மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44

மாக்சிம் கார்க்கி
ருணோதயப்பொழுதில், இலையுதிர்காலத்து மாரியால் அரித்துச் செல்லப்பட்ட பாதை வழியாகச் செல்லும் தபால் வண்டியில் தாய் ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தாள். ஈரம் படிந்த காற்று வீசியது. எங்கும் சேறு தெறித்துச் சிதறியது. வண்டிக்காரன் தனது பெட்டியடியிலிருந்து லேசாக முதுகைத் திருப்பி வளைத்துத் தாயைப் பார்த்து மூக்கில் பேசத்தொடங்கினான்:

“நான் என் சகோதரனிடம் சொன்னேன். தம்பி, நாம் பாகம் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன். ஆமாம். நாங்கள் பாகம் பிரிக்கப் போகிறோம்…”

திடீரென்று இடது பக்கத்துக் குதிரையைச் சாட்டையால் சுண்டியடித்துவிட்டு, அவன் கோபத்தோடு கூச்சலிட்டான்:

“இடக்கா பண்ணுகிறாய்? மாய்மாலப் பிறவியே!”

இலையுதிர் காலத்தின் கொழுத்த காக்கைகள் அறுவடையான வயல் வெளிக்குள் ஆர்வத்தோடு இறங்கின; அச்சமயம் எங்கு பார்த்தாலும் குளிர்காற்று ஊளையிட்டு வீசிற்று. காற்றின் தாக்குதலைச் சமாளிப்பதற்காக அந்தக் காக்கைகள் தம்மைச் சுதாரித்துக்கொண்டன. அந்தக் காற்றோ அவற்றின் இறக்கைகளை உலைத்து விரித்துப் பிரித்தது. எனவே அந்தப் பறவைகள் தமது இறக்கைகளையடித்துக் கொண்டு வேறொரு இடத்துக்கு மெதுவாய்ப் பறந்து சென்றன.

“ஆனால் என் தம்பியோ என் உயிரை எடுக்கிறான். என் சொத்து முழுவதையும் உறிஞ்சிப் பிடுங்கிவிட்டான். ஆகக்கூடி, இப்போது நான் அடையக்கூடிய சொத்துப் பத்துக்கள் எதுவுமே இல்லை…’’ என்று பேசிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

அவனது பேச்சைக் கனவில் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். அவளது நினைவு மண்டலத்தில், கடந்த சில வருஷ காலமாக நடந்தேறிய சம்பவங்கள் வழிந்தோடின; அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தானும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதையும் அவள் கண்டாள். இதற்கு முன்பெல்லாம் வாழ்க்கை எங்கோ வெகுதொலைவில், யாருக்கும் காரண காரியம் தெரியாத எதற்காகவோ நிர்ணயிக்கப் பெறுவதாக இருந்தது. இப்போதோ வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள். இந்த எண்ணம் அவளது உள்ளத்தில் பல்வேறுவிதமான உணர்ச்சிக் கலவைகளை எழுப்பின. தன்னம்பிக்கையின்மை, தன்மீதே ஒரு திருப்தி. முடியாமை, அமைதியான சோகம்……

சுற்றுச் சூழ்நிலை கண்பார்வையை விட்டு லேசாக மாறிச் சுழன்று மறைந்து கொண்டிருந்தது. வானமண்டலத்தில் சாம்பல் நிறமான மேகக் கூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு அடர்ந்து சென்றன. ரோட்டுக்கு இருமருங்கிலும் நிற்கும் நனைந்த மரங்கள் தங்களது மொட்டைக் கிளைகளை அசைத்துக்கொண்டிருந்தன. வயல்வெளிகளில் காலச் சிரமத்தில் கரைந்தோடும் சிறு சிறு மண் குன்றுகள் எழும்பியிருந்தன.

வண்டிக்காரனின் மூங்கைக்குரல். மணிகளின் கிண்கிணியோசை, ஊதைக் காற்றின் பரபரப்பு, அதன் ஊளைச் சத்தம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து படபடக்கும் ஒரு நாத வெள்ளமாக, அந்த வயல்வெளிகளுக்கு மேலாக ஒரே சீராய் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

“பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்” என்று தன்னிருப்பிடத்திலிருந்து ஆடிக்கொண்டே சொன்னான் வண்டிக்காரன். ”எனவே அவன் என் உயிரைப் பிழிந்து எடுக்கிறான். அதிகாரிகள் அனைவரும் அவனுக்குச் சினேகிதம்…”

ஊர் வந்து சேர்ந்ததும் அவன் குதிரைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தாயிடம் கெஞ்சும் குரலில் சொன்னான்:

“நீ எனக்குக் குடிக்கிறதுக்கு ஓர் அஞ்சு கோபெக் கொடேன்.”

