பந்தய மூலதனம் – 2
பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?
நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.
“1993-ல் இன்ஃபோசிஸ் தனது பங்குகளை வெளியிட்ட போது அதில் ரூ 10,000 முதலீடு செய்து பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு இன்றைக்கு ரூ 2 கோடி” என்பது போன்ற பங்குச் சந்தை பணத்தை பல மடங்காக்கும் மாயம் பற்றி படித்திருப்போம். அதே போல “1990-ல இந்த ஏரியால கிரவுண்ட் 2,000 ரூபான்னு 2 கிரவுண்ட் வாங்கி போட்டாரு, இன்னைக்கு அதன் மதிப்பு 10 கோடி” என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.
பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.
எல்&டி நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் வாய்ந்த, மூத்த, நிரந்தர தொழிலாளர்கள் 5 பேருக்கு அந்நிறுவன முதலாளி ஆண்டு போனஸ் கொடுக்க முடிவு செய்கிறார். அமித், சங்கர், இஷா, பிரகாஷ், அருந்ததி என்ற இந்த இந்த 5 பேருக்கும் தலா ரூ 10 லட்சம் போனசாக கிடைக்கிறது.
சங்கர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி, கஷ்டப்பட்டு படித்து, முன்னேறி, 20 ஆண்டுகளாக சாஃப்ட்வேர் துறையில் உழைத்து உடல் தேய்ந்து வசதியான நிலையை அடைந்திருக்கிறார். இந்த வயதிலாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்று கிடைத்த 10 லட்சத்தை வைத்து அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளோடு ஒரு 10 நாள் ஐரோப்பிய டூர் போய் வருகிறார்.
- சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !
- மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP – கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்
இஷா லக்னோவில் இருக்கும் தனது நண்பர் மூலமாக புகழ் பெற்ற லக்னோ புடவைகளை வரவழைத்து சென்னையில் வீட்டுக்கு வீடு விற்பதற்கு அந்த 10 லட்சத்தை பயன்படுத்துகிறார். வாங்கிய விலை, போக்குவரத்து செலவு, விற்கப் போகும் விற்பனையாளர் சம்பளம் எல்லாம் போக ஒரு சுற்று விற்று முடித்ததும் (6 மாதம்) அவர் கையில் ரொக்கமும், புடவைகள் சரக்குமாக ரூ 10 லட்சத்துக்கு மேல் போக கூடுதலாக ரூ 1 லட்சம் நிற்கிறது.
பிரகாஷின் நீண்ட நாள் கனவு ஏதாவது உருவாக்கி விற்க வேண்டும் என்பது. அவர் ஒரு சிறு அலுவகத்தை வாடகைக்கு எடுத்து, 4 கணினிகள் வாங்கி, 2 சாஃப்ட்வேர் டெவலப்பர், 1 மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், ஒரு பிசினஸ் நிர்வாகி நியமித்து தொழில் தொடங்குகிறார். ஒரு நிறுவனத்துக்கான மென்பொருள் செய்து கொடுக்கும் ஆர்டர் பிடித்து, அதைச் செய்து கொடுக்கிறார்கள். அதற்கு விலையாக ரூ 15 லட்சம் பெறுகிறார்கள். ஒரு வருட முடிவில் முன்பணம் கொடுத்த அலுவலகம், அறைக்கலன்கள், கணினிகள் மீந்திருக்க, சம்பள செலவு, மின்சார செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் போக போட்ட ரூ 10 லட்சத்துக்கு மேல் ரூ 2 லட்சம் லாபமாக பிரகாஷின் கையில் நிற்கிறது.
அருந்ததி கொஞ்சம் கெட்டியான ஆள். பணத்தை சேமிப்புக் கணக்கிலேயே வைத்திருந்து விட்டு, ஒரு கட்டத்தில் இஷாவின் வியாபாரத்தை விரிவுபடுத்த அந்தப் பணத்தை கொடுத்து விட்டார். ஒரு வருடத்துக்கு 10% வட்டி வீதம் ரூ 1 லட்சம் இஷா கொடுத்து விட வேண்டும்.
அமித் பற்றி பார்ப்பதற்கு முன்பு இந்த 4 பேர் கையில் அந்த 10 லட்சம் எப்படி பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.
சங்கர் அதை செலவழித்து முடித்து விட்டார். ஐரோப்பிய டூரோடு கையில் காசு காலி, அடுத்த மாதம் சம்பளம் வாங்கினால்தான் அடுத்த செலவு. இதை தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் கட்டிட தொழிலாளிக்கு கிடைக்கும் சம்பளத்தோடோ, ஆலையில் வேலை செய்து மாதம் ரூ 10,000, 20,000 சம்பளம் வாங்கும் தொழிலாளியின் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தவறில்லை. பணம் கையில் வருகிறது, தேவைக்கு செலவழிக்கிறோம், அடுத்த செலவுக்கு மறுபடியும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.
