‘கருப்புப் பணக்காரர்களுக்கு எதிரான போர்’ என்று சென்ற வருடம் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி (இப்படித்தான் இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை விளிக்கிறார்கள்) அறிவித்தது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான கொள்கை முடிவு. பேரழிவுமிக்க அணுஆயுதம் வெடிக்கும்போது ஏற்படும் கதிரியக்கம்போல் வெகுஜனங்களின் எல்லாப் பகுதியினரையும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு வகைகளில் ஒவ்வொரு நாளும் தாக்கி வருகிறது அந்த முடிவு. அவர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை அவர்களே எடுத்துப் பயன்படுத்தமுடியாத கொடுமைக்கு நடுவிலும்கூட, துணிச்சல்கார மோடி நம்மைச் சுரண்டி கொழுத்திருக்கும் பணக்காரர்களின் அடிமடியில் கை வைத்துவிட்டார், இனியெல்லாம் சுகமே என்று இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் பாமரர் பலர்.
அவர் நடத்திய ‘துல்லியத் தாக்குதல்’ பெரும்பான்மை மக்களின்மீது தொடுக்கப்பட்டது. கருப்புப் பணம் என்பது கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளாக சினிமாத்தனமாக சுவரின் மீதுள்ள ஓவியத்தைச் சுழற்றும்போது திறக்கும் கதவுக்குப்பின் சிவப்பு வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதல்ல; அவை நிலமாக, தங்கமாக மாற்றப்பட்டுவிட்டன; அல்லது ஹவாலா மற்றும் பிற வர்த்தக மோசடி நடைமுறைகளின் மூலமாக வரியில்லா சொர்க்கபுரிகளுக்குச் சென்று மீண்டும் அன்னிய மூலதனமாக அரசு விரிக்கும் சிவப்புக் கம்பளங்களின் மீது நடந்துவந்து நம் பொருளாதாரத்திற்குள் வந்துவிடுகின்றன.
கருப்புப் பணம் உற்பத்திக்கு உதவிசெய்யும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அமைப்புகளை ஏற்படுத்தி, சட்டங்களை வளைத்தும் அவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கம்பெனிகளின் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரி ஏய்ப்புச் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுத்துப் பிழைக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வக்கீல்களும், ஆடிட்டர்களும் பத்திரிகையாளர்களும் இன்ன பிற ‘அறிவுஜீவிகளும் மோடியின் ‘தாக்குதலினால் சிறிதளவும் பாதிக்கப்படப்போவதில்லை என்றெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரியும் மொழியில், எளிமையாக ஆனால் கோட்பாடுகள் நீர்த்துப்போகாத வகையில் சொல்லிக் கொடுக்க வெகுசிலரே இருக்கின்றனர்; இருந்தனர்.
அந்த வெகுசிலரில் ஒருவர்தான் ஜெயரஞ்சன். ஏற்கெனவே தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவராக இருந்தபோதிலும், நவம்பர் 8-க்குப் பிறகு இவர் விவாதங்களில் எடுத்துவைத்த வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருந்த தார்மீகக் கோபமும் அவரை ஒரு தமிழ்கூறும் நல்லுலகின் சூப்பர் ஸ்டாராகவே மாற்றிவிட்டன என்றால் மிகையல்ல…
மோடியின் நடவடிக்கை குறித்து இவர் முன்வைத்த கூர்மையான வாதங்கள் காணொளிகளாக ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டிருக்கின்றன, ஆயினும், அச்சில் இதை ஆவணப்படுத்தி இன்னும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவையை உணர்ந்து மின்னம்பலம் இணைய இதழுக்காக கட்டுரைகளாக ஜெயரஞ்சன் எழுதினார். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் மின்னம்பலத்தின் முயற்சி இந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) தற்போது தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை வருடந்தோறும் வெளியிடப்படும் ஒன்றுதான். ஆனால் இந்த வருட அறிக்கை உலகைப் பிடித்திருக்கும் (குறிப்பாக, மேற்கு உலகம் மற்றும் சீனம்) மந்தநிலைக்கான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்தபின், அது முன்வைக்கும் காரணம் இதுவரையிலும் கூறப்படாத ஒரு காரணமாகும்.
2015-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவைவிட உலக அளவில் நடந்த வர்த்தகத்தின் அளவு குறைவு. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கியுள்ளன. இந்த நிலை 2016-ம் ஆண்டில் இன்னும் மோசமடையும், மோசமடைந்துள்ளது.
இதற்கு முதல் காரணமாக சுட்டப்படுவது, மேற்குலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாகும். நிதி நெருக்கடியால் தேவையின் அளவு அதிகரிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே, உலகளவில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு என்பது வளரும் நாடுகளில் ஏற்பட்டதுதானே தவிர, வளர்ந்த நாடுகளில் தேவை உயரவேயில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தேவையின் அதிகரிப்பு உலக அளவில் எதிரொலித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் அதிலும் ஒரு மாற்றம் வந்துவிட்டது. சீனம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உயர்ந்துவந்த தேவை தற்போது குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு காரணம். மற்றொன்று, உலகளவில் பண்டங்களின் விலையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமாகும்.
… பின் எதனால்தான் உலக வர்த்தகம் மந்தம் அடைந்துள்ளது? UNCTAD அறிக்கை கூறுவது யாதெனில், கூலி வருமானம் குறையத் தொடங்கியதால்தான் வர்த்தகம் குன்றியுள்ளது என்பதாகும். வளர்ந்த நாடுகளில் கூலி வருமானம் தேங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லது அவை குறையத் தொடங்கியுள்ளன. நாட்டின் மொத்த வருமானத்தில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மேற்கு உலக வர்த்தக நாடுகளில் நிலவும் சூழல்.
படிக்க:
♦ சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
வளரும் நாடுகளில் கூலி மட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. உலக அளவில் நிலவும் போட்டி சந்தை காரணமாக கூலிமட்டம் தொடர்ந்து குறைவாகவே வைக்கப்படுகிறது. கூலி சிறிது உயர்ந்தாலும் குறைவான கூலி இடங்கள் நோக்கி தொழில்கள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்தால் மட்டுமே அத்தொழில் போட்டி சந்தையில் பிழைத்திருக்க முடியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், கூலி மட்டம் குறைவாக இருக்க இதுவே காரணமாகும். குறைந்த கூலிக்காக தொழில்கள் நாடுவிட்டு நாடு செல்வதால் கூலி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் இத்தகைய சூழலால், 2002-07 ஆண்டுகளில் கூலியின் பங்கு என்பது உலக அளவில் குறைந்துபோனது. இதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டபோதும் கூலியின் பங்கு குறைந்துபோனதுதான் மிகவும் அவலம். (நூலிலிருந்து பக்.156-157)
நூல் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரசஞ்சன் கட்டுரைகள்
ஆசிரியர் : ஜெ. ஜெயரஞ்சன்
வெளியீடு : மின்னம்பலம் பதிப்பகம்,
44, 3-வது மெயின்ரோடு, கஸ்தூரிபா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி எண் : 044- 24421307 / 24422307
மின்னஞ்சல் : books@minnambalam.com
பக்கங்கள்: 162
விலை: ரூ 150.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
Is this Book is Available Now Please Tell, Also Other Indian Economics Related Books