக்கும் ஐஸ்வர்யா என்ற மாணவியுடைய தந்தையான கூலித்தொழிலாளியின் மரணத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நீட் என்பது ஏழைகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல். அதனை எதிர்த்து நிற்கின்ற தமிழ்ச் சமூகத்தின் மீதான தாக்குதல்.

நீட் என்பது ஒரு எதார்த்தம் என்று அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டுவிட்ட அனைவருக்கும் தனது அடாவடித்தனத்தின் மூலம் பாடம் கற்பித்திருக்கிறது இந்திய அரசு.

– வினவு செய்திப்பிரிவு

1 மறுமொழி

  1. நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் பேசி அவர்களின்/குடும்பத்தாரின் மனநிலை, போன வருடம் நீட் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது அவர்கள் என்ன நினைத்தார்கள், இப்போது என்ன நினைக்கிறார்கள், தேர்வுக்காக எப்படி தயாராகிறார்கள், கோச்சிங் கிளாஸ்சுக்கு எவ்வளவு பீஸ் அழுதார்கள், இந்த தேர்வுக்குப்பின்னாலுள்ள அரசியலை புரிந்துள்ளார்களா இவற்றை பற்றிய கருத்துக்களுடன் ஒரு விலாவாரியான கட்டுரை வந்தால் சிறப்பாக இருக்கும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க