அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 38
பொருளியலாளர் பிராங்க்ளின்

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆடம் ஸ்மித் தன்னுடைய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் வகுத்துரைத்தார். ஆனால் அவருக்கு முன்பே சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் முழுவதும் அநேகமாகத் தெளிவில்லாத ஊகங்கள் என்ற வடிவத்தில் அதன் மூலத்தைப் பலருடைய எழுத்துக்களில் காண முடியும். அரசியல் பொருளாதாரத்தில் பிராங்க்ளின் அதிகமான அளவுக்குப் பெட்டியைப் பின்பற்றியவர் என்றுதான் கூற வேண்டும்.
முதல் தடவை அவர் லண்டனுக்கு வருகை தந்த பொழுது பெட்டியின் புத்தகங்களைப் படித்திருக்கலாம். ஒருவேளை டாக்டர் மான்டெவில் துறுதுறுப்பான கேள்விகளைக் கேட்ட பத்தொன்பது வயது இளைஞனிடம் அவற்றைப் படிக்குமாறு சிபாரிசு செய்திருக்கலாம். சீப்ஸைட் என்ற இடத்தில் “கொம்புகள்” என்ற மதுக்கடையில் தேனீக்களின் கதையை எழுதிய டாக்டர் மான்டெவில் தனக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக பிராங்க்ளின் எழுதியிருக்கிறார்.
சில அறிஞர்கள் பிராங்க்ளினுடைய கருத்துக்களை அவருடைய சம காலத்தவர்களில் வயதால் மூத்தோரில் ஒருவரான டேனியல் டிஃபோவோடு – குறிப்பாக அவர் எழுதிய திட்டங்களைப் பற்றிய கட்டுரையோடு தொடர்புபடுத்துகிறார்கள்.
பல ஆராய்ச்சியாளர்கள் பிராங்க்ளின் மீது பெட்டி தாக்கம் செலுத்தியதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் பிராங்க்ளின் எழுதிய முதல் பொருளாதாரக் கட்டுரையை (காகிதப் பணத்தின் தன்மை, அவசியத்தைப் பற்றி ஒரு எளிமையான ஆராய்ச்சி) பெட்டியின் நூல்களோடு ஒப்பிடுகிறார்கள்.
1751-ம் வருடத்தில் பிராங்க்ளின் மக்கள் தொகை இயலை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை பொருளாதார இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இக்கட்டுரையிலும் பெட்டியின் தாக்கத்தைக் காண முடியும். அவருடைய கட்டுரைகளில் பிராங்க்ளின் அமெரிக்காவின் மாநிலங்களில் நடைமுறையில் இருந்த நிலைமைகளைப் பயன்படுத்தி வெளித்தலையீடு இல்லாமல் ”இயற்கையான நிலைமையில்” ஒவ்வொரு இருபத்தைந்து வருட காலத்திலும் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க முற்படுகிறது என்ற சுவாரசியமான கருத்தை வெளியிட்டார். பிற்காலத்தில் மால்தஸ் இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உற்பத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டிலும் ஆபத்தான வகையில் குறைவாகவே இருக்கும் என்றார்.

எனினும் மால்தசின் கருத்துக்களில் இருந்த வரலாற்று ரீதியான நம்பிக்கையின்மைக்கும் பிராங்க்ளினுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லை. அதோடு பகுத்தறிவுக்குப் பொருத்தமான வகையில் சமூகத்தை அமைத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை ஏராளமான அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமாகப் பெருக வேண்டும், அதுவே அந்தப் புதிய கண்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான முன் தேவை என்றும் கருதினார்.
கிரேட் பிரிட்டனைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: “… இந்த தீவினால் இப்போதுள்ள எண்ணிக்கையினரைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பேர்களை – அவர்களை வேலையில் ஈடுபடுத்த முடியுமென்றால் – காப்பாற்ற முடியும்.(1)
பெட்டியைப் போலவே பிராங்க்ளினும் அதிக ஸ்தூலமான வேறொரு பிரச்சினையைப் பற்றி வாதாடுகிற பொழுது உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வகுத்துரைத்தார். அவர் பிடிவாதமிக்க குவேக்கர்களின் மூளையில் காகிதப் பணத்தை உபயோகிக்கும் கருத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அன்று விலையுயர்ந்த உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தபடியால் இது குறிப்பிடத்தக்க முக்கியமான பிரச்சினையாக இருந்தது.