அவள் காசைக் கொடுத்ததும் அவன் அதைத் தன் உள்ளங்ககையில் வைத்து நகத்தால் கீறிக்கொண்டு, அதே குரலில் பேசினான்:

”மூன்று காசுக்கு ஓட்கா, இரண்டு காசுக்கு ரொட்டி!”

மத்தியான வேளையில், தாய் நிகோல்ஸ்கி என்னும் அந்தச் சிறிய நகரத்துக்கு அலுத்துச் சலித்துக் களைப்போடு வந்துசேர்ந்தாள். அவள் கடைக்குச் சென்று ஒரு கோப்பைத் தேநீர் அருந்தப் போனாள். போன இடத்தில் ஜன்னலருகே உட்கார்ந்தாள். தனது கனத்த டிரங்குப் பெட்டியை ஒரு பெஞ்சுக்கடியில் தள்ளிவைத்துவிட்டு ஜன்னலின் வழியாகப் பார்த்தாள். ஜன்னலுக்கு அப்பால் நடந்து பழுத்துக் கருகிப்போன ஒரு சிறு சதுரப் புல்வெளியும் அதில் முன்புறம் கூரை இறங்கிய ஒரு சாம்பல் நிறக் கட்டிடமும் தெரிந்தன. அந்தக் கட்டிடம்தான் அந்தக் கிராமச் சாவடி. வழுக்கைத் தலையும் தாடியும் கொண்ட ஒரு முஜீக் தனது சட்டைக்கு மேல் கோட்டு எதுவும் அணியாமல் அந்தக் கட்டிடத்து முகப்பில் உட்கார்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தான். அந்தப் புல்வெளிச் சதுக்கத்தில் ஒரு பன்றி மேய்ந்துகொண்டிருந்தது. தனது காதுகளைப் படபடவென்று குலுக்கியாட்டிவிட்டு அது தன் மூஞ்சியைத் தரையில் மோதி, தலையை அசைத்தாட்டியது.

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

மேகக் கூட்டங்கள் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து கறுத்த பெருந்திரளாகக் கூடி, பெருகின. எங்கும் அமைதியும், அசமந்தமும் ஆயாசமும் நிறைந்து, வாழ்க்கையே எதற்காகவோ காத்துக் கிடப்பதுபோலத் தோன்றியது.

திடீரென ஒரு குதிரைப் போலீஸ் ஸார்ஜெண்ட் அந்தப் புல்வெளி வழியாக கிராமச் சாவடியின் முகப்புக்கு வேகமாகக் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்து நின்றான். அவன் சாட்டையைக் காற்றில் வீசிச் சுழற்றியவாறே அந்த முஜீக்கை நோக்கிச் சத்தமிட்டான். அவனது கூச்சல் ஜன்னலில் மோதித் துடித்தது. எனினும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. அந்த முஜீக் துள்ளியெழுந்து எங்கோ தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டினான். ஸார்ஜெண்ட் குதிரையைவிட்டுத் தாவிக் குதித்து, கடிவாள லகானை அந்த முஜீக்கின் கையில் ஒப்படைத்துவிட்டு, படிகளை நோக்கித் தடுமாறிச் சென்று அங்கிருந்த கம்பியைப் பற்றிப் பிடித்தவாறு, மிகுந்த சிரமத்துடன் மேலேறி உள்ளே சென்று மறைந்தான்.

மீண்டும் எங்கும் அமைதி நிலவியது. குதிரை தன் குளம்பால் தரையை இருமுறை உதைத்துக் கிளறியது. அறைக்குள் ஒரு யுவதி வந்தாள். அவள் தனது மஞ்சள் நிறமான கேசத்தைச் சிறு பின்னலாகப் போட்டிருந்தாள். அவளது உருண்ட முகத்தில் இங்கிதம் நிறைந்த கண்கள் பளிச்சிட்டன. உணவுப் பொருள்களைக் கொண்ட தட்டை எடுத்துச் செல்லும்போது, உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினாள்.

“வணக்கம். கண்ணே!” என்றாள் தாய்.

”வணக்கம்!” அவள் அந்தத் திண்பண்டங்களையும், தேநீர்ச் சாமான்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, திடீரென்று பரபரக்கும் குரலில் சொன்னாள்:

“அவர்கள் இப்போதுதான் ஒரு கொள்ளைக்காரனைப் பிடித்தார்கள். அவனை இங்குக் கொண்டு வருகிறார்கள்.”

”யார் அந்தக் கொள்ளையன்?”

”எனக்குத் தெரியாது…”

”அவன் என்ன பண்ணினான்?”