இஷா, லக்னோவில் வாங்கிய புடவைகளை வாங்கிய விலை + போக்குவரத்து செலவு + இதர செலவுகள் இவற்றுடன் கூடுதலாக சேர்த்து விலை வைத்து விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார். புடவைகள் விற்காமல் தேங்கி விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ, வாடிக்கையாளரிடம் பணம் வரா விட்டாலோ பிரச்சனை; ரிஸ்க் நிறைய உண்டு. இதனுடன் மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியின் பிசினசை, கிரேஸ் சூப்பர் மார்க்கெட் கடைகளை அளவு, இன்னபிற காரணிகளை சேர்த்து ஒப்பிட்டு பார்க்கலாம். குறைந்த விலைக்கு வாங்கி, செலவுகள் போக அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவது இதன் அடிப்படை.
- கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
- தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
பிரகாஷ் அலுவலகம், கணினிகள் என்று முதலீடு செய்து, மாதா மாதம் 4 பேருக்கு சம்பளம் கொடுத்து, ஒரு பொருளை (மென்பொருள்) உற்பத்தி செய்து விற்றிருக்கிறார். அதை விற்கும் போது சம்பள செலவு, மின் கட்டணம், அலுவலக வாடகை இவற்றோடு கணினியின் தேய்மான செலவையும் சேர்த்து கணக்கு போட்டு அதற்கு மேல் ஒரு விலை வைத்து பெற்றிருக்கிறார். அது அவருடைய முதலீட்டுக்குக் கிடைத்த லாபம். இதிலும் நிறைய பிரச்சனைகள் உண்டு, கணினியை பாதுகாத்து பராமரிக்க வேண்டும், மென்பொருள் தயாரிப்பை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும், அதன் தரம் சரியாக இல்லா விட்டால் பிரச்சனை, வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லை என்றால் பிரச்சனை, பணம் வராமல் போய் விடும் அபாயம் என்று பல ரிஸ்குகளுக்கு மத்தியில் போராடி லாபம் சம்பாதிக்கிறார். இதை 4 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் டி.சி.எஸ் நிறுவனத்துடனோ, இல்லை கார்களை உற்பத்தி செய்யும் ரெனால்ட் நிசான் நிறுவனத்துடனோ ஒப்பிட்டுக் கொள்ளலாம். அவற்றின் அளவு, சந்தை வலிமை, ஏகபோகம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
அருந்ததிக்கும் லாபம் கிடைக்கிறது. அது வட்டி வடிவத்தில் கிடைக்கிறது. இஷாவின் வியாபாரத்தில் இஷா லாபத்தை எடுப்பதற்கு முன்பு அருந்ததிக்கு வட்டியை கொடுத்து விட வேண்டும். அருந்ததியின் பணம் முழுகுகிறது என்றால் அதற்கு முன்பே இஷாவும் முழுகியிருக்கிறார் என்று பொருள். தொழில் செய்வதற்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் பாரத ஸ்டேட் வங்கியையோ, முத்தூட் ஃபைனான்சையோ இதனுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.
- சங்கர் பணத்தை செலவுக்காக பயன்படுத்தினார், அத்தோடு அந்தப் பணத்தின் கதை முடிந்து விட்டது. இதை செலவு பணம் என்று முடித்து விடலாம்.
- இஷா பணத்தை பொருளாக மாற்றி விற்று பெருக்கியிருக்கிறார், இதை வணிக மூலதனம் என்று அழைப்போம்.
- பிரகாஷ் பணத்தை உற்பத்தி பொருட்களாகவும், சம்பளமாகவும் செலவழித்து புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்வித்து விற்று பெருக்கியிருக்கிறார். இதை உற்பத்தி மூலதனம் என்று சொல்வோம்.
- அருந்ததியோ பணத்தை வியாபாரத்தில் பெருக்கும் இஷாவிற்கு பணத்தை கொடுத்து அவரது லாபத்தில் ஒரு பகுதியை வட்டியாக பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை வங்கி மூலதனம் என்று வைத்துக் கொள்வோம்.
அதாவது மூலதனம் என்பது பெருகிச் செல்வது. வளர்ந்து கொண்டே போவது. அப்படி வளராததை மூலதனம் என்று அழைக்க மாட்டோம். இது எல்லாவற்றுக்கும் மேலாக, இது எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டு செயல்படுவது பங்கு மூலதனம் அல்லது பந்தய மூலதனம். அது என்னவென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
நன்றி : new-democrats
தொடரின் முந்தைய பாகம்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
அருமையன கட்டுரைகள். இதே போல் எப்படி கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் யூத ராத்சைல்டு குடும்ப குழுமங்களுக்கு உரித்தானவை என்றும், எப்படி அமெரிக்க டாலரை அச்சிடும் அமெரிக்க பெடரல் ரெசர்வ் ஒரு தனியார் நிறுவனம் இந்த யூதர்களின் பிடியில் இருப்பதும் பற்றி ஒரு கட்டுரை போடுங்கள் பார்ப்போம். எல்லாம் புகுந்து விளையாடி அம்பலபடுத்தி எழுதுகிறீர்கள் ஆனால் கடைசியில் யூத கொண்டையை விட்டுவிடுகிறீர்களே.