படிக்க:
♦ பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
இதைச் செய்வதற்கு அவர் முதலில் உலோகப் பணத்தை, அது வகித்த உயர்வான இடத்திலிருந்து, கீழே இறக்க வேண்டும். இங்கே அவருடைய வாதம் பெட்டியின் கருத்துக்களைக் காட்டிலும் ஜான் லோவின் உணர்ச்சிமிக்க வாதங்களை நினைவுபடுத்துகிறது. மதிப்பின் உண்மையான அளவுகோல் பணம் அல்ல, உழைப்பே என்பது பிராங்க்ளினுடைய முக்கியமான கருத்தாகும். அவர்பின் வருமாறு எழுதுகிறார். ”வெள்ளியின் மதிப்பும் மற்ற பொருள்களின் மதிப்பும் உழைப்பின் மூலமாகவே அளக்கப்படும். ஒரு மனிதன் தானிய உற்பத்தியிலும் இன்னொருவன் வெள்ளியை வெட்டியெடுத்து அதை சுத்தப்படுத்துவதிலும் உழைப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்தின் அல்லது வேறு ஏதாவது காலப்பகுதியின் முடிவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த தானியத்தையும் வெள்ளியையும் எடுத்துக் கொள்வோம். ஒன்று மற்ற பொருளின் இயற்கையான விலையாகும்; ஒன்று இருபது புஷல் அளவும் மற்றது இருபது அவுன்ஸ் அளவும் இருக்குமானால், ஒரு அவுன்ஸ் வெள்ளி ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்த உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறது. முன்னைக் காட்டிலும் அருகில் அதிக சுலபமாக வெட்டி எடுக்கக் கூடிய அல்லது வெள்ளி அதிகமாகக் கிடைக்கின்ற சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு நபர் முன்பு இருபது அவுன்ஸ் வெள்ளி கிடைப்பதற்குச் செலவிட்ட அதே உழைப்புக்கு இப்பொழுது நாற்பது அவுன்ஸ் வெள்ளி கிடைக்கிறது. முன்பு இருபது புஷல் தானியத்தை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட அதே உழைப்பு இப்பொழுதும் தேவைப்படுகிறது. அப்படியானால் இரண்டு அவுன்ஸ் வெள்ளியின் மதிப்பு ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான அதே உழைப்பைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு புஷல் தானியம் முன்பு ஒரு அவுன்ஸ் வெள்ளிக்கு மலிவாகக் கிடைத்தது போல இப்பொழுதும் இரண்டு அவுன்ஸ் வெள்ளிக்குக் கிடைக்கும்.”(2)
மார்க்ஸ் தம்முடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தில் இந்தப் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், விஞ்ஞானத்துறையில் பிராங்க்ளினுடைய சேவைகளை மார்க்ஸ் இந்தப் புத்தகத்தில் முதல் தடவையாக, மிகவும் முழுமையாக வர்ணிக்கிறார். பிராங்க்ளின் மதிப்புத் தத்துவத்தை , ”நவீன அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விதியை வகுத்துக் கொடுத்தார்”(3) என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இந்தப் பிரபலமான அமெரிக்கரின் பங்கினைப் பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயத்தை அவர் எழுதிய மூலதனத்தில் மறுபடியும் வலியுறுத்துகிறார். அதில் ”வில்லியம் பெட்டிக்குப் பிறகு மதிப்பின் இயல்பை ஊடுருவிக் கண்ட முதல் பொருளியலாளர்களில் ஒருவர்” (4) என்று பிராங்க்ளின் பாராட்டப்படுகிறார்.