“அதுவும் தெரியாது” என்றாள் அந்த யுவதி : “அவனைப் பிடித்துவிட்டார்கள் என்பதை மட்டும் நான் கேள்விப்பட்டேன். இந்தக் கிராமச் சாவடிக் காவலாளி போலீஸ் தலைவனை அழைக்கப் போயிருக்கிறான்.”

தாய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அந்தச் சதுக்கத்தில் முஜீக்குகள் குழுமிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அமைதியாகவும் மெதுவாகவும் வந்தார்கள். சிலர் அவசர அவசரமாகத் தங்களது கம்பளிக் கோட்டின் பொத்தான்களை அரைகுறையாக மாட்டிக்கொண்டே ஓடி வந்தார்கள். அந்தச் சாவடி முகப்பில் கூடி நின்று இடதுபுறத்தில் எங்கோ ஒரு திசையை ஏறிட்டு நோக்கினார்கள்.

அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பிறகு கதவை பலமான சத்தத்துடன் மூடிவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிச் சென்றாள். அச்சத்தம் கேட்டு தாய் நடுங்கினாள். தனது டிரங்குப் பெட்டியை பெஞ்சுக்கடியில் இன்னும் உள்ளே தள்ளிவைத்தாள். பிறகு அவள் தலைமீது ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு ஓடிச் செல்ல வேண்டும் என்ற காரண காரியம் தெரியாத ஆவலை உள்ளடக்கிக்கொண்டு வாசல் பக்கமாக விரைந்து வந்தாள்.

அவள் அந்தக் கட்டிட முகப்புக்கு வந்தவுடன், அவளது கண்களும் மார்பும் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தன. அவளுக்கு மூச்சுவிடவே திணறியது. கால்கள் கல்லைப் போல் உயிரிழந்து நின்றன. அந்தச் சதுக்கத்தின் வழியாக ரீபின் வந்தான். அவனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அவனுக்கு இருபுறத்திலும் தங்கள் கைகளிலுள்ள தடிகளால் தரையில் தட்டிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் அமைதியோடு வாய் பேசாமல் அந்தக் கட்டிட முகப்பிலேயே காத்து நின்றது.

திக்பிரமை அடித்துத் திகைத்து நின்ற தாயால் தன் கண்களை அந்தக் காட்சியிலிருந்து அகற்றவே முடியவில்லை. ரீபின் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். அவனது குரலை அவள் கேட்டாள். என்றாலும் சூனிய இருள் படர்ந்த அவளது இதயத்தில் அந்த வார்த்தைகள் எந்த எதிரொலியையும் எழுப்பவில்லை.

அவள் ஆழ்ந்த பெருமூச்செடுத்துத் தன்னை சுதாரித்துக் கொண்டாள். நீலக் கண்களும் அகன்ற அழகிய தாடியும் கொண்ட ஒரு முஜீக் முகப்பு வாசலில் நின்றவாறே அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றான். அவள் இருமினாள். பயத்தால் பலமிழந்த கைகளால் தொண்டையைத் தடவிக் கொடுத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது?” என்று அவனிடம் சிரமப்பட்டுக் கேட்டாள்.

“நீங்களே பாருங்கள்” என்று பதிலளித்துவிட்டு அவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான். மற்றொரு முஜீக் அங்கு வந்து அவளருகே நின்றான்.

ரீபினை அழைத்துக்கொண்டு வந்த போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தின் முன் நின்றார்கள். ஜனங்கள் ஆரவாரமே இல்லாமல் நின்றாலும்கூட, வரவர ஜனக்கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. திடீரென்று ரீபின் குரல் அவர்களது தலைக்கு மேலாக எழுந்து ஒளித்தது.

படிக்க:
ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

ஜனக்கூட்டம் ரீபினை நெருங்கிச் சுற்றிச் சூழ்ந்தது. அவனது குரல் அமைதியும் நிதானமும் பெற்று விளங்கியது. அதைக் கண்டு தாய் தைரியம் அடைந்தாள்.

“கேட்டீர்களா?” என்று இரண்டாவதாக வந்த முஜீக், அந்த நீலக் கண் முஜீக்கை லேசாக இடித்துக்கொண்டே சொன்னான். அவன் பதிலே கூறாமல் தன் தலையை மட்டும் உயர்த்தி தாயை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இரண்டாவது வந்தவனும் அவளைப் பார்த்தான். இரண்டாமவன் முதல் முஜீக்கைக் காட்டிலும் வயதில் சிறியவன்; புள்ளி விழுந்த ஒடுங்கிய முகமும், சுருட்டையான கரிய தாடியும் கொண்டவன். பிறகு அவர்கள் இருவரும் சாவடி முகப்பிலிருந்து ஒருபுறமாக ஒதுங்கினார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க