முதலாவதாகவும் முதன்மையாகவும் பெட்டியின் சிறப்பான கருத்துக்களைத் திறமையோடு பரப்புவதும் பிரச்சாரம் செய்வதும் ஸ்தூலமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதும் அவசியமாயிற்று. பிராங்க்ளின் இந்தப் பணியைத்தான் செய்தார். ஆனால் அவர் அதோடு நின்று விடவில்லை. ஸ்தூலமான உழைப்பின் பல வகைகளும் சமமானவை, பொதுவான தன்மையைக் கொண்டவை என்ற கருத்துக்கு பெட்டியைக் காட்டிலும் மிக நெருக்கமாக பிராங்க்ளின் வந்தார். அவர் பெட்டியைப் போல விலையுயர்ந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் உழைப்பு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கருதவில்லை. இதற்கு மாறாக, அவர் தன்னுடைய செய்முறை நோக்கத்தைப் பின்பற்றிச் செல்லும் பொழுது, மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து பார்க்கும் பொழுது இது உழைப்பின் வேறு வகைகளிலிருந்து கோட்பாட்டளவில் சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்தார்.
ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் உழைப்பின் இரட்டை அம்சத்தை விளக்கும் வகையில் பொருளியல் விஞ்ஞான சிந்தனையில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இதன் தொடர்பாக, அரசியல் பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபின் மொத்த வளர்ச்சியையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது நீளமான, கடினமான பாதையாக இருந்தது. இளைஞரான பிராங்க்ளின் இந்தப் பாதையில் அடியெடுத்து வைத்தார்.
படிக்க:
♦ பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
காகிதப் பணத்துக்கு ஆதரவாக பிராங்க்ளின் நடத்திய போராட்டத்துக்கு அரசியல் அடிப்படை மட்டுமல்லாமல் வர்க்க அடிப்படையும் இருந்தது. ஒரு பக்கத்தில் அது குடியேற்ற நாடுகளின் மீது கட்டுப்படுத்துகின்ற உலோகப் பண முறையைக் கண்டிப்பான கட்டுப்பாடுகளோடு திணித்து அதன் மூலமாக அவற்றின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்த இங்கிலாந்தின் வல்லரசுக் கொள்கையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில் கடன் கொடுத்த பணத்தை உறுதியான கெட்டிப் பணத்தில் பெற விரும்பிய வட்டிக் கடையினர், வணிகர்களுக்கு எதிராக விவசாயிகள், நகரங்களிலுள்ள சாதாரண மக்களின் நல உரிமைகளுக்கு அது ஆதரவாக இருந்தது. வட்டிக் கடையினர் காகிதப் பணத்தைப் “பொய்யான” பணம் என்றும் அதற்கு எதிராக உலோகப் பணத்தை ”மெய்யான” பணம் என்றும் கூறினார்கள்.
வெள்ளியைப் பெறுவதற்காக (குடியேற்றங்களில் தங்கம் அநேகமாக இல்லை) கடன்காரர்கள் புதிய கடன்களை வாங்க வேண்டியிருந்தது அல்லது குறைவான கூலிகளை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. பணத்தைப் பற்றிய இந்த விவாதத்தில் அடங்கியிருந்த வர்க்க நலன்களை பிராங்க்ளின் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதை அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களில் காண முடியும்.
உலோகப் பணத்தை விமர்சித்த வேகத்தில் பிராங்க்ளின் வெகுதூரம் போய்விட்டார்; எனவே அவருடைய வாதங்களில் தத்துவரீதியில் பலவீனமான அம்சங்கள் இடம் பெற்றன. மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து வெள்ளிக்கும் தானியத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று சரியாக முடிவு செய்த பிறகு பிராங்க்ளின் பரிவர்த்தனையில், பண்டச் செலாவணியில் அவை வகிக்கின்ற பாத்திரத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் முடிவு செய்தார். அவர் பணமாகப் பயன்படுகின்ற பண்டத்தின் தனி வகையான சமூகப் பாத்திரத்தைப் புறக்கணித்தார்.
அந்தக் காலத்தில் அமெரிக்காவில் வெள்ளி எக்காலத்துக்கும் உரிய சம மதிப்பாக இருந்தது. அதாவது, நீண்ட பரிணாமத்தின் விளைவாக மற்ற எல்லாப் பண்டங்களிலிருந்தும் தனித்து நிற்கின்ற ஒரு பண்டமாக இருந்தது. தானியம் அப்படிப்பட்ட பண்டமல்ல. மற்ற பண்டங்களைப் போலவே அதற்கும் அதன் மதிப்பை எடுத்துரைக்க வெள்ளி -உண்மையான பணம்- அவசியமாக இருந்தது . முதலாளித்துவப் பண்டப் பொருளாதாரத்தில் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு வேறு ஒரு வழியும் கிடையாது. இந்த அர்த்தத்தில் வெள்ளி ஒரு “விசேஷமான” பண்டமாக இருந்தது. வெள்ளியின் பிரதிநிதியாக, மாற்றுப் பொருளாக மட்டுமே காகிதப் பணம் இருக்க முடியும். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் அவற்றின் செலாவணி பொருளாதார ரீதியில் ”சட்டபூர்வமானதாகும்”.
பணம் ஒரு விசேஷமான சமூகக் கடமையை நிறைவேற்றுகிறது. மற்ற எல்லாப் பண்டங்களையும் போல இல்லாமல் அது சூக்குமமான உழைப்பின் நேரடியான, எக்காலத்துக்கும் உரிய கண்கூடான உருவமாக இருக்கிறது. அதன் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு இன்னொரு பண்டத்தின் உதவி அதற்குத் தேவையில்லை; மற்ற பண்டங்களின் மதிப்பை அது எடுத்துரைக்கிறது. பணத்தின் தோற்றமும் பரிணாமமும் மனிதனின் விருப்பத்தோடு சம்பந்தமில்லாமல் புறநிலையான, தானாகவே தோன்றி வளர்ந்த நிகழ்வுப் போக்காகும். எனினும் பிராங்க்ளின் பணத்தை ஒரு ”செயற்கையான” கண்டுபிடிப்பாக, பரிவர்த்தனைக்கு உதவுகின்ற தொழிற்சாதனமாகக் கருதலானார். எனவே உலோகப் பணத்தை பணத்தின் வளர்ச்சியின் தர்க்கரீதியான வடிவமாக அவர் நினைக்கவில்லை; அந்நிய சக்தியினால் திணிக்கப்பட்ட செயற்கையான பொருளாக மட்டுமே கருதினார்.
கடைசியாகப் பார்க்கும் பொழுது, அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி பிராங்க்ளின் செய்த ஆராய்ச்சியின் குறைகளுக்கு அவர் ஆராய்ந்த சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் குறைவாக வளர்ச்சியடைந்திருந்த நிலையே காரணமாகும். ஆனால் வெகு தொலைவிலுள்ள மாகாண நகரமான பென்சில்வேனியாவில் அவர் வெளியிட்ட பிரசுரம், ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்துக்கு அரை நூற்றாண்டுக் காலம் முந்தியிருப்பதை நினைத்துக் கொண்டால் அந்த மாபெரும் அமெரிக்கரின் சாதனைகளை சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள முடியும்.
இருபத்து மூன்று வயதே நிரம்பிய பிராங்க்ளின் தன்னுடைய பிரசுரத்தில் வெளியிட்ட குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. அவர் பிற்காலத்தில் எழுதிய நூல்களில் மதிப்பின் தன்மையைப் பற்றிய பிரச்சினையை அதனளவில் ஒருபோதும் எழுப்பவில்லை; ஆனால் அதைப் பற்றி எழுதுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பல்வேறு வழிகளில் அதை ஆராய்ந்து எழுதினார். சில சமயங்களில் அதே உழைப்புத் தத்துவத்தின் அடிப்படையிலும் சில சமயங்களில் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த பிசியோகிராட்டுகளின் போதனையின் உணர்ச்சியை ஒட்டியும் சில சமயங்களில் அக நிலையான வகையிலும் எழுதினார். பரிவர்த்தனையில் சமத்தன்மை என்பது இல்லை, ஏனென்றால் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு நபரும் அதிகமான அகமதிப்பை, அதிகமான திருப்தியை அடைகின்றார் என்பது அகநிலைக் கருத்தாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) B, Franklin, The Works of Benjamin Franklin, Vol. 3, London, 1806, p. 115.
(2) B. Franklin, The Works, Boston, 1840, Vol. II, p. 265.
(3) K. Marx, A Contribution to the Critique of Political Economy, London, 1971, p. 55.
(4) K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 57.
தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983